(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  53 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர்
20

“ஊனாகி உயிராகி அதனுள் நின்ற உணர்வாகிப்
பிறவனைத்தும் தானாகி நீயாய் நின்றாய்

தானேதும் அறியாமே என்னுள் வந்து
நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்”
      — தேவாரம்


மேகங்கள் குவிந்து திரண்ட கருநீலவானின் கீழே அன்று அந்த அந்தி மாலைப்போது கோடைக்கானலுக்கே தனி அழகை அளித்தது. யூகலிப்புடசு மரங்களின் மருந்து மணத்தை அள்ளிக் கொண்டு வரும் காற்று, உடற்சூட்டுக்கு இதமான கிளர்ச்சி. கண்களுக்குப் பசுமையான காட்சிகள், பகலிலும் வெய்யில் தெரியாதது போல் நீலக்கருக்கிருட்டு, மந்தார நிலை. உலாவச் செல்கின்றவர்களும், படகு செலுத்த வந்தவர்களுமாக ஏரிக்கரையில் நல்ல கூட்டம். நடக்க இயலாதவர்களையும் உட்கார வைத்துக் காற்று வாங்க அழைத்துச் செல்லும் குதிரைக்காரர்கள் தத்தம் மட்டக் குதிரைகளோடு நின்றனர்.

பூரணியும் வசந்தாவும் ஏரியில் இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரையில் படகில் சுற்றிவிட்டுக் கரையேறினார்கள். குளிருக்கு அடக்கமாக இருவரும் முழுநீளக் கம்பளி உடை அணிந்திருந்தார்கள்.

“அக்கா! சிறிது நேரம் இந்தக் குதிரையில் ஏறிச் சவாரி செய்ய வேண்டும் போல் ஆசையாயிருக்கிறது. நீங்களும் வருகிறீர்களா? இரண்டு குதிரைகள் வாடகைக்குப் பேசுகிறேன்” என்று உற்சாகத் துள்ளலோடு நடந்து கொண்டே கேட்டாள் வசந்தா. அந்தப் பெண் இருந்தாற் போலிருந்து துள்ளித் திரியும் புள்ளிமான் குட்டியாக மாறிவிட்டாளே என்று வியந்தாள் பூரணி. கார் காலத்து முல்லைப் பூப்போல் ஒரு பெண்ணின் முகத்திலும், விழியிலும், நடையிலும் இத்தனை புது வனப்புப் பொலிய வேண்டுமானால் அதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும். பூரணி அந்தக் காரணத்தை அறிந்து கொள்ள ஆசைப்பட்டாள். ஆனால் படித்த பெண்ணிடம் நேரடியாக அதைப் பற்றிக் கேட்பது அநாகரிகமாக முடிந்துவிடுமே என்றும் தயங்கினாள். எனவே ‘அந்தக் கடிதம் யாரிடமிருந்து வசந்தாவுக்கு வந்தது? அதில் அவளுடைய மகிழ்ச்சிக்குக் காரணமாக என்ன இருக்கிறது?’ என்பன போன்ற ஐயங்களை வாய்விட்டுக் கேட்காமல் தனக்குள்ளேயே அடக்கிக் கொண்டாள்.

“படகில் சுற்ற வேண்டுமென்றாய்! சுற்றியாயிற்று இப்போதென்னடா என்றால் குதிரையேறிச் சுற்ற வேண்டுமென்கிறாய்? மறுபடியும் கேட்கிறேனே என்று தப்பாக நினைத்துக் கொள்ளாதே வசந்தா. இன்று நீ மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறாய். உன் மகிழ்ச்சியின் காரணத்தை நானும் அறிந்து கொள்ளலாமா?” என்று மெதுவாக அவளிடம் கேட்டாள் பூரணி.

வசந்தாவின் முகம் அழகாகச் சிவந்தது. இதழ்களில் நகை சுரந்து நின்றது. “போங்கள் அக்கா, எதையோ சொன்னால் வேறு எதையோ கேட்கிறீர்கள் நீங்கள். நான் குதிரையில் ஏறிச் சுற்றப் போகிறேன்” என்று பூரணிக்குப் பதில் சொல்லிவிட்டுக் குதிரைக்காரனைக் கைதட்டிக் கூப்பிட்டாள் வசந்தா.

“அழகுதான் போ! குதிரையேறிச் சுற்றுவதற்கு நீயும் நானும் பச்சைக் குழந்தையா என்ன?”

“நீங்களும், நானும் மட்டுமில்லை அக்கா? இந்த மலைக்கு வந்துவிட்டால், எத்தனை வயதானாலும் பச்சைக் குழந்தையின் உற்சாகம் வந்து விடும். அதோ அங்கே பாருங்கள்.”

வசந்தா சுட்டிக் காட்டிய திசையில் பூரணி பார்த்தாள். ஒரு வெள்ளைக்காரப் பெண்மணியும், அவள் கணவர் போல் தோன்றிய வெள்ளைக்காரரும் செழிப்பாக உடற்கட்டுள்ள செவலைக் குதிரைகளில் கம்பீரமாகச் சென்று கொண்டிருந்தார்கள். உண்மைதான்! மலைச்சரிவிலும் கடற்கரையிலும் மனிதனுக்கு வயது மறந்துவிடுகிறது என்பது சரியாயிருக்கிறதென்று நினைத்துக் கொண்டாள் பூரணி.

வசந்தா மட்டும் குதிரையில் சுற்றி விட்டு வந்தாள். ‘கோக்கர்சு வாக்கு’ என்று மலை உச்சியில் ஒரு சாலை சரிவாக அமைந்திருந்தது. அங்கிருந்து பார்த்தால் மதுரைச் சீமையின் தரைப்பகுதி ஊர்கள் ஒளிப்புள்ளிகளாய் இருளில் தெரிந்தன. அதையும் பார்த்துவிட்டு இருவரும் வீடு திரும்பினார்கள். ஏழரை மணியாவதற்குள்ளேயே குளிர் அதிகமாகி மலையை மஞ்சு மூடத் தொடங்கியிருந்தது. பூரணிக்குக் குளிர் தாங்க முடியவில்லை. அன்று இரவு சாப்பாட்டை விரைவில் முடித்துக் கொண்டு அரவிந்தன் அனுப்பியிருந்த புத்தகங்களில் ஏதாவது ஒன்றைப் படித்து முடித்து விடலாமென்று அவள் நினைத்திருந்தாள். ஆனால் அப்படிச் செய்ய முடியவில்லை.

அங்கே தோட்டத்தில் மரு தோன்றிச் செடிகள் (மருதாணி) நன்றாகத் தழைத்து இலை விட்டிருப்பதைப் பூரணி வந்த அன்றே கவனித்தாள். கையில் மருதோன்றி அரைத்து அப்பிக் கொண்டு மறுநாள் காலை உள்ளங்கை பவழமாகச் சிவந்திருப்பதைக் கண்டு மகிழ்வதில் சிறு வயதிலிருந்து அவளுக்குப் பித்து உண்டு. அப்பா இறந்த பின் இவ்வளவு காலமாகக் கைக்கு மருதோன்றி இட்டுக் கொள்ளும் வாய்ப்பே ஏற்படவில்லை. அவளுக்குப் பலவிதமான வாழ்க்கைக் கவலைகளால் அந்த நினைப்பே வந்ததில்லை. அப்பா இருந்தால் கணக்குப் பாராமல் இரண்டு படி மூன்று படி என்று மருதோன்றி இலையைப் பைநிறைய வாங்கிக் கொண்டு வந்து கொட்டுவார்.

“உன்னுடைய சிவப்புக் கைகளுக்கு அது தனி அழகு அம்மா! அரைத்து இட்டுக் கொள். உள்ளங்கையில் பவளம் பூத்த மாதிரி மருதாணி நிறம் தெரிய வேண்டும்” என்று சொல்லி அவ்வளவையும் அரைத்து அப்பிக் கொண்டால்தான் ஆயிற்று என்று பிடிவாதம் பிடிப்பார் அப்பா. கோடைக்கானல் பங்களாத் தோட்டத்தில் அந்தச் செடியைப் பார்த்ததும் அவளுக்கே ஆசையாக இருந்தது. உடனே சமையற்கார அம்மாளிடம், “பாட்டி! உங்களால் முடிந்தால் ஒருநாள் சாயங்காலம் இந்த மருதாணியை நிறையப் பறித்து வெண்ணெய் போல் நன்றாக அரைத்து வைத்திருங்கள். படுத்துக் கொள்ளும் போது கையில் அப்பிக் கொண்டு படுத்துவிடலாம்” என்று அவள் சொல்லி வைத்திருந்தாள்.

சமையற்கார அம்மாளுக்கும் அன்று தான் அதைச் செய்வதற்குக் கை ஒழிந்தது போலும். படிக்கும் தாகத்தோடு மதுரையிலிருந்து வந்திருந்த புத்தகங்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த பூரணிக்கு அன்று படிக்க முடியாமலே போய்விட்டது.

“கைகளில் நன்றாக நிறம் பற்ற வேண்டுமானால் சீக்கிரமாகப் போட்டுக் கொண்டு தூங்கப் போய்விட வேண்டும்” என்று, பூரணியையும், வசந்தாவையும் உட்கார்த்தி உள்ளங்கையிலும், நகங்களிலும் கால் பாதத்தைச் சுற்றியும் மருதாணிக் காப்பு இட்டு ஆடாமல் அசையாமல் படுத்துக் கொள்ளும்படி செய்துவிட்டாள் சமையற்கார அம்மா. குளிரோடு மருதாணி ஈரமும் கைகளில் குறுகுறுத்தது. நெடுநேரம் பேசிக் கொண்டே படுத்திருந்த வசந்தாவும் பூரணியும் தங்களை அறியாமலேயே நன்றாக உறங்கிப் போய்விட்டார்கள்.

மறுநாள் காலை சிவப்பு நிறம் பதித்த உள்ளங்கைகளையும் நகங்களையும் அழகுபார்த்துக் கொண்டே பூரணி படிப்பதற்காகப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தாள். அவள் படித்துக் கொண்டிருந்தபோது தபால்காரன் வந்து மங்கையர் கழகத்து முத்திரையோடு கூடிய உறையைக் கொடுத்துவிட்டுப் போனான். உறை கனமாக இருந்தது. உள்ளே இரண்டு மூன்று கடிதங்களை இணைத்து அதோடு தானும் ஒரு கடிதம் எழுதிப் பூரணிக்கு அனுப்பியிருந்தாள் காரியதரிசி அம்மாள்.

அவளுடைய புகழ் எங்கெங்கே பரவியிருக்கிறதென்பதையும் அவளது அறிவுச் செல்வத்தை எங்கெங்கோ உள்ள மக்கள் நுகர்வதற்குத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அந்தக் கடிதங்கள் அவளுக்கு உணர்த்தின. பூரணிக்கு அறிவின் பெருமிதம் மனம் நிறையப் பொங்கிற்று.

யாழ்ப்பாணத்தில் இரண்டு மூன்று மாதங்களுக்குப் பின் நடைபெற இருக்கும் தமிழ் இலக்கிய மாநாட்டில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றுவதற்குப் பூரணியை அனுப்பி வைக்க வேண்டுமென்று மங்கையர் கழகத்துக் காரியதரிசியைக் கேட்டுக் கொண்டிருந்தது ஒரு கடிதம். நான்குமாதம் கழித்துக் கல்கத்தாவில் நடைபெற இருக்கும் கிழக்கு ஆசியப் பெண்கள் பேரவையில் அவள் தமிழ்நாட்டின் சார்பாளராகக் கலந்து கொள்ள வேண்டுமென்று கோரியது இன்னொரு கடிதம். தை மாதம் மலாயாவில் கோலாலம்பூரிலுள்ள தமிழர்கள் நடத்தும் பொங்கல் விழாவுக்கு வர வேண்டுமென்று மற்றொரு கடிதத்தில் கேட்டிருந்தது.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்