கல்வியாளர் வெற்றிச் செழியன்,

செயலர், தமிழ்வழிக் கல்விக்கழகம்.

1. தாய்த்தமிழ்ப் பள்ளி, வள்ளலார் நகர், திருப்பூர்

 

  இப்பள்ளி 1995இல் வெள்ளியங்காடு பாரதி நகரில் குடிசையில் தொடங்கப்பட்டது.  முதல் ஆண்டின் தொடக்கத்தில் 25 குழந்தைகள் சேர்ந்தனர்.  குழந்தைகள் எண்ணிக்கை அவ்வாண்டின் முடிவில் 40 ஆகும்.  ஒவ்வோர் ஆண்டும் குழந்தைகள் எண்ணிக்கை உயர்ந்து 450 ஐ எட்டியது.

 thaythamizh palli thiruppur04

  பல்வேறு சூழல்களால் ஏற்பிசைவு பெற முடியாது இருந்தது.  2002 இல் மக்களின் உதவியால் வள்ளலார் நகரில் சொந்த இடம் வாங்கப்பட்டுச் சிறுகசிறுகக் கட்டடங்கள் கட்டப்பட்டன.  அதன் பிறகே 2005 இல் பள்ளி ஏற்பிசைவுப் பெற முடிந்தது.

 

இன்று….

  இப்போது 300 குழந்தைகள் படித்து வருகின்றனர்.  13 ஆசிரியர்கள், ஓர் அலுவலக உதவியாளர், ஒரு தாயம்மாள், இரு காவலர்கள், ஓட்டுநர் ஒருவர் என 18 பேர் பணியாற்றுகின்றனர்.

 thaythamizh palli thiruppur08

  திருப்பூர் தாய்த்தமிழ்க் கல்வி அறக்கட்டளையால் பள்ளி நடத்தப்படுகிறது.  அதன் தலைவர் பெ. இராமசாமி அவர்கள். செயலர் கு.ந. தங்கராசு அவர்கள், அறங்காவலர் த. விசயலக்குமி அவர்கள்.

 20’x20’ அளவில் 10 அறைகள் கொண்ட 2 அடுக்குக் கட்டமும்

16’x 16’ அளவில் 5 வகுப்பறைகள் கொண்ட ஓட்டுக் கட்டடமும்

10’x 10’ அளவில் 2 அறைகளும் இன்றைய பள்ளிக் கட்டடம்.

பள்ளி எனும் குடும்பம்

 ‘Miss, Madam, teacher’ என்பனவெல்லாம் இங்கு இல்லை.  ஆசிரியரை, ‘அக்கா’ என்றே குழந்தைகள் அழைக்கின்றனர். ஆசிரியர் மாணவரிடையே இணக்கமான உறவும் அச்சமற்ற சூழலும் நிலவுகின்றன.  வகுப்பில் ஆசிரியரும் மாணவரும் உணவை சேர்ந்து உண்கின்றனர்.  குழந்தைகள் பகிர்ந்து உண்கின்றனர்.  ஆசிரியர்கள் குழந்தைகளையும் ‘வாங்க, போங்க’ என மதிப்புறவுச் சொற்களைப் பயன்படுத்தியே அழைக்கின்றனர். இக் குழந்தைகளுக்கு, ‘கை கட்டி வாய்ப்பொத்தி அமர்வது’ என்றால் என்னவென்றே தெரியாது.  ஆசிரியர் மாணவர் நெருங்கிப் பழக இவை உதவுகின்றன.  மதித்துபழகும் உறவு மனநிலை குழந்தைகளுக்கு வளர்கின்றது.

 

கற்பித்தலில் புதுமைகள்

   குழந்தைகள் எப்போதும் மகிழ்வுடன் இருப்பதற்கேற்ற பாடத்திட்டம் பயன்படுகிறது.  வகுப்பறை ஒருகலைக் கூடமாக மாறிவிடுகிறது. ஆசிரியருக்குப் பல முகங்கள்; வகுப்பறையில் நல்ல நடிகராய் மாறி விடுகிறார்.

  எழுத்து வேறுபாடுகளை அறிந்து கொள்ள படவிளக்க ஒலிப்புப் பயிற்சிப் புத்தகம், மொட்டு மலர் வகுப்புகளுக்கு, விளையாடிக் கற்போம் புத்தகம், ஒன்று முதல் 5ஆம் வகுப்புவரை தமிழ், ஆங்கில எழுத்துப் பயிற்சி ஏடுகள், மலர் வகுப்புக்குப் பாடம் சார்ந்து ஒலி, ஒளி குறுந்தட்டு, மற்ற வகுப்புகளுக்கு, பொதுவான தமிழ், ஆங்கிலக் குறுந்தட்டுகள் பள்ளியில் தனித்துவமாக உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன.

   ஆங்கிலம் கற்பித்தலிலும் தனிக்கவனம் செலுத்தப்படுகிறது.  3, 4, 5 ஆம் வகுப்புகளுக்கென தனி ஆங்கிலம் – தமிழ் அகர முதலி உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது.

தாய் தமிழ் பள்ளி, திருப்பூர்

 நல்லாசிரியர்கள்

  கற்பித்தலின் வெற்றியே நல்ல ஆசிரியர்களால் கிடைத்தவைதாம்.  தரப்படும் குறைவான ஊதியத்தில் நிறைவாக உழைக்கின்றார்கள்.  சிக்கலான காலங்களில் மாதங்கள் காத்திருந்து அந்தக் குறைந்த ஊதியத்தைப் பெற்றவர்கள் உண்டு.

   பள்ளிக்குழந்தைகள் வரும் முன்னர் காலை 8.00 மணிக்கு ஆசிரியர்கள் வந்திருந்து கரும் பலகையில் குறளும் விளக்கமும் எழுதிப்போட்டு, வாயிலில் நின்று, வரும் குழந்தைகளை “வணக்கம்! வெற்றி உறுதி!” எனச் சொல்லி வரவேற்கும் உயரிய பண்புடையவர்கள். தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், நாடகத்துறையினர், குமூக ஆர்வலர்கள் எனப் பல பயிற்சியாளர்களின் சிறப்புப் பயிற்சியை ஆசிரியர்கள் பெறுகிறார்கள்.

பெற்றோர் எனும் உற்றார்

 பள்ளியின் வலிமையே பெற்றோர்கள்தாம்.  பெற்றோர், ஆசிரியர், பணியாட்சி உறவு மேம்பட்டு அமைந்துள்ளது. தங்கள் குடும்ப உறுப்பினரைப்போல ஆசிரியரிடம் பெற்றோர் பழகும் சூழல் அமைந்துள்ளது.  மாலை நேரத்தில் வகுப்பறையில் பெற்றோர் ஆசிரியர்களைச் சந்திக்கும் வாய்ப்பு சிறந்த பயன் தருகின்றது.  பள்ளியின் நிதி நெருக்கடிக் காலத்தில் தங்களின் சிறிய சேமிப்பை, கடனாகவோ கொடையாகவோ கொடுத்து உதவிய பெற்றோர் பலரும் நன்றிக்குரியவர்கள்.

திறன்களோடு வளரும் குழந்தைகள்

 குழந்தைகளின் தனித்திறன்களைக் கண்டறிந்து, திறனுக்கேற்ப கதை, பாடல், நடனம், நடிப்பு, ஓவியம், கைவினைப் பொருட்கள் செய்தல் என அவர்களுக்குப் பயிற்சியளித்து அவர்களின் பன்முகத்தன்மை வளர்த்தெடுக்கப்படுகின்றது.

 காலை கூடுகையில் ஒவ்வொரு மாதமும் அனைத்துக் குழதைகளும் மேடையேறுமாறு திட்டமிடப் பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் மேடைக் கூச்சம் இல்லாமல் வளர்ந்து, தலைமைப் பண்போடு மிளிர்கிறார்கள்.  சான்றோர்கள் பள்ளிக்கு வரும் போது அவர்களோடு உரையாடி, ஏன்? எப்படி? என அவர்களே கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொள்கின்றனர்.

 மேலும்…..

ஐந்தாம் நிலை மாணவர்கள் 12 கணிணிகளோடு செய்முறைப் பயிற்சி பெறுகின்றனர்.

3. 4. 5 ஆம் நிலை மாணவர்கள் சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு ஓகயிருக்கை (யோகா) பயிற்சி பெறுகின்றனர்.

வாழ்க்கைக்குப் பயன்படும் தொன்மை மாறாத கதைகளும் பாடல்களும் கற்று மகிழ்கிறார்கள்.

ஆணும் பெண்ணும் சமம் என்பதை உறுதிப்படுத்த பெயருக்கு முன்னால் அம்மா, அப்பா இருவரின் முன்னெழுத்தையும் சேர்த்து எழுதுகிற பண்பாட்டைக் கடைபிடிக்கின்றனர்.

தாய்மொழியாம் தமிழில் இங்கு தொடக்கக்கல்வி பெற்ற மாணவர் பலர், பொறியாளர்களாய், மருத்துவராய், வழக்குரைஞராய், சமூகப் போராளிகளாய் உருவாகியிருக்கிறார்கள்.

பள்ளி – பள்ளியைத் தாண்டி

  ‘மெல்லத்தமிழ் இனி வாழும்’ என  இப்பள்ளியைக் குறிப்பிட்டு 1999இல் தன் பொங்கல் விழா மலரில் எழுதி மகிழ்ந்தது தினமணி.

2008-09ஆம் ஆண்டிற்கான ‘சிறந்த தமிழ்ப்பள்ளிக்கான மக்கள் விருதை’ மக்கள் தொலைக்காட்சி வழங்கிச் சிறப்பித்தது.

பள்ளிக்குழந்தைகள் வெளி நிகழ்வுகளிலும் போட்டிகளிலும் பங்கேற்று திறம் காட்டி பரிசுகளை அள்ளி வருகின்றனர்.

எதிர்நோக்கும் சிக்கல்களும் தேவைகளும்

அரசுப் பள்ளியிலும் ஆங்கிலத் தொடக்க வகுப்புகள் வந்து விட்ட நிலையில் தமிழ்வழிக் கல்வி மீதான நம்பிக்கை மக்களிடம் தளர்ந்து வருகின்றது.

  பள்ளி 5 ஆம் நிலைவரை அரசு ஏற்பிசைவோடு நடைபெற்று வருகிறது.  5ஆம் நிலை முடிந்த குழந்தைகள் தொடர்ந்து அதே பள்ளியில் படிக்க முடியாததால் எங்கு சேர்ப்பது என்ற வினா பெற்றோரிடம்…

   மிகக் கடுமையான பொருளியல் நெருக்கடியில் பல தாய்த் தமிழ்ப்பள்ளிகள், தமிழ்வழிப் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் குழதைகளிடம் கூடுதல் கட்டணம் பெறமுடிவதில்லை.  அரசு அறிவித்ததை விடக் குறைவான கட்டணமே பெறப்படுகிறது.  இயலா நிலையில் உள்ள சில குழந்தைகள் கட்டணம் ஏதும் செலுத்தாமலே கற்று வருகின்றனர்.

   உயிர் நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்த இடம் வேண்டும்.  கட்டடங்கள் வேண்டும், கற்பித்தல் கருவிகள், விளையாட்டுப் பொருள்கள் வேண்டும்.

   இருக்கும் ஓட்டுக் கட்டடத்தையும் காரைக் கட்டடமாக மாற்ற அரசு வலியுறுத்துகிறது.  ஆசிரியர்க்கு  ஊதியம்  தருவதும் இன்றும் சிக்கல்தான். வாய்ப்புடையவர்கள் ஆசிரியர் ஓரிருவரின் ஊதியத்தைத் தந்து உதவலாம்.

   பள்ளி நண்பர் சிலர் 10 குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை ஏற்றிருகிறார்கள். நீங்களும்கூடச் சிலகுழந்தைகளின் கட்டணத்தைக் கட்டி உங்கள் பங்களிப்பைத் தொடங்கலாம்.

தாய்த்தமிழ்க்கல்வி தரும் பணியில் உங்கள் உதவியைப் பள்ளி எதிர்நோ்க்கி  நிற்கிறது.

நாமும்உதவுவோம் ! வரலாற்றில் நிலைப்போம்!

 

தொடர்புக்கு

*          தாய்த்தமிழ்ப்பள்ளி, வள்ளலார் நகர், வெள்ளியங்காடு         அருகில், திருப்பூர், 641 604

*          தொலைபேசி 9843944044

*          மின்னஞ்சல்:  thaitamilschool@yahoo.co.in

முகநூல்:  தாய்த்தமிழ்ப்பள்ளி, திருப்பூர்

            வலை(த்தளமுக)வரிகள்:

 www.thaithamizhschool.blogspot.com ;

  http://www.thaithamizh.com