(பூங்கொடி 10  – கவிஞர் முடியரசன்: ஊரார் பழிமொழி- தொடர்ச்சி)

பூங்கொடி

பழியுரை காதை

வள்ளி குறிக்கோள் வாழ்வினள்

அவர்முதன் மனையாள் அரும்பெறல் வள்ளி,

எவர்துயர்ப் படினும் எழுந்துடன் சென்று

50 துன்பம் நீக்கலில் இன்பங் கொள்வாள்;

என்பும் பிறர்க்கே எனுங்குறி வாழ்வினள்;

பொதுநலத் தொண்டே புந்தியிற் பதிந்தவள்;

எதுசரி என மனம் ஏற்குமோ அதனைத்

துயர்பல நேரினும் துணிவுடன் ஆற்றும்

55 அயர்விலாக் கணவர் அரும்பணிக் கியைந்தவள்;

அடிமை வாழ்வில் அருவருப் புற்று

விடுதலை வேட்டு வீறுற் றெழுந்த

நல்லவன் ஒருவனை நாய்மகன் சுடுங்கால்

ஒல்லென ஒடி ஒப்புயர் வில்லாள்

60தன்னெஞ் சேற்றுத் தான்மடிந் தனளே !

வள்ளியின் மகளே பூங்கொடி

வன்னெஞ் சினர்அவ் வள்ளியின் வாழ்வை

இகழ்ந்ததும் அறிவேன்; என்வயி றீன்ற

மகளே யாயினும் வள்ளியின் மகளே

பூங்கொடி என்று பொருத்தினேன். ஆதலின்

65ஆங்கவள் கன்னே இசைத்துறை அறுத்துப்

பாங்குடன் பொதுநலப் பணிக்கே ஆக்கினென்;

(தொடரும்)

கவிஞர் முடியரசன், பூங்கொடி