(அகல் விளக்கு – மு.வரதராசனார். 40. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 17

அடுத்த மார்கழி விடுமுறையில் ஊருக்குச் சென்றபோது, பாக்கிய அம்மையார், வீட்டுக்கு வந்து என்னைப் பற்றியும் சந்திரனைப் பற்றியும் கேட்டார். அவருடைய முகத்தில் முன்போல் மகிழ்ச்சியும் ஊக்கமும் காணப்படவில்லை. கவலையும் சோர்வும் காணப்பட்டன. அவரைப் பார்த்தவுடன், இமாவதி சொன்னது நினைவுக்கு வந்து என் உள்ளத்தை வருத்தியது. எந்தப் பெண்ணையும் – வயதில் பெரியவள் சின்னவள் என்று இல்லாமல் – தன்மேல் ஆசை கொண்டதாக எண்ணி யாரையும் இப்படிப் பழி தூற்றுவது சந்திரனுடைய தீயகுணம் என்று அவன் மேல் வெறுப்புத் தோன்றியது. பாக்கியம் வீட்டை விட்டுச் சென்றபின், அந்தக் குடும்பத்தில் அவருடைய தம்பி மனைவிக்கும் அவருக்கும் கசப்பு ஏற்பட்டிருப்பதாகவும், தம்பி அக்காவிடம் அன்பு இல்லாதவனாய் மனைவியின் சொல்லைக் கேட்டு நடப்பதாகவும் அம்மா சொன்னார்.

அதனால் பாக்கியம் முன் போல் ஊக்கமாக இல்லை என்றும், மனத்தில் எந்நேரமும் வருந்திக் கொண்டிருக்கிறார் என்றும் சொன்னார். கேட்டதும் எனக்கு இரக்கம் மிகுந்தது. “ஊமை போல் வாய் திறக்காமல் இருப்பவர்களை எப்போதும் நம்பக்கூடாது. அம்மா! எப்படி இருந்த அந்தத் தம்பி எப்படி ஆய்விட்டார், பார்த்தீர்களா? கடைசியில் தம்பிக்குப் பெண்பார்த்துத் திருமணம் செய்து குடும்பமாக்கி வைத்த அக்காவுக்கே துன்பமாக முடிந்ததே” என்று அம்மாவிடம் சொல்லி வருந்தினேன்.

“என்ன செய்வது? காலமே இப்படித்தான் மாறி வருகிறது. பாக்கியம் நல்ல பெண்! இருக்கும் இடம் தெரியாமல் அடங்கி ஒடுங்கி வேலை செய்கிறாள். அவளுக்கு வேறு ஒரு திக்கும் இல்லை. அவளுடைய ஒரு வயிற்றுச் சோறுக்காக நேற்று வந்த ஒரு பெண்ணிடம் சிறுமைப்படுகிறாள்” என்று அம்மா சொன்னபோது என் உள்ளம் உருகியது.

நிலைமை அவ்வளவு வேகமாக மாறிவிடும் என்று நான் எண்ணவில்லை. முடிவுத் தேர்வுக்கு நன்றாகப் படித்து எழுதிவிட்டுச் சித்திரை மாதத்தில் ஊருக்குத் திரும்பியபோது, பாக்கியத்தின் தம்பி தன் மனைவியுடன் தனியே சென்று தனிக்குடும்பம் நடத்தும் செய்தியைக் கேள்விப்பட்டேன். ஒரு வகையில் அதுவும் நல்லதே என்று ஆறுதல் அடைந்தேன்.

நன்றிகெட்ட தம்பியையும் தம்பியின் மனைவியையும் வீட்டில் வைத்துக்கொண்டு துன்பப்படுவதைவிட, தந்தைக்குச் சமைத்துப் போட்டுக்கொண்டு தனியே வாழ்வதே நல்லது என்று எண்ணினேன். பாக்கியத்தின் வீட்டுக்கு நான் சென்றவுடன், அவர் இதைப் பற்றி என்னிடம் குறிப்பிட்டு, “அப்பாவுக்கு மட்டும் மனத்தில் கவலை என்ன செய்வது? ஒரே மகன் இப்படிக் கைவிட்டானே என்று நொந்து கொள்கிறார்.” என்று சொன்னார். தனித்தனியே பிரிந்து வாழ்வதே இந்தக் காலத்தில் ஒரு வகையில் நல்லது என்று ஆறுதல் மொழியாகக் கூறினேன்.

மற்றொரு நாள் அவர்கள் வீட்டில் அந்த அம்மையாருடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது எதிர்பாரா வகையில் என் திருமணத்தைப் பற்றியே பேசத் தொடங்கினார்.

“இந்தப் பங்குனி விழாவிற்கு வேலூரிலிருந்து அத்தையும் அத்தையின் பெண்ணும் வந்திருந்தார்கள் தெரியுமா” என்றார் பாக்கிய அம்மையார்.

“தெரியாதே அக்கா. அம்மாவும் சொல்லவில்லையே” என்றேன்.

“அந்தப் பெண் உன்னைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகச் சொல்கிறாள்.”

“என் திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம். இன்னும் குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது படிக்கவேண்டும். படித்து முடித்தபிறகு ஒரு வேலைக்குப் போய் அமர வேண்டும்.”

“எல்லாம் தானாக நடக்கும், அத்தையும் உனக்கே பெண்ணைக் கொடுப்பதாக இருக்கிறார். அப்பாவும் அப்படிச் சொல்வதாகத் தெரிகிறது. அம்மா மட்டும் வாயைத் திறக்கவில்லை. உன் விருப்பம் போல் நடக்கட்டும்” என்றார்.

“எல்லாம் பிறகு பார்க்கலாம்; இப்போது ஒன்றும் அவசரம் இல்லை அக்கா.”

“நானாகக் கேட்கிறேன், தம்பி. உன் நன்மைக்காகத் தான் சொல்கிறேன். கயற்கண்ணி கொஞ்சம் துடுக்காகப் பேசுவாள். அவ்வளவுதான். மற்றப்படி பொறுப்பான பெண். குடும்பத்தை நன்றாக கவனித்துக்கொள்வாள். பாசம் உள்ளவள். பண்பு உள்ளவள். அவளை மணந்து கொண்டால் என்ன?” என்றார்.

“பொறுத்துப் பார்க்கலாம் அக்கா. இப்போது ஏன் அந்தப் பேச்சு?”

“என் தம்பிக்கு இப்போது புது இடத்தில் பெண் பார்த்து என்ன கண்டோம்? குடும்பம் இரண்டு ஆச்சு. அதற்காகத்தான் பயப்படுகிறேன், வேறொன்றும் இல்லை. கயற்கண்ணியாக இருந்தால் சின்ன வயது முதல் பழகிய பெண், குணம் குற்றம் எல்லாம் தெரியும். கொண்டு திருத்திப் போகலாம். அதற்காகத்தான் சொன்னேன்.”

பாக்கியம் இவ்வாறே சொன்னதைக் கேட்ட பிறகு என் மனம் பெருங்காஞ்சியில் இருந்த கற்பகத்தை – சந்திரனுடைய தங்கையைப் பற்றி – அடிக்கடி எண்ணியது. தேர்வு எழுதி முடித்துவிட்டுக் கவலை துறந்திருந்த என் மனத்தில் இந்த எண்ணத்தை அந்த அம்மையார் வளர்த்துவிட்டார். பெருங்காஞ்சிக்குப் போய்க் கற்பகத்தைப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்றும் ஆவல் கொண்டேன். இரண்டொரு முறை போய் வரவும் முனைந்தேன். ஆனால், என்னவோ ஒரு வகைச் சோர்வு தடுத்துவிட்டது.

அப்பாவும் அம்மாவும் ஒருநாள் என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது, வேலூர்க்கு அத்தை வீட்டுக்கு ஒரு முறை போய்வருமாறு சொன்னார்கள். பேசாமல் கேட்டுக்கொண்டிருந்து விட்டேன். மற்றொருநாள் அப்பா மட்டும் சொன்னார். இன்னும் சில வாரம் கழித்துப் போவதாகச் சொல்லிவிட்டேன். எங்கும் போக மனம் இல்லாமல் தேர்வு முடிவை எதிர்பார்த்தபடி விடுமுறையைக் கழித்தேன்.

தேர்வின் முடிவு வந்தது. மாலனும் நானும் இரண்டாம் வகுப்பில் தேறியிருந்தோம். மகிழ்ச்சியோடு அவனுக்குக் கடிதம் எழுதினேன். பி.ஏ. வகுப்பில் சேர முடிவு செய்திருப்பதாக அவன் எழுதினான். நானும் தந்தையிடம் சொல்லி அவ்வாறே முடிவு செய்து அதற்கு உரிய விண்ணப்பங்களை அனுப்பிவிட்டேன்.

இந்நிலையில் தங்கை மணிமேகலை கடுங்காய்ச்சலால் படுக்கையுற்று வருந்தினாள். காய்ச்சல் இரண்டு வாரம் மிகக் கடுமையாக இருந்தது. இரவும் பகலும் அம்மா அவளுடன் பக்கத்திலேயே இருந்து காத்துவந்தார். பாக்கியம் தந்தையார்க்கு உணவு சமைத்து இட்ட நேரம் போக மீதி நேரமெல்லாம் தங்கையின் பக்கத்திலேயே இருந்து வேண்டிய உதவிகள் செய்தார். காய்ச்சல் தன்னை மறந்து வாய் பிதற்றும் நிலை வரையில் சென்றது. தங்கை அப்போது அம்மா அக்கா என்ற சொற்கள் அடிக்கடி சொல்லக்கேட்டேன். தாய்க்கு அடுத்தபடியாகக் கருதத்தக்க அளவில் பாக்கியம் என் தங்கையின் உள்ளத்தை அன்பால் பிணைத்திருந்தார்.

வாய் பிதற்றும் நிலை மாறித் தன் உணர்வு வந்த பிறகு ஒருநாள் மாலையில் பாக்கியத்தின் வீட்டில் அலறல் கேட்டது. பாக்கியத்தின் தந்தை மாரடைப்பால் இறந்துவிட்டதாகச் செய்தி வந்து அம்மா ஓடினார். நானும் ஓடினேன். “அம்மா! நடுத்தெருவில் விட்டுவிட்டாரே! தம்பி! அப்பா என்னை இப்படி விட்டுவிட்டுப் போய்விட்டாரே” என்று பாக்கியம் கதறினார். பக்கத்தில் நின்ற என் கால்களைக் கட்டிக் கொண்டு கதறி அழுதார்.

நான் அந்த அம்மையாரின் கைகளைப் பற்றிக்கொண்டு அழுதேன். பட்டகாலிலேயே படுவதுபோல், துன்பம் அடுத்தடுத்து வந்து கெட்ட குடியையே கெடுப்பதை எண்ணிக் கலங்கினேன். தந்தையின் பிரிவைவிடக் கொடுமையாக இருந்தது தம்பியின் புறக்கணிப்பு. தந்தையின் மரணத்தின் போதும் அந்த ஆளின் நெஞ்சம் நெகிழ்ந்ததாகத் தெரியவில்லை. அயலார் வருவதுபோல் வந்தார்; அன்பு இல்லாமல் சடங்குகளைச் செய்தார்; கடமைக்காக, ஊருக்கு அஞ்சி நெருப்புச் சட்டியைத் தூக்கிச் சென்றார்.

அடுத்த மூன்றாம் நாளே அந்த ஆள் வீட்டு வாயிலை நெருங்காமல் நின்றுவிட்டார். சடங்குக்காக வந்தவர் சடங்கு முடிந்ததும் நின்று விட்டார். பாக்கிய அம்மையாரின் கண்ணீரும் கம்பலையும் நிற்கவில்லை. என் தாயின் மனம் ஆறுதல் பெறவில்லை. சொந்த மகளிடம் பரிவு காட்டுவது போல் பாக்கியத்திடம் பரிவு காட்டினார். அடிக்கடி சென்று கண்ணீரைத் துடைத்தார்.

மறு நாள் நான் கல்லூரியில் சேர்வதற்காகச் சென்னைக்குப் புறப்படவேண்டியிருந்தது. அம்மா என்னைப் பார்த்து, “பாக்கியத்திடம் போய்ச் சொல்லிவிட்டுப் போப்’பா. நாங்கள் இருக்கிறோம், பார்த்துக்கொள்வோம் என்று தேறுதல் சொல்லிட்டுப் போ. திக்கற்று நிற்கிறாள். பாசமெல்லாம் உன்னிடத்தில்தான். உடன்பிறக்காத குறைதான்” என்றார். அம்மாவின் கனிந்த சொற்களைக் கேட்டதும் என் உள்ளம் கரைந்தது. பாக்கியத்தைத் தேற்றி வரச் சென்ற நான், அவருடைய கண்ணீரைக் கண்டதும் விம்மி விம்மி அழுது விட்டு வந்தேன். அன்பு நிறைந்த நெஞ்சிற்கு அணை கட்ட முடியவில்லை.

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார்அகல்விளக்கு