Albert, america2

“அரசு கிளம்பு! இப்பொழுது புறப்பட்டால்தான் இருட்டுமுன் தெட்டுராய்டு போய்ச் சேர முடியும்” என்றவாறு குமரன் வந்தான்.

திருநாவுக்கரசு பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கவே,

“மூன்று நாள், கொண்டாட்டமாக இருந்துவிட்டு நாளைக்கு வேலைக்குப் போக வேண்டுமே எனக் கவலையாக இருக்கிறதா?” என்று மீண்டும் கேட்டான் குமரன்.

“ம்ம்… மகிழ்நனும் புகழும் ஆயத்தமாகி விட்டார்களா?” என்றவாறே அரசு படுக்கையை விட்டு எழுந்தான்.

“நாங்களெல்லாரும் கிளம்பியாகிவிட்டது! நீ என்ன தூங்கி விட்டாயா?” கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்தான் மகிழ்நன்.

“இதோ! ஒரு நொடியில கிளம்பி விடுகிறேன். நீங்கள் புறப்படுங்கள்! நானும் குமரனும் வந்துவிடுகிறோம்” என்ற அரசு,  குளியலறையில் புகுந்து கொண்டான்.

நண்பர்களிடமிருந்து விடுபட்டுக் குளியலறைக் கதவை  மூடிக்கொண்ட திருநாவுக்கரசால் தன் உள்ளக் கதவை மூட முடியவில்லை.

“ஒருவேளை நாம் அந்தப் பெரியவர் கேட்டதற்குச் சரி என்று சொல்லியிருந்தால் அந்தத் துயரம் நடந்திருக்காதோ?” அந்தக் குளுகுளுச் சூழலிலும் கூடக் குப்பென்று வியர்த்தது அரசுக்கு.

அவன் எண்ண ஓட்டம் பின்னோக்கித் தாவியது.

niagarafalls01நயாகரா அருவியை அடி முதல் நுனி வரைப் பார்த்து மகிழ்ந்து விட்டு, படகுப் பயணம் போவதற்காக அந்த நீண்டு வளைந்து நின்ற வரிசையில் அரசு தன் நண்பர்களோடு நின்றிருந்தபொழுதுதான் அந்தப் பெரியவரைச் சந்திக்க நேரிட்டது.

பெரியவர் ஒருவர், சிறுவன் ஒருவனையும் சிறுமி ஒருத்தியையும் கையில் பிடித்துக்கொண்டு வரிசையில் இருந்தவர்களிடம் ஏதோ கேட்பதும் அவர்கள் ஏதோ சொல்வதும், அவர் அடுத்தடுத்தவர்களாகக் கேட்டுக்கொண்டு நகர்வதும் தெரிந்தது.

அவரைப் பற்றி இவனருகில் நின்று கொண்டிருந்த சிலர் இந்தியிலும் ஆங்கிலத்திலும் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தனர்.

“இந்தியாவில்தான் இரந்துகொண்டு திரிவோர் தொல்லையென்றால், இங்கே கூடவா?” என்றான் ஒருவன். “அட இவர்களும் இந்தியாதான். விமானம் ஏறி வந்து இப்பொழுது இங்கேயே இரவலெடுக்கத் தொடங்கியாகிவிட்டதா?” என்று இன்னொருவன் சொல்ல, ஒரு கூட்டம் கொல்லெனச் சிரித்தது.

அந்தப் பெரியவரோ, “நீங்கள் தமிழரா?… ஐயா! நீங்கள் தமிழரா?” என்று சற்றும் தளராமல் ஒவ்வொருவராகக் கேட்டுக்கொண்டே திருவிடம் வந்தார்.

“தமிழன்தான் நான். என்ன பெரியவரே?” என்று திரு சொன்ன மாத்திரத்தில், பெரியவரின் கண்களிலிருந்து மளமளவென்று கண்ணீர் உருண்டு சிதறியது.

“என்ன பெரியவரே? ஏன் அழுகிறீர்கள்?”

“தம்பி! ஒரு நிமையம் உங்களிடம் தனியாகப் பேச வேண்டும். இதோ! இப்படி வருகிறீர்களா?” அவருடைய தோற்றம் இரங்கத்தக்கதாக இருந்தது.

“சரி வாருங்கள்!” என்ற அரசு, நண்பர்கள் பக்கம் திரும்பி, “நீங்கள் போய்க்கொண்டே இருங்கள். நான் வந்து சேர்ந்துகொள்கிறேன்.” என்று சொல்லிவிட்டு எதிரே இருந்த பூங்காவை நோக்கி நடந்தான்.

“ம்… இப்பொழுது சொல்லுங்கள் பெரியவரே!”

மீண்டும் மளமளவென்று கண்ணீர் கசிந்து, சிதறியது.

“அழாதீர்கள்! உங்கள் சிக்கல் என்ன?”

திடீரென்று திருநாவுக்கரசின் இரண்டு கைகளையும் பற்றிக்கொண்டு, “தம்பி! இந்தக் கைகளை உங்கள் கால்களாக நினைத்துக் கும்பிட்டுக் கேட்கிறேன்” என்று சொல்லி மீண்டும் குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கிவிட்டார். வாயிலிருந்து சொற்கள் வரவில்லை. பெரியவரின் அருகே நின்றிருந்த குழந்தைகள் எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.

“என் அப்பா போல இருக்கிறீர்கள். சிறுவனான என்னிடம் பெரிய வார்த்தைகளெல்லாம் சொல்லாதீர்கள்! என்னவெனச் சொல்லுங்கள்! என்னால் ஏதும் உதவ முடியுமானால் செய்கிறேன்.”

“தம்பி! எப்படிச் சொல்வது? என்ன சொல்வது? புரியவில்லை. திருச்சியில் இருந்து தஞ்சாவூர் போக வேண்டும், வண்டிச் சத்தத்துக்குக் காசு தர முடியுமா எனக் கேட்கலாம். அமெரிக்காவிலிருந்து தஞ்சாவூர் போக வேண்டும்; விமானத்தில் ஏற்றி விட முடியுமா எனக் கேட்க முடியாது. என் மகனெனச் சொல்லிக்கொள்ளவே வெட்கப்படுகிறேன் தம்பி. ‘உன்னைப் பிரிந்து இருக்க முடியவில்லை, நாங்கள் வர வேண்டுமானால் நான்கு பேருக்குச் செலவாகும். நீங்கள் ஒருவர்தானே? வாருங்களென மடலுக்குமேல் மடல் எழுதினான். என் மனைவி போய்ச் சேர்ந்துவிட்டாள். நான்தான் ஒன்றியாக ஓய்வூதியப் பணத்தில் காலத்தை ஓட்டிக்கொண்டு இருந்தேன். எனக்கும் பேரப் பிள்ளைகளைப் பார்க்கலாம் போல் ஓர் எண்ணம் வந்தது. இங்கே வந்தேன். வந்த அப்புறம்தான் தெரிந்து கொண்டேன். நேசம் ஏதும் இல்லை, எல்லாம் பசப்பல்தான்!

என்னைச் சிறைக்கூடத்தில் வைப்பது போல் வைத்து இந்தப் பிள்ளைகளுக்குக் காவற்காரனாக்கி விட்டான். மருமகள் பேச்சும் ஏச்சும் என்னால் தாங்க முடியவில்லை. போதாததற்கு மகனும் சேர்ந்துகொண்டு கை நீட்டி அடிக்கக் கூடத் தொடங்கிவிட்டான். “என்னை ஊருக்கு அனுப்பி வைத்துவிடப்பா” என்று கூடக் கேட்டுப் பாத்துவிட்டேன். ‘ஊரா? இங்கேயே கிடந்து சாவு’ என்கிறான் பெற்ற மகன்.

இப்பொழுது ‘உலங்கூர்தியில் (ஹெலிகாப்டர்) ஒரு சுற்று போய்விட்டு வருகிறோம்; பிள்ளைகளைப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டுப் போய் இருக்கிறார்கள்” என்று சொல்லி நிறுத்தினார் பெரியவர்.

“கேட்க வருத்தமாகத்தான் இருக்கிறது. இதில் நான் என்ன செய்ய வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?”

“தம்பி! எனக்குப் பணம் காசு உதவி வேண்டா! சமையல் செய்யத் தெரியும். உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் சமைத்துப் போட்டு, ஏதோ ஒரு மூலையைக் காட்டினால் முடங்கிக் கொள்வேன். வேறு எதுவும் வேண்டா! ஊரிலிருந்து பணத்துக்கு ஏற்பாடு செய்யும் வரைக்கும்தான். உங்களுக்கு எக்காரணம் கொண்டும் பாரமாயிருக்க மாட்டேன்” என்றார் சிறு குழந்தை போல.

தற்போதைய வேலையே அடுத்த திங்கள் முடியப்போகிறது. தானே என்ன செய்யப் போகிறோம், இருக்க‌ப் போகிறோமா, திரும்ப வேறு ஊருக்கு அனுப்பிவிடுவார்களோ என்ற சிந்தனை அப்பொழுது திருநாவுக்கரசிற்கு எழுந்தது.

“தம்பி, சிந்திப்பதைப் பார்த்தால்…?”

“இல்லை… எனக்கு இப்பொழுது இருக்கிற வேலை அடுத்த திங்களுடன் முடிகிறது. அப்புறம் நானே எங்கே போவேன் என எனக்குத் தெரியாது. அதைத்தான் சிந்தித்துக் கொண்டு இருக்கிறேன்.”

“தம்பி! உங்கள் நண்பர்களிடமாவது சொல்லி ஓர் ஏற்பாடு செய்தீர்களானால் கோடி நல்வினை உங்களுக்கு…!” என்று சொல்லித்  திருநாவுக்கரசை இறைத் தூதன் போல ஏறிட்டார் பெரியவர்.

“உங்கள் வீட்டு நிலைபேசி எண்ணைக் கொடுங்கள்! ஏதாவது ஏற்பாடு செய்ய முயல்கிறேன்.”

“தம்பி! உங்களை வற்புறுத்திக் கேட்க எனக்குக் கொஞ்சம் கூட உரிமை இல்லை. இங்கே எனக்கு வேறு வழியும் தெரியவில்லை. இல்லையென்றால் சாவதுதான் ஒரே வழியாகத் தெரிகிறது.”

“நான் முயற்சி செய்கிறேன். ஆனால், இப்பொழுது உறுதியாக உங்களிடம் ஏதும் சொல்ல முடியாது. மகனுக்காக, இருக்கிற வரை கொஞ்சம் நேர்ந்து நிரவிப் போங்கள் பெரியவரே!” தொலைவில் நண்பர்கள் செய்கை செய்யவே, “நான் வருகிறேன். தொடர்புகொள்கிறேன், கவலைப்படாதீர்கள்!” என்று சொல்லிகொண்டு ஓட்டமும் நடையுமாய்ச் சென்றான் திருநாவுக்கரசு.

“இவ்வளவு பேர்களில் நீங்கள் ஒருவராவது மனிதநேயத்தோடு வந்து கேட்டீர்களே! நிரம்ப நன்றி தம்பி!” என்று தலைக்கு மேல் கையெடுத்துக் கும்பிட்டார் பெரியவர்.

 <>000000<>

 வானத்திலிருந்து வையத்துக்குத் தாவிக் குதிக்கிற நயாகரா அழகைக் கீழிருந்து நனைந்து கொண்டே பார்க்கக் கண்கோடி வேண்டும். அமெரிக்கப் பகுதி, குதிரைக் குளம்புப் பகுதி (குதிரைக்கால்போன்ற அமைப்பு), கனடா பகுதி என மூன்று பிரிவும் ஒரே அருவியாக அணிவகுத்துக் கீழிறங்குகிற விந்தையில் கருத்தைப் பறிகொடுத்திருந்தான் அரசு.

படகுப் பயணம் முடிந்து கூட்டணிக் கடையில் சாப்பிட்டு, மெழுகுப் பொம்மைக் கண்காட்சிக் கூடத்துக்குள் சென்று விட்டு வெளியே வந்தபோதுதான் அந்தக் கொடுமை அரங்கேறிப் போயிருந்தது.

ஊர்திகள் நீண்ட வரிசையில் உறைந்து நிற்க, சற்றுத் தொலைவில் ஒரு கூட்டம் மொய்த்துக் கொண்டிருப்பதையும், காவலர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருப்பதையும் திரு பார்த்தான். கும்பலாய் இருந்த இடத்தை அடைந்து பார்த்த திருவுக்கு இதய இயக்கமே நின்றுவிட்டது போலானது.

அங்கே… அந்தப் பெரியவர்… குருதிச் சேற்றில் இடுப்புக்குக் கீழ் கூழாகியிருக்க முகத்தில் அங்கங்கே குருதிப் பொட்டுக்கள் உறைந்து… பார்க்க ஒண்ணாமல் உடம்பைக் குலுக்கி நிமிர்ந்தான் அரசு. பெரியவருடன் வந்த இரு குழந்தைகள் தென்பட்டன. அருகில் பதற்றத்துடன் ஒரு பெண்மணி. கொஞ்சம் தள்ளிக் காவலரிடம் பேசிக் கொண்டிருந்தவன் அந்தப் பெரியவரின் மகனாக இருக்க வேண்டும். பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே பதற்றக்காரி பெரியவரின் மகனைக் காவலரிடமிருந்து பிரித்து, அரசு இருந்த பக்கம் இருவரும் ஒதுங்கினார்கள்.

“எங்கே உளறிக் கொட்டிவிடுவீர்களோ என்று அச்சமாகிவிட்டது. நல்ல வேளை… நான் சொன்னது போலவே சொல்லிவிட்டீர்கள். அப்பா என்று சொல்லி, பிணத்தை நாம் வாங்கி, கிழத்தைப் புதைக்கவே ஆயிரக்கணக்கில் தாலர் செலவு செய்ய வேண்டி வந்திருக்கும். நயாகரா வந்த இடத்தில் தற்செயலாகச் சந்தித்தோம், எங்கள் நாட்டுக்காரர் என்பதைத் தவிர வேறு ஏதும் தெரியாதென்று சொல்லிவிட்டீர்கள்; நாம் தப்பித்தோம். சரி… சரி நாம் இந்த இடத்தை விட்டு முதலில் கிளம்புவோம்.”

அரசுக்குத் திக்கென்று இருந்தது. அதே இடத்தில் அவர்களை அடித்துப் பந்தாட வேண்டும் போலிருந்தது. “சே… என்ன மனிதர்கள்! என்ன வாழ்க்கை? பெற்ற அப்பாவை யாரென்றே தெரியவில்லை என்று எப்படிக் கூசாமல் சொல்ல முடிகிறது?”

சில நிமையங்களுக்கு முன் பேசிய உயிர்ப் பறவை ஒன்று சிதைந்து கிடப்பதைப் பார்த்ததுமே என் உள்ளம் பெருங்குரலெடுத்துக் கதறுகிறதே! தோளைத் தொட்டிலாக்கி, நெஞ்சைப் பஞ்சு மெத்தையாக்கி, எறும்பு கடித்தால் பதை பதைத்து, எத்தனை எத்தனை இரவுத் தூக்கம் தொலைத்து இந்த இளமையை வளர்த்தெடுத்த அன்பான தந்தை ஒருவரை எப்படி வெறும் குப்பைபோல் விசிறிவிட்டுப் போக முடிகிறது? தொண்டை அடைக்காமல், துக்கமில்லாமல் எப்படி?  எப்படி இவர்களால் பாறாங்கல்லாய் இருக்க முடிகிறது?!

“அடேய்! இன்னும் என்ன செய்கிறாய்?” கதவு தடதடவென்று தட்டப்பட, திருநாவுக்கரசின் நினைவிழை அறுந்தது.

 <>000000<>

 ஒருமணி நேரத்துக்கு மேல் வண்டியை ஓட்டிய மகிழ்நன், “அடேய்! என்னாயிற்று? ஒரு காத நீளத்துக்கு வண்டிகள் போக்குவரத்துச் சிக்கலாகி நிற்கின்றன?!” என்றான்.

“சரிதான்… எப்பொழுது இவையெல்லாம் சரியாகி, நாம் எப்பொழுது போய்ச் சேர்வது?”

“இப்பொழுது போனாலே தெட்டுராய்டு போய்ச் சேர இரவு ஒன்பதாகிவிடும்” என்றான் புகழேந்தி எரிச்சலாக.

“சரி. நான் கொஞ்சம் முன்னாடி போய் என்ன, ஏது எனப் பார்த்துவிட்டு வருகிறேன்.” அரசு கிளம்பினான்.

‘இப்படிப்பட்ட போக்குவரத்து நெரிசலில் எப்படித்தான் அமெரிக்கர்கள் பொறுமையாய் இருக்கிறார்களோ? நம்மூராய் இருந்தால் குறுக்கே புகுந்து, போகிறவன் போய்க்கொண்டே இருப்பான்’ என்று நினைத்துக்கொண்டே நடந்ததில் மகிழுந்துகள் நிற்கும் முன்பகுதிக்கு வந்திருந்தான் அரசு.

அங்கே… “அப்பா… அம்மா…” என்று மெலிதாய் அழும் குழந்தைகள்… அட… அந்தப் பெரியவருடைய பேரப் பிள்ளைகள்!

மகிழுந்து தலைகீழாய்க் கவிழ்ந்து கிடக்க, சரக்குந்தின் பின்புறத்தின் கீழ் மகிழுந்து. குருதி உறைந்து கிடக்க… சுற்றிலும் காவலர் தலைகள்.

“அரசன் அன்றே கொல்லுவான்; தெய்வம் நின்று கொல்லும்” என்பார்கள். பெரியவரின் சாவுக்குக் காரணமான இருவருக்கும் தண்டனையைக் கடவுள் காலம் தாழ்த்தாமல் வழங்கிவிட்டதோ! திருநாவுக்கரசு அந்தக் குழந்தைகளை நோக்கிப் போகிறான்!

accident01