வெருளி நோய்கள் 1546-1550 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 1541-1545 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1546-1550
- பகடை வெருளி – Zariphobia
பகடை(dice) குறித்த வரம்பற்ற பேரச்சம் பகடை வெருளி.
சூதிற்கு எதிராகத் திருவள்ளுவர் திருக்குறளில் சூது என்று ஓர் அதிகாரமே படைத்துள்ளார்.(அதிகாரம் 94).
உருட்டப்படுகின்ற பகடையால் பொருளை வைத்துச் சூதாடும் பொழுது பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் புறத்தே செல்லும என்கிறார் திருவள்ளுவர்.
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்(குறள் 933).
என்பது அக்குறள்.
நளவெண்பா, மகாபாரதக் கதைகளில் மன்னர்களே சூதால் யாவற்றையும் இழப்பது கூறப்பட்டுள்ளது.
எனவே, பகடை யாடுவது குறித்து அஞ்சி விலக்குவது தேவையான ஒன்று. ஆனால், பகடையை உருட்டிக் கொண்டே அதன்மீது அளவுகடந்த பேரச்சம் கொள்வதும் அவரது குடும்பத்தினர் வரம்பற்ற தேவையற்ற பேரச்சம் கொள்வதும் பகடை வெருளியாகிறது.
00
- பகலொளி வெருளி-Phengophobia/Eosophobia
பகல்நேர ஒளியின் மீது ஏற்படும் அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் பகலொளி வெருளி.
இருட்டுப் பொழுதில் திருட்டுத் தொழில் புரிவோருக்குத்தான் பகலாளி பேரச்சம் தர வேண்டும். ஆனாலும் கண்கூசச் செய்யும் சூரிய ஒளியால் பேரச்சம் கொள்வோர் உள்ளனர். பகலொளி மருந்தாக இருந்தாலும் உரனி 4 (வைட்டமின் டி) தருவதாக இருந்தாலும் உடலைக் கருக்கச் செய்யும் என அஞ்சுவோர் உள்ளனர்.
கண்களைப் பாதிக்கும் சூரிய வெப்பம் தாங்காமல் மயக்கம் வரும், வேனற்கட்டிகள் வந்து துன்புறுத்தும், தோல் புற்று நோய் வரும், திரைவு(தோற்சுருக்கம்) ஏற்படும், உடல் வறட்சி ஏற்படும், தோல்வீக்கம், படை நோய் முதலியன வரும் என எதிர்மறைச் சிந்தைனைகளை மட்டும் வளர்த்துக் கொண்டு தேவையற்ற பேரச்சம் கொள்வர்.
phengo என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் சூரிய ஒளி / பகல் ஒளி.
eoso என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் விடியலொளி / புலர்பொழுது
00
- பகற்கனவு வெருளி – Oneiropolimaphobia
பகற்கனவு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பகற்கனவு வெருளி.
பகற் கனவு பலிக்காது என்பார்கள். ஆனால், மளிகைக்கடை உடன்பிறப்புகள் தொடர்பான தொலைக்காட்சித் தொடரில் பகற்கனவு பலிக்கும், இரவுக்கனவு பலிக்காது என்பதுபோல் பேசும் காட்சிகள் இடம் பெறுகின்றன. பழமொழி குறித்துப் பொருட்படுத்தாமல் கனவில் தீய நிகழ்வுகள் நடைபெறின் அவை நடைபெற்றுவிடும் என்று அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
கஞ்சா, அபின் ஆகியவற்றைக் குழாய்வழியாக நுகர்வோர்கள் காணும் இனிய கனவுகளுக்கு ஒப்பானது என்பதால் ஆங்கிலத்தில் இதனைக் குழாய்க் கனவு(Pipe dream) என்பர். நம்பத்தகா நம்பிக்கைக் கனவு என்றே இதனை விளக்குவர். இருப்பினும் எதிர்மறையான பகற்கனவு குறித்துத் தேவையற்று அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
Oneiropolima என்னும் கிரேக்கச்சொல்லிற்குப் பகற்கனவு எனப் பொருள்.
00
- பகற்பொழுது வெருளி – Emarphobia
பகற்பொழுது தொடர்பான அளவுகடந்த பேரச்சம் பகற்பொழுது வெருளி.
சூரிய ஒளி வெருளி(Heliophobia), பகலொளி வெருளி (Phengophobia/Eosophobia) போன்ற வெருளியே பகற்பொழுது வெருளி. ஆனால், சூரியன் இருந்தாலும் மறைந்திருந்தாலும் பகற்பொழுது குறித்துத் தேவையற்ற பேரச்சம் ஏற்படுவதால் தனியாக் குறித்துள்ளனர். பகற்பொழுது வெருளி எதிர்காலம் குறித்த நம்பிக்கையற்ற தன்மையை வெளிப்படுத்துவதாகக் கூறுகின்றனர்.
00
- பகா எண் வெருளி – Primotitusheteronumerophobia
பகா எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் பகா எண் வெருளி.
இலத்தீன் மொழியில் ‘primus’ என்றால் முதல் என்று பொருள். இது பகா எண்களுக்கான அடிப்படை.
எண் வெருளி(Arithmophobia or Numerophobia), கணக்கு வெருளி (Mathemaphobia/Mathemophobia) உள்ளவர்களுக்குப் பகா எண் வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5







Leave a Reply