விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(விருதாளர் திரைக்கதை எழுதுகிறார் 1 இன் தொடர்ச்சி)
விருதாளர் திரைக்கதை எழுதுகிறார்
2
அடுத்த வாரமே குமணன் நட்சத்திர விடுதியில் விருதாளருக்கு என ஒரு சிறப்பு அறையை ஒதுக்கி வைத்து விட்டனர். அவர் எப்பொழுது வேண்டுமானாலும் இங்கே வரலாம். எவ்வளவு நாட்களும் தங்கியிருக்கலாம் என்றனர். உணவு முதலிய எதற்கும் அவர் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை என்றனர்.
ஐயா, நீங்கள் திரைக்கதை உரையாடலை எழுதியும் தரலாம். உங்களுக்கு ஓர் உதவியாளரை அமர்த்தியுள்ளோம். அவர் கணிணியில் தட்டச்சு செய்து தருவார் என்று ‘வி’ கதைக்குழுத் தலைவர் கூறினார்.
அப்படியா மகிழ்ச்சி. நான் எப்படி எழுத வேண்டும் என விரும்புகிறீர்கள்?
உங்கள் புதினமே திரைக்கதைபோல்தான் உள்ளது. ஆகவே, உங்கள் கதையை நீங்கள் உரையாடலாக மாற்றி எழுதுங்கள் போதும். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
அப்படியா? நீங்கள் வேறு எதிலும் குறுக்கிட மாட்டீர்கள் அல்லவா?
ஆமாம் ஆமாம். ஆனால், தொலைக்காட்சித் தொடரின் விறுவிறுப்பிற்காகச் சில உரையாடல்களையும் உங்கள் கதைப் போக்கிற்கேற்ற காட்சிகளையும் சேர்க்கவேண்டும். அவ்வளவுதான்.
என் கதை இப்படித் தொடங்கியிருக்கும்.
ஒரு சிற்றூர். தென்னந்தோப்பும் வயல்வெளிகளும் நிறைந்த ஊர். பசுமையான வயல்களின் ஊடே நாயகி வந்து கொண்டுள்ளாள். அருகே தெளிந்த நீரோடை. சலசலத்து நீர் சென்று கொண்டுள்ளது. சல சல என்று ஒலித்துச் செல்வதால் நீருக்குச் சலம் என்ற பெயர் வந்ததை நினைத்துக் கொண்டே நாயகி நீரோடை அருகே வருகிறாள். ‘சலம்’, ‘ஜலம்’ ஆனது போல் ஊரில் சில மாற்றங்கள் நிகழ்வது குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். அருகே உள்ள கோயிலில் இருந்து நாட்டுப்புறப்பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. அதே நேரம் ஒரு பகுதியில் இருந்து “வாடா தம்பி. பள்ளி செல்லடா. தங்கையையும் அழைத்துச் செல்லடா” என்பது போன்ற நல்லறிவு புகட்டும் பாடல்களும ஒலித்துக் கொண்டிருந்தன. ஒரு புறம் “சின்னப் பயலே சின்னப்பயலே சேதி கேளடா” என்று பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் அறிவுரை டி.எம்.செளந்தரராசன் குரலில் கேட்டுக்கொண்டிருந்தது. தொலைவில் மெல்லிய ஓசையில் திரைப்படக் காதல் பாடல்களும் ஒலித்துக் கொண்டிருந்தன. முன்பெல்லாம் கோயில் திருவிழா என்றால் காதல் பாடல்களை ஒலி பரப்ப மாட்டார்கள். காதலுக்கு எதிரி என்று இல்லை. கோயில் திருவிழாவில் இதெல்லாம் தேவையில்லை என்ற மூத்தோர் நம்பிக்கை. இளந்தாரிகள் செல்வாக்கு வரத் தொடங்கியதும் இதில் எல்லாம் மாற்றம் வரத் தொடங்கியது. அப்பொழுது இளந்தென்றல் தன் மீது மோதியதை உணர்ந்தாள். உடன் நறுமணம் பரவியது. சாலையைப் பார்த்தாள். அங்கே நாயகன் வந்தான். “என்னம்மா? வலுத்த சிந்தனை. எதைப்பற்றி? அல்லது எந்தக் கோட்டையைப்பிடிப்பது பற்றி?” என்றான். “நீதான் சொல்லேன் பார்ப்போம்” என்றாள் அவள். “கண்டிப்பாக என்னைப் பற்றி இல்லை என்று தெரியும் எனக்கு. தமிழைப்பற்றித்தானே சிந்தித்துக் கொண்டிருந்தாய்.” “ஆமாம். அந்த அளவு என்னைப் புரிந்து கொண்டுள்ளாயே. மகிழ்ச்சி” என்றாள்.
ஆமாம். நல்ல தொடக்கம். இதே போன்றே புதினத்தை முடித்திருந்தீர்கள்.
ஆமாம். பின்வருமாறு முடித்திருந்தேன்.
நீரோடை அருகே நாயகனும் நாயகியும் அமர்ந்திருந்தனர். ஆனால் நீரோடையில் நீரைக் காணவில்லை. தென்னந்தோப்பும் வயலும் இருந்த பகுதியில் ஒரு பகுதி கட்டடங்களாகக் காட்சியளித்தன. அருகே உள்ள கோயில்களில் இருந்து நாட்டுப்புறப் பாடல்களும் ஒலிக்கத்தான் செய்தன. ஆனால் அவற்றையும் மீறி அதிரடி இசை கொண்ட திரைப்பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. “வாடா வாடா. கட்டிப்பிடிடா” போன்ற பாடல்கள் முழங்கிக் கொண்டிருந்தன. குடும்ப மரபின் வேர்களை நாம் போற்றி வருகிறோம். தலைமுறை இடைவெளி இல்லா வண்ணம் மூத்தோர் எண்ணத்தைச் செயற்படுத்தி வருகிறோம். ஆனால் ஊரின் மரபு வேர்களில் வெந்நீர் ஊற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. வேளாண்மை மறைந்து கொண்டே உள்ளது. ஊர் முன்னேறுவது மகிழ்ச்சிதான். ஆனால், பழமையை அழிக்கும் புதுமையாய் அல்லவா உள்ளது. இதிலிருந்து ஊரை மீட்கப்போவது யார்? ஏன், நாம் முன்னின்று இதில் ஈடுபடக்கூடாது என்று நாயகனும் நாயகியும் பேசிக் கொண்டனர்.
தொடக்கத்தில் பெயர் அறிமுகம் இல்லாததால் நாயகன், நாயகி என்று குறிப்பிட்டீர்கள். சரிதான். ஆனால், இறுதியிலும் அவ்வாறே குறிப்பிட்டது ஏனையா?
ஒரு குறியீடாக இருக்கட்டும் என்றுதான் முடிவிலும் பெயர்களைக் குறிப்பிடவில்லை.
ஆமாம். பல கதைப் பாத்திரங்களுக்கு நீங்கள் குறியீடாகத்தான், நல்லன், வஞ்சன், பொல்லன், பண்பன் என்பனபோல் பெயர்கள் சூட்டியிருப்பீர்கள். காதல் காட்சிகளைக்கூட மென்மையாகத்தான் உணர்த்தியிருந்தீர்கள்.
ஆமாம். மாறனும் மல்லிகையும் காதல் உணர்வு மேம்பட்டதும் அவர்கள் சந்திப்பைப் பின்வரும் வகையில் குறிப்பிட்டிருப்பேன்.
மாறனும் மல்லிகையும் அருகருகே அமர்ந்திருந்தனர். ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால் மனத்தால் கட்டுண்டிருந்தனர். பார்வைப் பரிமாற்றத்தில் காதல் தெரிந்தது. மாறன் மல்லிகையின் கையைப் பிடிக்கலாமா என எண்ணிக் கொண்டிருந்தான். மல்லிகையும் மாறன் தன் கையைப் பிடித்தால் நன்றாக இருக்குமே என எண்ணினாள். ஆனால் அவ்வாறு எதுவும் நிகழவில்லை. அருகருகே அமர்ந்திருந்தாலும் விலகியே இருந்தனர். “மலரினும் மெல்லிது காமம்” என்று திருவள்ளுவர் சொன்னதை உணர்ந்தவர்கள் போல் இருந்தனர். நாம் வாழ்க்கையில் இணைவோமா என்று கேட்க எண்ணினர். அதேபோல் இருவரும் ஒரே நேரம் “நாம் இணைந்து வாழ்வோமா” எனக் கேட்டனர்.
சினத்தில் சீறி எழுந்தபோது கூட வீட்டுப் பணியாளைக் குடும்ப உறுப்பினராகக் கருதும் பாசத்தைத்தான் காட்டியிருக்கிறீர்கள்.
நீங்கள் சுவைத்துப் படித்திருக்கிறீர்கள். நீங்கள் சொன்னது உண்மைதான். பெரியவர், “என் பையன் மீது கைவைக்க யாரடா நீ. அவனுக்காகக் கேட்பதற்கு யாருமில்லை என எண்ணினாயா? அவனிடம் மன்னிப்பைக் கேள்.” என்று சீறி எழுந்ததாகக் குறிப்பி்டிருப்பேன்.
வெறுப்புக் காட்சியில் கூட மென்மை கலந்த அழகு இருந்தது.
ஆமாம். குறுக்கு வழியில் வஞ்சன் செய்த செயல்கள் மீது சினத்தை விட வெறுப்பே மிகுதியாக இருக்கும். அப்போது அவனிடம், “நீ செய்தது குறித்து உன் குடும்பத்தினராவது உன்னை மதிப்பார்களா? நல்ல பாதை இருக்கும்போது பொல்லாப்பாதையில் செல்கிறாயே” என்று சொல்லி, வேறு ஒன்றும் சொல்லாமல் “சீ, போடா” என்ற சொல்லி விட்டு நகர்ந்து விடுவார். அவர் ஏதும் திட்டியிருந்தால்கூட இவனும் திட்டித் தீர்த்திருப்பான். ஆனால், ஒன்றும் சொல்லாமல் பார்வையில் வெறுப்பை உமிழ்ந்ததைப் பார்த்த இவன் மனம் கலங்கியது. அவரிடம் ஓடிச்சென்று “ஐயா, என்னைமன்னித்து விடுங்கள். இனி இவ்வாறு செய்ய மாட்டேன்” என்றான்.பெரியவரும் மன்னித்ததன் அடையாளமாக அவனை மகிழ்ச்சியுடன் தழுவிக் கொண்டார்.
மொழிக்கலப்பிற்கு எதிரான உங்களின் அறச்சீற்றத்தைக் கூட நன்கு எழுப்பியிருப்பீர்கள்.
“பாலில் தண்ணீரைக் கலந்து விடடான் என்று சண்டை போடுகிறீர்கள். மிளகாய்த் தூளில் செங்கற் பொடியைக் கலந்து விட்டான் என்று சண்டை யிடுகிறீர்கள். காப்பித் தூளில் புளியங்கொட்டைத் தூளைக் கலக்கும் பொழுது சினம் வருகிறது. பாலில் சுண்ணாம்புத் தூளையும் சோப்புத் தூளையும் கலக்கும் பொழுது பொங்கி எழுகிறீர்கள். பழங்களைச் செயற்கை முறையில் பழுக்க வைத்ததை அறிந்தால் வாங்க மறுக்கிறீர்கள். ஆனால், மொழியில் கலப்படம் செய்யும் பொழுது அமைதி காக்கிறீர்களே! நம் முன்னோர்கள் இப்படித் தமிழில் பிற மொழிச் சொற்களைக் கலந்ததால்தான் இன்றைய இந்திய நிலப்பரப்பு முழுவதும் இருக்க வேண்டிய தமிழ் தன் பரப்பளவில் குறைந்து உள்ளது. நீங்கள் பேச்சிலும் எழுத்திலும் பிற மொழிக் கலப்பிற்கு இடம் தந்து தமிழை அழித்துக் கொண்டு வருகிறீர்களே நாம் வைக்கும் பெயர்களில் தமிழைத் தொலைத்து விட்டோமே! தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் தமிழைச் சிதைத்துக் கொண்டு வருகிறோமே மொழிக் கலப்பினால் இலங்கை முழுவதும் இருக்க வேண்டிய தமிழ், பெரும் பகுதியைச் சிங்களமாக்கி விட்டுவிட்டது. அதுவே இன அழிப்பிற்கும் காரணமாகி விட்டது. “மொழியை இழந்தால் இனத்தை இழப்போம்” எனத் தமிழ்ப்போராளி இலக்குவனார் உணர்த்தினார். இதை உணராமல் தமிழில் மொழிக்கலப்பிற்கு இடம் தந்து மேலும் அதை அழிக்கலாமா” என நன்கு கேட்டிருப்பீர்கள்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
நன்றாக இருக்கிறது ஐயா! கதையினூடே உங்கள் குமுகாய நிலைப்பாடுகளையும் பதிவு செய்திருக்கிறீர்கள். நன்றி!
மகிழ்ச்சி.