(அகல் விளக்கு – மு.வரதராசனார். 2 .  தொடர்ச்சி)

 

அகல் விளக்கு.  3 .

 

  மூன்றாம் வீட்டில் பாக்கியம் என்று ஓர் அம்மா இருந்தார். அவருடைய தம்பி கன்னெய்(பெட்ரோல்) கடையில் கணக்கு எழுதுபவர். அந்த அம்மா இளமையிலேயே கணவனை இழந்தவர். குழந்தையும் இல்லை. அதனால் அவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். குழந்தையாக இருந்த என்னோடும் என் தங்கையோடும் அன்பாகக் கொஞ்சுவார். ஆட்டங்களில் கலந்து கொள்வார். வீட்டில் ஏதாவது அடம் பிடித்து அழுதுகொண்டிருந்தால், எங்கள் அழுகுரல் கேட்டு விரைந்து வருவார். எங்களைத் தூக்கிக்கொண்டு கொஞ்சு மொழி பேசித் தேற்றுவார். வீட்டில் ஏதாவது தின்பண்டம் இருந்தால், மறக்காமல் எடுத்துக் கொண்டு வந்து எங்களுக்குக் கொடுப்பார். எங்களுக்காகவே தின்பண்டங்கள் செய்து கொண்டு வருவார் என்று அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். பாக்கியம் செல்லம் கொடுத்து என்னை கெடுத்து விட்டதாக அம்மா அடிக்கடி சொல்வது உண்டு.

     நான் செய்யும் இடக்குக்காக அம்மா என்னை அடித்தால், நான் உடனே பாக்கியத்தின் வீட்டுக்கு ஓடிப் போவேனாம். பாக்கியம் என்னை வழியிலேயே பார்த்துத் தூக்கி கொண்டு வந்து, அம்மாவை அடிப்பது போல் பாசாங்கு செய்வாராம். அதனால் நான் சில சமயங்களில் அம்மாவை எதிர்த்துப் பேசி, “இரு இரு, பாக்கியம்மாவிடம் சொல்லப் போகிறேன்” என்று மிரட்டுவேனாம். இப்படியெல்லாம் என் குழந்தைப் பருவத்தில் ஈடுபட்டிருந்த பாக்கியம், நான் பள்ளிக்கூடம் செல்லத் தொடங்கிய பிறகும் வரும்போதும் போகும் போதும் என்னைக் கண்டு என்னைத் தட்டிக் கொடுத்து அனுப்புவது உண்டு. வளர வளர, நான் போய்ப் பழகுவது குறைந்ததே தவிர. அந்த அம்மாவின் அன்பு குறைந்ததாகத் தெரியவில்லை. “வேலு முன் போல் குழந்தையாகவா இருக்கிறான்? என் மார்மேலும் தோள்மேலும் அழுது தூங்கியது அவனுக்கு நினைவிருக்குமா? எங்கள் வீட்டுத் தயிருக்கும் முறுக்குக்கும் ஆசைப்பட்டு என்னைத் தேடி வந்தது நினைவிருக்குமா? இப்போது பெரியவன் ஆகிவிட்டான். மீசை முளைக்கப் போகிறது. ஆனாலும் நான் மறக்கப்போவதில்லை. வேலுக்குப் பெண்டாட்டி வந்த பிறகு அவளிடமும் இவனுடைய கதையைச் சொல்லப் போகிறேன்” என்று என்னைப் பார்த்துச் சிரிப்பார். நானும் பதிலுக்குச் சிரிப்பது போல் நடித்து வெட்கப்படுவேன். நான் ஏழாம் வகுப்பில் படித்தபோது கொஞ்சம் உயரமாக வளர்ந்து விட்டேன். அந்தக் காலத்தில் பாக்கியம் என்னைப் பார்க்கும்போது புன்சிரிப்புக் கொள்வதோடு நின்றார். தட்டுவதும் பழைய கதையைச் சொல்லிச் சிரிப்பதும் இல்லை. அன்பு கைகளின் அளவில் வரவில்லை; கண்பார்வையளவிலும் புன்சிரிப்பின் அளவிலும் நின்றது. உள்ளத்தில் அன்பு இல்லாமற் போகவில்லை. வீட்டில் எனக்கென்று முறுக்கு முதலிய தின்பண்டங்கள் செய்யாவிட்டாலும், சில நாட்களில் ஏதேனும் சிறப்பான உணவு வகை செய்தால், ஒரு கிண்ணத்தில் வைத்து என் தாயிடம் கொடுத்து. “தம்பி சாப்பிடும்போது மறக்காமல் கொடு அம்மா” என்று சொல்லிவிட்டுப்போவார். அடுத்த ஆண்டில் சந்திரன் எங்கள் தெருவுக்குக் குடிவந்தான். அவன் என்னோடு நெருங்கிப் பழகியதும் அப்போதுதான். சந்திரனும் நானும் ஒன்று சேர்ந்து பள்ளிக்கூடம் போகும் போதும் வரும் போதும், பாக்கியம் எங்களைப் பார்த்துப் புன்முறுவல் கொள்வது உண்டு. வரவர, அந்த அன்பு எங்கள் இருவர் மேலும் பொதுவாக இருந்தது போய், சந்திரன் மேல் மிகுதியாக வளர்ந்தது. சில நாள் மாலையில் எங்கள் இருவரையும் அழைத்து உட்காரவைத்து பேசிக் கொண்டிருப்பார். அப்படிப் பேசும் போதும் சந்திரனைப் பார்த்தே மிகுதியாகப் பேசிக் கொண்டிருப்பார். நானே வலியக் கலந்து கொண்டு பேச வேண்டியிருக்கும். சில நாட்களில் சந்திரன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு பேசுவார். அவனுடைய தலைமயிரை அடிக்கடிக் கோதுவார்; கன்னத்தைத் தட்டுவார்; கிள்ளுவார்; அவனுடைய கையை எடுத்துத் தன்கையில் வைத்து கொள்வார். அவ்வாறு செய்வன எல்லாம் என்னை அடியோடு புறக்கணிப்பன போல இருக்கும். வேறு யாராவது சந்திரனிடம் அவ்வாறு பழகினால் நான் கவலைப் பட்டிருக்க மாட்டேன். ஆனால் என்னைக் குழந்தைப் பருவம் முதல் பாராட்டிப் போற்றியவர் இப்படி என்னைப் புறக்கணித்து வேறொருவனைப் பாராட்டத் தொடங்கியது எனக்கு மிக்க வருத்தம் தந்தது.

     இந்த நிலையில் வேறொருவனாக இருந்தால் அவனை அடியோடு பகைத்துக் கைவிட்டிருப்பேன். ஆனால் சந்திரனை அவ்வாறு பகைக்க முடியவில்லை. அவன் பாக்கியத்தின் பாராட்டுச் சீராட்டுகளுக்கு மகிழ்ந்து என்னைப் புறக்கணிக்கவில்லை. மேன் மேலும் என்னிடம் அன்பு செலுத்தி வந்தான். என்னைப் பிரிந்து ஒரு வேளையும் அவன் பொழுது போக்கியதில்லை. அதனால் அவனுடைய நல்ல பண்பு என் மனத்தை அவனிடம் ஈர்த்து வைத்தது.

(தொடரும்)

முனைவர் மு.வரதராசனார்

அகல்விளக்கு