(தமிழ்ச்சொல்லாக்கம்  124-128 தொடர்ச்சி)

(சொல்மொழிமாற்றம்பெற்றசுவடுகளைஅடையாளங்காட்டும்சுரதாவின்அரியதொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம்பார்வையில் பட்டவற்றை) தேடித்தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

129. இரசாயன நூல் – பொருட்டிரிவு நூல்

யாம் மதநூலைக் குறித்துச் சொல்லிய நியாயமே யிவற்றிற்கெல்லாம் பொருந்தும். நூலென்னும் பெயர்க்குச் சில வுளவே யன்றி முறை வழுவாது எளிதிற்றெளிவாக விளங்கும்படி யெழுதிய நூல்கள் அரிதினுமரிதா யிருக்கின்றனவே. தற்காலத்தாசிரியர் ஒருவர், இரசாயன நூல் என்பதனைப் பொருட்டிரிவு நூலெனப் புதுப்பெயரிட்டழைத்தனர். (ஞானபோதினி – Sept. 1902)

இதழ் :           யதார்த்த பாசுகரன் (1902) சம்புடம் – 1. இலக்கம் – 5. பக், 136.

இதழாசிரியர்       :           வி. முத்துக்குமாரசாமி முதலியார் பி.ஏ., சென்னை.

130. கர்வம் – தற்பொழிவு

தற்பொழிவும் டம்பமும் – பூமியிலுள்ள பல சாதிகளில் இந்துக்களே அதிக அகந்தைக்காரர். ஆனால் சீனர் இவர்களைவிட சாசுத்தி அகந்தைக்காரர் என்று தெரிய வருகிறது. ஐரோப்பியரை வெளியூர் மிலேச்சர், அன்னியப் பிசாசுகள் என்று அவர்கள் சொல்லுவார்கள். ஆனால் அவர்களைக் கைகொடுத்தாட்டி அவர்களோடு குந்திச் சாப்பிடுவதால் தாங்கள் தீட்டுபட்டுப் போகிறோம் என்பதைச் சீனர் உணர்கிறதில்லையாம். இவ்வித கருவம் சீனப் படிப்பாளிகளிடத்தில் அதிகமாய் உண்டு. தாங்கள் கற்றுணர்ந்த ஒன்பது கலைஞானங்கள் நீங்கலாக வேறு கலைகள் இல்லவே யில்லையென்பது அவர்கள் சாதனை. இந்துப்பண்டிதரைப்போல ஒரு வார்த்தைக்காக ஐம்பது வீண் நியாயங்கள் கொண்டு வந்து அவர்கள் வழக்காடுவார்கள்.

நூல்   :           சீனம், சீனருடைய சித்திரப்படச் சரிதைகள் (1902) பக். 57.

(குறிப்பு       :           நூலின் முதல் பக்கம் கிடைக்காததால் ஆசிரியர் பெயர் குறிக்கவில்லை).

131. விரதம் – காப்பது

இப்போது செய்யும் விரதானுட்டானங்களெல்லாம் ஒவ்வொரு கடவுளுக்குரிய, திதி, வாரம், நட்சத்திரங்களில், உபவாசம், பால், பழம், பலகாரம், அவிசு, ஏகவார போசனஞ் செய்தலே அனுசுட்டானமாக இருக்கிறது. இப்படிச் செய்வதில் அந்தந்தக் கடவுளுக்குரிய வந்தனம், வழிபாடு, சபம், தியானம், அக்கடவுளுக்குரிய புராண சிரவணம் ஒன்றும் செய்கிறதில்லை. ஆகார பேதங்களும் நீராகாரமும் பல காரணங்களால் ஏற்படும். அவை எல்லாம் விரதங்களாகா.

விரதம் என்னும் பதத்திற்குக் காப்பது விரதமென்பது பொருள். அதாவது இன்ன காரியத்தை யின்ன விதமாகவே செய்து முடித்த பிறகு போசனம், தைலம், தீட்சை, இவைகளைச் செய்து கொள்ளுகிறதென்று நியமித்து, நியமித்தபடியே செய்து முடிப்பதே விரதமென்பார்கள்.

நூல்   :           சைவ சித்தாந்தப் பிரசங்கக் கோவை (1902) விரதமான்யிம், பக்கம்-7

சொற்பொழிவாளர்       :           சோ. வீரப்ப செட்டியார் (நாகை வெளிப்பாளையம் சைவ சித்தாந்த சபைச் சொற்பொழிவு)

132. Junction – சேர்க்கை

சென்னப்பட்டணத்திலிருந்து தென் மேற்கே தூத்துக்குடிக்குப் போகிற தென் இந்தியா இரயில்வேத் தொடரில், விழுப்புரம் சங்சன் (சேர்க்கை) சுடேசனுக்கும், மாயூரம் சங்சன் (சேர்க்கை) சுடேசனுசக்கும் உள்ள இரயில்வே.

நூல்   :           சிவசேத்திர யாத்திரானுகூலம் (1903) பக், 1

நூலாசிரியர்         :           சாலிய மங்கலம் மு. சாம்பசிவ நாயனார்.

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்