(அகல் விளக்கு – மு.வரதராசனார். 25. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 10 (தொடர்ச்சி)

திருவிழாக்களும் இப்படிப்பட்ட ஒரு கிளர்ச்சியை அளிப்பதனால்தான் மக்கள் மேலும் மேலும் அவற்றை விரும்புகிறார்கள் எனத் தெரிகிறது. மக்கள் கூட்டத்தை மறந்து கடல் அலைகளின் அருகே சென்று நிற்கும்போது என் மனம் அந்த அலைகளின் எழுச்சியிலும் ஈடுபட்டுத் துள்ளும். இப்படிப் பலவகையிலும் என் உள்ளத்தைக் கவர்ந்த கடற்கரைக்கு வாரந்தோறும் சென்று வர விரும்பினேன். ஆனால், சந்திரனோ முதல் வாரத்தோடு என்னைக் கைவிட்டான். வேறு வேலை, வேறு வேலை என்று சொல்லி வந்தபடியால், கடற்கரைக்கு அழைத்துச் செல்லுமாறு நான் அவனைக் கேட்கவில்லை. அவ்வாறு கேட்பதும் சிறுபிள்ளைத் தன்மைபோல் எனக்குத் தோன்றியது. ஒன்றும் தெரியாத சிறு பையன் என்று மற்றவர்கள் எள்ளி நகையாடுவார்களோ என்று அஞ்சினேன்.

அதனால் என் வகுப்பு மாணவர்கள் யாரேனும் அழைத்தபோது அந்த அழைப்பை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு கடற்கரைக்குச் சென்றுவந்தேன். சில வாரங்கள் கழிந்த பிறகு அவர்களோடு செல்வதற்கும் தயங்கினேன். காரணம், முதலில் நான் யாரோடு சேர்ந்து சென்றேனோ அவர்களிடம் தீய பழக்கங்கள் இருப்பதைக் கண்டுகொண்டேன். அவர்கள் பெண்களைப் பார்த்துக் காமக்கிளர்ச்சியான பேச்சில் ஈடுபடுவதும், ஆசிரியர்களைப்பற்றி மதிப்புக் குறைவாகப் பேசுவதும் எனக்குப் பிடிக்கவில்லை.

உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் சொன்ன அறிவுரை என் மனத்தில் ஊறிப்போயிருந்தபடியால் புகைக்குடியை நான் மிக வெறுத்தேன். அந்தச் சில மாணவர்கள் தாங்கள் புகைத்துக் கெட்டதோடு நிற்காமல், மற்றவர்களையும் கெடும்படியாகத் தூண்டி வற்புறுத்தினார்கள். அதில் அவர்களுக்கு ஒரு தனி ஆர்வம் இருந்தது. நான் தடுத்தும் மறுத்தும் நடந்தது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே பகையாக முற்றுவதற்கு முன்பே, அளவோடு நின்று பழக்கத்தை வரையறை செய்துகொள்வது நல்லது என்று மெல்ல ஒதுங்கினாற்போல் நடந்தேன்.

சந்திரன் என்னை அழைத்துச் செல்ல முடியாதபடி கடமைகளில் ஈடுபட்டிருந்தால், நான் சிறிதும் வருந்தியிருக்க மாட்டேன். ஒருநாள் அவனுடைய அறையை நெருங்கிச் சென்றபோது, “எங்கே சந்திரா போயிருந்தாய்?” என்று கேட்ட ஒருவனிடம், “வேறு எங்கே! மெரினாவுக்குத்தான்” என்று சந்திரனே சொன்னான். அதைக் கேட்டபோது எனக்கு எப்படி இருக்கும்? என்னை விட்டுத் தனியே கடற்கரைக்குச் செல்லும் அளவிற்கு நட்பு மாறிவிட்டதே என்று வருந்தினேன்.

வாலாசாவில் இருந்தபோது எல்லா வகையிலும் என்னைப் போலவே நடந்து, எனக்கு உற்ற தோழனாக இருந்த சந்திரனிடத்தில் ஏற்பட்ட மாறுதல்களைக் கண்டு என் உள்ளம் நொந்தது. சிலவற்றைக் கடிந்து திருத்த வேண்டும் என்றும் என்மனம் தூண்டியது.

ஆனால், சொல்லிப் பயன்படாதபோது ஏன் சொல்லவேண்டும் என்று எண்ணினேன். பெருங்காஞ்சியில் அவனுடைய தந்தை சாமண்ணா, “நீ அடுத்த ஆண்டில் கல்லூரியில் படிப்பதாக இருந்தால்தான் சந்திரனையும் அனுப்புவேன். இல்லையானால் நிறுத்திவிடுவேன்” என்று என்னிடம் சொல்லியது நினைவுக்கு வந்தது. அவனுடைய தந்தை என்னைப் பற்றி இவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தபோது நான் ஒன்றும் கூறித் திருத்தாமல் என்னளவில் அமைதியாக நடப்பது தகாது என்று என் மனச்சான்று சுட்டிக்காட்டியது. அவ்வாறே சொல்லிப் பார்ப்போம் என்று ஒரு நல்ல வாய்ப்பை எதிர்பார்த்திருந்தேன்.

ஒருநாள் நான் படுக்கையை விட்டு எழுந்ததும் அவனுடைய அறைக்குச் சென்று எட்டிப் பார்த்தேன். அவன் கண் விழித்தபடி படுத்திருந்தான். சன்னல் வழியாக என் தலையைக் கண்டதும், “வேலு! என்ன? ஏன் பார்க்கிறாய்?” என்றான். சிறிது அச்சத்தோடு நின்றேன். எழுந்து கதவைத் திறந்து, “வா” என்றான். உள்ளே சென்று உட்கார்ந்தேன். “என்ன! படிப்பு எல்லாம் எப்படி இருக்கிறது?” என்று நல்ல மனநிலையோடு கேட்டான்.

“ஒரு வகையாக இருக்கிறது. நீதான் சொல்லித் தருவதில்லயே, உன்னை இங்கே பார்ப்பதே அரிதாக இருக்கிறதே” என்றேன்.

“எனக்கு எத்தனையோ வேலை!” என்று நேரே என் முகத்தைப் பார்க்காமல் வேறு எங்கோ பார்த்துச் சொன்னான்.

“நாம் இங்கே வந்தது படிப்புக்காகத் தானே? வேறு கடமைகள் எதற்காக?”

“கல்லூரி என்றால் படிப்பு மட்டுமா?”

“அதுதான் முக்கியம். அது நல்லபடி முடிந்தால், ஓய்வு இருந்தால் மற்றவற்றை அளவாகக் கவனிக்கலாம்.”

“ஓ! எனக்கு அறிவுரை சொல்ல வந்துவிட்டாயா?”

“உன் நன்மைக்காகத்தானே சொல்கிறேன்?”

“என் நன்மையை நான் கவனித்துக் கொள்வேன், நீ உன் வேலையைப் பார்.”

“மதிப்பெண் குறைவாக வாங்கினாய் என்று சென்ற ஆண்டில் அப்பா வருத்தப்பட்டார்.”

சந்திரன் பேசவில்லை. முகம் ஒரு வகையாகக் கலக்கம் உற்றது.

அவன் மனம் வருந்தியதை உணர்ந்தேன். அதற்குமேல் பேச என்னாலும் முடியவில்லை. அப்போது நிலவிய அந்த அமைதியை, “என்ன சந்திரன்! நாடகத்தில் பெண்ணாக நடிக்கப் போகிறாயாமே!” என்ற குரல் கலைத்தது. புகைபிடித்து வெளியிட்டுக்கொண்டே ஒருவன் உள்ளே நுழைந்தான்.

“இப்போது இவ்வளவு காலையில் என்ன நாடகத்தைப் பற்றி?” என்றான் சந்திரன்.

“அதற்கு அல்ல ஐயா! பெண் வேடம் என்றால் பையன்களின் கிண்டல் மிகுதியாகுமே! அதற்காகச் சொன்னேன்” என்றான் வந்தவன்.

“ஏதோ ஒரு பகுதி நாடகத்தில் நடிக்கலாம் என்று போனேன். ஏதோ ஒன்று கொடுத்தார்கள். சரி என்றேன்.”

“நடத்து! உன் பாடு கொண்டாட்டம் தான்” என்று சொல்லியவாறே அவன் என்னைப் பார்த்து, “இவர் உங்கள் ஊர் அல்லவா? தம்பி இருக்கிற இடமே தெரியவில்லையே. இன்னும் கல்லூரி, பழக்கம் ஆகவில்லைபோல் தெரிகிறது” என்றான்.

சந்திரன் ஒரு புன்முறுவல் செய்து, “இவன் எப்போதும் அப்படித்தான்” என்றான். “குளித்துவிட்டுப் போக வேண்டும்” என்று சொல்லிக்கொண்டே எழுந்து சட்டையைக் கழற்றினான்.

“உன் முகத்துக்குப் பெண் வேடம் பொருத்தம்தான். ஆனால் உயரமாக இருக்கிறாய். கொஞ்சம் குள்ளமாக இருந்தால் நன்றாக இருக்கும்” என்றான் வந்தவன்.

நான் சந்திரனுடைய முகத்தை நன்றாகக் கவனித்தேன். அவனுடைய முகத்தில் முன் இருந்த ஒளி இல்லை. வாலாசாவில் இருந்தபோது கற்பகத்தின் முகம் போலவே இருந்தது. இப்போது அவ்வளவு சொல்ல முடியாது. முகம் மாறி இருந்தது. வற்றினாற்போல் இருந்தது. மார்பில் எலும்புகள் தெரிந்தன. தசைப்பற்று உடையவன் என்று சொல்ல முடியாவிட்டாலும், எலும்பு தெரியாத மார்போடு அளவான வளர்ச்சியோடு இருந்தான் முன்பு. பெருங்காஞ்சியில் கிணற்றில் குளித்தபோது நன்றாகக் கவனித்திருக்கிறேன். என் மார்பில் எலும்பு தெரிவது உண்டு.

அவன் மார்பிலும் முதுகிலும் தசைநார்கள் நன்றாக அமைந்து, எலும்புகள் மறைந்திருந்தன. அந்த நிலைமை எப்படி மாறியதோ தெரியவில்லை. என்ன கெட்ட பழக்கத்தால் உடம்பைக் கெடுத்துக் கொண்டானோ என்று வருந்தினேன். வேளைக்கு உணவு கொள்ளாமல் வீணான வேலைகளை மேற்கொண்டு அலைந்து உடம்பைக் கெடுத்துக் கொண்டானோ, தெரியவில்லை.

புகைப் பழக்கம் மேற்கொண்டானோ என்றும் எண்ணினேன். அதற்கு இடம் கொடுக்கமாட்டான் என்று உறுதியாக நம்பினேன். அவனுடைய உதடுகள் வெந்து கறுத்திருக்கின்றனவா என்று கவனித்தேன். அவற்றில் வறட்சி மட்டும் இருந்தனவே தவிர, என்றும் போல் செந்நிறமாக அழகாக இருந்தன. ஆகையால் புகைப்பழக்கத்துக்கு ஆளாகவில்லை என்று மகிழ்ந்தேன்.

அவர்கள் இருவரையும் பேச விட்டுவிட்டு, நான் வெளியே வந்தேன். என் அறைக்கு வந்த பிறகு, படிப்பில் குறை இருக்கும்போது சந்திரன் நாடகத்திற்கு ஏன் இசைய வேண்டும் என்று எண்ணினேன். அவனைத் திருத்துவதற்கு வழி என்ன என்று கலங்கினேன்.

நாடகத்தின் ஒத்திகைகள் நாள்தோறும் மாலையில் நடைபெற்றன. உணவு விடுதியில் விழாவுக்கான நாடகம் அது. ஒத்திகைக்கு நானும் இரண்டு நாள் போயிருந்தேன். சந்திரன் என்னைப் பார்த்துப் புன்முறுவல் செய்தானே தவிர, பேசவில்லை. நாடகத்தில் வரும் பேச்சுப் பகுதிகளைக் கையில் வைத்துப் படித்துக்கொண்டிருந்தான். ஒத்திகையின் போது, நன்றாகவே நடித்தான். பெண்ணைப் போன்ற தோற்றம் அவனுக்கு இன்னும் சிறிது இருந்தது.

ஆகவே, அவன் நடிக்கத் தொடங்கியபோது எல்லோரும் போற்றிச் சிரித்து ஆரவாரம் செய்தார்கள். நடக்கும் நடையிலும் குலுங்கும் அசைவிலும் முகத்தின் திருப்பங்களிலும் பெண்ணைப் போலவே நடித்தான். அவன் எப்படித்தான் வெட்கம் இல்லாமல் இவ்வாறு நடிக்கிறானோ என்று நான் வியந்தேன். வாலாசாவில் இருந்தபோது இதற்கு வேண்டிய அறிகுறிகளே அவனிடம் காணப்படவில்லை.

சென்னைக்கு வந்தபிறகு இந்த ஒன்றரை ஆண்டில் இந்தக் கலையை எப்படிக் கற்றுக்கொண்டானோ, தெரியவில்லை. பெண்களை நன்றாகக் கவனித்துப் பார்த்துப் பழகினால் தவிர, அவர்களின் நடை உடை பாவனைகளை அவ்வளவு ஒன்றாகக் கற்றுக்கொள்ள முடியாது. ஒருகால், சினிமாவுக்கு அடிக்கடி சென்று பார்த்துப் பெண்களின் நடை முதலியவற்றைக் கற்றுக் கொண்டிருக்கலாம். கல்லூரிப் படிப்பை நன்கு கற்காமல், இதில் பெறும் தேர்ச்சியால் பயன் என்ன என்று எண்ணி வருந்தினேன்.

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார், அகல்விளக்கு