அகல் விளக்கு – மு.வரதராசனார்: 9
(அகல் விளக்கு – மு.வரதராசனார்: 8. தொடர்ச்சி)
அகல் விளக்கு
அத்தியாயம் 4
சந்திரன் பள்ளியில் சேர்ந்த மறுநாள் அவனுடைய தகப்பனார் சாமண்ணா வாலாசாவுக்கு வந்தார். புத்தகம் முதலியவை வாங்குவதற்குப் பணம் கொண்டு வந்திருந்தார். சந்திரன் எங்கள் வீட்டுக்கு வந்து, “எங்கள் அப்பா வந்திருக்கிறார். உன்னைப் பார்க்கணும் என்றார், வா” என்று கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்.
சாமண்ணா கூடத்தில் ஒரு பாயின் மேல் உட்கார்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும், “வா’ப்பா நீயும் நான்காம் பாரம் படிக்கிறாயாமே, நல்லா படி; ஒருவருக்கொருவர் துணையாக இருங்கள்” என்றார். பக்கத்தில் உட்காரச் சொல்லி, முதுகைத் தடவிக் கொடுத்து, “கெட்ட பிள்ளைகளோடு சந்திரன் சேராதபடி பார்த்துக்கொள். பள்ளிக்கூடம் உண்டு, வீடு உண்டு என்று இருக்க வேண்டும். சினிமா, ஓட்டல் என்று அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நுழையக் கூடாது. படித்து முன்னுக்கு வரவேண்டும். சந்திரன் ஏதாவது தப்பாக நடந்தால், அத்தையிடம் சொல்லிவிடு. நான் பத்துப் பதினைந்து நாளுக்கு ஒருமுறை வருவேன், என்னிடம் சொல்லு” என்றார்.
சாமண்ணா அப்போது நாற்பது வயது உள்ளவராக நல்ல கட்டான உடம்போடு இருந்தார். மாநிறமானவர், நெற்றியை அடுத்து வழுக்கை குடிபுகுந்தபடி இருந்தது. நெற்றியில் சந்தனப்பொட்டும் குங்குமமும் இருந்தன. காலையில் ஊரில் அணிந்த திருநீறு வியர்வையால் மறைந்து போயிருந்தது. வெண்ணிறமான உடையும் மலர்ந்த விழியும் புன்முறுவலும் அவருடைய உள்ளத்தின் தூய்மையை எடுத்துக் காட்டுவனபோல இருந்தன. சிறிது நேரம் தமக்கையாரோடு ஊர்ச்செய்திகளைப் பேசிக்கொண்டிருந்து மறுபடியும் என்னைப் பார்த்தார். “கண்ட பிள்ளைகளோடு சேர்ந்து விளையாட வேண்டா. சந்திரனும் நீயும் வீட்டிலேயே திண்ணையிலேயே விளையாடுங்கள். இவ்வளவு இடம் போதாதா? இனிமேல் படிப்புத்தான் முக்கியம். விளையாட்டு எதற்கு? விளையாடினது போதும், வாத்தியார்கள் கொடுத்த பாடங்களைப் படியுங்கள், எழுதுங்கள், வேளைக்குச் சாப்பிடுங்கள்”, என்று எனக்கும் அதே வீட்டில் சாப்பாடு முதலியன ஏற்பாடு செய்துவிட்டவர் போல் பேசினார்.
சந்திரன் இங்கும் அங்கும் போய்க் கொண்டிருந்தான். நான் சாமண்ணா பக்கத்தில் உட்கார்ந்தவன் சிலைபோல் இருந்தேன். கையும் காலும் மடக்கிக் கொண்டு அவ்வாறு சிறிது நேரம் உட்கார்ந்திருந்தது துன்பமாக இருந்தது. சாமண்ணா அதையும் கவனித்தவர் போல், “டே! அப்பா! சந்திரா! நீ அரை வினாடி சும்மா இருக்கிறாயா? இங்கே போகிறாய், அங்கே போகிறாய், இதை எடுக்கிறாய். அதை வைக்கிறாய், அதோ பார், உன்னைப்போல் பிள்ளை எவ்வளவு அமைதியாக உட்கார்ந்திருக்கிறான். நீ இதை எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும். தெரியுமா?” என்றார். என் உள்ளத்தில் இருந்த துன்பம் அவருக்கு எப்படித் தெரியும்? உட்கார்ந்தது போதும் என்றும், எப்போது விடுதலை கிடைக்கும் என்றும் என் மனம் ஏங்கியது. அசைந்து, அசைந்து உட்கார்ந்தேன். கடைசியில் எழுந்து நின்று, “போய் வருகிறேன். அம்மா கூப்பிடுவார்கள்” என்றேன். உடனே சாமண்ணா தன் மகனைப் பார்த்து, “பார்த்தாயா! அம்மாவுக்கு எவ்வளவு பயப்படுகிறான்? நீ உன் அம்மாவை ஏய்க்கிறாயே” என்று சொல்லிவிட்டு, என்னைப் பார்த்து, “போய் வா, அப்பா! நல்ல பிள்ளைகளாக நடந்து படிப்பிலேயே கருத்தாக இருக்க வேண்டும். சந்திரனைப் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார். வாயிலைக் கடந்தவுடன், அவிழ்த்துவிட்ட கன்றுபோல் துள்ளிக்கொண்டு வந்துவிட்டேன்.
சந்திரன் படிப்பை நான் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று சாமண்ணா சொன்னார். அந்த நிலையில் அவன் இல்லை. ஆங்கிலம் தவிர, எல்லாப் பாடங்களிலும் அவனே முதன்மையாக இருந்தான். ஆங்கிலத்தில் மட்டும் வரலாற்று ஆசிரியருடைய மகன் சந்திரகுத்தன் என்பவன் வல்லவனாக இருந்தான். அந்த ஒரு பாடத்தில் சந்திரன் அவனோடு போட்டிபோட முடியவில்லை. ஒருநாள் ஆங்கில ஆசிரியர் சந்திரனைப் பார்த்து, “நீ கிராமத்திலிருந்து வந்ததால் உனக்கு ஆங்கிலம் கொஞ்சம் கடினமாக இருக்கிறது. முயற்சியோடு படி, அடுத்த ஆண்டில் சந்திரகுத்தனைவிட நீயே வல்லவன் ஆவாய்” என்றார். அந்தச் சொற்கள் சந்திரனுக்கு ஊக்கம் கொடுத்தன. “நம் நண்பன் சந்திரன் அந்தச் சந்திரகுத்தனைவிடத் திறமையானவன்” என்று நானும் பெருமை கொண்டேன்.
ஆனால், கால் ஆண்டு தேர்வு முடிந்த பிறகு, என் தந்தையார் சந்திரன் பெற்ற எண்களையும் ஒப்பிட்டுப் பார்த்து, “சே இவ்வளவுதானா – நீ! கிராமத்துப் பையன் ஒருவன் வாங்குகிற மார்க்கும் நீ வாங்கவில்லையே, நீ எப்படி முன்னுக்கு வரப் போகிறாய்?” என்று வெறுத்தார்.
“எல்லாவற்றிலும் பாஸ் மார்க் வாங்கியிருக்கிறேன் பார்” என்று சொன்னேன்.
“அதுபோதுமா’டா உனக்கு வேறு என்ன வேலை? மளிகைக் கடைக்கு வரச்சொல்லி ஏதாவது வேலை வைக்கிறேனா? அரிசி பருப்பு அளந்து போடச் சொல்கிறேனா? புளி மிளகாய் நிறுத்தப் போடச் சொல்கிறேனா? அல்லது வீட்டில் உங்கள் அம்மா ஏதாவது வேலை வைக்கிறாளா? உன் படிப்புக்கு என்றே எல்லா ஏற்பாடும் செய்கிறோம். நீ இந்தக் கதியாக இருக்கிறாய், பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்தவுடன் காற்றாடி, பம்பரம், புள், கோலி என்று ஆடப் புறப்பட்டுவிடுகிறாய். நான் காலையில் சில்லறைக் கடைக்குப்போய் அங்கே ஆட்களோடு போராடிவிட்டு, இரவு பத்து மணிக்குக் கடையைக் கட்டிக்கொண்டு வீட்டுக்குத் திரும்புகிறேன். அந்தக் காலத்தில் என்னை இப்படிப் படிக்க வைத்திருந்தால், நான் எவ்வளவோ படித்திருப்பேன். எனக்குச் சொல்வார் யாரும் இல்லை. உனக்கு எல்லாம் இருந்தும், உன் தலைவிதி இப்படி இருக்கிறது” என்று ஒரு புராணமே படித்துவிட்டார். அன்றைக்கு எனக்கு அந்தத் தேர்வு எண்களின்மேல் ஏற்பட்ட வெறுப்புக்கு அளவில்லை. இப்படி ‘மார்க்’ என்று சொல்லி ஒரு முறையை எந்தப் பாவிகள் ஏற்படுத்தினார்களோ, அதனால் அல்லவா அப்பாவிடம் வசை கேட்க வேண்டியிருக்கிறது என்று மிக வருந்தினேன்.
00
அம்மா ஒரு நாளும் என்னை அப்படிக் கண்டித்தது இல்லை. காலையில் நேரத்தோடு விழித்தெழாவிட்டால், அல்லது, மாலையில் விளக்கு வைத்தவுடன் படிக்க உட்காராவிட்டால், அப்போதுதான் அம்மாவின் வசை கேட்கும். சில வீடுகளில் வேளைக்குச் சாப்பிடாவிட்டாலும் தாய்மாரின் வசை கேட்கும். இயற்கை எனக்கு நல்ல பசியைக் கொடுத்திருந்தபடியால், நான் இந்த வசை கேட்கும்படி ஏற்படவில்லை.
சந்திரனுடைய அத்தை என் தாயைவிட நல்லவர். காலையில் படுக்கையை விட்டு ஏழுமணி வரையில் எழாதிருந்தாலும், அந்த அத்தை ஏன் என்று கேட்பதில்லை. விளக்கு வைத்தவுடன் படிக்க உட்காராவிட்டாலும் கேட்பதில்லை. ஆனால் சந்திரன் காலையில் நேரத்தோடு எழாவிட்டாலும், மாலையில் படிக்கத் தவறுவதில்லை, பாடங்களை மிக ஒழுங்காகப் படித்துவந்தான். அதனால் அந்த அத்தை வசை பாடும் வழக்கமே இல்லாமல் இருந்தது.
அத்தைக்கும் அம்மாவுக்கும் சந்திரன் வந்த அந்த வாரத்திலேயே பழக்கம் ஏற்பட்டது. அந்த ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3 மணிக்குச் சந்திரன் தன் அத்தையை அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்குள் வந்தான். “வாங்க அம்மா, வாங்க” என்று அம்மா முகமலர்ச்சியோடு அந்த அத்தையை வரவேற்றார். பாய் போட்டு உட்கார வைத்தார். “இருக்கட்டும் அம்மா. நமக்கு ஏன் இதெல்லாம்?” என்று அத்தை பாயைச் சுருட்டிவிட்டுக் கம்பத்தின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். ஒரு பையில் கொண்டு வந்திருந்த நான்கு தேங்காயையும் ஒரு வெல்ல உருண்டையையும் எடுத்து வைத்து, “எங்கள் ஊரிலிருந்து கொண்டு வந்தவை. எங்கள் தோப்புத் தேங்காய்; எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார். அவற்றைக் கண்டதும், அம்மாவின் முகமலர்ச்சி முன்னைவிட மிகுதியாயிற்று. ஒரு தட்டுக் கொண்டுவந்து அவற்றை எடுத்து வைத்து எதிரில் உட்கார்ந்து பேசத் தொடங்கினார்.
இப்படிப் பொருள்களை வாங்கிக் கொள்வதில் அம்மாவுக்கு எப்போதும் மகிழ்ச்சி உண்டு. அப்பா வாரத்துக்கு ஒரு முறை இருபது முப்பது உரூபாய் கொண்டுவந்து கொடுப்பார். அந்த நோட்டுகள் அம்மாவின் மனத்துக்குப் பெரிய பொருளாகத் தோன்றுவதில்லை. தம்முடைய தம்பி மாதத்துக்கு ஒருமுறை இரண்டு மூன்று உரூபாய்க்குப் பழங்கள் முதலியன வாங்கிக்கொண்டு வந்து பொருள்களாகக் கொடுப்பார். அவையே அம்மாவுக்குப் பெருமையாக இருக்கும். பெண்களுக்கு பொதுவாக உள்ள இந்தப் பண்பைச் சந்திரனுடைய அத்தை எப்படியோ தெரிந்து கொண்டு அன்று முதல்முறையாக வந்தபோதே கை நிறையப் பொருள் கொண்டுவந்தார். அந்த அத்தையும் ஒரு பெண் அல்லவா? பெண்ணின் மனம் நன்றாகத் தெரிந்திருக்கும். தவிர, அவர்கள் குடும்பத்திலேயே கற்ற குடும்பக்கல்வி அது.
பிற்காலத்திலும் அம்மாவிடம் இந்தப் பண்பைக் கவனித்திருக்கிறேன். எனக்கு ஓயாத வேலை; அதனால் சென்னையில் கடைக்குப் போய்ப் பொருள்களை வாங்கிச் சுமந்து கொண்டு ஊர்க்குப் போவதற்கு வாய்ப்பும் இல்லை. அது துன்பமாகவும் இருக்கும். அதனால் ஊருக்குப் போகும் போதெல்லாம் அம்மாவிடம் பத்து இருபது என்று உரூபாய் நோட்டுகளைக் கொடுத்துவிட்டு இரண்டொரு நாள் இருந்து விட்டுச் சென்னைக்குத் திரும்புவேன். ஆனால் என் தம்பி பொய்யாமொழி அம்மாவின் மனத்தை மகிழ்விக்கும் முறையில் நடந்து கொள்வான். கடைகடையாகத் திரிந்து அம்மாவுக்கு விருப்பமான பொருள்களை வாங்கி இரண்டு மூன்று பைகள் நிறைய எடுத்துக் கொண்டு போய்க்கொடுத்துவிட்டு வருவான்.
அந்தப் பொருள்களின் மதிப்பு எல்லாம் சேர்ந்து ஐந்து ஆறு உரூபாய் இருக்கும். அவன் செய்வதுதான் அம்மாவுக்கு மிக விருப்பமாக இருக்கும். இப்படி ஐந்து அல்லது ஆறு உரூபாய்க்குப் பொருள்களைக் கொண்டு போய்க் கொடுத்து விட்டு, ஊரிலிருந்து வரும் போது அம்மாவிடமிருந்து பத்துப் பதினைந்து உரூபாய் கேட்டு வாங்கிக் கொண்டு வந்துவிடுவான். ஆனாலும் அவன்தான் அம்மாவுக்கு அன்பான பிள்ளையாக இருந்தான். இந்த உண்மை தெரிந்திருந்தும் ஓய்வு இல்லாத காரணத்தால் என்னால் அப்படி நடக்கவும் நடிக்கவும் முடியவில்லை.
சந்திரனுடைய அத்தை நடிக்கவில்லை; ஏமாற்றவில்லை பெண்களின் உறவு நீடிப்பதற்கு அது ஒரு வழி என்று கடமையாகவே கொண்டார். உண்மையாகவே அம்மாவுக்கும் அந்த அத்தைக்கும் உறவு வளர்ந்து நிலைபெற்றது. எந்த அளவிற்கு உறவு வளர்ந்தது என்றால், சந்திரனுடைய அத்தையை என் தாய் முதலில் அம்மா என்று பொதுவாக அழைத்தாலும், போகப்போகத் தன் தாயை அழைப்பது போலவே அன்புடன் அழைத்துப் பழகிவிட்டார். சந்திரனைப் பார்த்து நானும் அத்தை அத்தை என்றே அழைக்கப் பழகிவிட்டேன். என் சொந்த அத்தை வீட்டுக்கு வந்தபோது மட்டும் வேறுபாடு தெரிவதற்காக நம் அத்தை என்றும் சந்திரன் அத்தை என்றும் வேறுபடுத்திப் பேசுவேன். சொந்த அத்தை வந்து போய்விட்டபிறகு அத்தை என்று என் வாய் சொன்னால், அது சந்திரனுடைய அத்தையையே குறித்தது. அந்த அளவிற்கு எங்கள் பழக்கம் குடும்ப உறவாக வளர்ந்து விட்டது.
இப்படி அத்தை எங்கள் வீட்டுக்கு வந்து பழகிக்கொண்டிருந்தபோது ஒரு நாள் பாக்கிய அம்மையாரின் பழக்கமும் ஏற்பட்டது. பாக்கிய அம்மையாரின் வீடு 18ஆம் எண் உடையது. எங்கள் வீட்டுக்கு தெற்கே மூன்றாம் வீடு. ஆகவே நானும் சந்திரனும் அந்த வழியாகவே பள்ளிக்குப் போய் வரவேண்டும். இரண்டாம் நாளே என்னைப் பார்த்து, “அது யார் வேலு!” என்று கேட்டுத் தெரிந்து கொண்டார். அடுத்த வாரத்தில் ஒரு நாள் மாலையில் அத்தை எங்கள் வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது பாக்கியமும் வந்தார். அப்போது அம்மா, அத்தை, பாக்கியம் மூன்று பேரும் உட்கார்ந்து கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். வரவர பாக்கியம் அத்தை, வீட்டுக்கே நேராகப் போகவும் அத்தை நேராகப் பாக்கியத்தின் வீட்டுக்கே போகவும் பழக்கம் முதிர்ந்தது. இரண்டு நாள் பாக்கியத்திற்கு உடம்பு நலிவாக இருந்தபோது, அத்தையே அங்கே போய்ச் சமையலும் செய்து உதவினார். தம்முடைய ஊரிலும் இப்படிப் பல குடும்பங்களின் பெண்களுக்குத் தாய்போல் இருந்து உதவி செய்து அத்தை பெயர் பெற்றிருப்பதாகச் சந்திரன் சொன்னான். சந்திரனோடு அத்தை நகரத்துக்கு வந்ததனால், பெருங்காஞ்சியில் பல பெண்களுக்குக் கையொடிந்தது போல் இருக்கும் என்றும் சொன்னான்.
(தொடரும்)
முனைவர் மு.வரதராசனார்
அகல்விளக்கு
Leave a Reply