(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 28 : அடிகள் அடைக்கலம் அருளல் – தொடர்ச்சி)

6. கல்லறை காண் காதை

நிலவும் உடுவும்

மாலைப் பொழுதில் மேலைத் திசையில்

சிலப் பச்சை கோலச் சிவப்பு மஞ்சள்

முதலா வண்ணங் குழைத்துச் செஞ்சுடர்ப்

பரிதி சென்றனன் இரவெனும்

ஓவியன், மாதர் ஒளிமுகந் தீட்ட   5

நீல வான நெடுந்திரை தன்னில்

கோல வட்டம் குறித்தனன், அதனை

ஞாலம் நிலவென நவின்று மகிழ்ந்தது;

துதலிற் புரளும் சுருள்குழல் வரைய

10 நுதலி ஒருபுறம் நுண்ணிதின் வரைந்தனன்    

களங்கப் பட்டது கண்டனன் நெஞ்சம்

துளங்கிக் கனன்று தூரிகை வீசி

உதறினன்; கிண்ணம் ஒன்றனிற் பட்டுச்

சிதறிய வெண்ணிற வண்ணம் சிரித்திட

15 அதனை உடுவென அறைந்தனர் உலகோர்;

வண்ண அவ் வுடுக்களும் வட்ட நிலாவும்

கண்ணுங் கருத்தும் களிமிகப் பொழிலகம்

வெண்ணிறங் கொள்ள ஒளிக்கதிர் வீசின;

               தாமரைக்கண்ணி வினவல்

அவ்விடை அவண்வரும் ஆரணங் காகிய

செவ்விய நெஞ்சினள் திருநிறை செல்வி    20

பொதுப்பணி பலநாள் புரிந்து துயர்பல

விருப்புடன் ஏற்றவள் விடுதலை வேட்டவள்

 தாமரைக் கண்ணி தமிழ்மொழி வாழ்த்திப்

பூமலர் மேனிப் பூங்கொடி தன்னொடு

நின்றிடும் அல்லி நிலாமுகம் நோக்கி,   25

‘நின்றீர் நுமக்கு நேர்ந்தது யாது? என

நிலாமுக அல்லி நிகழ்ந்தது கூறலும், 27

(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி