(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 44-46-தொடர்ச்சி)

இங்கிலாந்தை ஆண்ட மகாராணி விக்குடோரியாவுக்கு ஒரு நாள் ஒர் ஆசை – தன் பேரனைத் (ஐந்தாம் சியார்சு) தூக்கி மகிழவேண்டும் என்பது.

அதைப் பிறர் யாரேனும் பார்க்கப்படாதே என்ற அச்சம் வேறு இருந்தது. என் செய்வார்? சிறு குழந்தையைத் தூக்க ஆசை.

மகாராணியாயிற்றே! யாரும் இல்லாத நேரம், ஒரு நாள் தான் பேரனைத் தன் தலைக்கு மேல்தூக்கி வைத்துக் கொஞ்சத் தொடங்கினார்.

இதனை, அந்த அரண்மனை ஆள் எங்கிருந்தோ பார்த்துவிட்டான் மகாராணியிடம் ஒடோடி வந்தான்.

குழந்தையைத் தூக்கிய மகாராணி, கீழே வைப்பதைக் கண்டான்.

சொன்னான் – “உலகத்தை ஆளுகின்ற சக்கரவர்த்தியாக இருந்தாலும். தன் பேரக் குழந்தைகட்கு முதல் சவாரிக் குதிரை அவர்கள்தான்” –

என்று கூறி நகைத்தான்.

மகாராணியும் நகைத்தாள்!

இது பேரப்பிள்ளைகட்கும் பாட்டிக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகிறது. இப்பொழுதும் தன் பிள்ளைகளைத் தூக்கி மகிழாத பெற்றோர்கள் பலர், பேரப் பிள்ளைகளைத் துக்கி மகிழ்வதைக் காணலாம்.

– இது ஒரு சமுதாய அமைப்பு போலும்!
———-

“அம்மா தாயே! பிச்சை போடுங்க” என்று ஒரு பிச்சைக்காரன் ஒரு வீட்டின்முன் நின்று கத்தினான். அந்த வீட்டில் இருந்து ஒரு பிள்ளை வந்து, வீட்டில் ஒன்றும் மிச்சமில்லை; போ’ என்று சொல்லி அனுப்பினாள். அவனும் முணுமுணுத்துக்கொண்டே புறப்பட்டான்.

உடனே அவ்வீட்டின் உள்ளேயிருந்த அப்பெண்ணின் மாமியார் வாசற்படியில் வந்து நின்றுகொண்டு, பிச்சைக் காரனைக் கைதட்டிக் கூப்பிட்டாள் அவனும் சோறு கிடைக்கப் போவதாக எண்ணித் திரும்பிவந்தான்?.”

“ஏம்ப்பா? அவள் சொன்னதும் நீ போய்விடுவதா” என்று அதட்டினாள் மாமியார்.

“சிறுபிள்ளை சொன்னதை நம்பித் தெரியாமல் போய்விட்டேன் தாயே! நீங்கள் போடுங்கள்” என்று சட்டியை நீட்டினான் பிச்சைக்காரன்.

“ஆம்! நான்தான் இந்த வீட்டு மாமியார். அவளுக்கு என்ன இங்கு அதிகாரம்? நான்தான் சொல்லணும். இப்ப சொல்றேன், “இல்லை நீ போ” என்றாள் மாமியார்.

“ஏம்மா? இதைச் சொல்லவா அழைத்தீர்கள்? நான் என்னவோ உங்களை நம்பி……போங்கம்மா” என்று. மனம் வெதும்பிச் சொல்லிக்கொண்டே போனான்.

பிச்சைக்காரனுக்கு இல்லை என்று சொல்கிற அதிகாரம்கூட மருமகளுக்கு இருக்கக்கூடாது என்று எண்ணும் மாமியார்களும் சிலர் இருந்தனர் என்பது இதிலிருந்தே தெரிகிறது.


49. முறுக்கு சுட்டவள்!

மாதர் சங்கத்தில் பல பெண்கள் ஒன்றுகூடி சமையல் குறிப்புப் பற்றி அளவளாவினர்.

அப்போது,

ஒவ்வொரு பெண்ணும் தத்தம் வீட்டில் புதுப் புதுப் பலகாரங்கள் செய்தது பற்றிக் கலந்துரையாடினர். அதிலே ஒரு பெண், “இன்றுதான் நான் சுத்தமான நெய்யிலே முறுக்கு சுட்டேன். மிகமிக அருமையாக இருந்தது” என்று சொன்னாள்.

அதற்கு அடுத்தவள், “ஏன் இவ்வளவு நாட்களாக நீங்கள் முறுக்கு சுட்டதே இல்லையா?” என்று கேட்டாள்,

அதற்கு முறுக்கு சுட்டவள் “நேற்றுத்தானே என் மாமியாருக்கு, மருத்துவர்(டாக்டர்) எல்லாப் பற்களையும் எடுத்து விட்டார்’ என்று பதில் சொன்னாள்.

எப்படி மருமகள்?

முன்னே சொன்ன மாமியார்கள் மத்தியில் இப்படியும் சில மருமகள் இருந்தனர் என்றும் தெரிகிறதல்லவா?