(அகல் விளக்கு – மு.வரதராசனார். 54. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 22 தொடர்ச்சி

“நாம் வீடுகளுக்கு வலுவான கதவும் சன்னலும் வைத்து, உறுதியான தாழ்ப்பாளும் போட்டு இரவில் படுத்துக் கொள்கிறோம். வாசலுள் யாரும் இறங்கி வராதபடி வாசலிலும் கம்பிகள் போட்டுவிடுகிறோம். எல்லோரும் இப்படிச் செய்தால் திருடர்கள் எப்படிப் பிழைப்பார்கள்? அவர்களுடைய மனைவி மக்கள் என்ன ஆவார்கள்?” என்றார் பாக்கியம்.

இப்போது என் மனைவியும் சேர்ந்து ஒரே ஆரவாரமாகச் சிரித்தது கேட்டது.

“பட்டுத் தொழிலும் வீட்டில் திருடுவதும் ஒன்றுதானா?” என்று சிரித்தபடியே மனைவி கேட்டாள். “வேறுபாடு உண்டு. திருடுகிறவன் பசிக்காகத் திருடுகிறான். ஆடம்பரத்துக்காகத் திருடவில்லை. ஆனாலும் அது குற்றமே. உணவுக்காக ஆடு மாடுகளை வெட்டுகிறார்கள். அதுவும் குற்றமே. ஆனாலும் ஆடம்பரத்துக்காக கொலை செய்யவில்லை. பட்டுத் தொழில் இந்த இரண்டையும் விடக் கொடுமையானது. பட்டுப் பூச்சிகளைத் தீனியிட்டு வளர்க்கிறார்கள்.

நூலுக்குள் சுற்றிக்கொண்டு கிடக்கும் நிலை வந்ததும் கொதிக்கும் நீரில் அந்தப் பட்டுப் பூச்சிகளை அப்படியே உயிரோடு போட்டுச் சாகடிக்கிறார்கள். பிறகு வெளியே எடுத்து, நுலைச் சேர்த்துக் கொண்டு செத்த உடம்புகளை எரிக்கிறார்கள். ஆடம்பரத்துக்காகச் செய்யும் கொலை இது. ஒருவன் பசிக்கு ஒரு சின்ன கோழி அல்லது அரைக்கால் ஆடு போதும். ஆனால் ஒரு பட்டுச் சேலைக்கு ஆயிரக்கணக்கான பட்டுப் பூச்சிகளைக் கொதிக்கும் வெந்நீரில் இட்டு வதைத்துக் கொல்ல வேண்டும். நான் கண்ணாரப் பார்த்தேன். அந்தக் கொடுமையை!” என்றார் பாக்கியம்.

உடனே அம்மா, “மெய்தான். ஆனால் பட்டுச் சேலைக்குப் போடும் காசு பழுது அல்ல. நன்றாக உழைக்கிறது. அழகாகவும் இருக்கிறது” என்றார்.

“என்ன இருந்தாலும், ஆடம்பரத்துக்காக, அழகுக்காகச் செய்யும் கொலை அது! மூட்டைப் பூச்சிகளை, கொசுக்களை, எலிகளைக் கொல்கிறோம். அவை நம் வாழ்வுக்கு இடையூறு செய்கின்றன. அதனால் கொல்கிறோம். புலி சிங்கங்களையும் அப்படியே வேட்டையாடிக் கொல்கிறோம். ஆனால், ஆடம்பரத்துக்காக அழகுக்காகக் கொலை செய்யலாமா? அது அறமா?” என்றார் பாக்கியம்.

அவ்வளவு தெளிவாக அவர் சொன்னதைக் கேட்டதும் இனிப் பட்டாடையே உடுப்பதில்லை என்ற உறுதி என் நெஞ்சில் ஏற்பட்டது. அந்த உறுதி இன்று வரையில் தளராமல் இருக்கிறது. அப்படி இருப்பதால், அன்று இரவு, பாக்கியம் பேசிய பேச்சும் இன்னும் என் செவியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

“என் வீட்டுக்காரர் இதற்குமேலே ஒரு படிபோய் விட்டார்” என்றாள் தங்கை.

“எப்படி” என்றாள் மனைவி.

“தோட்டத்தில் உரோசாச் செடி பூத்திருக்கும். நான் போய்ப் பறிக்கும்போது அவர் பார்த்துவிட்டால், ‘அய்யோ பாவம்’ என்பார். ஒருநாள் வெள்ளிக்கிழமை பூசைக்காக அரளிப் பூக்களைப் பறித்து ஒரு தட்டில் கொண்டுவந்தேன். அவற்றைத் தட்டோடு வாங்கிக் கண்ணில் ஒற்றிக்கொண்டு இரக்கத்தோடு பார்த்து, ‘மனிதர் கையில் அகப்பட்டுக் கொண்டீர்களா?’ என்றார்.”

இதைக் கேட்டதும் பாக்கியம், “நல்ல மனம்தான். தாயுமானவரும் ஒரு பாட்டில் இப்படி உணர்ந்து பாடி இருக்கிறார். நவசக்தி இதழில் பார்த்தேன். காந்தியடிகளின் ஆசிரமத்தில், யாரும் அங்குள்ள பூக்களைப் பறிக்கக்கூடாது என்று ஒரு விதி உண்டாம். செருமனி நாட்டு சுவெயிட்சர் என்ற மருத்துவர் – பெரிய விஞ்ஞானி ஒருவர் – புல்மேல் கால்வைத்து நடக்கமாட்டாராம்” என்றார்.

“இவை எல்லாம் நடக்க முடியாத விதிகள்” என்றாள் தங்கை.

நடக்க முடிந்தவை என்று சிலவற்றை ஏற்படுத்திக் கொண்டு, அவற்றையாவது கடைப்பிடிப்போம். அதுவும் செய்யாமல், பழையபடியே இருந்தால் பயன் என்ன?” என்றார் பாக்கியம்.

“அப்படியானால் உனக்குப் பூவும் வாங்கிக் கொடுக்க மாட்டார் உன் வீட்டுக்காரர்” என்றாள் மனைவி.

“அவர் கையால் வாங்கிக் கொடுப்பதில்லை. ஆனால் நானாகப் பூ வாங்கிக் கொண்டால் தடுப்பதில்லை.”

பாக்கியம் குறுக்கிட்டு, “பார்த்தாயா? அவருடைய கொள்கையாக இருந்தும், இந்தப் பூ வகையில் உன் விருப்பம் போல் நடப்பதற்கு விட்டுக்கொடுத்திருக்கிறார். இந்த அன்பை நீ உணரவில்லையே” என்றார்.

“உணராமலா நல்லபடி வாழ்ந்துவிட்டு வந்திருக்கிறேன்? என்ன அக்கா, அப்படிச் சொல்லிவிட்டாயே!” என்றாள் தங்கை.

“தாய் தந்தைக்கு அடுத்தபடி கணவர்தான் அன்பு மிகுந்தவர். தன்னலம் இல்லாத ஆளாக இருந்தால் அந்த அன்பு நாளடைவில் வளர்ந்து பெருகும். முதலில் பொறுமையோடு அவர் வழியில் நடந்தால், காலம் செல்லச் செல்ல முழுதும் உன் வழியில் வந்துவிடுவார். உலகத்தில் பார்! பெண்கள் இட்ட கோட்டைக் கடக்காமல் எத்தனை ஆண்கள் வாழ்கிறார்கள்? பயந்து வாழ்கிறவர்களைக் கணக்கில் சேர்க்க வேண்டா, அன்பால் முழுதும் விட்டுக்கொடுத்து வாழ்கிற கணவன்மார் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்” என்றார் பாக்கியம்.

“இரண்டு பேரும் விட்டுக்கொடுத்துப் போக வேண்டியதுதான். ஒரு மாடு மட்டும் இழுத்து இன்னொரு மாடு சும்மா இருந்தால் வண்டி போகுமா?” என்றார் அம்மா.

“சரிதான் அக்கா! கண்ணகிபோல் பயந்து அடங்கிப் பதில் பேசாமல் வாழ்க்கை நடத்தவேண்டும் என்று சொல்கிறாய்” என்றாள் தங்கை.

“அதுதான் நல்லது” என்றார் அம்மா.

பாக்கியம் மறுத்தார். “இதுதானா நீ படித்தது? அந்தச் சிலப்பதிகாரக் கதையைப் படித்ததும் உண்மையைத் தெரிந்து கொள்ளவில்லையே. கண்ணகியா பயந்த பெண்? அவளைப் போல் அஞ்சாமையும் வீரமும் யாருக்கு உண்டு? காந்தி பட்டினி கிடப்பதைப் பார்த்து அவரைக் கோழை என்று ஒரு வெள்ளைக்காரன் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது உன் பேச்சு! துன்பம் பொறுப்பவர்கள் கோழைகள் அல்ல. கொள்கையோடு அமைதியாய் இருப்பவர்கள் கோழைகள் அல்ல.

கண்ணகி பயந்த பெண் அல்ல என்பதற்கு அந்தக் கதையிலேயே பல இடங்கள் வருகின்றனவே. தோழி ஒருத்தி சந்திர சூரிய வழிபாட்டுக்கு அழைக்கிறாள். கணவனுடைய மனத்தை மாற்றுவதற்கு அது உதவும் என்கிறாள். கண்ணகி அது தகாத வழி என்று உடனே மறுத்துவிடுகிறாள். செப்பனிட்ட பாதைபோல் இருந்தது கண்ணகியின் வாழ்க்கை. அதில் தடுமாற்றமே இல்லை. மதுரையில் அயலார் வீட்டில் இருக்கும்போது கணவன் செய்த தவறு இப்படிப்பட்டது என்று எடுத்துக் காட்டுகிறாள். கணவன் கொலையுண்ட பிறகு, அரசனை எதிர்த்து எவ்வளவு பேசுகிறாள்!” என்றார்.

“கோவலன்” என்று எதையோ கேட்கத் தொடங்கிப் பேசாமல் நிறுத்தினாள் மனைவி.

“கோவலன் செய்தது தவறுதான். என் மனத்துக்கே அது வருத்தமாக இருக்கிறது. பல ஆண்கள் மனைவியைப் பிரிந்து வாழ்ந்தது பெருங்குற்றம்” என்றார்.

“ஆண்கள் மட்டும் அப்படித் தவறு செய்யலாமா?” என்றாள் மனைவி.

“செய்யகூடாதுதான். ஆனால்” என்று நிறுத்தினார்.

“ஏதோ சமாதானம் செய்து மழுப்பப் பார்க்கிறீர்கள்! நீங்கள் எப்போதும் ஆண்களின் கட்சியே” என்றாள் தங்கை.

“உண்மையான கட்சி நான் சொல்கிறேன். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒழுக்கம் தவறாதவர்களுக்குத்தான் முதல் மதிப்பு உண்டு. ஆனால் ஒன்று எண்ணிப்பார்க்க வேண்டும். சிலர் மணலில் நடக்கிறார்கள். சிலர் சேற்றில் நடக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். யார் வழுக்கி விழுந்தால் பெருந்தவறு?” என்றார்.

“சேறு வழுக்கும். விழுந்தால் தப்பு இல்லை, மணலில் நடப்பவன் விழுந்தால் அது தான் பெரிய குற்றம்” என்றார் அம்மா.

“அதுபோல்தான் ஆண்பெண் வாழ்க்கை. ஆணின் வாழ்க்கை வெளியே பலரோடு பழகித் திரியும் வாழ்க்கை. பலரோடு பழகுவதால் மனம் கெடுவதற்கு வாய்ப்பு உண்டு. ஒழுக்கம் கெடுவதற்கும் வழி உண்டு. சேற்றில் நடந்து வழுக்குவது போன்றது அது. பெண்ணின் வாழ்க்கை குடும்பத்தளவில் பெரும்பாலும் இருந்து, கணவனோடும் மக்களோடும் பழகி அமையும் வாழ்க்கை. மனம் கெடுவதற்கும் வாய்ப்பு இல்லை; ஒழுக்கம் தவறுவதற்கும் வழி இல்லை. மணலில் நடப்பது போன்றது இது. ஆகையால் தவறி விழவே கூடாது. விழுந்தால் நொண்டியாக இருக்க வேண்டும் அல்லது நோயாளியாக இருக்க வேண்டும்.”

இவ்வாறு பேசிய பேச்சு முடிவதற்குள் தங்கை குறுக்கிட்டு, “இந்தக் காலத்தில் பெண்களும் வீட்டைவிட்டு வெளியே போய்ப் பலரோடு பழகவேண்டியிருக்கிறதே” என்றாள்.

“படித்துவிட்டு வேலைக்குப்போகும் பெண்களைச் சொல்கிறாய். அவர்கள் மணலில் நடப்பவர்கள் அல்ல, சேற்றில் நடப்பவர்கள். ஆகவே வழுக்கி விழுந்தால் மன்னிக்க வேண்டும். ஒரு முறை அனுபவப்பட்டு அறிவு பெற்ற பிறகாவது திருந்த வேண்டும். வெளியே பழகும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், ஊன்றுகோல் இல்லாமல் நடக்கக்கூடாது. புலனடக்கம் கட்டாயம் வேண்டும்.

திருமணம் ஆகாத பெண்களுக்கும், என்னைப் போல் கைம்பெண்களுக்கும் ஊன்றுகோல் இருந்தாலும் போதாது. எங்கள் வாழ்க்கை மலைச்சரிவில் பெருங்காற்றில் நடப்பது போன்றது. நாங்கள் நிமிர்ந்து கைவீசி நடக்க ஆசைப்படவே கூடாது. மண்ணோடு மண்ணாய் ஒட்டிப் பற்றிக் கொண்டு நடக்க வேண்டும். இல்லையானால் பெருங்காற்றில் கால் தவறினால் புரண்டு விழுந்து அழிய வேண்டியதுதான்” என்றார் பாக்கியம்.

சிலப்பதிகாரத்தில் கொலைக்களக் காதையும் வழக்குரை காதையும் எனக்குப் பாடமாக இருந்த பகுதிகள். அவற்றிற்காகச் சிலப்பதிகாரக் கதையை நன்றாகப் படித்தேன். ஆசிரியரும் நன்றாகச் சொல்லிக் கொடுத்தார். ஆயினும் பாக்கியம் தந்த விளக்கமும் அமைதியும் எனக்குப் புதுமையாக இருந்தன. மூல நூல் படிக்கக்கூடிய பயிற்சியும் அவருக்கு இல்லை; ஆசிரியரின் துணையும் இல்லை. வெறுங்கதையைப் படித்தே இவ்வளவு தெளிவு பெற முடிந்ததே என்று எண்ணி எண்ணி வியந்தேன்.

சன்னலருகே இருந்தபடியே பேசினேன். “சிலப்பதிகாரத்தை நீயே படித்ததுதானே? இவ்வளவு தெளிவாகத் தெரிந்து கொண்டிருக்கிறாயே அக்கா?” என்றேன்.

“இல்லை, தம்பி! போன வேனில் விழாவில் இங்கே இரண்டு நாள் சொற்பொழிவுகள் நடந்தன. அப்போது ஒருவர் கண்ணகியைப் பற்றி நன்றாகப் பேசினார். தலைவரும் பேசினார். அப்போது கேட்டதால் தெளிவு ஏற்பட்டது” என்றார் பாக்கியம்.

அது மட்டும் காரணமாக இருக்க முடியாது. இயற்கையான அறிவு வளர்ச்சிக்கு உரிய ஆர்வமும் உழைப்பும் முக்கியமான காரணங்கள் என்று உணர்ந்தேன்.

மறுநாள் கோவைக்குப் புறப்பட்டுச் சென்றபோது, (இரயில்) வண்டியில் அவருடைய அறிவின் சிறப்பை அடிக்கடி எண்ணி வியந்தேன். அந்த வளர்ச்சி, ஓவியன் கைப்பட்டதும் வெறுந்துணி வண்ண ஓவியமாக மாறுவதுபோல் இருந்தது. வெறுங்கல் சிற்பியின் கைத்திறனால் அழகிய சிலையாக மாறுவதுபோல் இருந்தது. இன்னும் உணர்ந்து வியந்து கொண்டிருந்தபோது, மேற்குவானத்தில் கருமுகில்களும் செவ்வொளியும் கூடிப் பலவகைக் காட்சிகள் அமைத்தலைக் கண்டேன். சிறிது நேரத்திற்கு முன் பார்க்கக் கண்கூசும் அளவிற்குக் கதிரவன் காய்ந்து கொண்டிருந்த அந்த வானத்தில் – சிறு சிறு வெண்முகில்கள் தவிர வேறொன்றும் இல்லாதிருந்த அந்த வானத்தில் – இயற்கை இழைத்த அந்தக் காட்சிகள் வியக்கத் தக்கவாறு அமைந்திருந்தன. பாக்கியத்தின் வாழ்க்கையில் விளைந்த இடர்களும் உள்ளத்தின் உயர்ந்த பண்பாடும் கூடி, அவருடைய அறிவை வளர்த்து உயர்த்திவிட்ட விந்தையும் இத்தகையதே என்று உணர்ந்தேன்.

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார், அகல்விளக்கு