திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

 1

 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு. (திருக்குறள் 1)

 திருவள்ளுவர் கூறும் இம்முதல் குறட்பாவிலேயே மிகப்பெரும் அறிவியல் உண்மையை உணர்த்தியுள்ளார்.

இக்குறளுக்கு உரை எழுதியுள்ள பெரும்பான்மையர் ஆதி பகவன் என்பதற்குக் கடவுள் என்றே கூறியுள்ளனர். பகவன் என்பதற்குச் சூரியன் என்றும் பொருளுண்டு.  பிங்கல நிகண்டு (சூத்திரம் 210) சூரியனுக்கு 64 பெயர்களைக் கூறுகிறது. அவற்றில் ஒரு பெயர்  ‘பகவன்’. காலத்தைப் பகுப்பவன் என்ற பொருளில் சூரியன் பகவன் எனக் குறிப்பிடுகின்றனர் பழந்தமிழர்கள்.

உலகில் ஆதியில் தோன்றிய சூரியனைத் திருவள்ளுவர் ஆதி பகவன் எனகிறார். முதல் குறளில் இந்த அறிவியல் உண்மையைக் கூறும் திருவள்ளுவர் மற்றோர் உண்மையையும் குறிப்பிடுகிறார். நாம் வாழும் இந்த உலகம் சூரியினில் இருந்து பிரிந்து வந்ததே! சூரியனில் இருந்து சிதைந்த வந்ததே புவி என்று அறிவியலறிஞர்கள் கூறுகின்றனர். இதன் அடிப்படையில் கடந்த நூற்றாண்டு உருவானதுதான் பெருவெடிப்புக் கொள்கையும். திருவள்ளுவர் சூரியனை முதலாகக் கொண்டு உலகம் தோன்றியது என்ற அறிவியல் உண்மையையும் இதில் குறிப்பிட்டுள்ளார்.

முதல் திருக்குறளின் முதல்சொல்லும் இறுதிச்சொல்லும் அறிவியல் உண்மையைக் கூறுவனவே.

உலக மொழிகளின் எழுத்துகளுக்கெல்லாம் முதலாக அமைவது அகர ஒலி என்னும் மொழிஅறிவியல் உண்மையைத் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். பொதுவாகப் பழந்தமிழ் இலக்கியங்கள் ‘உலகு’ என்னும் சொல்லை முதல் பாடலில் இடம்பெறச்செய்வர். ‘உலகம்’ என்னும் சொல்லே உலகம் சுற்றுவது என்னும் அறிவியல் உண்மையைக் குறிக்கும் சொல்தான். உலா, உலவு முதலான சொற்கள் உலவுவதன் அடிப்படையிலானது என அறிவோம். அதுபோல் பூமி சுற்றிக் கொண்டு – உலவிக்கொண்டு – இருப்பதால் உலகு, உலகம் என்றனர். (“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்” எனத் திருவள்ளுவர் பின்னரும் பூமியின் சுழற்சியைக் குறிப்பிடுவார்.)

இவ்வாறு முதல் குறளிலேயே சூரியன் ஆதியானது என்னும் உண்மையைக் கூறி அதிலிருந்து உருவானது புவி என்னும்  அறிவியல் உண்மையைக் குறிப்பிட்டு அதனை உவமையாகக் கொண்டு அகர ஒலி எழுத்துகளுக்கெல்லாம் முதலானது என்பதை விளக்கியுள்ளார்.

அறிவியல் குறிப்புகளைத் தெரிவித்து சூரியனில் இருந்து தோன்றியது உலகம் என்னும் அறிவியல் உண்மையைக் கூறியதைப் பாராட்டாமல், ஆதி பகவனைச் சாதிப்பெயர்களாக்கிக் கதை கட்டுவோரும் இவ்வுலகில்தான் இருக்கின்றனர் என்பதுதான் கொடுமை

 

இலக்குவனார் திருவள்ளுவன்

தினச்செய்தி, 22.07.2019