teacher-beating-student01

  தமிழய்யா பத்தாம் வகுப்பு  அ பிரிவைக் கடந்து செல்லும் பொழுது  கணக்கையா யாரையோ அடித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து உள்ளே நுழைந்தார்.

  “என்னங்கய்யா, நல்லானையா அடித்துக் கொண்டு இருக்கிறீர்கள்? அவன் நன்றாகப் படிப்பானே!”

  கணக்கையா அடிப்பதை நிறுத்திக் கொண்டு, “நன்றாகப் படித்து என்ன? நல்ல பண்பு இருக்க வேண்டுமல்லவா” என்றார்

  பெயருக்கேற்ற  நல்லவன்தான் அவன். “என்ன  நடந்தது” என்றார்.

  “போன வகுப்பு இவர்களுக்கு விளையாட்டு. யாருமில்லை. நான் மட்டும் பையை வைத்து விட்டுத் தலைமை ஆசிரியரைப் பார்த்து விட்டு வந்தேன். வரும் பொழுது பார்த்தால் என் கைப்பையில் இருந்து பணப் பையை எடுத்துக் கொண்டு இருக்கின்றான். கேட்டால், கீழே விழுந்து இருந்தது. எடுத்து உள்ளே வைத்தேன் என்கிறான். ஏதாவது பணத் தேவையா  உண்மையைச் சொல் தருகிறேன் என்றால்  மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்கிறான். பத்தாம் வகுப்பு தேறிய பின் மேல் படிப்பிற்கு உதவ விரும்பும் என்னிடமே பொய் சொல்கிறா னே என்றுதான் அடித்தேன்” என்றார்.

   “என்ன நல்லான்! எதற்கு நீ எடுத்தாய்.”

 “ஐயா, உண்மையிலேயே நான் திருடவில்லை. பணப்பை யை உள்ளேதான் வைத்தேன்” என்றான்.

“பணம் எதுவும் திருடு போகவில்லை. அதற்குள் நான் வந்துவிட்டேன்” என்றார் கணக்கையா.

  “உங்களுக்குத்தான எதுவும் திருடு  போகவில்லையே! நல்லான் உண்மையைத்தான் சொல்லுவான். விட்டு விடுங்கள்” என்றார்.

 அதற்குள் நண்பகல் உணவிற்கான மணி அடித்து விட்டது. எனவே, வகுப்பை முடித்து விட்டு இருவரும் ஆசிரியர் அறைக்குத் திரும்பினர்.

 “உண்மையைச் சொல்லும் பொழுது பொய் சொல்வதாகவும் குற்றம் செய்யாத பொழுது குற்றம் செய்ததாகவும் தண்டித்தால் மாணாக்கர்கள் தீய வழிக்குத்தான் செல்வார்கள். நன்கு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். யாருமறியாமல் கண்காணித்து இது போல் யார் குற்றம் இழைக்கிறார்கள் எனக் கண்டறிவோம்” எனத் தமிழய்யா கணக்கையாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

  அப்பொழுது பத்தாம் வகுப்பு ஆ பிரிவில் பயிலும் கணக்கையாவின் மகன் வேம்புலி வந்து நின்று அழுதான்.

  ஏன்  என்று கேட்பதற்குள்,  “அப்பா! நீங்கள் நல்லானை அடித்தீர்கள் அல்லவா?” என்று அழுது கொண்டே கேட்டான்.

   “ஆமாம்! என் பணப்பையை என் கைப்பையில் இருந்துஎடுத்ததைப் பார்த்தேன்; அடித்தேன்! நீ ஏன்அதற்கு அழுகிறாய்?”  என்றார்.

“நான் உண்மையைச் செ்ால்லுகிறேன்.  நீங்கள் என்னை அடிக்கக்கூடாது” என்றான்.

 “சரி சரி சொல். யாராக இருந்தாலும் அடிக்கவில்லை” என்றார்.

  “நான்தான் எனக்கு ஐம்பது உரூபாய் தேவை என்பதால் உங்களைப் பார்க்க வந்தேன். அதற்குள்  நீங்கள்  கைப்பையை  வைத்து விட்டு வெளியே சென்று வி்ட்டீர்கள்.  உங்களிடம் பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று பணப்பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன்.” அதைப்பார்த்த நல்லான், “அப்பாவிடம் சொல்லாமல் அப்பா பணப்பை யை அல்லது பணத்தை எடுப்பதும் திருட்டிற்கு ஒப்பானதுதான். யாராவது பார்த்தால் உன்னைத் திருடன் என்று எண்ணுயவார்கள். மேலும், பிறருக்கு இதுபோல் பணம் எடுக்கத்தோன்றும்” என்றான். “அவன் கூறியது சரி எனப்பட்டது. ஆனால், திரும்பிப் பணப்பையை வைக்க அச்சமாக இருந்தது.

 அவனையே மீண்டும் உங்கள் கைப்  பையில் வைக்குமாறு சொன்னேன். அவன் அவ்வாறு வைக்கும் பொழுதுதான் நீங்கள் பார்த்து விட்டு அவன் திருடுவதாக எண்ணி அடித்து விட்டீர்கள். என்னை மன்னித்து விடுங்கள் அப்பா ” என்றான்.

  “நான்தான் நல்லானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்ற கணக்கையா, வகுப்பிற்குச் சென்றார். உடன் தமிழய்யாவும் வேம்புலியும் சென்றனர்.

  “மாணாக்கர்கள் உணவு உண்பதையும் பொருட்படுத்தாமல் கணக்கையா, என் மகன் என்னிடம் கொடுப்பதற்காக எடுத்து வந்த பணப்பையைத்தான் நல்லான் மீண்டும் என் பையில் வைத்திருக்கின்றான். அதைத் தவறாகப் புரிந்து கொண்டு அவன் மீது திருட்டுப் பட்டம் கட்டிய என்னை நல்லான் மன்னிக்க வேண்டும். அவன் மேல்படிப்புச் செலவு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்கிறனே்” என்றார். நல்லான், ஐயா, “என்னிடம் நீங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் குற்றமற்றவன் என எல்லார் முன்னிலையிலும் சொன்னதே போதும் ” என்றான்.

அருகிலிருந்த தமிழய்யா, “நண்பனை விட்டுக்  கொடுக்காமல் தண்டனை வாங்கிய நல்லானும், தன்னால் நண்பன் அடிபட்டதைப் பொறுக்காமல்  உண்மையைக் கேட்காமலே சொன்ன வேம்புலியும்  தன்னிடம் படிக்கின்ற சிறுவன்தானே என எண்ணாமல் ஆசிரியராக இருந்தும் மன்னிப்பு கேட்டு அவனுக்கு உதவ வந்துள்ள கணக்கையாவும் மிக உயர்நதவர்கள். அவர்களால் இப் பள்ளியும் உயர்கின்றது” எனப் பாராட்டினார்.

மாணாக்கர்களும்  மேசையில் கை தட்டி ஒலி எழுப்பிப் பாராட்டில் பங்கேற்றனர்.