(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 22 தொடர்ச்சி)



குறிஞ்சி மலர்
அத்தியாயம் 9 தொடர்ச்சி

 

ஒவ்வொரு நாளும் அவள் மங்கையர் கழகத்து வகுப்புகளுக்காக மாலையில் மதுரைக்குப் புறப்படும்போது தம்பிகள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருக்க மாட்டார்கள். அதனால் குழந்தையையும் வீட்டுச் சாவியையும் ஓதுவார் வீட்டிலோ பக்கத்தில் கமலாவின் தாயாரிடமோ ஒப்படைத்துவிட்டுப் போவாள். தம்பிகள் வந்தவுடன் சாவியை வாங்கிக் கொண்டு குழந்தையையும் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் விடுவார்கள். இரவு ஒன்பதரை மணி சுமாருக்கு பூரணி நகரத்திலிருந்து வீடு திரும்புவாள். சில நாட்களில் தம்பிகளும் தங்கையும் அவள் வருமுன்பு தாங்களாகவே எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிட்டு விடுவார்கள். சில நாட்கள் அவளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்கள்.

அன்று அவள் இரவில் வீடு திரும்பிய போது தம்பிகள் இரண்டு பேரும் சாப்பிட்டு முடித்திருந்தார்கள். வழக்கமாக அவள் வருகிற நேரத்துக்குத் தூங்கிப் போயிருக்க வேண்டிய குழந்தை மங்கையர்க்கரசி தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தாள். குழந்தையின் முகம் நெடுநேரம் அழுதாற்போல் வீங்கியிருந்தது. கண்கள் சிவந்து கன்னம் நனைந்து ஈரக்கறை தெரிந்தது. பசிச்சோர்வு முகத்தில் தெரிந்தது. பூரணி எங்கேயாவது போய் விட்டு வீடு திரும்பினால், “அக்கா வந்தாச்சு” என்று வீடெல்லாம் அதிரும்படி உற்சாக மழலைக் குரல் எழுப்பியவாறே துள்ளிக் குதித்தோடி வந்து அவல் கால்களைக் கட்டிக் கொள்ளும்.

அந்தக் குழந்தை அன்று அவளைக் கண்டவுடன் உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவே இல்லை. பூரணி இந்தப் புதுமையின் காரணம் புரியாமல் தம்பி திருநாவுக்கரசின் முகத்தைப் பார்த்தாள்.

“இவளுக்கு ஏதோ கோபமாம். சாப்பிடமாட்டேன்கிறா. முரண்டு பிடிக்கிறா” என்றான் திருநாவுக்கரசு. பூரணிக்கு அந்தக் குழந்தையின் கோபம் வேடிக்கையாகவும் வியப்பாகவும் இருந்தது. சமாதானப்படுத்திச் சாப்பிட வைப்பதற்காக அருகில் சென்றாள் பூரணி. குழந்தை வெறுப்பைக் காட்டுகிறார்போல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். சிரித்துக் கொண்டே மங்கையர்க்கரசியின் மோவாயைத் தொட்டு முகத்தைத் திருப்பிக் கேட்டாள் பூரணி.

“உனக்கு என்னடி கோபம்?”

“நீயொன்றும் எங்கூடப் பேசவேண்டாம் போ…” பூரணியைப் பிடித்துத் தள்ளுவது போல் இரண்டு பிஞ்சுக் கைகளையும் ஆட்டினாள் குழந்தை. ஒரு கேவல், அடுத்தடுத்து விசும்பல்கள். அழுகைப் பொங்கி வெடித்துக் கொண்டு வந்துவிடும் போலிருந்தது குழந்தைக்கு.

“யார் மேலே எதற்காகக் கோபம் உனக்கு?”

“எல்லாம் உம் மேலதான்.”

“எதுக்காக? நான் உனக்கு என்ன செய்தேன்?” பதில் இல்லை. குழந்தை பொருமியழுதாள். சொற்கள் அழுகையில் உடைந்து நைந்து கரைந்து போய்விட்டன. பூரணியால் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. குழந்தையைத் தழுவினாற் போல் அணைத்து எடுத்துக் கொண்டு சமையலறைக்குப் போனாள் அவள். கை, கால்களை உதைத்துக் கொண்டு அவள் அணைப்பிலிருந்து திமிர முயன்றாள் குழந்தை. இதமாகச் சொல்லி அழுகையை நிறுத்திச் சாப்பிடுவதற்குத் தட்டைப் போட்டு உட்கார்த்தினாள்.

“அண்ணன் அடித்தானா உன்னை?”

“இல்லை. . .”

“விளையாடறபோது தெருவிலே கிழே விழுந்தியா?”

“இல்லை. . .”

“பின்னே எதற்காக இப்படி அழவேண்டும் நீ?”


“ஓதுவார் வீட்டிலே அந்தப் பாட்டிக் கிட்டப் பேசிக்கிட்டிருந்தேன். ‘ஏம் பாட்டி, உங்க காமுவைச் சிவப்பா கழுத்திலே தங்கச் செயின், உருத்திராட்சம் எல்லாம் போட்டுக்கிட்டிருந்தாரே ஒருத்தர், அவரோட இரயில்லே ஏத்தி ஊருக்கு அனுப்பிவிட்டீங்களே. இனிமே அவ இங்கே வரமாட்டாளா?’ அப்படின்னு கேட்டேன்.”

“நீ அந்தப் பாட்டியைக் கேட்டியா?”


“ஆமாம்!”

“ம்…ம்… அப்புறம்?”


“அதுக்கு அந்தப் பாட்டி சிரிச்சுக்கிட்டே வந்து வந்து. . .” இதைச் சொல்லும் போது குழந்தை மறுபடியும் விசும்பத் தொடங்கிவிட்டாள்.

“அழாமல் முழுவதும் சொல்லு கண்ணு! நீ சமர்த்து குழந்தையில்லையா?”

“உங்க பூரணியக்காவும் ஒருநாள் அப்படித்தான் போவாங்க. பொண்ணுன்னு பொறந்தா என்னிக்காவது ஒருநாள் இப்படி ஒருத்தரோடு போய்த்தான் ஆவணும். நீ கூட வளர்ந்து பெரிசானா அப்படித்தான்னு அந்தப் பாட்டி சொன்னாங்க. . .”

பூரணிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. சிரித்துவிட்டால் தான் சொல்லிக் கொண்டு வருகிற விசயத்தில் குழந்தைக்கு நம்பிக்கை குறைந்து, சொல்வதை நிறுத்திவிடுவாளோ? என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டாள்.

“அந்தப் பாட்டிக்கு நீ என்ன பதில் சொன்னே?”


“எனக்கு இதைக் கேட்டதும் அந்தப் பாட்டி மேலே ஒரே கோவமாயிரிச்சி. ‘எங்க பூரணியக்கா ஒண்ணும் அப்படியில்லே என்னிக்கும் எங்களோடதான் இருப்பாங்க. உங்க காமுவுக்குத் தலைமயிர் கொஞ்சம், தெத்திப்பல்லு, குண்டு மூஞ்சி அதனாலே தான் அவள் இரயிலேறிப் போயிட்டா. எங்க அக்கா ரொம்ப அழகு. போகமாட்டாங்க. நீங்க பொய் சொல்றீங்க’ன்னேன். அதுக்கு அந்தப் பாட்டி அடி அசடே! அழகுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டாங்க.”

“அப்புறம்?”

“அப்புறம் ஒண்ணுமில்லே. . . எனக்கு அழுகை அழுகையாய் வந்திடுச்சி. அண்ணன் பள்ளிக்கூடத்திலிருந்து சாவி வாங்க வந்ததும் நான் அண்ணனோட வந்திட்டேன்.”

“ஏங்க்கா. . . ஓதுவார்ப் பாட்டி சொன்னாப்போலே நீ செய்வியா? எங்களையெல்லாம் விட்டுவிட்டுப் போயிடுவியா?”


பூரணி கலகலவென்று நகைத்தாள். குழந்தையை வாரி அணைத்துக் கொண்டு உச்சிமோந்தாள். “அசடே! விளையாட்டுக்குச் சொன்னதையெல்லாம் கேட்டு அழுதுகொண்டு வரலாமா? நான் உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டேன் மங்கை. நீ சாப்பிடு!” என்று குழந்தைக்கு உணவூட்டினாள் பூரணி. பூக்கண்களும் பூஞ்சிரிப்பும், பூங்கரங்களுமாக அந்தக் குழந்தைக் கோலத்தில் தெய்வமே தெரிகிறாற்போல் அப்போது பூரணி உணர்ந்தாள். சிறிய விசயத்துக்குக் கூட பெரிய துக்க உணர்வைச் செலவழித்து அந்த உணர்ச்சிக்கு மனப்பரப்பெல்லாம் இதமளிக்கும் குழந்தையின் பேதமை அவளைக் கவர்ந்தது. தூசியும் அழுக்கும்பட்டு வாடமுடியாத கற்பகப்பூவா குழந்தையின் மனம்! உணர்ச்சி நிழல்களின் பொய்ச் சாயல்கள் படியாத புனிதக் கண்ணாடியா அந்த உள்ளம்!

பூரணி அன்றிரவு தன் அருகிலேயே குழந்தை மங்கையர்க்கரசியைப் படுக்க வைத்துக் கொண்டு கதையெல்லாம் சொன்னாள்.


“ஏங்க்கா, காமுதான் ரயிலேறி ஊருக்குப் போனா. கமலா எதுக்காகப் போகணும்? அவளும் ஊருக்குப் போயிட்டாளே” என்று திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டு கேட்பவள் போல கேட்டாள் குழந்தை.

‘ஏ அறியாக் குழந்தையே! பெண்கள் தாய், தந்தையிடமிருந்து பிரிந்து போய்த் தாய் – தந்தையராகித் தாய் – தந்தைகளை உண்டாக்க வேண்டியவர்கள். அவர்கள் பிறக்குமிடத்தில் தங்கினால் உலகத்தின் உயிர் மரபு அற்றுப் போகும்’ என்று தத்துவம் சொல்லியா விளக்க முடியும்?


“பேசாமல் தூங்கு மங்கை. நேரமாகிவிட்டது. எல்லாம் காலையில் கேள். சொல்கிறேன்” என்று மழுப்பிவிட்டுக் குழந்தையைத் தூங்கச் செய்தாள் பூரணி. மறக்கவே முடியாத விதத்தில் இந்தக் குழந்தைத்தனமான நிகழ்ச்சி அவள் மனத்தில் பதிந்து கொண்டது.


ஒரு வாரத்துக்குப் பின் ஒருநாள் பகல் அவள் மனம் வருந்தத்தக்க துயர நிகழ்ச்சியொன்று அவளது வீட்டைத் தேடிக் கொண்டு வந்து சேர்ந்தது.

நண்பகல் பதினொரு மணி இருக்கலாம். தம்பிகள் சாப்பிட்டு விட்டுப் பகல் சாப்பாடும் எடுத்துக் கொண்டு பள்ளிக்கூடம் போயிருந்தார்கள். குழந்தை மங்கை நாலைந்து வீடுகள் தள்ளி ஒரு மர நிழலில் மற்ற குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்தாள். பூரணி அப்போதுதான் தன் கை வேலைகளையும் உணவையும் முடித்துக் கொண்டு படிப்பறைக்குள் நுழைந்திருந்தாள். குழந்தை எந்த நேரத்தில் திரும்பி வருவாளோ? எழுந்திருந்து போய்க் கதவைத் திறந்தால் படிப்புத் தடைப்படும் என்று எண்ணி வாயிற் கதவைத் தாழிடாது சாத்தியிருந்தாள் பூரணி.


மங்கையர் கழகத்துப் பெண்களுக்கு அன்று திருக்குறள் சொல்லிக்கொடுக்க வேண்டும். சொல்லிக் கொடுப்பதென்றால் கரும்பலகையில் பதவுரை, பொழிப்புரை எழுதிப் போட்டுச் சொல்லித் தருகிற படிப்பை அவள் சொல்லித் தருவதில்லை. அப்படிச் சொல்லித் தருவதற்கு அது பள்ளிக்கூடமும் அன்று. அங்கே பன்னிரண்டு வயது முதல் முப்பது வயது வரையுள்ள சிறிய பெண்கள் பலரும் வகுப்புகளுக்கு வருகிறார்கள். மணமாகித் தாயானவர்களும் அதில் இருக்கின்றனர். எனவே மனத்தை மலர்விக்கும் சொற்பொழிவுகளாகச் செய்து தன் வகுப்புகளைச் சிறப்புற நடத்தினாள் பூரணி. வகுப்புகள் தொடங்கப் பெற்ற மூன்று நாட்களிலேயே அவளுடைய சொற்பொழிவுகளுக்குப் பெருமதிப்பு ஏற்பட்டது. நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாயிற்று. கேரம் விளையாடுவதும் வம்பளப்புமாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த மங்கையர் கழகத்துப் பெண்களுக்கு அவள் ஒரு புதிய உலகினைக் காட்டினாள்! ஒரு புதிய அறிவுச் சுமையை ஊட்டினாள். அவள் காட்டியது அறிவுலகம். அவள் ஊட்டியது தமிழ்ச்சுவை! மங்கையர் கழகத்தின் உறுப்பினர்கள் உள்ளங்களில் அவள் ஒவ்வொரு நாளும் மிக உயர்ந்த இடத்தை அடைந்து கொண்டிருந்தாள். முதலில் சாதாரணமாக எண்ணியவர்களும் பின்பு அவளுடைய நாவன்மையைக் கண்டு வியந்தனர்.

இந்தப் பெருமித நினைவுகளுடன் திருக்குறள் புத்தகத்தை விரித்துச் சொற்பொழிவுகளுக்குக் குறிப்பு எடுக்கலானாள் பூரணி.

சாத்தியிருந்த வாயில் கதவைத் திறந்து கொண்டு யாரோ நடந்து வருகிற ஒலி கேட்டது. வேறு யார் இந்த நேரத்தில் இங்கே வரப்போகிறார்கள்? குழந்தைதான் வருவாள் என்று நிமிர்ந்து பாராமல் எழுதிக் கொண்டிருந்த பூரணி அந்த நாகரிகமற்ற முரட்டுக் குரலைக் கேட்டுத் துணுக்குற்று நிமிர்ந்தாள். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கப் புதுமண்டபத்துப் புத்தகக் கடைக்காரர் சினத்தோடு நின்று கொண்டிருந்தார். பூரணி வரவேற்றாள். “வாருங்கள். . . அப்படி அந்த நாற்காலியில் உட்காரலாமே?”


“உட்காருவதற்காக இங்கே நான் வரவில்லை. என் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்துக் கொண்டு போகத்தான் வந்திருக்கிறேன்.”

“யார் மேல் ஆத்திரம்?”

“ஒன்றும் தெரியாதது போல் பேசவேண்டா. நான் ஒருவன் புத்தகங்களை வெளியிட்டு விற்றவை பாதியும், விற்காதவை பாதியுமாகத் திணறிக் கொண்டிருக்கும் போது நீ என்னை ஒரு வார்த்தை கூடக் கேளாமல் எவனோ ஒரு மீனாட்சி அச்சகமோ, காமாட்சி அச்சகமோ வைத்திருப்பவனுக்கு வெளியிடுகிற உரிமையைத் தரலாமா?”

நாற்பது வயதுக்கும் அதிகமாகத் தோன்றிய அவருக்குப் பேசும் போது மீசை துடித்தது. பூரணி அடக்கமாக அவருக்குப் பதில் சொன்னாள்.

“மன்னிக்க வேண்டும் ஐயா! நான் இன்னும் பச்சைக் குழந்தை இல்லை. நீங்கள் உண்மைகளை மட்டும் என்னிடம் பேசுங்கள். பொய்களை நான் கேட்கத் தயாராயில்லை.”

“எது பொய்?”

“அப்பாவின் புத்தகங்களை விற்றது பாதியும் விற்காதது பாதியுமாக வைத்துக் கொண்டு நீங்கள் திணறுவதாகச் சொல்கிறீர்களே, அது முழுப்பொய்; பல பதிப்புகள் விற்றவற்றை மறைக்கிறீர்கள். உங்கள் கணக்கும் உங்கள் பேச்சும் ஊழல். அப்பா உங்களை மன்னித்தார். நான் மன்னிக்க விரும்பவில்லை. எனக்கு வயிறு இருக்கிறது. நான் வாழ வேண்டியிருக்கிறது.”

“என்னைப் பகைத்துக் கொண்டு நீ வாழ முடியாது. நான் பொல்லாதவன். போக்கிரி! கேள்விப்பட்டிருப்பாய். இல்லாவிட்டால் இப்போது சொல்வதிலிருந்து தெரிந்து கொள். மீனாட்சி அச்சகத்துக்காரன் புத்தகம் போட்டு விற்பதையும் நான் பார்த்துக் கொள்கிறேன்.”


“அதில் சந்தேகமென்ன? நிச்சயம் பார்க்கத்தான் போகிறீர்கள்?” இந்தக் கணீரென்ற புதுக்குரல் யாருடையது என்று திரும்பினார் அவர்.

பூரணியும் வியப்பு மலர தலை நிமிர்ந்து பார்த்தாள். ஓசைப்படாமல் வந்து கதவோரமாக நின்று கேட்டுக் கொண்டிருந்த அரவிந்தன் தான் அவருக்கு இந்த அறைகூவலை விடுத்தான். எரித்துவிடுவது போல் சினத்தோடு அவனை முறைத்துப் பார்த்தார் அவர். திருத்திச் சரிபார்த்த அச்சுப் படிகளைப் (புரூஃப்கள்) பூரணியிடம் காண்பிப்பதற்காக கொண்டு வந்திருந்தான் அவன்.

“ஓகோ நீயா. . .?” அவர் உறுமினார். அவனைத் தெரியும் அந்த மனிதருக்கு.

“வாழ்வில் அறம் வேண்டும், ஒழுக்கம் வேண்டும், பண்பும் நியாயமும் வேண்டுமென்று பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் தம் புத்தகங்களில் வரிக்குவரி எழுதியிருக்கிறார். நீங்கள் அந்தப் புத்தகங்களைக் கொண்டே அவரை அறமின்றி, ஒழுங்கின்றி, நியாயமின்றி ஏமாற்றினீர்களே! இவ்வளவு காலம் ஏமாற்றினது போதாதா?” என்று அரவிந்தன் கூறிக்கொண்டே வந்த போது அவன் முகத்தில் ஒரு பேயறை விழுந்தது. அவனுக்குச் சில்லு மூக்கு உடைந்து இரத்தம் வழிந்தது. அவனுடைய இளமைத் துடிப்பு மிக்க உரமான கைகள் அந்தக் கொடியவனை கீழே தள்ளிப் பந்தாடியிருக்கும். ஆனால் அப்படிச் செய்யவிடாமல் தடுக்கப் பூரணி ஓடிவந்து அவன் கைகளைப் பற்றிக் கொண்டு விட்டாள்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி