பூங்கொடி 12 – கவிஞர் முடியரசன்: வடிவேல் படுகொலை
(பூங்கொடி 11 – கவிஞர் முடியரசன்: வள்ளி குறிக்கோள் வாழ்வினள்- தொடர்ச்சி)
பூங்கொடி
பழியுரை காதை
வடிவேல் படுகொலை
ஆங்ஙனம் அன்றியும் அரும்பெறற் காதலர்,
நிலத்தினில் மடமை நிறைந்திடல் கண்டு
பகுத்தறி வூட்டும் பகலவன் ஆவர் ;
70 சொல்லின் செல்வர், சோர்விலர், தொண்டர்,
அல்லும் பகலும் ஆருயிர்த் தமிழே
வெல்லும் வகையால் வீரம் விளைத்தவர்;
நல்லவர் இவரை நரிக்குணம் விஞ்சிய
கொல்லும் பகைக்குணம் கொண்டோர் ஒருசிலர்
75 தூண்டுதல் செய்யத் துணிவுடன் கூடி
நீண்ட புளிமரக் கிளைதனில் நேயரை
அந்தோ தூக்கி ஆருயிர் வவ்வினர் :
இந்தவெந் நிலையில் இசைத்தொழில் புரிவதோ ?
மலையுறை அடிகள் வருகை தருதல்
வெந்துயர் வாட்ட வேலரின் நினைவால்
80 மனநலி வெய்தி மனையுறை நாளில்
நினையா நிலையில் நீளருட் செல்வர்
மலையுறை யடிகள் வந்துகின் றருளினர்
துயரம் நீங்கச் சொற்றனர் சிலசொல் :
(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி
Leave a Reply