(அகல் விளக்கு – மு.வரதராசனார். 69. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 27 தொடர்ச்சி

வேலையாளைப் பார்த்து, நீ போ. இதோடு எட்டு மணிக்குச் சாப்பாடு எடுத்து வந்தால் போதும். இரண்டு பேர்க்குச் சாப்பாடு கொண்டு வா. இனிமேல் நான் மறுபடியும் சொல்லும் வரையில், எது கொண்டு வந்தாலும் இரண்டு பேர்க்கு என்று நினைவு வைத்துக்கொள்” என்றேன். உடனே, அன்று மாலையில் பச்சைமலையாரின் வீட்டுக்கு வருவதாகச் சொல்லி விட்டு வந்தது நினைவுக்கு வந்தது. “அப்படியே பச்சை மலையாரின் வீட்டுக்குப் போய் ஐயா இன்று வரமாட்டாராம் என்று சொல்லி விடு” என்றேன்.

வேலையாள் சென்ற பிறகு தோட்டத்திற்குத் திரும்பி வந்து பார்த்தேன். உறங்கிக் கொண்டிருந்த சந்திரனுடைய முகம், நாற்பது ஐம்பது வயதுள்ள ஒருவனுடைய முகம்போல் இருந்தது. இளமையின் சாயலே இல்லாமல் அந்த முகத்தை நோய் மூடியிருந்தது. கால் விரல்களையும் கை விரல்களையும் நன்றாகப் பார்த்தேன். என் உள்ளத்தில் முன் இருந்த அருவருப்புச் சிறிதும் இல்லாமல் மறைந்து, இரக்கம் மட்டுமே நின்றது. பார்த்துப் பார்த்து வருந்தினேன்.

தொடக்கப் பள்ளியில் நான் படித்திருந்தபோது எனக்கு ஆசிரியராக இருந்தவர் ஒருவர் எப்படியோ தொழு நோய்க்கு ஆளானார். தொழு நோய் அவருடைய முகத்திலும் கை கால்களிலும் உருவெடுத்தபோது நான் உயர்நிலைப் பள்ளிக்கு வந்துவிட்டேன். அப்போது அவர் எதிரே வரப்பார்த்ததும் நான் பேசாமல் ஒதுங்கிவிடுவேன்.

அவருடைய கண்ணுக்குப் படாத படி சிறு சந்துகளின் வழியாகத் திரும்பிச் சென்று விடுவேன். வழக்கமாகத் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களிடம் அன்பும் பணிவும் உடையவனாய் நடந்த நான் அந்த ஓர் ஆசிரியரிடம் மட்டும் அவ்வாறு நடக்க முடியாமற் போயிற்று. அவரே ஒருநாள் வீட்டுக்கு வந்து, “வேலு” என்று கூப்பிட்டார். வந்து பார்த்தபோது அவர் திண்ணையில் உட்கார்ந்திருப்பதைக் கண்டு தொலைவில் இருந்தபடியே பேசிவிட்டுப் போய்விட்டேன். அவர் உட்கார்ந்திருந்த திண்ணைமேல் மூன்று வாளித் தண்ணீர் கொட்டிக் கழுவச் செய்தேன். அதன் பிறகும் அந்தத் திண்ணை மேல் உட்காராமலே இருந்தேன். அவ்வாறு அளவுக்குமேல் பயந்திருந்த நான் இப்போது சந்திரனோடு நெருங்கிப் பழகுவதோடு அவனை வீட்டிலேயே வைத்துப் போற்றும் படியாகவும் நேர்ந்ததை எண்ணினேன்.

திரும்பி வந்து என் அறையில் உட்கார்ந்தபடி என்னென்னவோ எண்ணிக் கொண்டிருந்தபோது அவன் இருமும் ஒலி கேட்டது. எட்டிப் பார்த்தேன். அவன் அசைவதைக் கண்டு, காப்பி எடுத்துச் சென்றேன். முதுகைச் சொரிந்து கொண்டிருந்த அவன் என்னை நிமிர்ந்து பார்த்து, “என்னால் உனக்குப் பெரிய துன்பம்” என்றான்.

காப்பி குடித்த பிறகு, “உன் தங்கையின் திருமணத்திற்கு நான் ஊருக்கு வந்தபோது, உன் காதுகளைப் பார்த்துச் சந்தேகப்பட்டுச் சொன்னேன்.”


“ஆமாம். என் மூக்கிலும் மினுமினுப்பு மிகுதியாக இருந்ததாகச் சொன்னாய்; சொன்னாய்; மெய்தான். நான் கொஞ்சமும் சந்தேகப்படவில்லையே. மேலும் மேலும் ஆட்டங்கள் ஆடினேன். மேலும் மேலும் உடம்பைக் கெடுத்துக் கொண்டேன். வைத்தியர் பார்த்து, மேகம் என்று சொன்னாரே தவிர, இந்த மேகம் இப்படித் தொழுநோயாக முற்றும் என்று சொல்லவில்லை. யாரோ ஒரு பைத்தியக்காரன் என்னைக் கெடுத்தான். உடம்பில் இந்திரியம் தேங்கிப் புளிப்பதால்தான் இப்படி மேகம் ஏற்படுகிறது என்று பொய் சொல்லிக் கெடுத்தான்.

வெறி பிடித்த நாய்க்குச் சாராயம் ஊற்றியது போல ஆயிற்று. இந்திரியம் உடம்பில் தேங்காமல் வெளிப்பட வேண்டும் என்று கண்ட பெண்களை எல்லாம் தேடினேன். நல்லவள் கிடைப்பாளா? கெட்டு அழுகிப் போனவள்தான் நினைத்தவுடன் கிடைக்கிறாள். தப்பித்தவறி நல்லவள் ஏமாந்து கிடைத்தால், அவளையும் அழுகல் நோய் உடையவளாகச் செய்து ஒழித்தேன். நான் செய்தது கொஞ்சமான கொடுமையா? அப்போது தெரியலையே” என்று தலையை இரண்டு கைகளாலும் அடித்துக் கொண்டான்.

என்னால் கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை. சந்திரனோ, உள்ளம் திறந்து தன் குற்றங்களைச் சொல்லி ஆறுதல் பெற முயன்றான்.

“அதன் பிறகு, என் நோய் எனக்கே தெரியத் தொடங்கியது. விரல்களில் மினுமினுப்பு ஏற்பட்ட பிறகும் தெரிந்துகொள்ளவில்லை. நகங்களைச் சுற்றி, கணுக்களைச் சுற்றித் தடிப்பு ஏற்பட்டபோது உடம்பெல்லாம் தடிப்பும் தழும்பும் ஏற்பட்டபோது உணர்ந்து கொண்டேன். அந்த ஏமாந்த பெண் – என் மனைவி – உடம்பெல்லாம் இப்படி இருக்கிறதே. மருத்துவரிடம் கவனிக்கக் கூடாதா, கவனிக்கக் கூடாதா, என்று நாலைந்து நாள் முறையிடத் தொடங்கினாள். “சே! கழுதை! வாயைமூடு” என்று அவளை அடக்கிவிட்டேன். மருத்துவரிடம் போனேன். சொல்லிவிட்டார்.”

இப்படிச் சொல்லி நிறுத்தித் தனக்குத்தானே தலையை அசைத்துக் கொண்டான். நான் ஊம் கூட்டவும் இல்லை. அமைதியாக நின்றேன்.

“என் கதையை இன்னும் கேட்கணுமா?” என்றான். அதற்கும் பேசாமல் இருந்தேன். “ஏன் வேலு, நிற்கிறாய்? கேட்கணுமா என் கதையை? சரி சொல்கிறேன் கேள். அதற்குத் தானே நான் இங்கே வந்தேன்? ஆமாம், சொன்னால்தான், என் மனம் சுத்தமாகும், சுத்தமாவது ஏது? பளு குறையும் பாவ மூட்டையைக் கொஞ்சம் இறக்கி வைத்தாற்போல் இருக்கும். வேறு யாரிடம் சொல்வேன். யாரிடம் சொன்னால் எனக்கு ஆறுதல் ஏற்படும்? அதற்குத்தான் உன்னைத் தேடி வந்தேன்” என்று சொல்லிக்கொண்டே இருமினான். இருமலுக்குப் பிறகு மார்பைப் பிடித்து அழுத்திக் கொண்டான். பெருமூச்சு விட்டான். முகத்தில் வியர்வையைத் துடைத்தான். தலையைச் சொரிந்து கொண்டான்.

“அப்புறம் என்ன? இன்னொரு படுபாவி வந்து சேர்ந்தான்; பக்கத்து ஊரான். அவன் என்னைப் போல் நோயாளி. உனக்குமா இது வந்துவிட்டது” என்றான். “விதி” என்றேன். “இதற்கு ஒரு வழி சொல்கிறார்கள். செய்வாயா?” என்றான். நீ செய்து பலன் கண்டாயா? என்றேன். “என்னால் முடியாது. கையில் காசு இல்லை. உனக்குப் பணம் இருக்கிறது நீ செய்யலாம் என்றான்.

“கன்னிப் பெண்ணின் உறவு ஏற்பட்டால் இந்த வெப்பு அடங்கி விடும்” என்றான். நான் நம்பவில்லை. பட்டணத்தில் ஒரு படித்த பணக்காரர் இருக்கிறார் என்று அவருடைய கதையைச் சொன்னான். அவருக்கு இந்த நோய் வந்துவிட்டதாம். பெரிய பணக்காரராம், பெரிய பங்களாவாம். ஒரு கூட்டாளியைப் பிடித்தாராம். அந்தக் கூட்டாளி அழகாக இருப்பானாம். அவனைக் காட்டி அவனுக்காக என்று சொல்லி இளம் பெண்கள் பலபேரை காசு கொடுத்து மயக்கிக் கொண்டுவரச் செய்தாராம். என்ன என்னவோ சொன்னான். நான் நம்பிவிட்டேன்.

எண்ணிப் பார்க்காமல் நம்பி விட்டேன். அந்தப் பணக்காரப் பாவிக்கு நோய் போய் விட்டதா இல்லையா என்று ஆராய்ச்சி செய்யாமலே நம்பி விட்டேன். ஆசுபத்திரிக்குப் போன பிறகு அந்தப் பணக்காரனைப் பற்றிச் சிலரிடத்தில் என்னைப்போல் நோயாளிகளிடத்தில் சொன்னேன். அவர்கள் உண்மையைச் சொன்னார்கள். சுத்தப் பிதற்றல் என்று சொன்னார்கள். அந்தப் பணக்காரன் அதே நோயால் அழுகி அழுகி முகமெல்லாம் கெட்டு அழிந்து செத்தான் என்று சொன்னார்கள். நான் அப்படி ஆராய்ந்து பார்க்கவில்லை.

பக்கத்து ஊரான் சொன்னதைக் கேட்டு நம்பிவிட்டேன், நிலத்தின்மேல் கடன் வாங்கத் தலைப்பட்டேன். காசை வாரி இறைத்தேன். சில ஏழைக் குடும்பங்களைக் கெடுத்தேன், கெடுத்தேன். அய்யய்யோ! வேலு! இந்தப் பாவத்துக்கு நான் என்ன செய்வேன்? என்ன செய்வேன் வேலு! நினைத்தால் மனம் பகீர் என்கிறதே” என்று கவரில் தலையை மோதிக்கொண்டு அழுதான். “ஐய்யய்யோ” என்று தலையைச் சுவரிலிருந்து எடுத்தபோது, தலையில் ஒரு புண்நைந்து இரத்தம் கசிந்தது.

“என்ன சந்திரா! நீ சும்மா இருக்கமாட்டாயா? இப்படியா தலையை மோதிக்கொள்ள வேண்டும்” என்று புண்மருந்து எடுத்துவரச் சென்றேன்.

திரும்பியபோது, அவன் ஒரு கந்தலால் தலையைத் துடைத்துக் கொண்டிருந்தான். என் கையில் மருந்து இருந்ததைப் பார்த்து, “மருந்து எடுத்துவந்தாயா?” அதைவிடப் பழுக்கக் காய்ச்சிய ஈட்டியை எடுத்து வந்து ஒவ்வொரு புண்ணிலும் குத்தினாலாவது என் பாவம் தீருமே” என்றான்.

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார், அகல்விளக்கு