(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 62 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர்
அத்தியாயம் 23

கள்ளக்கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து – இங்கு
உள்ளக் கருத்தை உணர்ந்திருப்பது எக்காலம்?
     – சித்தர் பாடல்


ஒரே கரும்பின் ஒரு பகுதி இனிப்பாகவும் மற்றொரு பகுதி உப்பாகவும் இருக்கிற மாதிரி மனிதனுக்குள் நல்லதும் கெட்டதும் ஆகிய பல்வேறு சுவைகளும், வெவ்வேறு உணர்ச்சிகளும் கலந்து இணைந்திருக்கின்றன. எல்லா கணுக்களுமே உப்பாக இருக்கிற ஒருவகைக் கரும்பு உண்டு. அதற்குப் ‘பேய்க்கரும்பு’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். அதற்குக் கரும்பு போலவே தோற்றம் இருக்கும். ஆனால் கரும்பின் இனிமைச் சுவைதான் இராது. பெரிய மனிதர்களைப் போல் தோன்றிக் கொண்டு பெருந்தன்மை சிறிதுமில்லாத கயவர்களாய்க் கொடியவர்களாய் வாழும் மனிதர்கள் சிலர் நல்ல அரிசியில் கல்போல் சமூகத்தில் கலந்திருக்கிறார்கள். இவர்கள் வெளித் தோற்றத்துக்குக் கரும்பு போல் தோன்றினாலும் உண்மையில் சுவை வேறுபடும் பேய்க் கரும்பு போன்றவர்கள் தான்.


கிராமத்திலிருந்து தன்னோடு மதுரைக்கு வந்த அந்தப் பெரிய மனிதரின் சுய உருவம் புரிந்த போது அரவிந்தனுக்கு உள்ளம் கொதித்தது. உள்ளக் கருத்து ஒன்றும் கள்ளக் கருத்து ஒன்றுமாக வாழ்ந்து ஏமாற்றிப் பிழைக்கும் இத்தகைய கொடியவர்களை உலகம் உணர்ந்து கருவறுக்கும் காலம் என்று வரப் போகிறதென்று குமுறினான் அவன். அந்த ஆளை முதலிலேயே சரியாகப் புரிந்து கொள்ளாமல் போனதற்காகத் தன்னை நொந்து கொண்டான். புத்தகங்களைப் படித்து அறிந்து கொள்ளும் ஞானம் மட்டும் இந்த நூற்றாண்டின் வாழ்க்கைக்குப் போதாது. மனிதர்களைப் படித்து அறிந்து கொள்ளும் ஞானம் தான் இந்தக் காலத்துச் சமுதாய வாழ்வில் வெற்றி பெறுவதற்குச் சரியான கருவியாக இருக்கிறது. காரணம்? ஒவ்வொரு மனிதனும் குழப்பங்கள் நிறைந்த ஒரு புத்தகமாக இருக்கிறான். படித்துப் புரிந்து கொள்வது அருமையாக இருக்கிறது.


அரவிந்தனும் அந்த முதியவரும் மதுரையை அடைந்தபோது மாலை மூன்றரை மணி இருக்கும். கிராமத்திலிருந்து புறப்படும் போது இரயிலில் மூன்றாம் வகுப்புக்கான பயணச்சீட்டு வாங்கிக் கொண்டிருந்தான் அரவிந்தன். அவர் முதல் வகுப்புக்கான பயணச்சீட்டு வாங்கிக் கொண்டிருந்தார். அவனையும் முதல் வகுப்புக்கு வரச் சொல்லி வற்புறுத்தினார்.


“சீ! சீ! பட்டிக்காட்டுக் கும்பல் புளிமூட்டை மாதிரி அடைந்து கிடக்குமே மூன்றாம் வகுப்புப் பெட்டியில்? நிற்கக் கூட இடம் இருக்காது. அந்தப் பயணச்சீட்டை இப்படிக் கொடு. திருப்பிக் கொடுத்துவிட்டு முதல் வகுப்பாக மாற்றிக் கொண்டு வருகிறேன். இரண்டு பேரும் சேர்ந்து பேசிக் கொண்டே போகலாம்” என்றார்.


“அதனால் என்ன பரவாயில்லை, எனக்கு முதல் வகுப்பில் பயணம் செய்து பழக்கம் கிடையாது. நீங்கள் முதல் வகுப்பில் வாருங்கள். நான் மூன்றாம் வகுப்பிலே வருகிறேன். மதுரையில் இறங்கினதும் சந்திப்போம்” என்று அவரை மறுத்துவிட்டு விலகிச் செல்ல முயன்றான் அரவிந்தன். அவர் விடவில்லை.

“பழக்கம் இல்லையாவது, ஒன்றாவது தம்பி! புதுச் சொத்து எல்லாம் வந்திருக்கிறது, பணக்காரனாயிருக்கிறாய். ‘ஸ்டேட்டஸ்‘ (கௌரவம்) குறைகிறாற் போல் நடந்து கொள்ளலாமா? இந்தக் காலத்தில் புகழும் கௌரவமும் சும்மா வந்து விடாது. பணத்தை முதலீடாக வைத்துக் கொண்டு அவற்றையெல்லாம் சம்பாதிக்க வேண்டும் அப்பனே!” ஒரு தினுசாகச் சிரித்தவாறே கண்களைச் சிமிட்டிக் கொண்டே, அவனை நோக்கி இப்படிச் சொன்னார் அவர்.


அவருடைய இந்தச் சொற்கள் அரவிந்தனின் செவியில் கீழ்மைப் பண்பின் ஒரே குரலாக ஒலித்தன. ‘இத்தனை வயதான மனிதர் இவ்வளவு அனுபவங்களும் பெற்று முதிர்ந்த நிலையில் பேசுகிற பேச்சா இது? வாழ்க்கையைப் பற்றி எவ்வளவு கீழ்த்தரமாக முடிவு செய்திருக்கிறார். பல பேருக்கு வழிகாட்டியாக விளங்க வேண்டிய ஒரு மனிதர் இப்படியா பேசுவது?’ என்று வருந்தினான் அரவிந்தன். செல்வத்தை முதலீடாக வைத்துக் கொண்டு போலியான வழியில் புகழும், கௌரவமும் ஈட்ட முடிகிற காலமாக இது இருந்த போதிலும், அவரைப் போன்ற பொறுப்புள்ள ஒருவர், அதைப் பொன்மொழி போல் எடுத்துத் திருவாய் மலர்ந்தருளியது தான் அவனுக்குப் பிடிக்கவில்லை. அந்த மனிதர் மேல் அவனுடைய மனம் கொண்டிருந்த மதிப்பில் ஒரு பகுதி குறைந்துவிட்டது. ஆனாலும் அவர் அவனை மூன்றாம் வகுப்பில் பயணம் செய்ய விடவில்லை. வலுக்கட்டாயமாக அவனது பயணச் சீட்டைப் பறித்துக் கொண்டு போய் முதல் வகுப்பாக மாற்றிக் கொண்டு வந்தார். அவன் மிகக் கண்டிப்போடு மறுக்க முயன்றான். முடியவில்லை. கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் முதல் வகுப்புப் பெட்டியில் தம் அருகில் உட்கார வைத்துக் கொண்டு விட்டார். வண்டியும் புறப்பட்டு விடவே, அவன் அங்கேயே இருக்க வேண்டியதாகப் போயிற்று. இரயிலின் இருபுறமும் பசுமையான வெற்றிலைக் கொடிக்கால்கள் நகர்ந்தன.


“நான் என்னப்பா செய்வது? பேச்சுத் துணைக்கு வேறு ஆள் இல்லை. தனியாகப் போவதற்கு என்னவோ போலிருக்கிறது. உன் கொள்கையைப் பலாத்காரமாக மாற்றி விட்டேனே என்று என் மேல் வருத்தப்பட்டுக் கொள்ளாதே” என்று சிரித்து மழுப்ப முயன்றார் அந்தக் கிழவர். பதுங்கிப் பம்மிப் பாய வருகிற காலத்தில் வேங்கைப் புலியின் முகத்தில் தோன்றுகிற தந்திரமும் குரூரமும் இணைந்த சாயலைக் கண்டிருந்தால் அந்தக் கிழவரின் முகத்தைக் காண வேண்டிய அவசியமில்லை. அதே சூழ்ச்சிக் களையோடு கூடிய முகம் தான் அவருக்கும் வாய்த்திருந்தது. மதுரையில் அவரோடு நெருங்கிப் பழகுகிற வாய்ப்பு அரவிந்தனுக்கு ஏற்பட்டிராவிட்டாலும் அவரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தான். சிறுவயதிலிருந்தே ஊர் உறவுகளிலிருந்து விலகி அநாதை வாழ்க்கை வாழ்ந்து விட்டதனால் அவனுக்குத் தன்னூர் ஆட்களிடம் பழக்கமே இல்லை. அதிலும் இப்போது முதல் வகுப்பில் அவனோடு வந்து கொண்டிருக்கிற இந்த மனிதர் சிறுவயதிலேயே ஊரைவிட்டு, நாட்டை விட்டு பருமாவுக்குப் போய் வட்டிக்கடை வைத்துப் பணம் திரட்டிக் கொண்டு திரும்பி வந்தவர். திரும்பி வந்தபின் கிராமத்துக்குப் போகாமல் பலவிதமான வாழ்க்கை வசதிகளுக்காக மதுரையிலே பங்களா கட்டிக் கொண்டு குடியேறிவிட்டார். அவருடைய சொந்தப் பெயரைச் சொன்னால் மதுரையில் தெரியாது. ‘பருமாக்காரர்’ என்றால் நன்றாகத் தெரியும். வாலிப வயது முடிந்து நடுத்தரப் பருவத்தையும் கடந்து முதுமையை எட்டப்போகிற தருணத்தில் விநோதமான விதத்தில் அவர் பருமாவிலிருந்து திரும்பியிருந்தார்.


வட்டிக்கடை வைத்துச் சேர்த்த பணமும் பகட்டும், வாழ்ந்து சோர்ந்திருந்த முதுமையும் மட்டுமின்றி; பச்சைக் கிளிபோல் எழில் கொஞ்சும் பருமியப் பெண் ஒருத்தியையும் சேர்த்துக் கொண்டு வந்திருந்தார் அவர். பருமாவுக்குப் போகும்போது ஒற்றைக் கட்டையாகப் போனவர் அவர். அதற்காக எப்போதும் ஒற்றைக் கட்டையாக இருக்க வேண்டுமா என்ன? சந்தர்ப்பங்களும் ஆசைகளும் அருகருகே நெருங்குகிற போது எத்தனையோ நினைவுகள் தானாகவும் எளிதாகவும் நிறைவேறிவிடுகின்றன. உள்ளத்தைப் பித்துக் கொள்ளச் செய்யும் வனப்பு வாய்ந்த பருமியப் பெண்களின் அழகில் மயக்கமும் சபலமும் கொண்டு ஏங்கிய நாட்கள் அவருடைய பருமா வாழ்வில் அதிகமானவை. கடைசியில் தாயகம் திரும்புவதற்கு முந்தின ஆண்டில் அவருடைய ஆசை நிறைவேறி விட்டது. தம்முடைய வயதில் மூன்றில் ஒரு பங்கு வயது கூட ஆகாத ஒரு பருமியப் பெண்ணை அவர் மணந்து கொண்டார். அனுமதியும் பெற்றுத் தம்மோடு இந்தியாவுக்கு அழைத்து வந்துவிட்டார். விளையாடுவதற்குப் பிரியமான பொம்மை வாங்கிக் கொண்டு வந்ததுபோல் களிப்புடன் வந்தார் அவர். கொள்ளக் குறையாத செல்வத்தையும் கொள்ளை அழகு கொஞ்சும் மனைவியையும் இட்டுக் கொண்டு மதுரை திரும்பியபின் அவருக்கு வாழ்க்கையில் பெரிய பெரிய யோகங்கள் அடித்தன. பொது வாழ்வில் பல நண்பர்களும் சங்கங்களும் சேர்ந்து அவரைப் பெரிதுபடுத்தினர். பிரமுகராக்கினர். செல்வாக்கும் புகழும் அரசியலுக்கு அழைத்தன. அதிலும் நுழைந்து பதவியும் பகட்டுமாக வாழ்ந்தார் ‘பருமாக்காரர்’.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்