கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 85 : பொதிகைக் காட்சி

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 84 : சண்டிலி வருகை – தொடர்ச்சி)
பூங்கொடி
பொதிகைக் காட்சி
தென்திசைப் பொதியில் காணிய வந்தேன்;
முடியும் நடுவும் முகிலினம் படர்தரக் 110
கொடிபடர் சந்தனக் கடிமணம் அளாவிச்
சில்லெனுந் தென்றல் மெல்லென வீச
நல்லிளஞ் சாரல் நயந்திடத் துளிப்ப
அலரும் மலரும் அடருங் கடறும்
பலவும் குலவி நிலவும் மாமலைக்
காட்சியும் மாட்சியும், கடும்புனல் அருவியின்
வீழ்ச்சியும் கண்டவை வாழ்த்தினென் வாழ்த்தினென்
தென்மலைச் சிறப்பினைச் செப்புதல் எளிதோ?
கன்மலைக் காப்பியம் யாத்திட முனையின
பொதியம் ஒன்றே போதும் தோழி! 120
—————————————————————
நந்தலில் – அழிவில்லாத, அந்தம் – அழகு, சேணுயர் – மிக உயர்ந்த, முகில் – மேகம், நீலப்பெருமலை – நீலமலை, திருமலை – திருப்பதி, முதுமலை – கோடைக்கானல், அடரும் – நெருங்கும், கடறு – காடு, யாத்திட – இயற்றிட.
++++
அருவிக் காட்சி – புலியருவி
போர்ப்பறை சாற்றிடும் ஆர்ப்பொலி என்ன
வேர்க்குலம் பேர்த்து வீறுற் றார்த்துக்
கல்பொரு திறங்கும் மல்லலம் அருவிகள்
நல்லன பலவும் நயந்தினி தாடினேன்;
கண்டார் வியந்திடக் கைபுனைந் தியற்றிய 125
தண்டாது பாயும் தண்புலி யருவியில்
கொண்டான் தன்னொடுங் கூடி யாடினேன்;
பேரருவி
பொங்குமா கடலெனப் பொங்கிட வீழ்ந்து
தங்கா திழிதரும் விரிபே ரருவியில்
கங்குலும் பகலும் கணவனும் யானும் 130
ஆடியும் ஓடியும் ஆர்த்தும் நகைத்தும்
பாடியும் கூடியும் பன்முறை ஆடினோம்;
சண்பக அருவி
தண்முகை அவிழும் சண்பக அடவி
எண்ணரும் மலர்களை இறைத்திட வாரித்
தடதட ஒலியொடு தாவி இறங்கிப் 135
படர்தரு சண்பக அருவிப் பாங்கரில்
நின்றும் இருந்தும் நிலவிய இன்பில்
ஒன்றிய உளத்தேம் உலகினை மறந்தோம்;
(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி
Leave a Reply