பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 4/7 – இலக்குவனார் திருவள்ளுவன்
(பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள் 3/7 – இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)
பன்னாட்டுத் தமிழ்மொழி பண்பாட்டுக் கல்விக் கழகம்
சென்னை வளர்ச்சிக் கழகம்
தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம்
முதல் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு
பயன்பாட்டு அடிப்படையில் கலைச்சொற்கள்
4/7
Act Done Under Colour Of Office
பதவியைச் சாக்கிட்டு எதனையும் செய்தல் / பதவியின் உருவில் அதிகாரப் போர்வைச் செயல்
எத்தகைய அரசாங்கப் பொறுப்பும் இல்லாத ஒருவர், ஒரு பொது ஊழியராகப் பணிபுரிவதாக நடிப்பதும் குற்றமாகும். அப்படிப் பொறுப்பில் இல்லாத போது, பொறுப்பில் உள்ள ஒரு பொது ஊழியரைப் போல் ஆள் மாறாட்டம் செய்வதும் குற்றமாகும். இப்படிப் பொறுப்பில் இருப்பது போல நடித்து எத்தகைய செயல் செய்தாலும் அல்லது செய்ய முயன்றாலும் குற்றமாகும்.
இ.த.தொ.பிரிவு 170 இன் கீழ் இக்குற்றம் ஈராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது ஒறுப்புத் தொகை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் தண்டனைக்குரியது.
ஒரு பொது ஊழியர், தனக்குரியதல்லாத பொறுப்பில் இருப்பதாக நடித்துத் தவறான அதிகாரத்தைச் செயல்படுத்துவதும் தண்டனைக்குரிய ஆள்மாறாட்டமே.
இதனைக் குறிப்பதே இத்தொடர். இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயல் என்பதாகும்.
Act Done Without Criminal Intent And To Prevent Other Harms –
குற்ற நோக்கின்றியும் பிற தீமைகளைத் தடுப்பதற்காகவும் செய்யப்படும் செயல்
இந்தியத் தண்டிப்புத் தொகையம், பிரிவு 81 இன்படி தீங்கு நேர்விக்கும் செயல், ஆனால், தீங்கு விளைவிக்கும் எந்தக் குற்ற நோக்கமுமின்றி அச்செயல் செய்யப்பட்டிருப்பின் அது குற்றமாகாது என்கிறது. இச்செயல் நன்னோக்கத்தில், தனியருக்கோ உடைமைக்கோ தீங்கு நேர்வதைத் தவிர்ப்பதாகவோ தடுப்பதாகவோ இருக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாகத் தீ பரவி வரும் இடத்தில், அத் தீ பிற இடங்களில் பரவுவதை, அதனால் பிற உயிருக்கோ உடைமைக்கோ தீங்கு நேர்வதைத் தடுக்கும் நோக்கத்துடன், அந்த இடத்திலோ அருகிலோ உள்ள வீட்டிலுள்ளவரை/ வீட்டில் உள்ளவர்களை அல்லது உடைமைகளை வெளியே இழுத்துப் போட்டாலும் அதனால் தனியருக்கோ உடைமைக்கோ சேதம் ஏற்பட்டாலும் அது குற்றமாகாது.
இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயல் என்பதாகும்.
Act, Entitled to – செயற்பாட்டு உரிமையர் / செயற்பாட்டுத் தகுதியர்
உரிமைக்குரிய சட்டம் என்று குறிப்பது தவறாகும். உரிமையுரை சட்டம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் ‘செயற்பா(ட்)டு’ என்பதாகும்.
Act in his application to a district – உரிய மாவட்டத்திற்குரிய செயற் பயன்பாடு
மாவட்டத்திற்குப் பொருந்தும் வகையிலான செயல் என்பதைக் குறிக்கிறது. இதனை உரிய மாவட்டத்திற்குரிய செயற் பயன்பாடு எனலாம்.
இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயற் பயன்பாடு என்பதாகும்.
Act in his discretion, to – சதுரப்பாட்டிற்குரிய செயல்
மனத்தேர்விற்குரிய செயல் என்பர்.
குடியரசுத்தலைவர், ஆளுநர், முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள், முடிவெடுக்க இயலாச் சூழல் இருக்கும் பொழுது மனத்தேர்விற்கேற்பச் செயல்பட உரிமையுடையவர்கள். விருப்புரிமை என்பது விருப்பு வெறுப்பு அடிப்படையிலான முடிவு எனப் பொருள்பட வாய்ப்பு உள்ளது. விருப்புரிமை என்றால் விருப்பம்போல் அல்லது ஒற்றையா இரட்டையா பார்ப்பதுபோல் முடிவெடுக்க இயலாது. அறிவுக்கூர்மையைப் பயன்படுத்தியே தன்முடிவைத் தெரிவு செய்ய வேண்டும். எனவே, சதுரப்பாடு எனக் குறிக்கப்பட்டது.
இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயல் என்பதாகும்..
discretion என்பது விருப்பப்படித் தீர்மானிக்கும் உரிமையை விருப்புரிமையைக் குறிக்கிறது. உசிதம் என்னும் திசைச்சொல்லும் இதற்கு ஏற்றதே.
discertion எனச் சில நூலில் இடம் பெற்றுள்ளது அச்சுப்பிழையாகும்.
Act in operation – செயற்பாட்டிலுள்ள சட்டம்
வெவ்வேறு காலக்கட்டத்தில் ஒரு பொருள் குறித்துச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ள நேர்வில் நடைமுறையில் உள்ள சட்டத்தைக் குறிப்பது.
சட்டம் காலாவதியாகவில்லை. நடைமுறைப் பயன்பாட்டில் உள்ளது என்பதைக் குறிப்பது.
இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் சட்டம் என்பதாகும்; செயன்மை என்னும் பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது.
operation என்பதைப் பொதுவாக அறுவை மருத்துவம் அல்லது அறுவைப் பண்டுவம்(சிகிச்சை) எனப் பொருள் கொள்கிறோம். எனினும் சட்டத்துறையில் நடவடிக்கை அல்லது செயற்பாடு எனப் பொருளாகிறது.
Act judicially – நீதித்துறைச் செயன்மை
வெவ்வேறு துறைகளுக்கான சட்டங்கள் இயற்றப்படுகின்றன. இங்கே நீதித்துறைச் செயற்பாட்டிற்காக இயற்றப்படும் செயன்மைகளைக் குறிக்கிறது.
இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயன்மை என்பதாகும்.
Act making an offence – குற்றம் விளைவிக்கும் செயல்
குற்றம் விளையக் காரணமாகும் எச்செயலும்.
சட்டம், வழக்காறு, விதி போன்றவற்றை மீறல் அல்லது குலைத்தல் குற்றம் நேரக் காரணமாவதால் குற்றச் செயலாகிறது.
இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயல் என்பதாகும்.
Act of a child under seven years of age – ஏழு அகவைக்குட்பட்ட குழந்தையின் செயல்
இந்தியத் தண்டிப்புப் தொகுப்பு, பிரிவு 82 இன்படி 7 அகவைக்குட்பட்ட குழந்தையின் செயல் எதுவும் குற்றமாகாது. எத்தீங்கும் செய்ய மாட்டாமை(doli incapax) என்னும் இலத்தீன் தொடரில் இருந்து இக்கருத்தாக்கம் உருவானது.
இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயல் என்பதாகும்.
Act of a person of unsound mind – மன நலமற்றவரின் செயல்
செயலின் தன்மையைப் புரிந்து கொள்ள இயலாத அல்லது தான் செய்யும் செயல் தீங்கானது அல்லது சட்டத்திற்கு முரணானது என உணர்ந்து கொள்ள இயலாத சூழலில் மன நலம் குன்றியவர் செய்யும் எச்செயலும் குற்றமாகாது என இந்தியத் தண்டிப்புத் தொகுப்பு, பிரிவு 84 கூறுகிறது.
இங்கு Act என்பதன் பயன்பாட்டுப் பொருள் செயல் என்பதாகும்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
(தொடரும்)
Leave a Reply