கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 53 : மூதாட்டி தன் வரலாறுரைத்தல்

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 52 : அதிகாரம் 11. ஏடு பெற்ற காதை – தொடர்ச்சி)
பூங்கொடி
மூதாட்டி தன் வரலாறுரைத்தல்
வந்தவள் மகிழ்ந்துதன் வரலா றுரைக்கும்;
‘முந்திய தமிழ்மொழி தந்தநல் இலக்கியச்
செல்வம் பற்பல சிதைந்தும் குறைந்தும்
புதைந்து கிடப்பவை புகுந்து புகுந்து அப்
புதைபொருள் தேடும் பணியினைப் பூண்டேன்,
நல்லநல் லேடுகள் நனிவரப் பெற்றும்
அல்லும் பகலும் செல்லும் சிதலும்
சுவைத்துச் சுவைத்துச் சோர்ந்தபின் எஞ்சிய
குறைபடும் ஏடுகள் குவிந்தன அந்தோ!
தமிழுக் குறுபகை எத்தனை தாயே!
அமுதத்தமிழே! அன்னாய்! வாழி!
அவையெலாம் திரட்டி அரியதோர் நூலகம்
நவையற நிறுவி நடத்துதல் என்பணி,
நாவலூர் அமுதம் என்றெனை நவில்வர்;
வாழ்த்தும் பாராட்டும்
ஆவல் தமிழில் அளவிலா துற்றனை!
குறள் நூல் தொல்காப் பிய நூல் இரண்டும்
மறுவற உணர்ந்தோர் தெருளறி வுறுவர்,
வாழ்கநின் னுள்ளம் வாழ்கநின் துறவு!
உன்போல் துறவுளம் உடையவர் ஒருசிலர்
அன்பால் தமிழின் ஆக்கங் கருதித்
துயரெது வரினும் துக்சமென் றெண்ணி
அயர்வில ராகி ஆற்றத் துணியின்
உயர்கனிச் செம்மொழி உலகினில் ஒங்கும்;
கலைமகள் நிலையம்
அண்மையில் ஒரூர், அவ்வூர் அரசன்
கண்ணெனக் கருதிக் கலநூல் பலவும்
தொகுத்தொரு நூலகங் தொடங்கி நிரல்பட
வகுத்து வைத்தனன், வகைவகை ஏடுகள்
நிறைந்தன, அதன்பேர் கலைமகள் நிலையம்,
மறைந்தனன் கலையுணர் மன்னன், அவ்வூர்
அயலவர் ஆட்சியிற் சிக்கிய ததனால்
செயற்படல் இன்றிச் சிதைந்தது நூலகம்;
வீடுகள் தோறும் ஏடுகள் தேடிப்
பாடுகள் உறும்யான் பயன்தரும் எனநினைந்
தோடினென் ஆங்கே தேடினென் ஏடுகள்;
சிதைந்த சுவடிகள்
தென்மொழி வடமொழி தெலுங்கு முதலாப்
பன்மொழி ஏடுகள் பற்பல கண்டேன்,
ஒவியம் சிற்பம் மருத்துவம் ஒண்டமிழ்ப்
பாவினில் உரைக்கும் ஏடுகள் கண்டேன் ,
வான நூல் ஏடும் வகைவகை கண்டேன்,
ஊனம் இலாத தொன்றும் இல்லை;
முதலும் முடிவும் காணாச் சுவடிகள்,
சிதலும் மண்ணும் சிதைத்த சுவடிகள்
கண்டேன் கண்டேன் கலங்கினென் உள்ளம்;
(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி
Leave a Reply