–       பேரா.முனைவர்  இலக்குவனார் மறைமலை

“பெரிதே உலகம் பேணுநர் பலரே” என்று கூறிச் செலினும், இந்நிலப்பரப்பு மும்மடங்கு நீரால் சூழப்பட்டது என்று அறிந்தமையின் ”ஆழிசூழ் உலகம்” என அறைந்து சென்றனர் நம் முன்னோர். நீர்ப்பரப்பு போக எஞ்சியுள்ள நிலம் 1/4 பங்கே என்பதாலும் அவ்வெஞ்சியுள்ள பரப்பும் வற்றாத ஆறுகள், ஏரிகள், குளங்கள்,  பெரும் வாய்க்கால்கள் போன்றவற்றால் நிரப்பப்படுவதனாலும், நிலம் வாழ் உயிரினங்களைவிட நீர்வாழ் உயிரினங்கள் எத்துணைப் பங்கு மிகுதியாய் இருக்கும் என்பதனை ஓர்க.

 

நீர்வாழ் உயிரினங்களில் முப்பெரும் பிரிவுகள் உள : 1. ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் மட்டுமே உயிருடன் வாழ்பவை (Fresh-water forms). இவற்றைக் கடலில் விட்டால் விரைவில் அழிந்து விடும். 2. கடலில் மட்டுமே உயிருடன் வாழ்பவை(Co-marine forms) 3. நீர்நிலைகளிலும் கடலிலும் வாழ்பவை. கடலில் மட்டுமே வாழ்பவற்றைக்கடல் வாழ்வன என்றும் மற்றவற்றை நீர் வாழ்வன என்றும் குறிப்பிடுதல் அறிவியல் மரபு.

 

இம் மரபினைத் தொல்காப்பியரிடமும் காணலாம்.

“நீர்வாழ் சாதியுள் நந்தும் நாகே” என்று கூறியவர், சுறாவைப்பற்றிக் கூறுங்கால்,

“கடல்வாழ் சுறாவும் ஏறெனப்படுமே” என்கிறார். சுறா நீரில்தானே வாழ்கிறது. அதனையும் ஏன், நீர்வாழ் சுறாவும் எனக் கூறலாகாது? எனக் கேட்குங்காலை, தொல்காப்பியரின் அறிவியல் நுண்மை (Scientific Accuracy) நன்கு புலப்படும். உலகிலேயே உயிரினங்களை முதன்முதலாக வகைப்படுத்திய அறிஞர்(Classification of Animals) அன்றோ? அவரது நுண்மாண் நுழை புலத்தைப் பின்வரும் கட்டுரை ஒன்றிற் காண்போம்.

இனி, இக்கடல் வாழ்வனவற்றுள்ளும், நீர் வாழ்வனவற்றுள்ளும் மீன்களே பெரும்பான்மையின. சான்றாக ஒன்று கூறுவல். ஒவ்வோர் ஆண்டும் அட்லாண்டிக் பெருங்கடலில் 4 கோடி காட்(Cod) மீன்வகையும்  30 கோடி எர்ரிங்கு(Herring) மீன்வகையும் பிடிக்கப்படுகின்றன எனின் இவ்வியன் நீர்ப் பரப்பில் வாழும் மீனினத்தை அளவிடல் எளிதோ?

கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் அரிசுடாட்டில் 115 மீன் வகைகளை எகிப்துக் கடலில் கண்டு வகைப்படுத்தினார். புளினி 176 இனங்களாக மீனினை வகைப்படுத்தினார். இன்று 20,000 மீனினங்கள் உலகில் கண்டு பிடிக்கப்பட்டுள. ஒவ்வோர் ஆண்டும் நூறு மீனினங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்படுகின்றன.

உயிரியலில் மீனியல் ஒரு சிறப்புப் பகுதி. வெவ்வேறு உள்ளுறுப்புகளை ஆய்ந்தும் ஒத்திட்டும் பார்த்துவரும் உடற்கூற்றியலாளரும்(Anatomist), முட்டையின் வளர்ச்சியை ஆய்ந்து வரும் கருவியலாளரும்(Embryologist)  மீனினங்களின் ஒற்றுமை வேற்றுமைகட்கேற்ப அவற்றை வகைப்படுத்தும் உயிரினப் பகுப்பியலாளரும்(Taxonomist) மீனினங்களின்  தொகையினை வரையறுக்கும் பொருள் நிலையியலாளரும் பல்வேறு உறுப்பமைப்புகளின் தொழில்களையும் திசுக்களின் செயற்பாடுகளையும் ஆயும் உடலியலாளரும்(Physiologist) மற்றும் நில இயல், தொல்லுயிர் இயல் வல்லுநரும் மீனியலை நாள்தோறும் விரிவுபடுத்திக்கொண்டே வருகின்றனர்.

(தொடரும்)

– குறள்நெறி 1.10.1964

++++++++++++++++