(அகல் விளக்கு – மு.வரதராசனார்: 11. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 5

பங்குனி மாதம் பிறந்தால் எங்கள் ஊர்க்கு ஒரு புத்துயிர் பிறக்கும். பங்குனித் திருவிழா கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். அதை ஒட்டித் தேரோடும் தெருக்கள் எல்லாம் மிகவும் அலங்காரம் செய்யப்படும். கடைத்தெரு மிகப் பொலிவாக விளங்கும். வழி எல்லாம் பந்தல்களும் தோரணங்களும் கட்டப்படும். திருவிழாத் தொடங்கியவுடன், வீடுதோறும் ஆட்கள் மூன்று மடங்கு நான்கு மடங்காகப் பெருகிவிடுவார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் வெளியூரிலிருந்து உறவினர்களும் நண்பர்களும் திருவிழாவைப் பார்ப்பதற்காக வந்து தங்கியிருப்பார்கள். எங்கள் தெருவின் வீடுகளிலும் விருந்தினர் பலர் இருப்பார்கள். அல்லாமலும், எங்கள் தெருத்திண்ணைகள் தோறும் வெளியூரார் முன்பின் அறியாதவர் பலர் கேட்காமலே வந்து தங்கிப் படுத்துக்கொள்வார்கள். வேப்ப மரங்களைச்சுற்றி ஆண்களும் பெண்களும் கட்டுச்சோறு தின்றுகொண்டும் வெற்றிலைபாக்கு மென்று கொண்டும் இருப்பார்கள்.

திருவிழாக் காலத்தில், யார், ஏன் வந்தீர்கள் என்று வீட்டுக்காரர் வெளியாரைக் கேட்கமாட்டார்கள்; கேட்கவும் கூடாது. எல்லாரும் இறைவனுடைய மக்கள் என்ற மெய்யுணர்வு பெற்றுவிட்டதாகக் கூற முடியாது. ஆனாலும் வழி வழியாக வந்த நாகரிகமாக அதைக் கருதினார்கள். ஆகையால், திருவிழாக் காலத்தில் வீட்டின் உட்பகுதி மட்டுமே வீட்டுக்காரர்க்கும் அவர்களின் உறவினர்க்கும் உரிமையாக இருக்கும்; வீட்டின் வெளிப்பகுதி, திண்ணை முற்றம் முதலியன வெளியார் எல்லார்க்கும் உரிய பொது இடமாகக் கருதப்பட்டு வந்தன. இன்னும் சொல்லப்போனால், திண்ணை முற்றம் முதலியவைகளே அல்லாமல் அந்தந்த வீட்டுக் கிணறுகளும் எல்லார்க்கும் பொதுவுடைமையாக இருந்தன. சென்னை முதலான நகரங்களில் நாள்தோறும் திருவிழாப் போன்ற கூட்டம் இருந்தபோதிலும், இந்தப் பரம்பரை நாகரிகம் பொதுவுடைமை நாகரிகம் அவர்களுக்குத் தெரியாது. சட்டமும் சட்டத்தை மீறும் தந்திரமும் அவர்களுக்குத் தெரியுமே தவிர, இப்படிப்பட்ட பரம்பரை நாகரிகமும் அதன் பெருமையும் அவர்களுக்குத் தெரிவதில்லை.

இந்த ஆண்டில் பங்குனித் திருவிழாவின் போது எங்கள் வீட்டுக்கு வேலம், அம்மூர் முதலான கிராமங்களிலிருந்தும் சென்னையிலிருந்தும் உறவினரும் நண்பரும் வந்திருந்தார்கள். பாக்கிய அம்மையார் வீட்டுக்கும் யாரோ வந்திருந்தார்கள். சந்திரன் வீட்டிற்கு அவனுடைய தாயும் தங்கையும் வந்திருந்தார்கள். எங்கள் வீட்டுக்கு வந்த உறவினரில் முக்கியமானவர்கள் என் சொந்த அத்தையும் அத்தை கணவரும் அத்தை மகள் கயற்கண்ணியும் ஆவார்கள்.

சந்திரனுடைய தாயைப் பார்த்தபோதுதான், சந்திரன் அவ்வளவு அழகாக இருப்பதற்கு காரணம் தெரிந்து கொண்டேன். அந்த அம்மா கடைந்தெடுத்த பதுமை போல் இருந்தார். நல்ல ஒளியான நிறம், அளவான உயரம், மென்மையான உடல், ஓவியம் தீட்டினாற்போன்ற புருவமும் விழியும் நெற்றியும் உடையவர் அவர். சந்திரனுடைய தந்தைக்கும் உடம்பில் ஒரு குறையும் இல்லை. ஆனாலும் அவருடைய தோற்றம் மிக அழகானது என்று கூற முடியாது. சந்திரனுடைய தாய் அழகின் வடிவமாக விளங்கினார். அந்த அழகிற்கு ஏற்ற அமைதியும் அவரிடம் விளங்கியது. சந்திரனுடைய முகத்தில் தாயின் சாயல் நன்றாகப் புலப்பட்டது. அந்த உண்மை அவனுடைய தங்கையைப் பார்த்தபோது தெளிவாயிற்று. தாயின் அழகுக்கும் அண்ணனின் அழகுக்கும் ஒரு பாலம் போல் விளங்கினாள் அவள்.

அவள் பெயர் கற்பகம், பெருங்காஞ்சியிலேயே சந்திரன் படித்த பள்ளிக்கூடத்திலேயே அவள் படித்து வந்தாள். அவள் அப்போது ஏழாவது படித்துவந்தாள். ஏறக்குறைய அவள் வயதாக இருந்தாள் என் அத்தை மகள் கயற்கண்ணி. அவள் ஐந்தாவதுதான் படித்து வந்தாள். அந்த ஊரில் ஐந்தாவதுக்குமேல் படிக்க வகுப்பு இல்லாத காரணத்தால் “என் மகளுடைய படிப்பு இதோடு முடிந்துவிட்டது. நீ சீக்கிரம் படித்து முடித்து இவளைக் கல்யாணம் செய்துகொள்” என்று அத்தை என்னைப் பார்த்துச் சொல்லிச் சிரித்தார். “உன் மகள் படிப்பு முடிந்து போச்சு; அதனால் என் மகனுடைய படிப்பையும் சீக்கிரம் முடிக்கச் சொல்கிறாயா?” என்று அம்மா வேடிக்கையாகக் கேட்டார். அதைக் கேட்ட கயற்கண்ணி, “போதும் மாமி! சும்மா இருங்கள், உங்களுக்கு இதே பேச்சு!” என்பாள்.

கற்பகத்தைப் போலவே கயற்கண்ணி சுறுசுறுப்பாக இருந்தபோதிலும் அவ்வளவு அழகாக இல்லை. வளர்ந்த பிறகும் என் அத்தைபோல் தான் இருப்பாள் என்று எனக்குத் தோன்றியது. அது மட்டும் அல்ல; அவளுடைய வாயாடித் தன்மை எனக்கு எப்போதும் பிடிப்பதில்லை. யாராவது ஒன்று சொன்னால், அவள் இரண்டு மூன்று சொல்வாள். யாரையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று துடுக்காகக் கேட்டு விடுவாள். ஏதாவது அறிவுரை சொன்னாலும், “ஆமாம் உங்களுக்குத்தான் நிரம்பத் தெரியுமோ? போதும் நிறுத்துங்கள்” என்பாள். எனக்கு அந்தப் பேச்செல்லாம் பிடிக்காது. என் தங்கை மணிமேகலையிடமும் அவள் அடிக்கடி வம்பாகப் பேசுவாள். வலுச்சண்டை இழுப்பாள். அதைக் கண்ட நான் உடனுக்குடன் கடிந்து பேசுவேன். அம்மா அவ்வப்போது என்னைத் தடுத்து, “வேலு! சின்னப் பெண் அப்படித்தான் பேசுவாள். கிராமத்தில் பழகி வளர்ந்தவள். அங்கெல்லாம் அப்படித்தான் பேசுவார்கள். நீ கோபித்துக் கொள்ளக்கூடாது” என்று மெல்ல என்னிடம் சொல்வார். தொலைந்து போகட்டும் என்று நான் விட்டு விடுவேன்.

கயற்கண்ணியிடம் எனக்கு எவ்வளவு வெறுப்பு வளர்ந்ததோ, அவ்வளவும் கற்பகத்திடம் விருப்பமாக வளர்ந்தது. அடிக்கடி சந்திரன் வீட்டுக்குப் போய்க் கற்பகம் பேசுவதையும் செய்வதையும் கவனித்தேன். திருவிழாப் பார்க்க அவள், போனால் நானும் போவேன். கடைத்தெருவுக்கு நானும் சந்திரனும் போகும் போது, “கற்பகமும் வருவதாக இருந்தால் வரட்டுமே, வந்து பார்க்கட்டுமே” என்று அழைத்துக் கொண்டு போவேன்.

பொய்க்கால் குதிரை, மயில் நடனம், பொம்மலாட்டம், தெருக்கூத்து முதலியவற்றைப் பார்ப்பதற்குச் சந்திரனுடைய தாயும் கற்பகமும் என் அத்தையும் கயற்கண்ணியும் என் தங்கை மணிமேகலையும் சேர்ந்து போவார்கள். சந்திரன் தேர்வுக்குப் படிக்க வேண்டும் என்று நின்றுவிடுவான். “அவன் போகிறானா, பார், படிப்பில் எவ்வளவு அக்கறையாக இருக்கிறான்! நீ மட்டும் போகலாமா? உள்ளே போய்ப் படி, சாமி ஊர்வலம் வரும் போது கூப்பிடுவேன். அப்போது வா” என்று அம்மா என்னைக் கடிந்து அனுப்பி விடுவார். அப்பா கடையிலிருந்து திரும்பிவரும் நேரம் என்று நானும் போகாமல் நின்றுவிடுவேன்.

திருவிழா முடியும் வரையில் எங்கள் தெரு நிறையக் கூட்டம் போனது போனபடி, வந்தது வந்தபடி இருந்தது. கிராமத்து ஏழைமக்களே பெரும்பாலோராக இருந்தார்கள். ஒருவகையில் ஊரைச் சுற்றி அசுத்தம் செய்யப்பட்ட போதிலும் தெருவெல்லாம் எச்சிலும் எச்சிலையுமாக இருந்தபோதிலும், எல்லோருடைய மனமும் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது. உழைத்த உழைப்பே உழைத்து, குடித்த கூழே குடித்து, உடுத்த கந்தலே உடுத்து, படுத்த தரையிலேயே படுத்து, ஆடுமாடுகளோடு சேர்ந்து குடிசைகளில் வாழும் ஏழைமக்களுக்கு இந்தத் திருவிழா ஒரு மாறுதல் தந்து நன்மை செய்வதை அவர்களின் மலர்ந்த முகங்களில் கண்டேன்.

(தொடரும்)

முனைவர் மு.வரதராசனார்

அகல்விளக்கு