புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.4.23-28
(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.21-22 தொடர்ச்சி)
இராவண காவியம்
1. தமிழகக் காண்டம்
4.தலைமக்கட் படலம்
23. மாரி போற்பொரு ளீந்துமே தாய்மொழி வளர்த்த
சேர சோழபாண் டியரெனத் தமிழர்கள் செப்ப
வீர ராகவும் புலவர்க ளாகவும் வெருவாச்
சூர ராகவும் விளங்கினா ரிவர்வழித் தோன்றல்.
24. அன்ன மூவருந் தன்னின்கீ ழன்னசிற் றரசர்
தன்னை யேற்படுத் தியல்பொடு தமிழகந் தன்னைப்
பன்னு நூற்றுறை பழுத்தநற் பழந்தமிழ்ப் புலவர்
சொன்ன சொற்படி புரந்திசைத் தொடைபுனைந் தனரே.
25. குலவு செல்வமுங் கல்வியுங் குடிவளர் கோட்டத்
தலைவ ராயசிற் றரசர்கீ ழூரகத் தலைவர்
மலைவி லாதெலா மக்களுந் தகவுற வாழக்
கலைவ லாருளக் கருத்தொடு கனிவுறக் காத்தார்.
26. தூய வூரகந் தனையினி தோம்பிடத் தொல்சீர்
மேய நல்லரை நிறுவவூர் மக்களம் மேலோர்
ஆய யாவையும் குறைவிலா தமைவுற வாக்கித்
தாயி னும்பெரி தன்புடன் காத்துவந் தனரே.
27. மக்க ளுந்தலை மக்களு மருவிநா னிலம்வாழ்
மக்க ளுந்தலை மக்களும் வகைபடு தொழில்செய்
மக்க ளுங்கருப் பொருளெனு மனையறத் தலைமை
மக்க ளாங்கிழ வனுங்கிழத் தியுமென வாழ்ந்தார்.
28. ஒத்த வோர்குல மாகியே யொருங்குற வாழ்ந்த
முத்த மிழ்ப்பெரு மக்களைக் கற்றறி மூடர்
பொத்தை யாய்ப்பெறும் பிறவிவேற் றுமையெனப் புகல்வர்
பித்தர் சொல்லினைப் போற்றுவோ ரவ்வகைப் பிறப்பே.
++
19. சோழம் – சோளம், போலி. ஏழ்தெங்க நாடு என்பது காண்க.
22. (உதியஞ்) சேரல் என்னும் பெயர் வழங்குதல் காண்க.
25. கோட்டம் – நாடு, ஊரகம் – கிராமம்.
27. கிழவன் கிழத்தி – காதற்றலைவர்
++
Leave a Reply