(தாழிமரம் அறிவோமா? bonsai  – தொடர்ச்சி)

மழையியல் அறிந்த மாண்பமை தமிழர்கள்

அன்றே சொன்னார்கள் 10

                                                                                                                

இன்றைய அறிவியல் அறிஞர்கள் செயற்கையாக மழை பொழியச் செய்கிறார்கள். மழை வேண்டாத பொழுது இயற்கையாகப் பெய்வதற்குரிய முகில் கூட்டத்தை – மேகக் கூட்டத்தை – இடம் பெயரச் செய்து அந்தப் பகுதியில் மழை பெய்ய விடாமல் செய்கிறார்கள்.  என்ற பொழுதும் பழங்காலத்தில் மழைபற்றிய  அறிவியல் உணர்வு பிற நாட்டாரிடம் இல்லை.


 உரோம் மக்களின் மழைக்கடவுள் பெயர்  பொசெய்டன் (Poseidon) இம் மழைக்கடவுள் மக்களைப் பழி வாங்கித் தண்டிப்பதற்காக மழையைப் பெய்விக்கிறது என நம்பினர். கிரேக்கர்கள் மழைக் கடவுளை நெப்டியூன் (Neptune)என்று அழைத்தனர். இம் மழைத் தெய்வம்தான் மக்களை அச்சுறுத்துவதற்காக மழையைப் பெய்யச் செய்வதாக நம்பினர். பிற நாட்டினர், மழை பெய்வதற்கான அறிவியல் காரணம் அறியாதவர்களாய் அதன் பயனையும் உணராதவர்களாய் அதனைக் கடவுள் வழங்கிய தண்டனையாகக் கருதிய காலக்கட்டத்திற்கு முன்னரே பழந்தமிழ் நாட்டினர் மழை எவ்வாறு பெய்கிறது என்பது பற்றிய அறிவியல் உண்மையை நன்கு உணர்ந்திருந்தனர்.


கடல் நீர் முகிலாக மாறி மழையாகப் பெய்யும் அறிவியல் உண்மையைச் சங்க  இலக்கியப் பாடல்கள் எடுத்து உரைக்கின்றன.

வானம்
நளிகடல் முகந்து செறிதக இருளிக்
கனைபெயல் பொழிந்து


என்னும் பாடல் வரிகள் (நற்றிணை 289: 3-6; மருங்கூர்ப்பட்டினத்துச் சேந்தன் குமரனார்) வானம் நெருக்கமான கடல்நீரை முகந்து செறிவு அடைந்து இருண்டு மிக்க மழையைப் பொழிகிறது என்று  மழை பற்றிய அறிவியல் உண்மையை வெளிப்படுத்துகின்றன.