attai_thangar_wrapper

பகிர்தல்

  எப்படி எனக்கு எல்லாத் திரைப்படங்களையும் பார்க்கப் பிடிக்காதோ அப்படித்தான் எல்லா எழுத்துகளையும் படிக்க முடிவதில்லை. போர் மூண்டு விட்டது. இனி வாளினை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை எனும்போதுதான் அரசனும் வாள் எடுப்பானாம். அதுபோலத்தான் பேனாவை கையில் எடுத்து வெற்றுத்தாளின் மேல் கையைப் பதிக்க வேண்டிய கட்டாயமும் அவசியமும் ஏற் பட்டால் ஒழிய என்னால் எழுதவே முடிவதில்லை.

 பல காலங்களில் பல்வேறுபட்ட மனநிலைகளில் எழுதப்பட்ட இந்தக் கதைகளை மொத்தமாக ஒருசேர ஒரே மனநிலையில் படித்துப் பார்க்கின்றபோது இதுவரை எனக்குத் தோன்றாத எத்தனையோ கேள்விகளும் எண்ணங்களும் தோன்றுகின்றன.

  எப்படிப்பட்ட வாழ்க்கையை நான் கடந்து வாழ்ந்து வந்திருக்கிறேன் எனவும், என் திரைப்படங்களைப் பேசும் அளவுக்கு எதனால் என் கதைகள் கண்டுகொள்ளப்படவில்லை என்கிற கேள்வியும் எழுகிறது. ஓய்வு ஒழிச்சலின்றி தூங்குவதற்காகக் கூட நேரமில்லாமல் வறுமையும் பொருளாதாமும் என்னை நசுக்கி வதைத்த காலங்களில் எப்படி என்னால் இவற்றை எழுத முடிந்தது எனவும் எண்ணி இன்னும்கூட அந்த சிந்தனையிலிருந்து விடுபட முடியாமல் இருக்கிறேன்.

  திரைப்படக்கலைஞனாக என் காலங்களை வீணடித்திருப்பது மிகப்பெரிய கவலையை எனக்குள் இந்தக் கதைகள் உருவாக்கியிருக்கின்றன. எந்த மாதிரியான படங்களைப் படைக்க விரும்பினேனோ அதில் சிறிதளவு கூட என்னால் சாத்தியப்படுத்த முடியவில்லை. நீரும் நிலமும் காற்றும் கூட தூய்மைக்கேடாக்கப்பட்டு சீரழித்துவிட்டபின் திரைப்படங்கள் மட்டும் சிறந்தவையாகப் படைக்கப்பட வேண்டும் என்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்? அரசியல் வணிகர்கள் மிகக் கச்சிதமாக மக்களாட்சி எனும் போர்வையைப் போர்த்திக்கொண்டு எதனையும் விட்டு வைக்காமல் மக்களின் மனங்களையும் சீரழித்து விட்டார்கள். ஒருஇலட்சம் பேர் வீட்டின் நடு முற்றத்தில் கொட்டும் குப்பைகளை ஒரேயொருவன் மட்டும் தூய்மைப்படுத்துவதென்பது நடக்கக்கூடியதா? அப்படித்தான் இலக்கியத்திலும் சரி, திரைப்படத்திலும் சரி, குப்பைகளைக் கொட்டுபவர்கள் மிக அதிகமாகவும், தூய்மைப்படுத்துபவர்கள் மிகக் குறைவாகவும் இருக்கிறார்கள். அதனால்தான் என் போன்றவர்களின் படைப்புகள் இனம் கண்டுகொள்ளப் படாமலேயே போய்விடுகின்றன.

  குப்பையிலும் பெருங்குப்பை எழுத்துகளெல்லாம் கொண்டாடப்பட்டு உலகத்தின் அனைத்து மொழிகளுக்கும் கொண்டு சேர்க்கப்படும்போது நேர்மையான தரமான உலகத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டிய படைப்புகள் முடக்கப்படுவதில் என்ன நியாயம்?

  கி. இராசநாராயணன் எழுதியதை எழுத இங்கு யார் இருக்கிறார்கள்? இனி யார் அதுபோல் எழுதிவிட முடியும்? அவரை நாம் என்ன செய்துவிட்டோம். 92 வயதில் ஒரு கலைக்கருவூலம் கவனிக்கப்படாமல் ஏதோ ஒரு மூலையில் கிடக்கிறது. இம்மண்ணின் இம்மக்களின் இருட்டடிப்பு செய்யப்பட்ட வாழ்க்கையை வெளிக்கொண்டு வரும் படைப்புகள் இந்திய மொழிகளைக் கூடத் தாண்டியது இல்லை.

  சத்யசித்ரேயின் இலக்கியங்களை இன்று கொண்டாடுபவர்கள் அன்று கண்டுகொள்ளாமல்தான் இருந்தார்கள். எனது எழுத்துப் படைப்புக்கள் நான் எழுத்தாளனாக வேண்டும் என்பதற்காக எழுதப் பட்டவை அல்ல. கடந்து வந்த பாதைகளையும், நல-துக்கங்களையும் பதிவு செய்ததால் உருவானவை. படிப்பறிவு என்கிற ஆயுதத்தைக் காலங்காலமாகக் கைப்பற்றி அதிகாரத்தையும் இன்பத்தையும் துய்த்துக் கொண்டு வந்தவர்களுக்கு நடுவில் என்னைப் போன்ற விளிம்புநிலை கடைநிலைக்குடிகளின் பிள்ளைகள் தங்கள் வாழ்வில் எதிர் கொண்ட தருணங்களையும் அவமானங்களையும் தேவைகளையும் வெளிக் கொண்டு வரவேண்டியிருக்கிறது. என் போன்றவர்களின் படைப்புகளில் எது மூல இலக்கியம், எது மூலப் படைப்பு என்பதை எதிர்காலத் தலைமுறை இனங்காணும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

  எல்லாவித உத்தரவாதங்களுடன் மாத வருமானத்துக்கு வழிவகை செய்துவிட்டு அது அரசாங்க வேலையோ, தனியார் நிறுவனத்தின் வேலையோ, தனி முதலீட்டு வணிகமோ ஏதோ ஒன்றினைச் செய்து கொண்டே எழுத்தாளனாகவும் இருப்பவர்கள்போல் அல்ல எனது வாழ்க்கை. காலை விடிந்து எழுந்தால் இரவு படுக்கப்போகிற வரைக்கும் எந்தவிதமான திட்டமிட்ட பணிகள் இல்லாத வாழ்க்கை என்னுடையது. நிகழ்காலத்திலோ எதிர்காலத்திலோ வருமானம் உறுதியாய் வரும் என்பதற்கான எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. ஆண்டுக்கணக்கில் மாதக்கணக்கில் ஒரே ஓர் உரூபாய் கூட வருமானம் வராமல் இருப்பதுண்டு. இந்த மனநிலையில்தான் எனது இலக்கியங்களும் திரைப்படங்களும் உருவாக்கப்படுகினறன. இந்த ஆண்டில் ஒரேயொரு நூலைக்கூட வெளியிடவில்லையே என்பதற்காக உட்கார்ந்து என்னால் கதைகளை எழுதமுடியாது. ஒரு படைப்பினை உருவாக்குவதற்கான தாக்கமும் சூழலும் அமையாமல் போனால் என்னால் எழுதவே முடிவதில்லை.

  பல கதைகள் சமூகத்தின் மீது எனக்கிருந்த கோபத்தில் உருவாக்கப் பட்டவை என நினைத்தாலும் ஒவ்வொரு மனிதனின் ஆழ் மனத்தோடு உறவாடுகிற சிறந்த படைப்புகள் இத்தொகுப்பில் உள்ளன. இக் கதைகளை அன்று நான் புரிந்துகொண்டதைவிடவும், உணர்ந்ததைவிடவும் இன்று படித்துப் பார்க்கின்றபோது வியப்பாக இருக்கின்றது. மாறுபட்டத் திரைப்படங்களை உருவாக்க முற்பட்டது திரைத்துறையில் என்னை நிலை நிறுத்திக்கொள்ளும் முயற்சி. அது தீவிரமான திரைப்படமாகவும் இல்லாமல் வணிகப் படமாகவும் இல்லாமல் போனதை நான் உணர்கிறேன்.

  உலகத்தரத்தில் மற்ற மொழிகளில் கொண்டாடப்படுகின்ற வியந்து பார்க்கப்படுகின்ற பல சிறந்த திரைப்படங்களுக்கான கருக்களும் கதைககளும் என்னிடமே இருப்பதை இக்கதைகளைப் படித்து முடித்தபோதுதான் புரிந்தது. தீவிரமான மூலத் திரைப்படமாக இக்கதைகள் உருவாக்கப்படும்போது எழுத்தாளர் சுசாதா சொன்ன மாதிரி சிறந்த திரைப்படங்கள் உலகம் கவனிக்கும்படிக் கிடைக்கும் எனும் நம்பிக்கை கிடைக்கிறது.

  இலக்கியத்தில் கடைபிடிக்கப்படும் நேர்மையும் எடுத்துக்கொள்ளப்படும் தன்னுரிமையும் திரைப்படத்தை உருவாக்கப்படும்போது கிடைப்ப தில்லை. மக்களை மகிழ்விப்பதற்காகவும், மனநிறைவை அளிப்பதற் காகவும் ஆசைப்படும் மூலத் திரைப்படமாக உருவாகாமல் சிதைந்து விடுகிறது. உழவு மாட்டையும் கபிலை மாட்டையும் ஒன்றாகக் கட்டி உழவு செய்து பார்த்ததன் விளைவைப் புரிந்துகொண்டேன்.

  தீவிர இலக்கியமும், தீவிரத் திரைப்படங்களும் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்புடையவை. இன்னும் சொல்லப்போனால் தீவிரத் திரைப்படங்களின் தொழில்நுட்பம் தீவிர இலக்கியத்திலிருந்து பிறந்தவைதான் என்பது இரண்டையும் தெரிந்தவர்களுக்குப் புரியும். நானே ஒளிப்பதிவாளனாகவும், நெறியாளுநனாகவும் எழுத்தாளனாகவும் இருப்பதால் அதன் நுட்பங்களை நெருங்கி உணர முடிகிறது.

  ஒரு துயரநேர்ச்சி(விபத்து) சில நேரங்களில் சிலருக்கு நல்லதாகவே முடியும். அதுபோல்தான் எனக்கும் நடந்திருக்கிறது. எவ்வாறு பத்திரக் கோட்டையில் சுற்றித் திரிந்த நான் திரைப்படக்கல்லூரியில் படித்ததனால் ஒளிப்பதிவாளனாக, நெறியாளுநனாக உருவாக நேர்ந்ததோ அப்படித்தான் நான் எழுத்தாளனாக உருவானதும்.

  அதிகப் பக்கங்களுடைய பெரிய புத்தகமாக இருப்பது பல நேரங்களில் எழுத்தாளனுக்குப் பேரிடர்தான். ஒன்று அதன் உருவம் கருதி கையில் எடுக்கிறபோதெல்லாம் பிறகு படித்துக் கொள்ளலாம் எனத் தோன்றும். அதையும் மீறிக் கையில் எடுத்துவிட்டால் மொத்தக் கதைகளையும் படித்து முடிப்பது என்பது அரிதாகவே நிகழும். சில கதைகளைப் படித்தபின் இடையில் வேலை வந்துவிட்டால் மீண்டும் எடுத்துப் படிப்பதென்பது எத்தனைப் பேருக்குத் தோன்றும்? “இந்தக் கதைகளைப் படியுங்கள். அவையெல்லாம் சிறந்தவை” என நானே பட்டியலிடுவதும், அதேபோல் ஒன்றுவிடாமல் மொத்தக் கதைகளையும் தவறாமல் படியுங்கள் எனச் சொல்வதும் எந்த விதத்திலும் நியாயமில்லைதான்.

  ஆனால், ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். எந்தக் கதைகளும் உங்களை ஏமாற்றாது. ஒவ்வொன்றுக் குள்ளும் ஒரு செய்தியும், ஒரு வாழ்வு குறித்த பட்டறிவும் தந்து உங்களைக் கடத்திச் செல்லும் என்பதை உணர்வீர்கள்.

  சில கதைகளைத் தவிர மற்றவை இலக்கிய இதழ்களில் வெளிவந்தவைதான். 1983ஆம் ஆண்டு எழுதத் தொடங்கியதால் சில கதைகளைப் படிக்கின்றபோது அந்தக் காலத்திற்கும் இந்தக் காலத்திற்குமான பொருளாதார வேறுபாடுகளை அதிர்ச்சி யான மனநிலையோடு சிலர் உணரலாம். நான் வளர்ந்த ‘பத்திரக் கோட்டை’ எனும் சிற்றூர் இன்றில்லை. அந்த வேறுபாடுகள் எழுத்திலும் இருக்கின்றன.

  எல்லாக் காலங்களிலும் கலைஞர்களும், படைப்பாளர்களும் மக்களுக்காகவே அனைத்தையும் படைத்தார்கள். இப்பொழுதும் அது நடந்துகொண்டுதானிருக்கிறது. ஆனால், நம் மக்கள் எந்த பொதுச்சிக்கல்களிலும் தங்களை ஆட்படுத்திக் கொள்ளாமல் பொறுப்புணர்ச்சி இல்லாமல் தானும் தனது குடும்பமும் வாழ்ந்தால் போதும் என முற்றிலும் தன்னலமிகளாக மாறிப்போய்விட்டனர். எப்போது வெள்ளம் வரும்? எப்போது கடல்கோள்(சுனாமி) வரும்? ஒரு உரூபாய் அரிசியை எட்டணாவுக்குப் போட மாட்டார்களா? இலவசமாக என்னவெல்லாம் கிடைக்கும் என நினைக்கும் பிச்சைக்காரர்களின் மனநிலைக்கு மாறிப்போன இவர்கள் இந்த இலக்கியங்களையெல்லாம் வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறார்கள்?

  சாராயக்கடையிலும் திரையரங்கிலும் தொலைக்காட்சியிலும் ஆங்கிலப்பள்ளிகளிலும் தொலைந்துபோய் அரசியல் விழிப்புணர்ச்சி பெறாத இந்தத் தமிழ்ச் சமூகம் திருவள்ளுவன் முதற்கொண்டு எல்லா எழுத்தாளனையும் அலங்காரப் பொருளாக மட்டுமே வைத்துக் கொண்டுள்ளது. தொடர்ந்து மெத்தப் படித்தவனும், அரைகுறையாகப் படித்தவனும்தான் தமிழை அழிக்கிறான். படிக்காத வனிடத்தில்தான் மொழி கொஞ்சம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. திரைப்படங்களும் தொலைக் காட்சிகளும் தனியார் வானொலிகளும், பத்திரிகைகளும் அதைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கிவிட்டன.

  நான்காயிரம் பேர் மட்டுமே வாழக்கூடிய ‘பத்திரக்கோட்டை’ ஊரில் நான் படித்த பள்ளிக்கூடத்தில் தமிழ் வழியில் ஒருவர் கூடப் படிக்க விருப்பமில்லை. அனைவரும் ஆங்கிலவழியில் சேர்ந்து விட்டார்கள் என்கிற அதிர்ச்சியிலிருந்து இன்னும் நான் மீளவில்லை. மொழியிலும் புலமை இல்லாமல் மொழியைச் சிதைத்துப் பேசுபவனை அறிவுள்ளவர்களாக மதிப்புக் கொடுத்தும் மொழிக் கலப்பில்லாமல் பேசுபவனை வியப்போடும், குற்றவாளி போலவும் பார்க்கும் காலத்தில் வாழ்ந்து தொலைக்கிறேனே எனும் வேதனையுடன்தான் ஒவ்வொரு நொடியும் வாழ்கிறேன்.

  என் தாய்மொழியை என்னிடமிருந்து பிடுங்கிவிட்டால் என்னிடம் என்ன இருக்கிறது? இனி நான் செய்ய வேண்டிய பணிகளைக் கருத்தில் கொண்டு எனது செம்புலம் பதிப்பகத்தில் பதிப்பித்த படைப்புகளான இக்கதைகளை நெறிப்படுத்தி நான் மதிக்கும் படைப்புக்கலைஞர் மனுசியப் புத்திரனின் உயிர்மை பதிப்பகத்தில் வெளியடுவதில் உண்மையான மனமகிழ்ச்சி எனக்குக் கிடைப்பதை உணர்கிறேன். அங்கொன்றும், இங்கொன்றும் கண்ணுக்குப் புலப்படாத இடங்களிலெல்லாம் ஓடிச்சென்று பறித்து வந்த அணில் மாதிரி கிளைக்குக் கிளைத்தாவி பறித்த நாவல் பழங்களைக் கீழே கொண்டு வந்து கைத்துண்டை விரித்துக் கொட்டிக் குவித்து வைத்திருக்கிற காட்சி எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்குமோ அப்படித்தான் மொத்த சிறுகதைகளும் நூலாக வெளிவருவதில் கிடைக்கிறது.

அன்போடு

தங்கர் பச்சான்

muthirai_uyirmmai-new logo