(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 29 : கல்லறை காண் காதை – தொடர்ச்சி)

பூங்கொடி
தாமரைக்கண்ணி அறிவிப்பு

கோமகன் ஆயிழை இவள்மேற் கொண்ட
காமந் தணிந்து கழிந்தனன் அல்லன்,
படிப்பதும் இதனுள் பழுதுகள் புரியின் 30
அடுத்தவர் ஒறுப்பர் ஆதலின் புறத்தே

வருமிடைக் காண்பான் வழியிடை ஒதுங்கி
இருத்தலுங் கூடும் இதுநீர் ஒர்ந்து
திருத்தகு நல்லீர்! தெருவழிச் செல்லேல்
பொழிலின் பின்புறம் பொருந்திய ஒருசிறு 35
வழியுள தவ்வழி மருங்கிற் செல்லின்
சுடுகா டொன்று தோன்றும்; ஆண்டுக்
கடுநவை உறாஅது; கலங்கேல், அந்செறி
தாண்டிச் செல்கெனத் தாமரைக் கண்ணி

வேண்டி நின்றனள், விளங்கிழை அல்லி 40

அல்லி அஞ்சுதல்

பினஞ்சுடு காட்டில் பேயினங் குழுமி
நிணங்கொளத் திரிதலால் கொடுத்துயர் நேர்ந்திடும்
யாங்ஙனம் செல்லுகேம்? யாருந் துணையிலேம்!
பாங்குற நன்னெறி பகருதி என்றனள்,

   தாமரைக்கண்ணி தெளிவு படுத்துதல்

பேயென ஒருபொருள் உண்டெனப் பேசுதல் 45
ஆயிழை பேதைமை ஆகும் அறிகதில்!
மனவலி மிக்கார் மருளார்; இருளில்
மனவலி குறைந்தார் மருளுவர் ஆதலின்
கட்படு பொருளெலாம் கருநிறப் பேயாய்
முற்படும், வாய்சொல மொழிதடு மாறும், 50
செயலறச் செய்யும், வியர்வுறும், நடுக்குறும்,
மயலுறக் கண்ணொளி மங்கிட இருளும்,
அச்சம் நெஞ்சில் அறையும், அதுதான்
பேயென உலகம் பேசும், உரமுளார்
ஆயும் அறிவுளார் அஞ்சார் ஆதலின் 55
இவ்வழி நீர் ஏகுதிர் ஏகின்
செவ்விய நெஞ்சுரம் சேரும் நுமக் கெனக்

(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி