(வெருளி அறிவியல் 8 இன் தொடர்ச்சி)

வெருளி அறிவியல்  –  9

27. அறிவுவெருளி-Epistemophobia/Gnosiophobia

அறிவு தொடர்பில் எழும் தேவையற்ற மிகையான பேரச்சமே அறிவுவெருளி.

சிலருக்குப் புதியதாக எதைக் கற்க / அறிய வேண்டுமென்றாலும் பேரச்சம் வரும். சிலருக்குக் குறிப்பிட்ட ஒன்றைக் கற்க அல்லது அறிய மட்டும் பேரச்சம் வரும்.

பள்ளிக்கூடம் செல்ல பிள்ளைகள் அடம்பிடித்து மறுப்பதும் அறிவு வெருளிதான். பலர் படிப்படியாக இதிலிருந்து விடுபட்டு விடுகின்றனர். சிலர் இதிலிருந்து விடுபடாமல் முழுமையான அறிவு வெருளிக்கு ஆட்பட்டுவிடுகின்றனர்.

gnos  / epistemo ஆகிய கிரேக்கச்சொற்களின் பொருள் அறிவு.

00

28. அனைத்து வெருளி-Panophobia/Pantophobia/ Panphobia/ Omniphobia

பார்க்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் அனைத்து வெருளி.

அனைத்து என்பது இத்தன்மையது என்னும் பொருளில்தான் சங்கப்பாடல்களில் வருகிறது.

எல்லாவற்றையும் குறிக்க அனைத்தும் என்றுதான் பயன்படுத்தி உள்ளனர்.

அனைத்தும்,

புணர்ந்து உடன் ஆடும் இசையே; அனைத்தும், (மதுரைக் காஞ்சி : 266)

கடிப்பகை அனைத்தும், கேள்வி போகா (மலைபடுகடாம் : 22)

அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ; ஆதலின், (பரிபாடல் : 3:68)

அனைத்தும், அடூஉ நின்று நலிய, உஞற்றி, (அகநானூறு : 378:16)

இனைத்து என்போரும் உளரே; அனைத்தும்      

அறி அறிவு ஆகாச் செறிவினை ஆகி, (புறநானூறு : 30:7-8)

எனினும் தற்போது அனைத்து என்பதே அனைத்தும் என்னும் பொருள் மாற்றத்தைப் பெற்றுள்ளதால் அனைத்து என்பதையே இங்கே பயன்படுத்தலாம். அதற்கிணங்க

அனைத்து வெருளி

pan என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் அனைத்து.

Omni என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் எல்லாம்.

00

29. ஆங்கிலேய வெருளி-Anglophobia

ஆங்கிலேயர் தொடர்பான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் ஆங்கிலேய வெருளி.

இங்கிலாந்து, இங்கிலாந்து மக்கள், அவர்கள் மொழியான ஆங்கிலம் மீதான வெறுப்பு, அச்சம் ஆகியனவற்றை இது குறிப்பிடும். முதலில் அயர்லாந்து, வேல்சு, காட்லாந்து, பிரான்சு, சீனா, ஆத்திரேலியா,ஈரான் மக்களிடையே ஆங்கில வெருளி  ஏற்பட்டது.  பின்னர்ப் பிற நாட்டு மக்களிடமும் பரவியுள்ளது. 

Anglo  என்பது  இங்கிலீசு என்பதைக் குறிக்கும் இலத்தீன் முன் னொட்டு.

இங்கிலாந்தைக் குறிக்கும் இலத்தீன் பெயரான ஆங்கிலியா என்பதிலிருந்து இது வந்தது.

தமிழில் நாம் மூலச் சொல் அடிப்படையில் சரியாக ஆங்கிலம், ஆங்கில, ஆங்கிலேயர் என்று குறிக்கின்றோம்.

00

30. ஆடி வெருளி-Eisoptrophobia

கண்ணாடியைப் பார்த்தால் அல்லது கண்ணாடியில் காணும் தன் உருவத்தைப் பார்த்தால் ஒருவருக்கு ஏற்படும் தேவையற்ற அச்சம்  ஆடி வெருளி (ஆடிப்பார்வைவெருளி).

தொடக்கத்தில் கண்ணாடி போல் எதிரொளிக்கும் நீர்நிலைகளில் தன் உருவத்தைப் பார்த்து ஏற்படும் அச்சமே  ஆடி வெருளியாக அல்லது ஆடிப்பார்வை வெருளியாக உருவானது.

பொன்னின் ஆடியிற் பொருந்துபு நிற்போர்

(மணிமேகலை 19.91) எனச் சாத்தனார் பொன் வளையத்தினுள் பதிக்கப்பட்ட கண்ணாடியில் தம் உருவம் காண்பதைக் குறிப்பிடுகிறார்.

அப்பொழுதெல்லாம் ஆடி வெருளி இல்லை போலும்.

கண்ணாடி உடைந்தால் தீயூழ் நேரும் என்னும் மூடநம்பிக்கை உள்ளவர்கள், கண்ணாடி உடைந்துவிடும் என்ற அச்சத்தால்  அதைப் பயன்படுத்தாமல் கண்ணாடி வெருளிக்கு ஆளாவர்.

‘Eisoptro’ என்றால் கிரேக்க மொழியில் கண்ணாடி என்று பொருள். eis(உள்ளே), optikos(பார்வை) என்பதன் இணைப்பிலிருந்து இச்சொல் உருவானது.

ஆடி வெருளி (Eisoptrophobia)  என்பதைக் கரையான் வெருளியான ஐசோப்பிடிரோபோபியா Isopterophobia உடன் தொடர்பு படுத்திக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

(தொடரும்)

அறிவுவெருளி
அறிவுவெருளி
அனைத்து வெருளி
அனைத்து வெருளி
ஆங்கிலேய வெருளி
ஆங்கிலேய வெருளி
ஆடி வெருளி
ஆடி வெருளி

(காண்க – வெருளி அறிவியல் 10)