(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 74 – தொடர்ச்சி)

எழுவாய்! எழுவாய்! இன்றே எழுவாய்!  

          தொழுவாய் அவளைத் துணையென நினைவாய்!   50

          வழுவா மகளே! வாழிய பெரிதே’

என்றவள் வாழ்த்தி இருந்தனள் ஆங்கண்;       

          நன்று நன்றென நங்கையும் இயைந்தனள்;

அவ்வுழி அடிகள் வருகை தந்தனர்

          செவ்விய மங்கையர் செங்கை கூப்பி    55

          நிற்றலும் அவர்தமை நேரியர் வாழ்த்திப்

`பொற்றொடி யீர்!நாம் புறக்கணிப் பாக

விடுதல் தகாது விழிப்பினி வேண்டும்,

முடுகி எழுந்து முயலுதல் வேண்டும்,     

          மீண்டும் இசைப்பணி மேவுதல் ஒன்றே 60

          தமிழின் பகைவர் தாமே புகுந்து

நமதிசை மறப்பர், நாளும் பிறமொழி

இசையே பாடி ஏற்றமும் பெறுவர்,

          இசையும் பொருளும் இனியநல் வாழ்வும்       65

          அடைதல் ஒன்றே அவர்குறி யாதலின்

தடையும் செய்குவர்; `தமிழில் இசையிலை,

பாட்டிசைத் துறையில் `பாஷைச்‘ சிக்கல்

நாட்டுதல் நன்றோ? நாதம் ஒன்றே         

          நோக்குதல் வேண்டும், மொழிவெறி நுழைப்பது      70

          குறுமனப் பான்மை, விரிமனங் கொள்க’

என்றெலாம் கதைப்பர்; இவ்வுரை கேட்டோர்

ஒன்றும் ஓரார்; உயரிய கல்வி

கற்றார் சிலரே; கற்றார் தம்முளும்         

—————————————————————

          கதைப்பர் – பொய்சொல்வர், ஓரார் – உணரார்.

+++++

          சிந்தித் துணர்வார் சிலரினும் சிலரார்    75

          வந்தித் தவ்வுரை வாயென ஏற்பார்;

நேரிய நம்சொலைச் சீரிய தன்றெனக்

கூறிப் பல்வகைக் குறைகளும் புணர்த்துவர்; 

(தொடரும்)