(அகல் விளக்கு – மு.வரதராசனார். 50. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 21 தொடர்ச்சி

“உனக்கும் அப்படித்தான். இனிமேல் படிப்பதாக இருந்தால் நீ சொல்வது சரி. படிப்பு இனிமேல் இல்லை என்று முடிவாகிவிட்ட பிறகு, திருமணம் செய்துகொள்வது நல்லது. பணக்காரக் குடும்பத்தினர் உன்னைத் தேடி வருவார்கள். விருப்பமாக இருந்தால் சொல். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் விருப்பம் இல்லை. அவர்களுக்குச் சமமாகப் பணம் இல்லாவிட்டால், நம்மை மதிக்கமாட்டார்களே என்று அம்மாவும் அப்பாவும் அஞ்சுகிறார்கள். ஆகவே பொருளாதாரக் கவலை தான் இதற்கும் காரணம். அத்தை மகள், அக்கா மகள் என்று பழங்காலத்தில் சில குடும்பங்களுக்குள்ளேயே திரும்ப திரும்பப் பெண் கொண்டதற்கும் இந்தப் பொருளாதாரக் கவலைதான் காரணம் என்று எண்ணுகிறேன். இந்தக் கவலை தீரும் வரையில் உலக சமுதாய வாழ்க்கையில் நல்ல மாறுதல் ஒன்றும் எதிர்பார்க்க முடியாது.”

அந்த அம்மையாரின் இந்தப் பேச்சு எனக்கு மேலும் வியப்பை உண்டாக்கியது. வார இதழ்களையும் மாத இதழ்களையும் வாங்கித் தவறாமல் படித்து வருகிறார் என்று முன்னமே அம்மா சொல்லக் கேள்விப்பட்டேன். அப்படிப் படிப்பதால் இவ்வளவு தெளிவாக அறிவு வளர்ந்திருந்ததை உணர்ந்தேன்.

மறுபடியும் பழைய கேள்வியையே கேட்டார். “கயற்கண்ணியைவிடப் பழக்கமான பெண்ணாக நல்ல பெண்ணாக இருந்தால் சொல்” என்றார்.

பேசியும் பயன் இல்லை, பேசாமலிருந்தும் பயன் இல்லை என்று உணர்ந்தேன்.

திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்தன. அரிசி முதல் சருக்கரை வரையில் எல்லாப் பொருள்களும் வந்து சேர்ந்தன. உறுதிப்படுத்தும் சடங்குகள் இரண்டும் நடந்தன. அழைப்புகள் இங்கும் அங்கும் பறந்தன. அந்த வேலைகளில் நானும் கலந்து கொண்டேன். ஆற்றின் சுழற்சியில் நானும் சிக்கிக் கொண்டேன். சுழல் கடந்தும், ஆற்றின் போக்கிலேயே ஓடினேன். சந்திரனுக்கும் மாலனுக்கும் அழைப்புகள் அனுப்பிக் குடும்பத்தோடு வருமாறு தனிக் கடிதங்களும் எழுதியிருந்தேன்.

மாலன் மட்டும் திருமணத்திற்கு முந்திய நாளே வந்திருந்தான். கற்பகம் நிறைந்த கர்ப்பமாக இருந்ததால் வரமுடியவில்லை என்று சொன்னான்.

“உன் மைத்துனன் சந்திரன் வருவானா?” என்று கேட்டேன்.

“எனக்கு நம்பிக்கை இல்லை”

“ஏன் அப்படி?”

“அவன் எங்கும் போவதில்லை. உள்ளூரிலேயே எல்லாரையும் மிரட்டிக் கொண்டிருக்கிறான். என்னோடும் நெருங்கிப் பேசுவதில்லை. பழகுவதையே வெறுஞ் சடங்காக வைத்துக்கொண்டிருக்கிறான்.”

“காரணம் என்ன?”

“நான் சொன்னால் நீ ஒப்புக்கொள்ளமாட்டாய். குற்றமுள்ள நெஞ்சு வெளியே வந்து பழகப் பயப்படுகிறது.”

“ஆடும் மாடும் மனிதனை நெருங்கிப் பழகுவது போல், பாம்பும் புலியும் பழகுமா? தங்கள் இனத்தோடு பழகுவதும் இல்லையே. நானும் நீயும் குற்றம் இல்லாதவர்கள். ஆடுமாடுகள் போல் கூடி வாழ்ந்து பழகுகிறோம்.”

“கட்டாயம் வருவான் என்று நம்புகிறேன். உனக்கு எழுதியது போல் கடிதமும் எழுதியிருக்கிறேன். பார்க்கலாம்” என்று சொல்லி மாலனிடம் எங்கள் இளமை நினைவுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்.

சந்திரன் அத்தையோடும் வேலைக்காரப் பையனோடும் முதல் முதலில் ஒரு வண்டியில் வந்து இறங்கியது. நான்காம் வீட்டில் குடியிருந்தது, அப்போது சந்திரன் அழகாகவும் அறிவாகவும் இருந்த நிலை, என் காற்றாடியை வேப்பமரத்தில் மாட்டி அறுத்தது, அதனால், நட்பு ஏற்பட்டது, பள்ளிக்கூடத்துக்குச் சேர்ந்து போய்ச் சேர்ந்து வந்தது, நாங்கள் உட்கார்ந்து பேசிய திண்ணைகள், விளையாடிய இடங்கள், பார்த்த வேடிக்கைகள், படித்த அறைகள் எல்லாவற்றையும் மாலனுக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

மறுநாள் காலையில் திருமண நேரத்திலும் சந்திரனை எதிர்பார்த்தேன். அப்போதும் வரவில்லை. சாமண்ணா ஒரு மூலையில் வந்து உட்கார்ந்திருந்ததை நானும் கவனிக்கவில்லை, மாலனும் சொல்லவில்லை. திருமணம் முடிந்த பிறகு அவர் என்னை நோக்கி எழுந்து வந்தார்.

“எப்போது வந்தீர்கள்?” என்றேன்.

திருமணம் தொடங்கியபோது வந்ததாகக் கூறினார், ஆசிரியரும் வந்திருந்ததைக் காட்டினார்.

“சந்திரன் வரவில்லையா? மனைவியோடு வருமாறு எழுதியிருந்தேன்.”

“தெரியும். மருமகளுக்கு இங்கே வர வேண்டும் என்று ஆசைதான். நான் அழைத்துக் கொண்டு வந்தாலும் அவள் மேல் கோபம் கொள்வான். அவனாகவும் புறப்படவில்லை. கடைசியில், யாரும் போகாவிட்டால் நன்றாக இருக்காதே என்று நான் வந்தேன்.”

“அம்மாவும் எதிர்பார்த்தார். சந்திரனுடைய மனைவி வருவாள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.”

“அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு போவதற்கு வெட்கப்படுகிறான். அவள் ஒரு பட்டிக்காட்டு மிருகமாம். அப்படிச் சொன்னதாகக் கேள்விப்பட்டேன்.”

“இவன்தான் பட்டிக்காட்டு மிருகம்” என்றேன். என் உள்ளத்தில் தோன்றியதை அப்போது சொல்லாமலே இருந்திருக்கலாம். வெறுப்பு மேலீட்டால் சொல்லி விட்டேன். பக்கத்தில் இருந்தவர்கள் என்னை உற்றுப் பார்த்தார்கள்.

“எப்படியோ போகட்டும். நீயும் உன் மனைவியும் இன்று போலவே என்றும் பளிச்சென்றிருங்கள். நல்ல வழியில் நடந்து நல்ல பெயர் எடுக்கணும்” என்று எங்களை வாழ்த்தினார் சாமண்ணா.

நான் தனியே இருந்தபோது மாலன் வந்து, “கேட்டு வந்தவள் தான்” என்று குறும்பாகச் சிரித்தான்.

“ஏன் அப்படிச் சொல்கிறாய்” என்று அவனுடைய தோளைப் பிடித்துக் குலுக்கினேன்.

கிராமத்துப் பெண்ணாக இருந்தாலும் நல்ல அழகும் அறிவின் களையும் இருக்கின்றன. எல்லா வகையிலும் உனக்கு ஏற்ற மனைவிதான்” என்றான்.

“உன்னுடைய மனைவியை விடவா?” என்றேன்.

“அவள் ஒருவகை, உன் மனைவி ஒரு வகை. அவளை ஏன் ஒப்பிடுகிறாய்” என்றான்.

ஒப்பிட்ட காரணம் என் உள்ளத்துக்கு தெரியும் அவனுக்குத் தெரியாது என்று எண்ணினேன். ஆனால், அவனுடைய சிரிப்பில் குறும்பு மிகுதியாக இருக்கவே, ஐயுற்றேன். “ஏன் அப்படிச் சிரிக்கிறாய்?” என்றேன்.

“நீ கற்பகத்தை மணந்துகொள்ள எண்ணியிருந்தாயா?” என்று கேட்டு முன்னிலும் மிகுதியாகச் சிரித்தான்.

“இளமையில் திருமணத்திற்கு, முன்பு பார்க்கிற பெண்ணை எல்லாம் மணந்து கொள்ளலாமா? என்று மனம் தேர்ந்தெடுப்பது இயற்கைதானே?”

“அப்படியானால் கற்பகத்தை நீ விரும்பவில்லையா?”

“விரும்பினேன். ஆனால், உனக்காக விட்டுக் கொடுத்தேன்” என்று அவனை இரண்டு கைகளாலும் பற்றிக் குலுக்கினேன். “உனக்கு யார் சொன்னது?” என்றேன்.

“வேறு யார் சொல்ல முடியும்? அவள்தான். உன்னுடைய கடிதம் பார்த்த பிறகுதான் என்னைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டாளாம். அதுவரையில் திருமணமே வேண்டாம் என்று சொல்லி கொண்டிருந்தாளாம்.”

“எந்தக் கடிதம்?”

“என்னைப் பற்றி நற்சான்று ஒன்று எழுதி அனுப்பினாயாமே. அந்த நற்சான்றின் பேரில்தான் எனக்குப் பெண் கொடுத்தார்களாம்.”

“இவ்வளவுமா நினைவில் வைத்துக் கொண்டிருந்து சொன்னாள்.”

“இந்தச் செய்திகளை வாழ்நாளில் எப்போதுமே மறக்க முடியாதே. நீதான் வேண்டுமென்றே என்னிடம் சொல்லாமல் மறைத்து வைத்தாய். நான் விடுவேனா? உன் திருமண நாளன்றே இதைச் சொல்லி உன்னைத் திகைக்க வைத்தேன்” என்று என் கைகளை இறுகப் பற்றி அழுத்தினான்.

கற்பகத்தின் பெருந்தன்மையும் பேரன்பையும் நினைந்து என் உள்ளம் உருகியது.

மறுபடியும் அவனே, “நீ பெற்ற பரிசு – உன் மனைவி – எந்த வகையிலும் குறைவான பரிசு அல்ல. வாழ்க பல்லாண்டு” என்று சொல்லி மகிழ்ந்தான்.

திருமணத்திற்கு மூன்றாம் நாள் தேர்வு முடிவுகள் வெளியாக இருந்தன. அதுவரையில் மாலனை வீட்டிலே தங்கியிருந்து மகிழுமாறு வேண்டிக்கொண்டேன்.

“தேர்வு முடிவுகள் வெளிவரும்போது நான் இங்கே இருக்கக்கூடாது. அதனால்தான் போகவேண்டும் என்கிறேன்” என்றான்.

“ஏன்?”

“நீ நன்றாக எழுதியிருக்கிறாய். நல்ல வெற்றிச் செய்தி வரும். எனக்கு அப்படி இருக்காது. நான் இங்கே இருந்தால் எனக்காக நீ வருந்துவாய் அல்லவா? உன் மகிழ்ச்சி, வருத்தம் கலக்காத மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணித் தான் போகிறேன்” என்று விடைபெற்றான்.

அவன் எதிர்பார்த்ததுபோலவே முடிவுகள் வந்தன. அவன் முதல் இரு பகுதியிலும் தேறி மூன்றாம் பகுதியில் தவறிவிட்டான். நான் முதல் பகுதியில் மூன்றாம் வகுப்பாகவும் இரண்டாம் பகுதியில் இரண்டாம் வகுப்பாகவும் மூன்றாம் பகுதியாகிய கணக்கில் முதல் வகுப்பாகவும் தேறி இருந்தேன். அப்பா உள்ளத்துள் ஏற்பட்ட மகிழ்ச்சியை எல்லாம் அடக்கிக் கொண்டு, வேண்டுமென்றே, “முதல் பகுதியிலும் ஏன் முதல் வகுப்பில் தேறவில்லை?” என்று கேட்டார், ஆங்கிலம் தாய்மொழி அல்ல என்றும் தாய் மொழியில் தருவதில்லை என்றும் சொல்லித் தப்பித்துக் கொண்டேன்.

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார், அகல்விளக்கு