அகநானூற்றில்  ஊர்கள்  – 2/7

அழுங்கல்

     பல விழுதுகளைக் கொண்ட ஆலமரத்தில் அமர்ந்திருக்கும் பறவைகளின் ஒலியைக் கொண்ட ஊர் அழுங்கல் ஆகும்.

     பல்வீழ் ஆலப்போல

     ஓலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே (அகநானூறு 70)

     “என்னும் நோக்கும் இவ் அழுங்கல் ஊரே  (அகநானூறு 180)

என்னும் வரிகள் உணர்த்துகின்றன.

     அன்றை அன்ன நட்பினன்

      புதுவோர்த்து அம்ம அவ் அழுங்கல் ஊரே

என்று குறுந்தொகையும் அழுங்கல் ஊரின் சிறப்பை எடுத்துரைக்கின்றது.

     கரிய கூந்தலையும் திருத்த முறச் செய்த அணிகலன்களை அணிந்த தலைவி வாழும் திருந்திழை ஊர் என்பதனை,

     ஆர்வம் சிறந்த சாயல்

      இரும்பல் கூந்தல் திருந்திழை ஊரே   (அகநானூறு 94)

என்ற அடி குறிப்பிட்டுள்ளது.

அழுந்தை

     திதியன் எனும் குறுநில மன்னனின் ஊர் அழுந்தூர். கோசர்கள் அன்னி மிஞிலியிடம் ஏற்பட்ட பகை தீர்த்து மகிழ்ந்திருந்த ஊர் என்பதை,

     கடுந்தேர்த் திதியன் அழுந்தை கொடுங்குழை

      அன்னி மிஞிலியின் இயலும்           (அகநானூறு 196)

என்னும் வரிகள் மூலம் அறிய முடிகிறது.

அழும்பில், குடவாயில், கழுமலம்

                அழும்பில், குடவாயில் ஆகியவை சோழ நாட்டிற்குரியதாகவும், கழுமலம் சேர நாட்டிற்குரிய ஊர்களாகவும் அமைந்துள்ளன. இதில் குடவாயில் என்பது குடந்தை என மருவியுள்ளது. இது குளிர்ந்த குடவாயில் என்று அதன் வளத்தால் இவ்வூர் சிறப்புப் பெற்றது. தளராத புதுவருவாயையும் நெல் விளையும் சிறப்பினையும் கொண்டது. இங்கு யானைகள் படிந்து நீராடும் குளங்களும் நெருங்கிய பசுமையான காவற்காடுகளும் அமைந்துள்ளன. இவ்வூரில் உள்ள தலைவியின் நல்ல பண்புகள் சிறப்பாகக் கூறப்படுகின்றன..

                கணையன் அகப்பட கழுமலம் தந்த

                 …………………………………….

                 அழும்பில் அன்ன அறாஅ யாணர்

                 பழம் பல் நெல்லின்……………….

                 ……………………………………

                 தண் குடவாயில் அன்னோள்”                         (அகநானூறு 44)

அழும்பில் எனும் ஊர் விறல்வேள் என்னும் குறுநில மன்னனுக்குரியது என்பதனை மதுரைக் காஞ்சி குறிப்பிட்டுள்ளது. (மதுரைக்காஞ்சி 342-45). சேரன் செங்குட்டுவன் அமைச்சர்களுள் ஒருவன் அழும்பில் வேள் என்று சிலப்பதிகாரமும் குறிப்பிட்டுள்ளது.

  பகற்குறி மறுத்து இற்செறிப்பை அறிவுறுத்தி தலைவியை மணந்து கொள்ளுமாறு தோழி வரைவு கடாயம் செய்யும்போது தலைவியின் பாதுகாப்பிற்காகக் குடந்தை என்று ஊரினை,

                “கொற்றச் சோழர் குடந்தை வைத்த”             (அகநானூறு 60)

என்ற பாடல் வரி மூலம் அறியலாகிறது. இதனை,

                “பிறங்குறிலை மாடத்து உறைந்தை போக்கி”      (பட்டினப் பாலை 285)

என்ற பட்டினப் பாலையும் வழியுறுத்துகிறது. உறையூர் என்பது உறந்தையாக மாறியது.

 

ஆமூர்     

  ஆமூர் என்பது குறும்பொறை எனும் மலைக்குக் கிழக்கே அமைந்து வானத்தில் இடி முழங்கும் உயர்ந்த உச்சியையும் மணங்கமழும் மலைச் சாரலையும் உடையது.

                கொடிமுடி காக்கும் குரூ உக்கண் நெடுமதில்

                 சேண் விளங்கு சிறப்பின்ஆமூர் எய்தினும்                 (அகநானூறு – 159)

சிறந்த நிறம் தீட்டப் பெற்ற நெடிய மதில்களையும், சிறிது எல்லைபோய் நின்று காண்பார்க்கும் புகழான் உயர்வாக விளங்கும் சிறப்பினையும் உடையது இவ்வாமூர். இப்பாடலை எழுதிய ஆசிரியர் ஆமூரைச் சார்ந்தவர் அதனால் ஆமூர்க் கவுதமன் சாதேவனார் எனப்பட்டார்.

     ‘அந்தண் கிடங்கின் அவன் ஆமூர் எதியின்’ என்ற சிறுபாணாற்றுப் பாடல் வரிகளும் ஆமூரின் சிறப்பினை எடுத்துரைக்கின்றது.

    – தி. இராதா,

முனைவர் பட்ட ஆய்வாளர்(பகுதிநேரம்),

அரசு மகளிர் கலைக்கல்லூரி, கிருட்டிணகிரி

(தொடரும்)