கலைச்சொல் தெளிவோம்! 90. ஈரிட வாழ்வி வெருளி-Batrachophobia
90. ஈரிட வாழ்வி வெருளி-Batrachophobia
பொன்னால் வளைத்து இரண்டு சுற்றாக அமைக்கப்பட்ட காற்சரி என்னும் கால்நகையைக் குறிப்பிடுகையில் கலித்தொகை(85.1) ஈரமை சுற்று என்கின்றது. கீழும் மேலுமாக அமைந்த நீச்சல் உடை ஈரணி எனப்படுகின்றது. ஈரறிவு (பதிற்றுப்பத்து : 74.18), ஈருயிர்(அகநானூறு : 72.12), ஈரெழுவேளிர்(அகநானூறு :135.12), ஈரைம்பதின்மர் (புறநானூறு : 2.15; பதிற்றுப்பத்து : 14.5; பெரும்பாணாற்றுப்படை 415) என இரண்டின் அடுக்கு சுட்டப்படுவதைப் பார்க்கிறோம்.
வாழ்(17), வாழ்க்கை(60), வாழ்க(25), வாழ்கல்லா(1), வாழ்குவன்(1), வாழ்ச்சி(1), வாழ்த்த(10), வாழ்த்தி(20), வாழ்த்தினர்(1), வாழ்த்தினெம்(1), வாழ்த்தினேம்(2), வாழ்த்து(2), வாழ்த்தும்(2), வாழ்தல்(16), வாழ்தலின்(2), வாழ்தி(3), வாழ்தும்(3), வாழ்ந்தோர்(2), வாழ்நர்(16), வாழ்நாள்(3), வாழ்பவர்(1), வாழ்பவன்(1), வாழ்வல்(1), வாழ்வார்(3), வாழ்வாள்(2), வாழ்வேன்(1), வாழ்வை(1), வாழ்வோர்(5), வாழ(6), வாழல்(1), வாழலள்(1), வாழலென்(5), வாழலேன்(1), வாழா(2), வாழாதாள்(1), வாழாமையின்(1), வாழாள்(6), வாழி(294), வாழிய(52), வாழியர்(24), வாழியாத(1), வாழின்(1), வாழு(2), வாழுநர்(1), வாழும்(11), வாழுமோர்(1), வாழேம்(2), வாழேன்(4), என வாழ்தல் தொடர்பான சொற்களைச் சங்க இலக்கியங்களி்ல் காணலாம். வாழ்வல், வாழ்வார், வாழ்வாள், வாழ்வேன், வாழ்வை என்பன போல் வாழும் உயிரினத்தை வாழ்வி எனலாம்.
எனவே, நீர் நிலம் ஆகிய ஈரிடங்களிலும் வாழும் உயிரினங்களை(amphibian), ஈரிட வாழ்வி என்று சொல்லலாம். வேளாண்துறையில் இதனை நிலம், நீர்வாழ்வன எனப் பொதுவாகக் குறிக்கின்றனர். உயிரியலிலும் வனவியலிலும் இருவாழ்வி, நீர்-நிலம் வாழ்வி என இரு வகையாகக் குறிக்கின்றனர். புவியியலில் நிலம்நீர் வாழி, இருவாழி என இருவகையாகக் குறிக்கின்றனர். இருவாழி என்றால் இவற்றிற்கு இரு வாழ்வு இருப்பதாகத் தவறான பொருள் வரும். நிலம், நீர் ஆகிய ஈரிடங்களிலும் வாழ்வதால் ஈரிடவாழ்வி என்பதே பொருத்தமாகும். ஈரிடவாழ்வி பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம் [ஈர்+இட(ம்)+ வாழ்வி+ வெருளி ]
ஈரிட வாழ்விவெருளி-Batrachophobia
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply