கவிஞர் முடியரசனின் பூங்கொடி 27 : குறளகம் புகுதல்
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 26 : அல்லியின் வரலாறு – தொடர்ச்சி)
பூங்கொடி
குறளகம் புகுதல்
நிறைநீர் விழியேம்; நெடுநகர் ஈங்கே 75
உறையுநர் கருணை உளமுளோர் இலரோ?
புரக்குநர் இலோமெனப் புலம்புதல் கேட்ட
அறத்து வழிப்படூஉம் நெஞ்சினன் ஒருவன்
தாயினும் மேலாம் நோயுறும் தந்தை
வீய்நிலை கண்டுளம் வெதும்பி இரங்கித்
தோள்மிசைத் தழீஇத் தொண்டுளம் பூண்ட
வாழ்நாள் உடையார் மலையுறை யடிகள்தம்
குறளகம் தனிலெமைக் கொண்டுய்த் தனனே; 80
மலையுறை அடிகள் மாண்பு
அவர் தாம்
குறள்நெறி வாழும் கொள்கையர், அறிஞர்
ஒழுக்கம் உயிரென ஓம்பும் செம்மல்,
வழுக்கியும் தீதுரை வழங்காப் பெரியார்;
கல்வித் தொண்டே கடவுள் தொண்டெனக்
கல்வி வளர்ந்திடக் கழகம் கண்டவர்; 85
பல்வகை நூல்பயில் படிப்பகம் நிறுவியோர்
கவிஞர் பலருயிர் காத்தருள் வள்ளல்
புவியில் மேம்படு புலவரின் புரவலர்
மூடச் செயல்கள் மொய்த்துவந் துறுத்தலால்
வாடிக் கிடக்கும் மங்கையர் வாழ்வில் 90
உறையுநர் - வாழ்பவர், அறத்துவழிப்படூஉம் - அறவழிநடக்கும், வீய்நிலை - அழியும்நிலை, தழீஇ - தழுவி, உய்த்தனன் - சேர்த்தனன், ஓம்பும் - பேணும்
புத்தொளி வீச நத்தின ராகி
அரிவையர் மன்றம் அமைத்தவர், செல்வ! 95
குறளகத்தின் பணிகள்
தம்பெரும் உழைப்புத் தருமுயர் நிதியும்
தம்பினும் அன்பால் தருபெரும் பொருளும்
குவித்துக் கண்டதே குறளகம்; அதுதான்
தவிப்போர்க் கருளும், சாதியால் தாழ்நிலை
வகித்துளோர் தமக்கு வாழ்வினை நல்கும்,
அகத்தும் புறத்தும் அன்பே நிறையும்,
கசடறக் கற்றோர் கண்டநல் உண்மைகள்
திசைஎலாம் பரவத் தெளிதமிழ் நூல்கள் 100
பற்பல ஆக்கிப் படைக்கும், அதாஅன்று
தமிழ்மொழி ஒன்றேஇத் தரணி ஆள
அல்லும் பகலும் அரும்பணி ஆற்றும்; 105
(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி
Leave a Reply