அறிவுக் கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 27-29
(அறிவுக் கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 24-26- தொடர்ச்சி)
அறிவுக் கதைகள் நூறு
27. கலை நுணுக்கம்
ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் கலைமகள் விழாவிற்கு வரும் புலவர்களுக்குக்கெல்லாம். இராமநாதபுரம் மன்னர் பரிசளித்து அனுப்புவது வழக்கம். சிறப்பான முறையில் விருந்தும், இருபத்தைந்து ரூபாய் பணமுடிப்பும் உண்டு.
ஒன்பதாம் நாள் இரவு, பெருமாள் மாடு வேடம் பூண்ட இருவர் அரசனைச் சந்தித்து ஆடிப்பாடி மகிழ்வித்தனர். அப்போது அரசன் தன் கைப்பிரம்பால் மாறு வேடம் பூண்டவனை ஒரு தட்டுத் தட்டினார். உடனே முகமலர்ந்து மகிழ்ச்சியோடு, அவனுக்கு ஐம்பது ரூபாய்ப் பணமுடிப்பைப் பரிசாகக் கொடுத்தார்.
இது கண்ட அரசவைப் புலவர், மன்னரிடம், “அரசே! மற்றப் புலவர்களுக்கெல்லாம் 25 ரூபாய்தானே பரிசு கொடுத்தீர்கள். இவனுக்கு மட்டும் தாங்கள் 50 ரூபாய் கொடுத்ததன் காரணத்தை நாங்கள் அறியலாமா?” என்று பணிவோடு வேண்டினார்.
அரசன் சொன்னார், ‘பெருமாள் மாடு வேடம் பூண்டவனுக்கு உண்மையிலேயே கலையுணர்வு இருக்கிறதா? அல்லது பரிசு பெறுவதற்காக மட்டும். வேடம் பூண்டவனா? என்று ஐயம் கொண்டேன். ஆகவே அவனைச் சோதித்துப் பார்த்தேன். மனிதனுக்கு இல்லாத உணர்ச்சி மாட்டுக்கு உண்டு. மாட்டை எந்த இடத்தில் தொட்டாலும் சுளித்துக் காட்டும். அதனால் அவனை ஒரு தட்டு தட்டினேன். அவனும் மாடாகவே மாறி, அந்த இடத்தை மட்டும் சுளித்துக் காட்டினான். என் உள்ளம் மகிழ்ந்தது. அதனால் இரட்டிப்பாகப் பரிசு கொடுத்து அனுப்பினேன்’ என்றார்.
இதிலிருந்து அக்கால மன்னர்கள் புரவலர்களாக இருந்ததுடன், கலையுணர்வு மிக்கவர்களாவும் இருந்தனர் என்பதையும்,
கலைஞர்களும் தாம் மேற்கொண்ட பாத்திரமாகவே மாறி நடித்து வந்தனர் என்பதையும் அறியும்போது நம் உள்ளமும் சேர்ந்து மகிழ்கிறது அல்லவா!
—————-
28. திரைப்படங்கள்
அண்மையில் வந்த திரைப்படத்தில் ஒரு காட்சி, வில்லன் ஒருவன் பதக்கத்தைப் பறித்துக்கொண்டு ஒடுகிறான். பறிகொடுத்த நாயகன் எப்படி மீட்பது என்று யோசித்தான அன்று இரவு வில்லன் வீட்டில் சன்னல் வழியே கம்பியைவிட்டுத் தொங்கிய சட்டையை இழுத்தான். அதில் பதக்கம் இருந்தது; மகிழ்ச்சியாக எடுத்துக் கொண்டு வீடு திரும்பினான் – இதுதான் காட்சி.
அடுத்து ஒரே நாள் இரவில் சென்னை தியாகராய நகரில் பல இடங்களில் திருட்டு – எப்படி? கம்பிகளை சன்னல் வழியே விட்டு முழுக்கால் சட்டை,, சட்டை, பட்டுப்புடைவை விலை உயர்ந்த துணிமணிகள் எல்லாம் கனவு போயின. இப்படித்தான் –
சுமார் 85 ஆண்டுகட்கு முன்பாக, மேலை நாட்டிலே இலண்டன் மாநகருக்கு அருகிலே ஒரு பெரிய இரயில் கொள்ளை நடந்தது. அதில் சுமார் 40 பேர் குதிரைமீது வந்து இரயிலை வழிமறித்து நிறுத்தித் துப்பாக்கியைக் காட்டிப் பயணிகளிடம் உள்ள பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இரயில்வே போலீசார் எவ்வளவோ முயன்றும் ஐந்தாறு மாதங்களாகியும் துப்புத் துலங்கவில்லை. கொள்ளையரையோ, பொருள்களையோ கண்டுபிடிக்க முடிய வில்லை. இறுதியில் மிகவும் கடினப்பட்டு எப்படியோ போலீசார் அவர்களைப் பிடித்து வழக்குத் தொடர்ந்தனர்.
அந்த நாற்பது கொள்ளையரில் அனைவரும் 18 முதல் 21 வயதிற்குட்பட்ட இளைஞர்களே! அவர்களில் வசதியான குடும்பத்துப் பிள்ளைகள், படித்தவர்கள், செல்வச் சீமானின் பிள்ளைகள், ஏன் வழக்கறிஞரின் பிள்ளையும் இருப்பதைக் கண்ட நீதிபதி, பெருவியப்பு அடைந்தார். அவர்களை விசாரிக்கவும் செய்தார்.
“நீங்கள் பரம்பரைத் திருடர்களல்ல, திருடித்தான் வாழவேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களும் அல்ல. அப்படி இருக்கும்போது, எப்படி உங்களுக்கு இந்த எண்ணம் உணடாயிற்று?” என்று கேட்டார் .
அதற்கு அவர்கள், “அண்மையில் புகழ்பெற்ற இரயில் கொள்ளை’ என்ற படக்காட்சியைப் பார்த்தோம், அதிலிருந்து நாமும் அப்படிக் செய்தால் என்ன? வெற்றி பெற முடியுமா? என்று சோதித்துப் பார்த்தோம். வெற்றியும் பெற்றோம்” என்றனர். இதிலிருந்து நாடு திருந்த வேண்டுமானால் முதலில் நமது திரைப்படங்கள் திருந்தவேண்டும் என்பது பல்வேறு சீர்கேடுகளுக்குத் திரைப்படங்களும் காரணமாகின்றன என்பது நன்கு தெரிகிறது. இதற்கு என்ன செய்யலாம்!
————–
29. வைரமும் கூழாங்கல்லும்
ஞானம் பெற வேண்டும் என்ற விருப்பத்தில் ஒரு பெண் துறவி இந்தியாவுக்கு வந்தாள். ஒரு பெருந்துறவியைக் கண்டு அவருடைய ஆசிரமத்திலேயே அவரிடம் மாணவியாக இருந்து வந்தாள். அந்தத் துறவியிடம் அவள் விரும்பிய ஞானம் பூரணமாக கிடைக்கவில்லை என்று எண்ணிணாள்.
ஆகவே அங்கிருந்து புறப்பட்டுப் பல இடங்களிலும் அலைந்து, இமயமலைச் சாரலில் ஒரு பெரிய மகான் இருப்பதாகக் கேள்விப்பட்டு, அங்குச்சென்று சில காலம் அவருடைய ஆசிரமத்திலேயே தங்கினார்.
ஒரு சமயம், பக்கத்து ஊர்களைப் பார்க்க மகான் புறப்பட்டபோது, சீடர்கள் பலருடன் அம்மையாரும் உடன் சென்றார். அப்போது –
நடைபாதையில் மாணிக்கக் கல் ஒன்று கேட்பாரற்றுக் கிடப்பதை மகான் பார்த்தார். அவருக்கு அதன்மீது ஆசையோ, எடுக்கவேண்டும் என்ற எண்ணமோ சிறிதும் இல்லை. ஆனாலும் தனக்குப் பின்னால் வரும் துறவிகளில் யாரேனும் பார்த்தால் ஆசையினால் சபலம் அடைவரோ என்று எண்ணி, உடனே அதை மண்ணைப் போட்டு மூடி விட்டுச் சென்றார்.
உடன் சென்ற பெண் துறவி இதைப் பார்த்து விட்டார். மண்ணை விலக்கி, அந்த மாணிக்கக் கல்லின் மேல் ‘தூ’ வென்று காரி உமிழ்ந்துவிட்டுத் திருப்பிப் பாராமல், ஆசிரமத்துக்கும் செல்லாமல், தன் நாட்டுக்கே புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
அவர்கள் நாட்டில் பெண் துறவி திரும்பி வந்ததற்கு அனைவரும் காரணம் கேட்டபோது, அவள் சொன்னான் “உண்மையானதுறவி உலகில் எவருமே இல்லை. இந்தியாவில் இமயமலைச்சாரலில் உள்ள மகானால்கூட கூழாங் கல்லையும், மாணிக்கக் கல்லையும் ஒன்றாக மதிக்க முடியவில்லை. அவர் அதன்மேல் மயங்கி மண்ணிட்டு மூடினார். இரண்டையும் ஒன்றாகக் காணும் உண்மைத் துறவியிடம் தான் மெய்ஞ்ஞானமும் கிடைக்கும். அது எப்போது?” என்று ஏங்கினாள்.
————
(தொடரும்)
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்,
அறிவுக்கதைகள் நூறு
Leave a Reply