(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 63 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர்

அத்தியாயம் 23 தொடர்ச்சி

மதுரையில் வையை நதியின் வடக்குக்கரையில் தல்லாகுளம், கொக்கிகுளம் முதலிய கலகலப்பான பகுதிகளிலிருந்து ஒதுங்கிப் புதூருக்கும் அப்பால் அழகர் கோயில் போகிற சாலையருகே அரண்மனை போல் பங்களா கட்டிக் கொண்டார். பங்களா என்றால் சாதாரணமான பங்களா இல்லை அது. ஒன்றரை ஏக்கர் பரப்புக்குக் காடு போல் மாமரமும், தென்னை மரமுமாக அடர்ந்த தோட்டம். பகலிலே கூட வெய்யில் நுழையாமல் தண்ணிழல் பரவும் அந்த இடத்தில் தோட்டத்தைச் சுற்றிப் பழைய காலத்துக் கோட்டைச் சுவர் போலப் பெரிய சுற்றுச் சுவர். இவ்வளவும் சேர்ந்து அதை ஒரு தனித் தோட்டம்( ‘எசுடேட்’)ஆக்கியிருந்தன. அந்தப் பகுதிக்குப் ‘பருமாக்காரர் எசுடேட்’ என்று பெயரே ஏற்பட்டுவிட்டது. மகள் வயதில் மனைவியும் கை நிறையச் செல்வமுமாக அந்தக் கிழவர் பருமாவிலிருந்து வந்து இறங்கிய போது பார்க்கிறவர்களுக்கு வேடிக்கையாகவும் கேலியாகவும் இருந்தது உண்மைதான். ஆனால் பணம் என்பது ஒரு பெரிய பக்கபலமாக இருந்து அவரை மதிக்கவும், பெரிய மனிதராக எல்லோரும் அங்கீகரித்துக் கொண்டு போற்றவும் உதவி செய்தது. அதனால் வளர்ந்து வளம் பெற்றிருந்தார் அவர்.

அவரைப் பற்றி அரவிந்தன் அறிந்திருந்தவை இவ்வளவுதான். ‘சிற்றப்பாவின் கேதத்துக்கு உறவு முறையைக் கருதிப் ‘பருமாக்காரர்’ வந்து போகிறாரா? அல்லது பணக்காரருக்குப் பணக்காரர் என்ற முறையில் விட்டுக் கொடுக்கக் கூடாதென்பதற்காக வந்தாரா’ என்று நினைத்து வியந்தான் அரவிந்தன். முதல்நாள் மயானத்திலிருந்து திரும்பும் போது பருமாக்காரர் தன்னிடம் பூரணி தேர்தலில் நிற்கப் போவது பற்றி அனுதாபத்தோடு எச்சரித்ததும் மீனாட்சிசுந்தரத்தைப் பற்றி விசாரித்ததும் இயல்பான நல்லெண்ணத்தால்தான் என்று சாதாரணமாக எண்ணியிருந்தான் அவன். பருமாக்காரருடைய கீழ்மைத் தனமான பேச்சுகளும், வயது வந்த முதுமைக்கும், பொறுப்புக்கும், பொருந்தாமல் அடிக்கடி அவர் கண்களைச் சிமிட்டிக் குறும்பு செய்வதும்தான் அவனுக்குப் பிடிக்கவில்லையே ஒழிய, அவர் கெட்டவராகவும், பயங்கரமான சூழ்ச்சிக்காரராகவும் இருப்பாரென்று அவன் நினைக்கக் கூட இல்லை. அவருடைய முகத்துக்குத் தான் புலியின் களை இருந்தது. இரண்டு இதழோரங்களிலும் கடைவாய்ப் பல் நீண்டிருப்பதன் காரணமாக எத்தனையோ சாது மனிதர்களுக்குக் கூட இப்படிப் புலிமுகம் இருப்பதை அரவிந்தன் கண்டிருக்கிறான். எனவே சிந்தித்துப் பார்த்தபின் அது கூட அவனுக்குப் பெரிய தப்பாகப் படவில்லை. இரயில் பயணத்தின் போது கூட அவர் அவனிடம் நெருக்கமாகவும் அன்பாகவும் தான் நடந்து கொண்டார். மதுரை நகரத்து அரசியல் நிலைமையைப் பற்றி, மீனாட்சிசுந்தரம் பூரணியைத் தேர்தலில் நிறுத்தப் போகும் நோக்கம் பற்றித் தனக்குத் தெரியாத இரகசியம் எல்லாம் அவருக்குத் தெரிந்திருப்பதைக் கண்டு அரவிந்தனே அயர்ந்து போனான். யாரைப் பற்றிப் பேசினாலும் ஒருவிதமான அலட்சியத்தோடு தூக்கி எறிந்து பேசினார் அவர். “உன் முதலாளி மீனாட்சிசுந்தரம் இன்றைக்குத்தான் ஏதோ கொஞ்சம் வசதியா இருக்கிறான் அப்பா. இந்த அச்சகம் வைக்கிறதுக்கு முன்னாலே சண்முகம் ஆலைனு ஒரு ஆலையிலேயே நிறையப் பங்கு (சேர்) வாங்கினான். ஆலை திவாலாப் போச்சு. அப்போதே ஆள் மஞ்சள் கடுதாசி நீட்டி ஐ.பி. கொடுத்து விட்டுத் தலையில் துணியைப் போட்டுக் கொண்டு போயிருக்கணும். எனக்கு நல்லாத் தெரியும்” என்று அவன் மனம் விரும்பாத வழியில் கீழான பேச்சை ஆரம்பித்தார் பருமாக்காரர். முதல் வகுப்பில் உட்கார்ந்து மூன்றாவது வகுப்பு விசயங்களைப் பேசினார் அவர்.

“எல்லாப் பணக்காரர்களுமே அப்படித்தான் ஐயா! ஒரு சமயம் கைநொடிக்கும். ஒரு சமயம் வளரும்” என்று அவருடைய பேச்சை வேறு வழிக்குத் திரும்ப முயன்றான் அரவிந்தன்.

“அதுக்கு இல்லை தம்பி! இந்தக் காலத்தில் ரொம்பச் சின்ன ஆளுங்க எல்லாம் வேகமாக மேலே வந்திடப் பார்க்கிறாங்க. இந்த பூரணிங்கற பொண்ணு ஏதோ தமிழ்ப் பிரசங்கம், மாதர் கழகமின்னு பேர் வாங்கி நாலுபேருக்குத் தெரிஞ்ச ஆளாயிட்டுது. இதனோட தகப்பன் அழகியசிற்றம்பலம் கஞ்சிக்கில்லாமே பஞ்சைப் பயலா மதுரைக்கு வந்தான். நம்ம வக்கீல் பஞ்சநாதம் பிள்ளைதான் அப்போ கல்லூரி நிருவாகக் குழுத் தலைவர். போனால் போகுதுன்னு இந்த ஆளுக்குத் தமிழ் வாத்தியாரா வேலை போட்டுத் தந்தானாம் பஞ்சநாதம்! இப்போ என்னடான்னா உங்க முதலாளி, அந்த ஆளோட பெண்ணைத் தேர்தலிலே நிறுத்த வந்திட்டார்.”

அரவிந்தன் முகத்தைச் சுளித்தான். அவனுடைய உள்ளத்தில் தெய்வங்களுக்கும் மேலாக அவன் நினைத்திருந்த பெரியவர்களைப் புழுதியில் தள்ளி புரட்டுகிறாற் போல் நாவு கூசாமல் பேசினார் பருமாக்காரர். வாயடக்கமில்லாமல் இப்படித் தாறுமாறாகப் பேசுகிறவர்களைக் கண்டாலே அவனுக்குப் பிடிக்காது. ‘பிற உயிர்களைக் கொல்லாமல் இருப்பது மட்டும் சன்மார்க்கமில்லை. பிறருடைய தீமையைப் பேசாமலிருப்பது கொல்லாமையைக் காட்டிலும் உயர்ந்த சன்மார்க்கம்‘ என்று நினைக்கிறவன் அரவிந்தன். சிறிது சிறிதாகத் தமது பேச்சாலேயே அவனுடைய உள்ளத்தில் மதிப்பிழந்து கொண்டிருந்தார் பருமாக்காரர்.

மதுரை நிலையத்தின் கலகலப்பினிடையே புகுந்து இரயில் நின்றது. அவருடைய பருமாக்கார மனைவியும், அவளுடன் அவருக்குப் பிறந்தவளான ஒரே மகளும் நிலையத்துக்கு வந்திருந்தார்கள். அவர்களை அப்போதுதான் முதன்முதலாகப் பார்த்தான் அரவிந்தன். பருமிய இரத்தமும் தமிழ் இரத்தமும் கலந்த அழகில் அவருடைய மகள் காண நன்றாக இருந்தாள். தமிழ்நாட்டுக் கோலத்தில் நிலவு முகமும், மயக்கும் விழிகளுமாக நின்றாள். ஆனால் அந்தப் பெண்ணின் தாய் மட்டும் மதுரைக்கு வந்து இத்தனை காலமான பின்னும் பருமியத் தோற்றமும் அதற்கேற்ற அலங்காரங்களும் மாறவில்லை. கவிதை உணர்வின் புனிதமான எழுச்சியோடு அவர்கள் தோற்றங்களை அரவிந்தன் பார்த்தானே தவிர, வேறு விரசமான நினைவே இல்லை. அவன் மனதுக்கு விரசமாக நினைக்கவும் தெரியாது.

“நம்ப உறவுக்காரப் பிள்ளையாண்டான். ‘அரவிந்தன்’ என்று தங்கமான பெயர். இவனுடைய சிற்றப்பாவின் கேதத்துக்காகத் தான் நான் போயிருந்தேன்” என்று பெண்ணுக்கும் மனைவிக்கும் அவனை அறிமுகப்படுத்தி வைத்தார்.

“நான் என்னவோ பருமாவில் போய் பணத்தைத் திரட்டிக் கொண்டு வரலாம்னு போனேன் அப்பா! திரும்புகிற காலத்தில் இதோ இருக்கிறாளே, இந்தப் பொல்லாதவள் என் மனத்தைக் கொள்ளையடித்துக் கொண்டுவிட்டாள். நான் இந்த அழகியையே கொள்ளையடித்து இங்கே கூட்டிக் கொண்டு வந்து விட்டேனப்பா” என்று மிகவும் நகைச்சுவையாக மனைவியை அவனுக்கு அறிமுகம் செய்தார். அப்போது அந்தப் பருமிய நங்கை சற்றே தலைசாய்த்து சிவந்த முகம் மேலும் சிவக்க ஒரு நாணப் புன்னகை பூத்தாள். உலகத்து மகாகவிகளின் நளின எழில்கள் யாவும் அந்தப் பருமிய நங்கையின் சிரிப்பில் போய் இணைந்து கொண்டனவோ எனும்படி அழகாயிருந்தது அந்தச் சிரிப்பு.

“எனக்குக் கோடைக்கானல் போக வேண்டும். இப்படியே வண்டி நிலையத்துக்குப் போனால் நாலு மணிக்குக் கோடைக்கானல் போகிற கடைசி வண்டி இருக்கிறது. நான் விடைபெற்றுக் கொள்கிறேன். பதினாறாம் நாள் காரியத்துக்கும் நீங்கள் கண்டிப்பாய் வந்துவிட வேண்டும்” என்று இரயில் நிலையத்திலிருந்தே பருமாக்காரரிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பி விட முயன்றான் அரவிந்தன். இரயிலில் அவர் பேசிய பேச்சுகளைக் கேட்ட பின்பு அவரிடமிருந்து விரைவில் கத்தரித்துக் கொண்டு புறப்பட்டால் போதுமென்று ஆகிவிட்டது அவனுக்கு.

“நீ ஏனப்பா, பைத்தியக்காரப் பிள்ளையாயிருக்கிறாய். இவ்வளவு தூரம் வந்தவன் வீட்டுக்கு வந்துவிட்டுப் போவாய் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். கோடைக்கானலுக்கு நாளைக்காலையில் போகலாம் தம்பி இப்போது வீட்டுக்கு வந்துதான் ஆகவேண்டும்” என்றார் பருமாக்காரர். அவருடைய மகளும் தந்தையின் பக்கம் பேசி அவனை வரச்சொல்லி வற்புறுத்தினாள். அரைகுறைத் தமிழ்ச்சொற்களோடு கூடிய குயில் குரலில் அவருடைய பருமிய மனைவியும் அவனை நோக்கி ஏதோ கூறினாள்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்