(இரவிச்சந்திரனின் ‘வெட்டிக்காடு’ தற்புனைவின் வெளிப்பாடு 2/3 தொடர்ச்சி)

இரவிச்சந்திரனின்  ‘வெட்டிக்காடு’ தற்புனைவின் வெளிப்பாடு 3/3

 ‘கொட்டாப்புலிக் காளைகள்’ என்ற தலைப்பில் இரவி எழுதியுள்ள செய்திகள் படிப்பவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டும் நிகழ்வுகளாக விரிந்துள்ளன. அப்பா பட்டுக்கோட்டைச் சந்தையிலிருந்து வாங்கிவந்த கன்றுக்குட்டிகள் வளர்ந்து ஏரோட்டவும், வண்டியில் பூட்டவும் பழக்கிய நிகழ்ச்சிகளைக் கண்முன்கொண்டுவந்து இரவி நிறுத்துகின்றார். அப்பா, அம்மா, வீட்டு வேலையாள் நாகநாதன் மூவர்தான் அந்தக் கொட்டாப்புலிக் காளைகளைப் பிடிக்கமுடியும் என்ற நிலையில் ஊரில் சண்டியராக வலம்வந்த வேணு ஆலம்பிரியரை அந்த மாடுகள் முட்டி வேலியில் தள்ளியதையும் அம்மாவின் குரலுக்குப் பணிந்து அந்த மாடுகள் அம்மாவை நெருங்கி வந்ததையும் அறியும்பொழுது நமக்கு ஆச்சரியத்தை இந்தக் கதை ஏற்படுத்துகின்றது.

 வீட்டில் வளர்க்கப்படும் மாடுகள் அறிவுள்ளவையாகவும், மானமுள்ளவையாகவும், வீரமுள்ளவையாகவும் இருப்பதைக் கொட்டாபுலிக் காளைகள் கதை உணர்த்துகின்றன. ஒவ்வொரு நாளும் தம்மைக் கவனிக்கும் அம்மா, அப்பா, நாகநாதனைத் தவிர மற்றவர்களைத் தம்மை நெருங்கவிடாமல் செய்யும் கொட்டாபுலிக் காளைகளைப் போல் வரலாறு படைத்த பல காளை மாடுகள் தமிழகத்தின் சிற்றூர்களை ஆட்சிசெய்துள்ளதை ஒவ்வொரு உழவனும் தங்கள் வாழ்க்கையை எழுதும் பொழுது இதுவரை தமிழுக்குக் கிடைக்காத கதைக்கருக்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். தம் குடும்பத்தினருடன் வண்டிமாடுகளை இணைத்து ஒளிப்படம் எடுப்பதும், மாடுகளின் அருகில் நின்று ஒளிப்படும் எடுப்பதும், வண்டியோட்டுவதுபோல் ஒளிப்படம் எடுப்பதும் தமிழகத்து உழவர்களின் விருப்பமாகும்.

 ‘கொள்ளிவாய்ப் பிசாசுகள் என்ற கதையில் சிற்றூர்களில் காலம் காலமாக நம்பப்படும் கொள்ளிவாய்ப் பிசாசுக் கதையைச் சொல்லி தம் அண்ணன் இந்திரசித்து மூலமாகப் பயம் தெளிந்த தம் பட்டறிவை எழுதியுள்ளார்.

 ‘நாவற்பழம் சிறுகதையில் பள்ளி நிகழ்வுகள் பேசப்படுகின்றன. மாரியப்ப(கண்டியர்) வீட்டின் நாவல்பழம் திருடித் தின்னும் நிகழ்வு மெய்யுருவாகக் காட்டப்பட்டுள்ளது. இரவி, உப்பிலி, இராதா மூவரும் நாவல் மரத்தில் ஏறி நாவல் பழம் பறிப்பதும் இந்தக் கூட்டுக்கொள்ளையில் பங்கேற்காத இளஞ்செழியன் இரவியின் அப்பாவிடம் பற்றவைப்பதும், அப்பாவின் தண்டனையும் இந்தச் சிறுகதையைச் சுவையுடையதாக்குகின்றது. அன்று அப்பாவிடம் வாங்கிய அடிதான் முதலும் முடிவும் என்று கதையை இரவி முடித்துள்ளார்.

 ‘பொங்கல் என்ற தலைப்பில் இரவிச்சந்திரன் எழுதியுள்ள எழுத்துரையில் சிற்றூர்கள் எவ்வாறு தம் மரபார்ந்த இயல்புகளை இழந்து, தனித்தன்மை கெட்டு மாற்றங்களைச் சந்தித்து வருகின்றன என்பதைப் பதிவு செய்துள்ளார். பொங்கல் திருவிழா உறவினர்கள் ஒன்றுகூடி நடத்தும் பெருவிழாவாக நடைபெற்று மக்களுக்கு மகிழ்ச்சியைத் தந்த நிலை மாறிக் சிற்றூர்களில் பிரிவுகள் உண்டாகி, மனக் கசப்புகளால் பிரிந்து கிடக்கும் நிலையை எடுத்துரைத்துள்ளார். வழிபாட்டு முறைகள், உறவினரின் ஒன்றுகூடல், சிற்றூர்ப்புறப் பழக்க வழக்கங்கள், ஊர்ப்புற விளையாட்டுகள், சிற்றூர் வாழ்க்கை முறை, நம்பிக்கைகள், சடங்குகள், வேளாண்மை, பொழுதுபோக்கு உள்ளிட்ட நிகழ்வுகளை அடுத்த தலைமுறைக்கு நினைவூட்டும் எழுத்துரைகளாக இரவியின் எழுத்துரைகள் உள்ளன. ஒற்றுமையுடன் வாழ்ந்த ஊர் மக்கள் சண்டை சச்சரவுகளால் காவல்நிலையம், நீதிமன்றம் செல்லும் நிலையில் உள்ளதைக் கவலையுடன் பதிவுசெய்துள்ள இரவியின் ஆதங்கம் ஒவ்வொரு எழுத்திலும் பதிவாகியுள்ளது.

  ‘களவாணி’ திரைப்படம், ‘குற்றப்பரம்பரை’ புதினம் குறித்த மதிப்பீடுகளையும் எழுதியுள்ளார்.

  ‘அப்பா’ என்னும் தலைப்பில் எழுபது வயதுவரை வாழ்ந்து, இயற்கை எய்திய தம் தந்தையின் குணநலன்களை இரவி வரலாறாக்கியுள்ளார். ஒவ்வொரு மகனும் தந்தையின் வரலாற்றை எழுதும்பொழுது தமிழகப் பண்பாட்டு வரலாறு முழுமையடையும். அன்பின் வடிவமாகவும், பாசத்தின் உருவமாகவும் விளங்கிய தம் தந்தை சோமு ஆலம்பிரியர் குழந்தைகள் மீது அளவுகடந்த பாசம் கொண்டவர் என்பதைப் பல சான்றுகள் காட்டி விளக்குகின்றார். உழைப்பால் உயர்ந்த தன் தந்தை வெட்டிக்காட்டு மக்களும் சுற்றுவட்டார மக்களும் போற்றும்படியாக வாழ்ந்தவர் என்பதை ஒவ்வொரு கருத்துகளாக அடுக்கிக்காட்டி ஒரு சித்திரமாக நமக்கு வரைந்து காட்டுகின்றார். அப்பா பிள்ளைகளைப் படிக்க வைத்த பாங்கு, கூத்துக்கலையில் அவருக்கு இருந்த ஈடுபாட்டைக் காட்டி, சிலநாளில் குடிப்பது உண்டு என்று பதிவு செய்து நடுநிலையாளராக இரவி நமக்குக் காட்சி தருகின்றார்.

 சோமு ஆலம்பிரியார் நேர்மையாளர்; வணிகத்தை உயர்வாகப் போற்றியவர்; தொழில் தருமம் கடைப்பிடித்தவர்; நம்பிக்கைக்குப் பெயர் பெற்றவர்; தம் பிள்ளைகளின் படிப்பு, பணிக்காக வீட்டிலிருந்த நகைகளை விற்றாலும் உழைத்து வாங்கிய நிலங்களை விற்க மறுத்தவர். தந்தை 69 ஆம் வயதில் இயற்கை எய்திய நேரத்தில் இரவியின் பருவமுறைத்தேர்வு தொடங்கியதால் அப்பாவின் இறப்புச் செய்தியைப் பத்துநாள் கழித்துத்தான் தெரிந்துகொண்டார்.” அமெரிக்கக் குடியுரிமை பெற்று இன்று நல்ல வேலையில் ஓரளவு வசதியான வாழ்க்கை. ஆனால் பார்க்கத்தான் அப்பா இல்லை!”(பக்கம் 124) என்று முடித்துள்ளமை நம் கண்ணில் கண்ணீர் வரச்செய்கின்றது.

தேடுகிறேன் என்ற தலைப்பில் பிறந்து வாழ்ந்த வெட்டிக்காடு ஊரில் இருந்த மக்களின் வாழ்க்கைமுறை, பண்பாடு, தொழில் யாவும் மாற்றமடைந்து புதிய தலைமுறை உருவாகிவிட்டதை வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார். உழவுமாடுகள், நடவு, அறுவடை, கதிரடிக்கும் காட்சிகள், ஏற்றம், முச்சந்தி உரையாடல், கோயில் திருவிழாக்கள், கூத்துகள், சிற்றூர் விளையாட்டுகள், உடையலங்காரம் யாவும் மறைந்து வெட்டிக்காடு புதிய வடிவம் பெற்ற்றுள்ளதைக் கண்டு, தாம் ஓடி விளையாண்ட சிற்றூர் எங்கே என்று கேட்கும் ஒரு கேள்வியில் நூறாண்டு  மாற்றம் அடங்கியுள்ளதை உணரலாம்.

  நூலில் உள்ள எழுத்துப் பிழைகள் சரிசெய்யப்பட வேண்டும்.

  தற் புனைவாகத் தெரியும் வெட்டிக்காடு நூல், தன் வரலாறாகவும், குடும்ப வரலாறாகவும், ஊர் வரலாறாகவும் தமிழர் பண்பாட்டு வரலாறாகவும் உயர்ந்து நிற்கின்றது.

நூல்:  வெட்டிக்காடு

ஆசிரியர்: இரவிச்சந்திரன்

பக்கம்: 128; விலை: 150 – 00

கிடைக்குமிடம்:  சோ. இரவிச்சந்திரன், 14 ஏ, புளோரா சாலை,

# 08-02அளாளியா பூங்கா, சிங்கப்பூர் 509 731

மின்னஞ்சல்: vssravi@gmail.com

இணையத்தில் வாங்குவதற்கு!

  1. வெட்டிக்காடு http://www.noolulagam.com/product/?pid=33232

  1. கீதா கஃபே http://www.noolulagam.com/product/?pid=33231

(நிறைவு)

முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி

muelangovan@gmail.com