அதிர வைத்த தினகரனின் அதிரடி வெற்றி! 

  இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், கனவுகளில்  வாழ்ந்தவர்களும் அவர் வெற்றி பெறக்கூடாது எனக் கருதியவர்களும் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற எண்ணிய முகவர்களும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். சின்னமும் கட்சியும் ‘மத்திய ஒத்துழைப்பால்’ கிடைத்தமையால் மக்கள் ஆதரவும் கிடைக்கும் எனத் தப்புக் கணக்கு போட்டமையால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

 ‘’தினகரன் வெற்றி பெற்றால் பாசகவின் பிடி தளரும் என்ற நம்பிக்கையில் உள்ளவர்கள் அவர் வெற்றி பெறுவதை விரும்புகின்றனர்” என முன்னரே குறிப்பிட்டுள்ளோம். தினகரனின் செல்வாக்கு நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்வதாகவும் தெரிவித்து இருந்தோம். இவற்றைப் புரிந்து கொள்ளாமல், அச்சத்தாலும் ஆசையாலும் பாசகவின் அடியில் வீழ்ந்தவர்களால் வெற்றிக்கனியைச்  சுவைக்க இயலவில்லை. இந்த ஏமாற்றம் அவர்களை மேலும் அடிமைத்தனத்தில் மூழ்கடிக்கச் செய்தால் அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல!

  தினகரன், குடும்பத்தினர், நண்பர்கள் எனப் பல தரப்பாரிடமும் மத்திய ஏவுகணைகளான அதிரடி ஆய்வுகள், வழக்குகள், சிறைப்பிடிப்பு போன்றவற்றால் மிரட்டி ஆதரவை ஒழிக்க  ஆக்கலாம்; ஆட்சியைத் தொடரலாம் என்ற ஆசைவலையில் ‘மத்திய முதலாளிகள்’  இவர்களைச் சிக்க வைக்கலாம். ஆனால், இத்தகைய முயற்சிகள் தினகரனுக்கு வலுசேர்க்கும் உரமாகத்தான் அமையும். இதனை ஆளும் பொறுப்பில் உள்ளவர்கள் எண்ணிச்செயல்பட வேண்டுகிறோம்.

 தினகரன் வெற்றிக்களிப்பில், எதிரிகள்  விரிக்கப்போகும் வலைகளை மறந்துவிடக்கூடாது. சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பேற்கக்கூட வில்லங்கம் விளைவிக்கலாம்; சட்டமன்ற உறுப்பினர்கள் இவர் பின் நின்று இவரை முதல்வராக்கிவிடுவர் என்ற அச்சத்தில் எந்தத் தொல்லையின் எல்லைக்கும் செல்லலாம்; வழக்கம்போல் தன் வினைத்திறத்தால் அவற்றைப் புறந்தள்ளி வெற்றிகாண வாழ்த்துகிறோம்.

 நேற்றுவரை எப்படி இருந்திருந்தாலும், அதிமுகவின் பெரும்பான்மைத் தொண்டர்களும் பெரும்பான்மை மக்களும் நம்பிக்கை  வைத்துள்ளமையால், இனிமேல் நாடும்மொழியும் தனதிரு கண்கள் எனக் கருதித் தொண்டாற்றிடத் தினகரனை வாழ்த்துகிறோம்!

  தமிழ்நாட்டின் உரிமையையும் தமிழர்களின் நலத்தையும் பேணி ஈழத்தமிழர்கன் விடியலைக் காணும்வகையில் மக்கள்நல, இன நலப்பணியாற்றிப் புகழ் பெற வாழ்த்துகிறோம்.

 பாசகவின் நிழல்ஆட்சி தொடர்ந்து, பாசக தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என முயல்வோர் தவறான பரப்புரைகளையும் கணிப்புகளையும் மேற்கொண்டாலும் தெளிவாக இருந்த மக்களுக்கு வாழ்த்துகள்!

  அதிமுக வெற்றி பெற்றிருந்தால் உலகமே அவர்களை ஏற்றுக் கொண்டதுபோலும் பாசகவின் முறையற்ற செயற்பாடுகள் சரி என்பதுபோலும்  பறைசாற்றியிருப்பார்கள் அல்லவா? அப்படியானால், இடைத்தேர்தலில் தினகரன்  வெற்றிதமிழகமக்களின் முடிவு என ஏற்பதில் என்ன தவறு? செயலலிதாவின் மறைவிற்குப் பின்னர்,  வழிநடத்தத் தகுதியானவர் தினகரன் என அதிமுகவினர் கருதுவாகச் சொல்வதில் என்ன தவறு?  செயலலிதாவின் ஆளுமையைப் பாராட்டுகின்றார்களே! அந்த ஆளுமையின் உருவாக்க வலிமை  சசிகலா என மக்கள் நம்புகிறார்கள் என்பதில் என்ன தவறு?

 வாக்குகளுக்கான விலையைத் தேர்தலுக்குப்பின் தருவதாகச் சொன்ன வாக்குறுதி அல்லது முன்பணம் உரூபாய் இருபது அளித்ததால் வாக்குகள் கிடைத்துள்ளன என்பதும் தவறான வாதம். விலையை முன்னதாகவே அளித்தவரிடம் பொருளைத் தராமல் –வாக்கு அளிக்காமல் – நம்பிக்கையின் அடிப்படையில் வாக்கு அளித்தனர் என்பது தினகரன் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என  எதிர்த்தரப்பினரும்  ஒப்புக்கொள்வதாகத்தானே பொருள்.

  தேர்தல் இலக்கண மாயைகளை உடைத்தெறிந்துள்ளனர் இரா.கி.நகர் வாக்காளர்கள். சாதி, இன அடிப்படையில் வாக்குகளை அள்ளலாம் என்னும் எண்ணத்திற்கும் அடிவிழச்செய்து வாக்களித்துள்ளனர்.

 முதன்மை வேட்பாளர்கள் பெயர்களில் சிலரைப் போட்டியிடச் செய்வதன் மூலம் வாக்குகளைப் பிரிக்கலாம் என்னும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர். இடைத்தேர்தலில், தினகரன் என்னும் பெயருடைய  பிற மூவர் முறையே, 104 வாக்குகளும் 56 வாக்குகளும் 138 வாக்குகளும் மட்டுமே பெற்றுள்ளனர்.  மதுசூதனன்  பெயருடைய வேறிருவர் முறையே 59 வாக்குகளும் 137 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

 நாடாளுமன்ற உறுப்பினர்களே செல்லா வாக்குகளைப் பதியும் நம்நாட்டில் இரா.கி.நகர்தொகுதியில் ஒரு செல்லா வாக்குகூடப் பதிவாகவில்லை.

 கட்சிக்கு அப்பாற்பட்டும் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. விலைபெற்றமையால் விளைந்த விளைவாக இதனைக் கருத இயலாது. தமிழ்மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரிக்கும் அடிமையாட்சி வேண்டா எனக் கருதும் மக்களின் தீர்ப்பே இது.

 இவற்றை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். இரு தரப்பினரும் பணம்அளித்து ஒரு தரப்பை மட்டும் மக்கள்  ஆதரிக்கிறார்கள் என்றால் பணத்திற்கு அப்பாற்பட்ட காரணிகளே வெற்றியைத் தீர்மானித்துள்ளது எனலாம். எனவே, தினகரனின் வெற்றி என்பது வாக்காளர்கள் விரும்பி அளித்த வாக்குகளால்  பெற்றதே!

 இவ்வெற்றி தொடர்வதும் தொடராமல் போவதும் சசிகலா குடும்பத்தினர் கைகளில் உள்ளது. இருப்பினும் இப்போதைய  வெற்றிக்கு உழைத்தவர்களுக்குப் பாராட்டுகள்!

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்

உள்ளியது உள்ளப் பெறின். (திருவள்ளுவர், திருக்கறள் 540)

எனக் குறிக்கோளை அடைவதில் ஊக்கத்துடன்  செயல்பட்டு அதனையே நாளும் எண்ணி வெற்றி கண்ட சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பேற்க இருக்கும் தினகரனுக்கு வாழ்த்துகள்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை -அகரமுதல 218, மார்கழி 09 – மார்கழி 15,  2048 /   திசம்பர் 24  – திசம்பர் 30,  2017