(அகல் விளக்கு – மு.வரதராசனார். 17. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அதன் பிறகு இரண்டு மாதம் கழித்து ஒருநாள் வகுப்பில் கணக்கு ஆசிரியரின் கையில் என் காது அகப்பட்டுக் கொண்டது. “கணக்கே வேணும் என்றாயே! விதிகளை மனப்பாடம் பண்ணினாயா? கணக்குகளை நாள்தோறும் காலையிலும் மாலையிலும் போட்டாயா? சந்திரனிடம் கேட்டாயா?” என்று என் கன்னத்தில் சாக்குத் துண்டால் குத்தினார்.

அந்த ‘தீட்சை’ நிறைவேறிய பிறகு, உண்மையாகவே கணக்குப் பாடத்தில் நான் முன்னேறினேன். முப்பத்தாறு எண்கள் வாங்கியவன். கால் தேர்வில் ஐம்பது வாங்கினேன். அரைத் தேர்வில் ஐம்பத்தைந்து வாங்கினேன். சந்திரன் எனக்கு மிகப் பெரிய துணையாக இருந்து உதவினான். மாலையில் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பும் போதே சில சந்தேகங்களை எல்லாம் தீர்த்து உதவினான். கணக்கு ஒரு கடினமான பாடம் என்ற பயமே பறந்து போயிற்று. ஆனாலும் சந்திரனைப் போல் அவ்வளவு வல்லவனாக விளங்க முடியவில்லை; அவனைப் போல் தொண்ணூறு, தொண்ணூற்றெட்டு, நூறு எண்கள் பெறமுடியவில்லை.

முந்திய ஆண்டைவிட இந்த ஆண்டில் சந்திரனுக்கும் எனக்கும் இருந்த தொடர்பு வளர்ந்தது. அவன் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பழகிக்கொண்டே எனக்குக் கணக்குக் கற்றுக் கொடுத்த உதவியை நன்றியோடு நினைத்துப் போற்றினேன். சில நாட்களில் மாலையில் நெடுந்தொலைவு நடந்துபோய் வரும் வழக்கத்தை மேற்கொண்டோம். பெரும்பாலும் தொடர்வண்டி(இரயில்) நிலையச் சாலையில், அதாவது வடக்கு நோக்கியே நடந்து போய் வந்தோம். நடக்கும்போது பலவகையான செய்திகளைப் பேசிக்கொண்டு போவோம்.

தேர்வு உள்ள காலங்களில் நடக்காமல், கையில் புத்தகமோ குறிப்போ எடுத்துக்கொண்டு மெல்லப் பார்த்துக் கொண்டே நடப்போம். அந்தச் சாலையில் இலுப்பை மரங்கள் இரு பக்கத்திலும் நிறைய வளர்ந்திருந்தன. சில சமயங்களில் அவற்றின் பூக்கள் ஒரு புதுமையான நறுமணம் கமழ்ந்து கொண்டிருக்கும். கீழே பழங்கள் போல் வெண்ணிறமாக விழுந்து கிடக்கும். சிறுவனாக இருந்தபோது அவற்றைப் பழங்கள் என்றே எண்ணிக் கொண்டிருந்தேன்.

ஒரு நாள் மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் அவற்றை எடுத்துச் சுவைத்துக் கொண்டிருந்ததைக் கண்டு, “இந்தப் பழங்களைத் தின்னலாமா?” என்று கேட்டேன். “இவை பழங்கள் அல்ல, பூக்கள்” என்று என்னைப் பார்த்துச் சிரித்தான். அன்று அவனிடமிருந்து அந்த வேறுபாட்டைக் கற்றுக் கொண்டேன். ஒருநாள் சந்திரனுக்கு அதைச் சொன்னபோது “இது எனக்குத் தெரியுமே. இலுப்பைப்பூ பழம் போலவே இருக்கும். அதில் உள்ள தேனை உறிஞ்சிச் சுவைப்பார்கள்” என்றான்.

அந்த இலுப்பைமரச் சாலை ஓரமாகவே பாடத்தில் கேள்விகள் கேட்டுக்கொண்டும் விடைகள் சொல்லிக் கொண்டும் நடப்போம். ஒருநாள் ஒரு தோப்பின் எதிரே உட்கார்ந்து கணக்கு ஒன்றைச் சந்திரனிடமிருந்து கற்றுக் கொண்டிருந்தேன். அவன் ஒரு குச்சியை எடுத்து மண்ணில் கோடுகள் கிழித்து இருசம முக்கோணத்தில் ஒரு வெட்டு வெட்டி, இரண்டு பகுதிகளிலும் உள்ள கோணங்களின் ஒற்றுமை வேற்றுமையை விளக்கிக் கொண்டிருந்தான். அதை முடித்தவுடன், “நேரம் ஆயிற்று போகலாமா?” என்றான்.

“இன்றைக்கு முழுநிலா நாள்போல் இருக்கிறதே. அதோ பார், நிலா எவ்வளவு அழகாக இருக்கிறது. இன்னும் கொஞ்சநேரம் இருந்துவிட்டுப் போகலாம்” என்றேன்.

“உனக்கு நிலா என்றால் மிகவும் விருப்பம்போல் தெரிகிறது.

“ஆமாம். சந்திரன் அல்லவா! உன் பெயர், உன் நிறம், உன் பண்பு எல்லாம் எனக்கு விருப்பம்தான்.”

அவ்வாறு நான் சொல்லி முடித்தவுடன் பெருங்காஞ்சியில் கண்ட நிலாவின் காட்சி நினைவுக்கு வந்தது.

“எங்கள் ஊரில் நிலா மிக அழகாக இருந்ததாகச் சொன்னாயே” என்று சந்திரனும் அதையே கூறினான்.

“ஆமாம்” என்று சொல்லிக் கிழக்கு வானத்தை அணி செய்து கொண்டு எழுந்துவந்த முழுநிலாவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் வெள்ளிமேனியும் வட்ட வடிவும், அமிழ்த ஒளியும் பற்றி எண்ணிக் கொண்டிருந்தபோது அதன் உடலில் உள்ள களங்கத்தைப் பற்றிய எண்ணம் வந்தது. என்ன காரணமோ, பெருங்காஞ்சியில் சந்திரனுடைய நடத்தையில் கண்ட மாசு என் நினைவுக்கு வந்தது. கிணற்றில் குளித்த பிறகு வெந்நீரை எடுத்துக் கீழே கொட்டச் சொன்னதும், தாழை ஓடையில் அந்தப் பெண்களுக்குக் காசு கொடுத்து மயக்கிப் பாடச் சொன்னதும் நினைவுக்கு வந்தன. பக்கத்தில் இருந்த சந்திரனைப் பார்த்தேன். புன்முறுவல் கொண்டேன்.

“என்ன அய்யா! அந்தச் சந்திரனைப் பார்த்துவிட்டு என்னையும் பார்த்துச் சிரிக்கிறாயே?” என்றான் சந்திரன்.

“அந்தச் சந்திரனிடத்தில் எவ்வளவு பெரிய களங்கம் இருக்கிறது! உன்னிடத்தில் ஒரு களங்கமும் இல்லை அல்லவா?” என்றேன்.

“போதும் போதும் உன் கதை. எழு, எழு” என்று புறப்பட்டான். நானும் தொடர்ந்து வந்தேன்.

என் நண்பனுடைய உள்ளத்தில் – நடத்தையில் – சிறு களங்கம் இருக்கிறதே. அது இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் மட்டும் என் மனத்தைவிட்டு நீங்கவில்லை.

இந்த ஆண்டில் சந்திரனுடைய வீட்டுக்கு அடிக்கடி விருந்தினர் வந்தார்கள். அத்தைக்கு வேலை மிகுதியாயிற்று. படிப்பதற்கு வேண்டிய அமைதி இல்லை என்று சந்திரன் எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவான். தேர்வுக் காலத்தில் தனித்தனியே படித்தால் நல்லது என்று எண்ணி அவன் பாக்கியம் அம்மையாரின் வீட்டுக்குப் போய்விடுவான். அந்த வீட்டில் குழந்தைகளின் கூச்சலும் இல்லை; விருந்தினரின் ஆரவாரமும் இல்லை. இருந்த ஒரு தம்பியும் உணவுக்கடையில் உண்பதுபோல் உண்டு முடித்துத் திண்ணையை நாடி அமைதி பூண்டார். உணவுக் கடையிலும், சிலர் பரிமாறுவோரோடும் வேலையாட்களோடும் நெருங்கிப் பழகிச் சிரிப்பும் ஆரவாரமுமாக இருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால், சிலர் வீட்டில் இருப்பதைவிட, உணவுக்கடையில் மிக மகிழ்ச்சியாக இருப்பார்கள். நெடுநேரம் பாடிக்கொண்டும் சீட்டாடிக் கொண்டும் இருப்பார்கள். பாக்கியத்தின் தம்பியோ, வீட்டை வீடாகவும் கருதவில்லை. உணவு விடுதியாகவும் கருதவில்லை. ஒரு சத்திரமாகக் கருதினார் என்று சொன்னால் ஒரு வகையில் பொருத்தமாக இருக்கும். அப்படிப்பட்ட வீட்டில் தேர்வுக் காலத்தில் தனியே அமைதியாகப் படிப்பது சந்திரனுக்கு உகந்ததாக இருந்தது.

சந்திரன் வீட்டுக்கு விருந்தினர் வந்தபோது நான் அடிக்கடிப் போவதில்லை. அத்தை மட்டும் சில நாட்களில் கேட்பார்: “ஏன் வேலு! நான்கு நாளாக எங்கள் வீட்டுக்கே வரவில்லையே” என்பார்.

“யார் யாரோ வந்திருந்தார்கள். அதனால் நான் வரவில்லை” என்பேன்.

“யார் வந்தால் என்ன? எனக்குக் கூச்சமா? நீ வரலாமே! நீ என்ன, இப்படிப் புதிய ஆட்களைப் பார்த்தால் பழகுவதற்குக் கூச்சப்படுகிறாயே, சந்திரனைப் பார், யார் வந்தாலும் கலகல என்று பேசிப் பழகுகிறான்.” என்பார் அத்தை.

அம்மாவும் அதற்குத் தகுந்தாற் போல், ஒருநாள், “அது என்னவோ தெரியவில்லை அம்மா! இவனும் அப்படி இருக்கிறான். இவன் தங்கை மணிமேகலையும் அப்படித்தான் இருக்கிறாள்” என்றார்.

“மணிமேகலை அப்படி இருக்கலாம். அவள் பெண், வேலு ஏன் அப்படி இருக்கணும்?” என்றார் அத்தை.

அப்படி நான் சின்ன வயதில் பழகியதைப் பற்றியும் அத்தை சொன்னதைப் பற்றியும் பிற்காலத்தில் நினைத்துப் பார்த்திருக்கிறேன். அப்படி ஒதுங்கித் தயங்கி வாழ்ந்து வந்த காரணத்தால் நான் எத்தனையோ இடர்களிலிருந்து தப்பியிருக்கிறேன் என்று சொல்லலாம்.

 

(தொடரும்)

முனைவர் மு.வரதராசனார்

அகல்விளக்கு