(அகல் விளக்கு – மு.வரதராசனார். 18. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தை வீட்டில் விருந்தினர் வந்தபோதெல்லாம் ஒதுங்கியிருந்த நான், கற்பகம் வந்தபோது அவ்வாறு ஒதுங்கியிருக்கவில்லை. அப்போது மட்டும் அடிக்கடி போய்க் கொண்டிருந்தேன். கற்பகத்தைக் காண்பதற்கென்றே அடிக்கடி போனேன். அவளும் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து, என் அலமாரியையும், பெட்டியையும் திறந்து புத்தகங்களை எடுத்துப் படங்கள் பார்த்துவிட்டுச் செல்வாள்.

என் தங்கை மணிமேகலையோ தம்பி பொய்யா மொழியோ அப்படி என் அலமாரியிலும் பெட்டியிலும் கை வைத்தால் எனக்கு உடனே கோபம் வரும். ஆனால் கற்பகம் வந்து எடுத்தால் உவகையோடு இருப்பேன். அவள் பார்க்க வேண்டும் என்றே சில படங்களை நானே எடுத்துக் காட்டுவேன். இது என் தங்கைக்கும் பொறாமையாக இருந்தது. “நான் எடுத்தால் அண்ணன் கோபித்துக் கொள்கிறார். கற்பகம் மட்டும் எடுக்க விடுகிறார்” என்று அம்மாவிடம் குறை சொன்னாள். “நீ எடுத்தால் எல்லாவற்றையும் கலைத்துவிடுகிறாய். கற்பகம் அப்படிக் கலைப்பதே இல்லை” என்றேன் நான்.

கற்பகம் வளர வளர அவளுடைய அழகும் வளர்ந்து வந்தது. முன்னே பாவாடை சட்டை மட்டும் உடுத்தி வந்தவள். இப்போது தாவணியும் உடுத்திவந்தாள். அவளுடைய காதுகளில் திருகாணி இருந்தது போய், வெள்ளைக்கல் தோடு வந்து அழகு செய்தது. மூக்குத்தியும் அணிந்திருந்தாள். அவற்றில் இருந்த கற்கள் அவளுடைய மேனியின் அழகையும் ஒளியையும் எடுத்துக்காட்டுவன போல் இருந்தன.

ஒருநாள் சனிக்கிழமை பிற்பகல், அம்மாவும் தங்கையும் பாக்கியம் வீட்டுக்குப் போய்ப் பேசிக் கொண்டிருந்தார்கள். தம்பியும் எங்கோ விளையாடப் போயிருந்தான். நான் மட்டும் தனியாக இருந்தேன். அப்போது யாரோ உள்ளே வரும் காலடி கேட்டுத் திரும்பினேன். கற்பகம் ஒரு பை நிறையத் தின்பண்டங்கள் கொண்டு வந்து நின்றாள்.

“எப்போது வந்தாய் கற்பகம்” என்றேன்.

“இப்போதுதான். உங்கள் அம்மா இல்லையா?”

“இல்லையே!”

“மணிமேகலை!”

“அவளும் இல்லை” என்று நான் சொன்னவுடன் அந்தப் பையைக் கீழே வைத்து விட்டு நகரத் தொடங்கினாள். “அதைக் கீழே வைத்துவிட்டுப் போகிறாயே, என் கையில் கொடுத்தால் என்ன?” என்று அவளுடைய கையைப் பற்றினேன். அவள் விடுவித்துக்கொண்டு ஓட முயலவே, நான் இறுகப் பற்றினேன். வளையல் இரண்டு நொறுங்கி உடைந்தன. உடனே கையை விட்டேன். “எனக்குக் கோபம் வரும், தெரியுமா?” என்று உடைந்த வளையலைப் பார்த்தாள். அவளுடைய முகம் வாடியது. அந்த வாட்டத்திற்கு இடையே புன்முறுவல் செய்துவிட்டு நகர்ந்தாள்.

நான் செய்த தவறு உணர்ந்து அவள் முகத்தில் விழிப்பதற்கு வெட்கப்பட்டு, அன்றெல்லாம் சந்திரனுடைய வீட்டுக்குப் போகாமலே நின்றேன். மறுநாள் காலையிலும் போகவில்லை. பிற்பகல் அவளே வந்தாள். அம்மாவோடும் தங்கையோடும் பேசிக் கொண்டிருந்தாள். இடையிடையே அவளுடைய பார்வை என்மேல் இருந்தது. அவளுடைய ஒரு கையில் வளையலே இல்லாததைக் கண்டு மனம் வருந்தினேன். குறும்புக்காரி அவள். அதைப் பொருட்படுத்தாமல் “நீங்கள் ஏன் எங்கள் வீட்டுக்கு வருவதில்லை? அண்ணாவும் நீங்களும் பேசுவதில்லையா? காய் விட்டு விட்டீர்களா?” என்றாள். “இல்லை. உன்னோடுதான் காய் விட்டிருக்கிறேன்” என்றேன். “அப்படியா? நல்லதுதான்” என்று, வலிய வந்து என் பெட்டியைத் திறந்து அதில் இருந்த கைகுட்டையைக் கேளாமலே எடுத்துக் கொண்டு போய்விட்டாள்.

00

அத்தியாயம் 8

அந்த ஆண்டிலும் இருவரும் தேறி மேல் வகுப்புக்கு வந்தோம். முன்போலவே சந்திரனைத் தலைமையாசிரியர் பாராட்டினார். ஆனால் இந்த முறை அவன் ஆங்கிலத்தில் மட்டும் முதன்மையாக வர முடியவில்லை. அதையும் தலைமையாசிரியர் குறிப்பிட்டார். சந்திரன் ஆங்கிலத்தில் இரண்டாம் தரமாக இருந்தான். அதற்காகக் கவலைப்பட்டான்.

அவனைத் தேற்றுவதற்காக நான் பல முயற்சிகள் செய்தேன். “ஒரே ஒரு பாடத்தில் இன்னொரு பையன் முதன்மை பெற்றுவிட்டானே என்று கவலைப்படுகிறாயே. நான் எல்லாப் பாடத்திலும், நாற்பதும் நாற்பத்தைந்துமாக வாங்கியிருக்கிறேனே? என்னைப் பற்றி எண்ணிப்பார், நான் கவலைப்படுகிறேனா? போனால் போகட்டும் என்று விடு. இந்த ஆண்டில் முயற்சி செய். பள்ளி இறுதி வகுப்பு(எசு.எசு.எல்.சி)தான் முக்கியம் அதில் எல்லாப் பாடத்திலும் முதன்மை பெற்று விட்டால் போதும். அதுதான் பெரிய சிறப்பு என்று சொல்லிப் பார்த்தேன். இருந்தாலும் சில நாட்கள் வரையில் ஒரு சிறு சோர்வுடன் இருந்தான்.

பள்ளிக்கூடம் திறந்த மூன்றாம் நாள் காலையில் சந்திரன் வீட்டில் அவனுடைய அப்பா சாமண்ணாவின் குரல் கேட்டது. உள்ளே எட்டிப் பார்த்தேன். சோர்ந்து வாடிய முகத்தோடு கற்பகமும் உட்கார்ந்திருந்தாள். வெளியே பின்வாங்கி வந்து நின்று கேட்டுக் கொண்டிருந்தேன். சாமண்ணா தம் அக்காவிடம் கற்பகத்தைப் பற்றிக் குறை சொல்லிக் கொண்டிருந்தார். “நான் எவ்வளவோ சொன்னேன். அவளுடைய அம்மா எவ்வளவோ சொன்னாள். கேட்காமல் ஒரே பிடிவாதமாக அழுதுகொண்டிருந்தாள். அழுது அழுது முகம் எல்லாம் வீங்கிப் போச்சு. பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கிறேன் என்று சொன்ன பிறகுதான் சாப்பிட்டாள். இந்த வயதிலே இவ்வளவு பிடிவாதம் கூடாது. அதற்காகத்தான் பெண்களைப் படிக்க வைக்கக் கூடாது என்று பெரியவர்கள் சொன்னார்கள்” என்றார்.

அத்தை குறுக்கிட்டு, “நாங்கள் எல்லாம் என்ன படித்தோம்? ஓர் எழுத்தும் தெரியாது. கையெழுத்தும் போடமாட்டோம்; உள்ளூரிலே பள்ளிக்கூடம் இருக்கிறது. அங்கே படித்தாய், முடித்தாய், கையெழுத்துப் போட, கடிதம் எழுத, ஒரு புத்தகம் படிக்கத் தெரிந்து கொண்டாய், அது போதாதா, கற்பகம்?” என்றார்.

மறுபடியும் சாமண்ணா, “இப்போதுதான் தெரியுது அந்த அளவுக்கும் படிக்க வைத்திருக்கக் கூடாது. அதுவே என் தப்புத்தான். வீட்டிலே வாய்க்குச் சுவையாகச் சமையல் செய்யக் கற்றுக் கொள்ளணும். பொருள்களை வீடு வாசலைச் சுத்தமாக வைத்திருக்கக் கற்றுக் கொள்ளணும் அதுதான் முக்கியம். நீ படித்துவிட்டு என்ன செய்யப் போகிறாய்? அதைச் சொல். நீ ஒன்பதாவது பத்தாவது படித்தால், மாப்பிள்ளை பி.ஏ., எம்.ஏ., படித்தவனாகப் பார்க்கணும். அவன் தலையோ ஆகாசத்திலே பார்க்கும். தாட் பூட் என்பான். நம் இனத்திலே நம் வட்டாரத்திலே அப்படி எவன் இருக்கிறான்? எங்களுக்கு அல்லவா தெரியும், இந்தத் தொல்லை எல்லாம்? எல்லாம் சொல்லிப் பார்த்துவிட்டேன் அக்கா. நீ வேணுமானால் சொல். கேட்டால் கேட்கட்டும். கேட்காவிட்டால், நாளைக்குக் கொண்டு போய்ப் பள்ளிக் கூடத்தில் சேர்த்துவிட்டுப் போய்விடுவேன். இன்னொன்றும் சொல்லிவிட்டேன். இந்த வருசம் மட்டும்தான் படிக்க வைப்பேன். சந்திரன் பள்ளி இறுி வகுப்பு(எசு.எசு.எல்.சி.) தேறி விட்டானானால், அப்புறம் இங்கே ஒரு குடும்பம் இருக்காது. நீயும் இங்கே படிக்க முடியாது. இந்த வருசம் மட்டும் படித்துவிட்டுச் சந்திரனோடு வீட்டுக்கு வந்து விடணும்” என்றார்.

“சரிதானே அம்மா?” என்று மகளைப் பார்த்துக் கேட்டார். அவளுடைய குரல் கேட்கவில்லை. ஒருகால், தலை மட்டும் அசைத்திருப்பாள்.

“சரி. இருந்து போகட்டும் எனக்கும் ஒரு துணை ஆச்சு” என்றார் அத்தை.

என் உள்ளம் குளிர்ந்தது. வந்தது தெரியாமல் திரும்பிவிட்டேன்.

(தொடரும்)

முனைவர் மு.வரதராசனார், அகல்விளக்கு