திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள்

(திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)

 43

மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்

கற்றார் அனைத்திலர் பாடு

 (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்லாமை, குறள் எண்: 409)

செல்வம், செல்வாக்குடன் மேலான நிலையில் பிறந்திருந்தாலும் கல்வியறிவில்லாதவர் அவர்களைவிடக் கீழான நிலையில் பிறந்த கற்றவர்க்கு ஈடாகமாட்டார் என்கிறார் திருவள்ளுவர்.

“அனைத்திலர் பாடு” என்றால் “அவ்வளவு பெருமை இல்லாதவர்”  என்று பொருள்.

பதவி, செல்வம் முதலியவற்றால் வரும் உயர்வு தாழ்வு என்பன நிலையானவை அல்ல. காலச்சக்கரம் மாறுவதுபோல் இவையும் மாறும் தன்மையன. மாறும் இவற்றின் அடிப்படையில் உயர்வு, தாழ்வைக் கற்பித்துக் கொள்வது தவறு எனத் திருவள்ளுவர் உணர்த்துகிறார். கல்வியால் பெறும் சிறப்பு நிலையானது. கல்வியின்மையால் பெறும் தாழ்ச்சி அதற்குரியவர் கல்வியைப் பெறும் வரை மாறாமல் இருக்கும்.  ஆள்வோரும் அறிஞரை மதிப்பர். எனவேதான், மன்பதையில் உயர்வு தாழ்வைக் கற்பிக்கும் பிரிவுகளைப் புறந்தள்ளிக் கல்வியால் சிறந்த கற்றவர் பிரிவில் இருக்க வேண்டும் என்கிறார்.

“மேலிருந்தும்” எனத் தொடங்கும் திருக்குறளில்(973) மேல், கீழ் என்பனவற்றைச் சாதியாகக் குறிப்பிடாமல்  மேல்நிலை, கீழ் நிலை என்றுதான் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். அதுபோல்தான் இங்கும் கருத வேண்டும்.

மேல்சாதி, கீழ்ச்சாதி  என்னும் பாகுபாட்டு அடிப்படையில் கற்றவரே மேல்சாதி என உணர்த்தத் திருவள்ளுவர் இக்குறளை எழுதியுள்ளார் எனப் பெரும்பான்மையர் கூறுகின்றனர். பழந்தமிழ்நாட்டில் சாதிப்பகுப்பு இல்லை. எனினும் திருவள்ளுவர் காலம் சாதிக்கருத்து திணிக்கத் தொடங்கிய காலமாக இருக்கலாம். எனவே, உயர்வு தாழ்வு என்பது சாதி அடிப்படையில் இல்லை. கல்வியின் அடிப்படையிலானது என்பதை வலியுறுத்தவே கற்றவர் உயர்ந்தோர், கல்லாதவர் தாழ்ந்தோர் எனக் கூறுவதற்காக இத்திருக்குறளை எழுதியுள்ளார் என்று கருதி இவ்வாறு விளக்கம் தருகின்றனர்.

பின் வந்த ஒளவையார், “சாதி இரண்டொழிய வேறில்லை”  என்று கூறி, “இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்” என்றார். ஆனால், திருவள்ளுவர் கற்றார் உயர்ந்தோர், மற்றார் தாழ்ந்தோர் என்கிறார். எனவே, கல்லாமை இல்லாமல் ஆகும் வண்ணம் அரசும் மக்களும் செயல்படவேண்டும்.

பிறப்பில் மேல், கீழ் என்று கற்பிக்காதே! மேலான சிறப்பைத் தரும் கல்வியில் சிறந்திடு!

இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி 17.09.2019