(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  40 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர் 15 தொடர்ச்சி

மலையின் தென்புறத்துச் சரிவில் வேப்பமரங்களில் பசுமைக்குள் அழகான தோற்றத்தோடு காட்சியளித்தது பசுமலைப் பள்ளிக்கூடம். மதுரையைச் சூழ்ந்துள்ள பகுதிகளில் தூய்மையான காற்று, அழகான இயற்கை வசதிகள் நிறைந்த இடம் பசுமலை. அங்குள்ள கல்வி நிலையங்களையும் பயிற்சிப் பள்ளிகளையும் கொண்டு அதை மதுரையின் கேம்பிரிட்சு, ஆக்சுபோர்டு என்று சிலர் மிகுதியாகப் புகழ்வார்கள். கிறித்துவர்களுடைய கண்காணிப்பில் உள்ள பள்ளிக்கூடமானதால் ஒழுங்கிலும் கட்டுப்பாட்டிலும் கண்டிப்புக் காட்டி வந்தார்கள்.

அரவிந்தன் திருநாவுக்கரசுடன் பள்ளித் தலைமையாசிரியர் அறைக்குள் சென்று அவரைச் சந்தித்தான். அவர் அவனுக்கு வணக்கம் செலுத்தி வரவேற்று எதிரே இருந்த நாற்காலியில் உட்காரச் சொன்னார். அரவிந்தன் அதில் உட்கார்ந்தான்.

“சார்! இந்தப் பையன் விசயமாக உங்களைப் பார்த்துச் சொல்லிவிட்டுப் போகலாம் என்று வந்தேன். இவனுடைய அக்காவுக்கு உங்களைச் சந்தித்து இவனைப் பற்றிச் சொல்ல நேரம் ஒழியவில்லை. நான் இவர்கள் குடும்பத்திற்கு மிகவும் வேண்டியவன்” என்று அரவிந்தன் பேச ஆரம்பித்ததும் தலைமையாசிரியர் அவநம்பிக்கைத் தோன்ற நகைத்தார். அவருடைய தலைக்கு மேலே சிலுவையில் அறைந்த கோலத்தில் ஏசுநாதரின் அழகுருவம் கண்களில் கருணையும், உடம்பில் இரத்தமும் ஒழுகிடக் காட்சி தந்தது. அரவிந்தனின் பார்வை அந்தப் புண்ணிய மூர்த்தியின் படத்தில் பதிந்தது. தலைமையாசிரியர் அவனுக்கு மறுமொழி கூறலானார்:

“இந்தப் பையனைப் பற்றிச் சொல்வதற்கு இனிமேல் என்ன இருக்கிறது? ஒழுக்கத்தையும் நல்ல நடத்தையையும் உன்னிப்பாக ஒவ்வொரு வினாடியும் கவனிக்கும் இங்கேயே வழிகெட்டுப் போய்விட்ட பையனை இனி என்ன செய்வது? பள்ளி இறுதியாண்டுத் தேர்வு, எசு.எசு.எல்.சி. எழுதும் ஒரு மாணவன் குறைந்தபட்சம் இத்தனை நாட்களாவது பள்ளிக்கூடம் வந்திருக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. அதில் கால்வாசி நாட்கள் கூட இந்தப் பையன் பள்ளிக்கு வரவில்லை. ஆகவே இனிமேல் இவன் பள்ளிக்கூடத்துக்குத் தவறாமல் வந்தாலும் அரசாங்கப் பரீட்சை இந்தத் தடவை எழுத முடியாது. அப்படி முடியாதிருக்கிறபோது வீணுக்குச் சம்பளத்தைக் கொடுத்துக் கொண்டு இங்கு வருவது அநாவசியம். மறுபடியும் புதிதாக அவனை அடுத்த ஆண்டில் இங்கே சேர்த்தாலே போதும்.”

“ஐயா! நீங்கள் அப்படிச் சொல்லிவிடக்கூடாது. இந்தப் பையன் பெரிய தமிழ்க் குடும்பத்துப்பிள்ளை. பழக்கக் கேடுகளால் இப்படி ஆகிவிட்டான். இனி ஒருபோதும் கெட்ட வழியில் போகாமல் கவனித்துக் கொள்கிறோம். எப்படியாவது இந்தத் தடவை. . .” என்று அரவிந்தன் குழைந்து வேண்டிக் கொண்டதை அவர் சிறிதும் பொருட்படுத்தவில்லை.

“மன்னிக்க வேண்டும். உங்களைப் பார்த்தால் இரக்கமாக இருக்கிறது. ஆனால் இது கல்வித்துறையின் சட்டம். இந்தப் பையனுக்காகவோ, உங்களுக்காகவோ நான் இதை மாற்றுவதற்கில்லை” என்று சிரித்தவாறே கூறிவிட்டு மேசை மேலிருந்த காகிதக் கட்டு ஒன்றைப் பிரித்துக் கவனிக்க ஆரம்பித்துவிட்டார் தலைமையாசிரியர். அரவிந்தன் மேலே நிமிர்ந்து பார்த்தான். இயேசுநாதருடைய படத்தில் நிமிடத்துக்கு நிமிடம் கண்களில் கருணையும் மார்பின் குருதியும் அதிகமாகி வளர்ந்துகொண்டு வருவதுபோல் தோன்றியதோ என்னவோ!

“வருகிறோம்” என்றான் அரவிந்தன்.

“செய்யுங்கள்” என்று குனிந்த தலை நிமிராமல் மறுமொழி கூறினார் அவர். திருநாவுக்கரசுடன் வெளியேறினான் அரவிந்தன். “தம்பி பார்த்தாயா? முட்டாள்தனமாகப் பள்ளிக்கூடத்துப் படிப்பை அது முடிகிற தறுவாயில் பாழாக்கிக் கொண்டு விட்டாயே? இன்னும் ஓராண்டு காலம் காத்திருந்து உன்னை மறுபடியும் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்க உன் அக்காவால் முடியுமா?” என்று பள்ளிக்கூடத்துப் படிகளிலிருந்து கீழிறங்கிய போது அரவிந்தன் ஏக்கத்தோடு கூறிய சொற்கள் பையனின் செவிகளில் விழுந்தும் அவன் ஒன்றும் சொல்லாமல் கல்லடிமங்கன் போல் தலைகுனிந்து நடந்துகொண்டிருந்தான்.

‘எப்படியும் இந்தப் பையனைத் திருத்தி நல்ல வழியில் கொண்டு வந்து விடவேண்டும். சிறிது காலத்துக்கு அச்சகத்திலேயே நம்மோடு பக்கத்தில் வைத்துக் கொண்டு நம் கவனத்திலேயே ஆளை உருவாக்கிவிடலாம்’ என்று அரவிந்தன் மனத்தில் அப்போது ஒரு தீர்மானம் உண்டாகியிருந்தது.

திரும்பியதும் முதல் வேலையாகத் திருநாவுக்கரசை உள்ளே அழைத்துப் போய் ‘பைண்டிங்’ பகுதியில் உட்கார்த்தி அச்சடித்த பாரங்களை மடித்து அடுக்கச் சொன்னான். ‘பையனைக் கொஞ்சம் கவனித்துக் கொள்’ என்று அச்சகத்து போர்மேன் இடத்திலும் கூறிவிட்டு வந்தான்.

“தம்பி! எனக்குத் தெரியாமல், என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் நீ எங்கும் வெளியேறிச் செல்லக்கூடாது. வேலையைக் கவனமாகப் பார்” என்று பையனிடமும் எச்சரித்தான். சிறிது நேரம் கழித்து அச்சகத்தில் உட்புறம் சுற்றிப் பார்த்துவிட்டு முன்புறத்து அறைக்கு வந்த மீனாட்சிசுந்தரம் அரவிந்தனைக் கேட்டார்.

“என்னப்பா இது? பேராசிரியர் அழகிய சிற்றம்பலத்தின் பையன் இங்கே உட்கார்ந்து தாள் மடித்து அடுக்கிக் கொண்டிருக்கிறான். அவன் பள்ளிக்கூடத்தில் படிக்கிறானா இல்லையா? போர்மேனிடம் கேட்டால் நீ கொண்டு வந்து உட்கார்த்தி வைத்துவிட்டுப் போனதாகச் சொல்கிறான்!” என்றார் அச்சக அதிபர் மீனாட்சிசுந்தரம்.

அரவிந்தன் அவருக்கு எல்லா விவரங்களும் சொன்னான். “அடப்பாவமே? அவருக்கு இப்படிப் பிள்ளையா வாய்த்தது?” என்று அதைக் கேட்டு அவரும் அலுத்துக் கொண்டார். அவன் தனது ஏற்பாட்டை அவரிடம் கூறி இணங்க வைத்தான்.

நடுப்பகல் பன்னிரண்டேகால் மணி சுமாருக்கு வேர்க்க விறுவிறுக்க அலைந்த கோலத்தோடு முருகானந்தம் வந்து சேர்ந்தான். அரவிந்தன் அவனைக் கேட்கும் முன் அவனே கூறலானான். “நான் நினைத்தபடி நடந்திருக்கிறது அரவிந்தன்! அந்தப் பெண் வசந்தாவை ஏமாற்றி அழைத்துப்போன ஆள் திருச்சி காத்திருப்பு அறையில் அவளை இருக்கச் சொல்லிவிட்டு ஊருக்குள் யாரையோ பார்த்துவிட்டு உடன் திரும்பி வருவதாகவும், அடுத்த எக்சுபிரசில் சென்னை போகலாமென்றும் கூறிச் சென்றானாம். சென்றவன் திரும்பவே இல்லையாம். பணத்தையும் சாமர்த்தியமாகக் கேட்டு அவளிடமிருந்து முன்பே வாங்கிக் கொண்டானாம். விடியற்காலை நான்கு மணிவரை காத்துப் பார்த்து ஏமாந்த பின் கையில் மீதமிருந்த சில்லறையைத் திரட்டித் தந்தி கொடுத்ததாம் அந்தப் பெண். பயல் நம்மிடம் மணிபர்ஸைக் கோட்டைவிட்ட ஆள்தானாம். என்னிடமிருந்த படத்தைக் காட்டி அந்தப் பெண்ணிடமே கேட்டுத் தெரிந்து கொண்டேன். . .” என்று முருகானந்தம் கூறியவுடன், “இப்போது எங்கே அவர்கள்? காரில்தானே திரும்பினீர்கள்?” என்று அவனைக் கேட்டான் அரவிந்தன்.

“பாவம்யா அந்தப் பெண்! திரைப்பட நடிப்பு ஆசையில் முதலில் ஏமாந்து போய்விட்டது. இப்போது குமுறிக் குமுறி அழுகிறது. எல்லாரும் அந்த அம்மாள் வீட்டில் தான் இருக்கிறார்கள். பூரணியக்காதான் ஏதேதோ சமாதானம் கூறி அந்தப் பெண்ணை நடந்ததெல்லாம் மறக்கச் சொல்கிறார்கள்” என்று முருகானந்தம் கூறியபோது அரவிந்தனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. சந்தேகத்தை முருகானந்தத்திடமே கேட்டான். “பணம் இரண்டாயிரம் ரூபாய் பறிபோனதைத் தவிர வேறு ஒரு வம்பும் இல்லை” என்று அவன் பதில் கூறிய பின்பே அரவிந்தனுக்கும் நிம்மதி வந்தது. பெண்களின் தூய்மை என்பது ஐசுவரியத்தைக் காட்டிலும் மகத்தானதாயிற்றே.

“பொல்லாத காலம் அப்பா இது! மங்கையராகப் பிறப்பதற்குத் தவம் செய்ய வேண்டுமென்று கவிமணி பாடியிருப்பதாக நீ அடிக்கடி சொல்வாய் அரவிந்தன்! இந்தக் காலத்தில் பெண், பெண்ணாகப் பிறவாமல் இருக்கத் தவம் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் பெண்ணாக இருப்பது மிகவும் அருமையான பாதுகாப்புக்குரிய காரியமாயிருக்கிறது” என்று சொல்லிவிட்டுத் தையல் கடைக்குப் போனான் முருகானந்தம். அவனை அனுப்பிவிட்டு அரவிந்தன், மங்களேசுவரி அம்மாள் வீட்டுக்குப் போனான்.

இது நடந்து பதினைந்து நாட்களுக்குப் பின் ஒருநாள் முருகானந்தத்தின் தையல் கடையில் யாருக்கோ அவசரமாக ‘கோட்‘டுக்கு அளவெடுத்துக் கொண்டிருந்தான் அவன்.

“ஏய் டெய்லர்! உன்னைத்தானே!” என்று வாயிற்புறமிருந்து ஒரு குரல் ஆணவத்தோடு அதிகார அழைப்பு விடுத்தது. முருகானந்தம் திரும்பிப் பார்த்தான். ‘பளிச்’சென்று அவன் கண்களில் பதிந்து உறைந்தது அந்த முகம். கொதிப்பும் சினமுமாகச் சிவந்து போக இருந்த முகத்தில் செயற்கையாகச் சிரிப்பை வரவழைத்துக் கொண்டே “வாருங்கள் சார்! உங்கள் மணிபர்ஸ் தானே? அது பத்திரமாக இருக்கிறது. முந்நூறு ரூபாயை பதினைந்து நாள் மறந்து போய் பேசாமல் இருந்து விட்டீர்களே? அடடா! வாசலிலேயே நிற்கலாமா சார்! நீங்கள் எவ்வளவு பெரிய சினிமா டைரக்டர் என்பது அப்புறம் தான் எனக்குத் தெரிந்தது. அடேய் பையா! அப்புறம் பித்தானுக்கு ஓட்டைப் போடலாம். ஓடிப்போய் சாருக்கு காப்பி வாங்கி வா. பெரிய சினிமா டைரக்டர் இவர்” என்று வந்தவரை அட்டகாசமாக வரவேற்று உள்ளே உட்கார வைத்தான் முருகானந்தம். வந்தவருக்கோ பயமாயிருந்தது அந்த அபூரவ மரியாதை.

மணிபர்சை எடு எனக்கு நேரமில்லை. அவசரமாகப் போகணும்…” வந்தவர் அவசரப்படுத்தினார்.

“எப்போதும் அவசரந்தானா சார் உங்களுக்கு? கொஞ்சம் பொறுத்துப் போகலாம்! இவ்வளவு நாள் வைத்துக் கொண்டிருந்துவிட்டு வெறும் பணம் மட்டுமா தருவது? வட்டியும் சேர்த்துத் தருகிறேன் சார்” என்று கூறிக்கொண்டே வந்த முருகானந்தம் குபீரென்று முகத்தில் கடுமை குடிபுக. . . “அயோக்கிய நாயே?” என்று சீறிக்கொண்டு அந்த ஆளுடைய மார்புச் சட்டையைப் பனியனோடு பிடித்து உலுக்கித் தூக்கி நிறுத்தினான்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்