ayalezhuththu-akatru-heaeding

 

ஓர் இனம் என்றும் வாழ அதன் மொழி நிலைத்து நிற்க வேண்டும். அம் மொழி நிலைத்து நிற்க அதன் எழுத்து சிதைக்கப்படாமல் அயல் உரு கலக்கப்படாமல் தூய்மை போற்றப்பட வேண்டும். எனவே, எழுத்தைக் காத்து, மொழியைக் காத்து, இனத்தைக் காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இனத்தைக் காக்கும் கடமைகளில் இன்றியமையாத முதன்மைக் கடமையாக நம் மொழிப் பயன்பாட்டில் அயல் எழுத்தை அகற்ற வேண்டும் என்பதை நாம் உள்ளத்தில் கொள்ள வேண்டும்.

பொதுவாக ஒரு மொழி பேச்சிலும் எழுத்திலும் பயன்பாடின்றிப் போகும்போது அழிகின்றது. இன்றைய இந்தியாவையும் அதனைச் சுற்றியுள்ள நாடுகள் உள்ள பகுதிகளையும் நாம் தமிழ்த்துணைக்கண்டம் என்று சொல்லலாம். தமிழ்த்துணைக்கண்டம் முழுவதும் ஒரு காலத்தில் பேசப்பட்டு வந்த தமிழ் மொழி, எதனால் தான் வழங்கி வந்த நிலப்பரப்பில் குறைந்து போனது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நம் முன்னோர்களில் ஒரு பகுதியினர், சோம்பலினாலும் பிறவற்றாலும் சொற்களைச் சிதைத்துப் பேசி, அவ்வாறு பேசுவதற்கேற்ப வரி வடிவத்தை அமைத்து, பண்பட்ட செவ்வையான ஒலி வடிவும் வரிவடிவும் தமிழுக்கு இருப்பினும் அதைக் குறையுடையதாகக் கருதி, புதிய வரி வடிவங்களுக்கு இடம் கொடுத்ததாலும் அவற்றையே பயன்படுத்திப் புது மொழியாளராக மாறியமையாலும் தமிழ்ப்பரப்பு குறைந்தது. இன்றும் அதனைப் புரிந்து கொள்ளாமல் நாம் மேலும் தமிழைச் சிதைத்துக் கொண்டு உள்ளோம்.

தமிழ் மொழி தான் வழங்கப்படாத பகுதிகளுக்குச் சென்று அங்கே அது புதிய மொழியாக உருப் பெற்றால் நாம் மகிழ்ச்சி அடையலாம். ஆனால், தான் பயன்படும் பகுதியில் செல்வாக்கு இழந்து புது மொழியாக உருப் பெறுவதையும் அப்புது மொழியாளர்கள் புது இனத்தவராக மாறி நமக்கு எதிராகவே செயல்படுவதையும் நாம் இழுக்காகவே கருத வேண்டும். எனவே, இனியேனும் அத்தகைய நிலை வராமல் இருக்க நாம் எழுத்துச் சிதைவைத்தடுத்து மொழித்தூய்மையைப் பேண வேண்டும்.

எழுத்து மாற்றம் மொழி மாற்றமாக மாறியுள்ளமைக்குச் சில சான்று பார்ப்போம்.

ஒரியா மொழி:

நகர் > நொகர்

இரத்தம் > ரொக்தொ

சக்கரம் > சொக்ரொ

உத்தமம் > உத்தொம்

மல்லன் > மொல்லொ

ஈசுவரன் > ஈஃச்பொர் (ஈதலைச் சுரப்பவன் ஈசுவரன் : தமிழ்ப் பெயரே)

அம்மா > மா

அப்பா > பா பா

குமாரி > குமாரீ

வாரம் > பார்

பனி > பாணி

ஒட்டகம் > ஒட்

குயில் > கோஇலி

நீலம் > நீள்

 குசராத்தி:

பழம் > பள்

தரப்பு > தரப்

பேரிகை > பேரீ

தழை > தள்

நடிகன் > நட்

சுண்ணாம்பு > சூநோ

பூசை > பூஃயா(பூஜா)

அரத்தினம் > ரத்ந

ஈசுவர் > ஈஃச்வர்

கண்டம் >  கண்ட

காது > காந்

அப்பா > பாப்

மாமா > மாமா

மாமி > மாமீ

பாலகி > பாலகீ

வாரம் > வார்

சித்திரம் > சித்ர

சித்திரக்காரர்> சித்ரகார்

தாழ்ப்பாள் >  தாளு

பாத்து (உணவு) > பாத்

முள்ளங்கி > மூளா

தூதன் > தூத்

காவியம் > காவ்ய

வங்காளம்:

சங்கு > ஃசங்க்ஃக(ஸங்க்ஹ)

ஞானம் >  ஃய்ஞாந்(ஜ்ஞாந்)

மந்தம் > மந்த்ஃகர்

கம்பளி > கம்பல்

கற்பனை > கல்பநா

மந்திரி > மந்த்ரீ

சங்கம் > ஃசங்கஃக(ஸங்கஹ)

அம்மா > மா

அப்பா > பாபா

மாமா > மாமா

மாமி > மாமீமா

கபாலம் > கபால்

முகம் > முக்ஃக்(முக்ஹ்

இது > இஃகா

தாடி > தாறி

நகம் >நக்ஃக்

இரத்தம் > ரக்த

சமதளம் > ஃசமதல்

தாழ்ப்பாள் > தாலா

பாத்து > ப்ஃகாத்

சலம்> ஃயல்(ஜல்)

 மராத்தி:

நாவாய் > நவ்

சித்திரம் > சித்ர

கிஞ்சித்து > கிஞ்சிட்

அத்தை > அத்ய

மாமி > மாமீ

செவ்வந்தி > செவந்தி

பூ > பூல்

சூரியன் > சூர்ய

பல்லி > பல்

பனி>பாநி

கன்னடம்:

பள்ளி > ஃகள்ளி

பாடு> ஃகாடு

எதிர் > எதிரு

ஓலைக்காரன் > ஓலகார

செலவு > கெலவு

அப்பன்>அப்ப

அம்மை>அம்ம

ஐயன்>அய்ய

ஔவை>அவ்வெ

தந்தை>தந்தெ,

தாய்>தாயி

அண்ணன்>அண்ண

 அக்கா>அக்க

 தம்பி>தம்ம

 தங்கை>தங்கி

 மாமன்>மாவ

 அத்தை >அத்தெ

மலையாளம்:

தலை> தலை

முகம்> முகம்

கண்> கண்ணு

மூக்கு> மூக்கு

மீசை> மீச்ச

நெற்றி> நெத்தி

வாய்> வாயா

பல் > பல்லு

நாக்கு> நாக்கு

காது >காது

கழுத்து> கழத்து

கை >கை

விரல் >வெரல்லு

புத்தகம் > புஃச்தகம்

மனிதக் குரங்கு>   மனுஃடகுரங்கு( மனுஷகுரங்கு)

தெலுங்கு:

அண்ணன் >அன்ன

அக்கா> அக்க

தாத்தா >தாதா

மாமனார் >மாமகாரு

அத்தை >அத்தகாரு

குடும்பம் >குடும்பமு

வாரம்> வாரமு

இடம்> எடமு

பக்கம் > ப்ரக்க

விலை > வெல

புகை > பொக

உடல் > ஒடலு

முனை > மொன

உரை > ஒர

பொம்மை > பொம்ம

உவமை > உவம

குப்பை > குப்ப

கோழி > கோடி

மேழி > மேடி.

 சிங்களம்:

பொடி(சிறிய) >பொடி

பாலம்>பாலம்

அக்கா>அக்கா

குமாரன்> குமாரன்

சுதை(வெண்மை)  > சுதை

கணிகை> கணி

மலர்> மல

பாத்து(உணவு)> பாத்

தூம(ம்)(புகை) > தூம

கரம்> கர (தோள்)

மனிதன்> மனி

உயரம்-உசரம்> உச

நாதம்> நாதய

வீரன்> வீரயா

பூமி> பூமிய

தூது> தூதயா

நரி>நரியா

பெட்டி>பெட்டிய

கோப்பை>கோப்ப

பொத்தகம்>பொதக்

இரவு>இரா

  சான்றுக்கு இங்கே மிகச் சிலதான் அளிக்கப்பட்டுள்ளன. துளு,  குடகு, துதம், கோதம் ,  கோண்டு,  கூ அல்லது கோந்த், இராச்மகால் அல்லது மாலர், ஒரயான் முதலான அனைத்துத் தமிழ்க்குடும்ப மொழிகளிலும் இவைபோல்தான் தமிழ்ச் சொற்கள் உருமாறியுள்ளன. (இவை, ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாக மாற்றி ஒலிக்கப்படல், கடைசி எழுத்து மறைதல், கடைசியில் உகரம் வருதல், தமிழ் எழுத்து கிரந்த ஒலிப்பில் ஒலிக்கப்பட்டு அந்த எழுத்தைப் பயன்படுத்தல் என மிக நீண்ட ஆய்வு விளக்கங்களை மொழிஞாயிறு பாவாணர், செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் முதலான பல அறிஞர்களும் அறிஞர் கால்டுவெல் வழியில் நின்றும் அவரது ஆய்வுகளில் உள்ள குறை நிறைகளைச் சுட்டிக்காட்டியும் சிறப்பாக விளக்கியுள்ளார்கள். அவை பற்றிய ஆய்வுரைகளை அவர்களது படைப்புகளில் இருந்து நாம் அறியலாம்.) தமிழ்ச் சொற்கள் செம்மையாக ஒலிக்கப்படாமையாலும் எழுதுவது போல் பேச வேண்டிய முறைக்கு மாறாகப் பேசுவதுபோல் எழுதும் முறையைப் பின்பற்றியமையாலும், அவ்வாறு சொற்களைச் சிதைத்தபின்பு அவற்றை எழுதப் புதிய வரிவடிவங்களை உருவாக்கியமையாலும், அவற்றில் கிரந்தத்தைப் புகுத்தியமையாலும் புதிய மொழிகளாக மாறியுள்ள கொடுமையை நாம் உணரலாம். மேற்குறித்த சொற்கள் எல்லாம் பேச்சிலும் எழுத்திலும் செம்மையான முறையில் பயன்படுத்தப்பட்டிருப்பின் இன்றைக்கு இந்தியா என்று அழைக்கப்படுகிற நிலப்பரப்பு முழுமையும் தமிழ்நிலமாகத்தானே இருந்திருக்கும். அதனை உணராமல் மேலும் நாம் தமிழ்நிலப்பரப்பைக் குறைக்கும் வகையிலும் தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் அழிக்கும் வகையிலும் எழுத்துச் சிதைவிற்கு வழி வகுக்கலாமா?

  நஞ்சைக் கொடுத்து அமிழ்து என்று சொல்லுவோர் இன்றைக்கு இருப்பது போல் அன்றைக்கும் இருந்துள்ளனர். தமிழ் மொழியின் ஒலி வடிவ, வரி வடிவச் சிறப்பைப் புரிந்து கொள்ளாமல் தமிழ் நெடுங்கணக்கு குறைபாடுடையதாக எண்ணி இயல்பிற்கு மாறான வரி வடிவங்களைப் புகுத்தியுள்ளனர். எண்ணையும் எழுத்தையும் கண்களாகப் போற்ற வேண்டும் என வலியுறுத்தியதுடன் அத்தகைய போக்கு தவறு என்பதால்தான் எண்ணெழுத்து இகழேல் என்று அன்றே நம் ஆன்றோர்கள் சொல்லியிருக்கின்றனர். நம்மில் சிலர், இன்றும் அதனைப் புரிந்து கொள்ளாமல் சீர்மையும் சிறப்பும் மிக்க நம் தமிழ் வரிவடிவத்தை இகழ்ந்து குறைபாடுடையதாகப் பொய்யைப் பரப்பி வரிவடிவச் சிதைவிற்காக அரும்பாடுபட்டு வருகின்றனர். [விளக்கமாக அறிய வரிவடிவச்சிதைவு வாழ்விற்கு அழிவு என்பது முதலான கட்டுரைகளை இவ்வலைப்பூவிலேயே (thiru-padaippugal.blogspot.com) காண வேண்டுகின்றேன்.]

  எந்த ஒரு மொழியிலும் எல்லா மொழிகளிலும் உள்ள ஒலி வடிவங்களுக்கு ஏற்ற வரிவடிவங்கள் அமையாது. அந்தந்த மொழி உருவான சூழலுக்கேற்பவும் தேவைக்கேற்பவும்தான் வரி வடிவங்கள் அமையும். இதனைப் பிற மொழியாளர்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். ஆனால், அனைத்து மொழிகளிலும் சிறப்பாகவும் செம்மையாகவும் அமைந்துள்ள தமிழ் மொழிக்கு உரியவர்களான நாம் அதனைப் புரிந்து கொள்ளாமலும் புரிந்து கொண்டிருப்பினும் வேண்டுமென்றே தமிழ் எழுத்துகளை அழிக்க எண்ணுவோர் வலையில் வீழ்ந்தும் வரிவடிவங்களைக் காக்கத் தவறுகிறோம். எனினும் இத்தகைய அடாத போக்கிற்கு நாம் நம் காலத்திலாவது முற்றுப்புள்ளி இட வேண்டும். அயல் எழுத்து அகற்று என்பதே நம் முழக்கமாகவும் செயலாகவும் இருத்தல் வேண்டும். பிற மொழிச் சொற்களை நாம் பயன்படுத்த உதவும் கிரந்த எழுத்துகளை அடியோடு அகற்ற வேண்டும். அவ்வாறு நாம் செய்வது எந்த மொழிக்கும் அல்லது மொழியாளருக்கும் எதிரானதல்ல. ஏனெனில் கிரந்தம் என்பது மொழியல்ல. தமிழைச் சிதைக்கவும் சமசுகிருதத்தைப் படிக்கவும் உருவாக்கப்பட்ட எழுத்து வடிவங்களே. தமிழைத் தமிழாகவே அறிந்தவர்களும் சமசுகிருதத்தைச் சமசுகிருமாகவே அறிந்தவர்களும் உரிய மொழிக்குரிய வரிவடிவில் அவற்றைப் படிக்கும் வாய்ப்பே போதுமானது. தமிழுக்கு ஆக்கம் தருவதாகக் கூறிக் கிரந்த எழுத்துகளைப் புகுத்துவதும் அவற்றைத் தமிழ் எழுத்துகள் வரிசையில் பாடங்களில் சொல்லித் தருவதும் மிக மிகத்தவறாகும்.

  கிரந்தத்தைப் புகுத்தும் மற்றொரு முயற்சிதான் கணிணியில் சீருரு அல்லது ஒருங்குகுறி என்ற போர்வையில் கிரந்தத்தைப் புகுத்துவதாகும். தமிழ் எழுத்துகளில் கிரந்தத்தைச் சேர்க்கவோ கிரந்த எழுத்து வரிசைகளில் தமிழ் எழுத்துகளைச் சேர்ப்பதோ கூடாது என்பது மட்டுமல்ல; மேலே கூறிய காரணங்களால் கிரந்தம் என்பது சீருருவில் அல்லது ஒருங்குகுறியில் இடம் பெறத் தேவையில்லை என்பதையும் நாம் ஒன்றுபட்டு உணர்த்த வேண்டும். கிரந்தத்திற்குத் தனியாகச் சீருரு அல்லது ஒருங்குகுறி இருக்கலாம் என எண்ணுவது நம் தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதற்கு ஒப்பாகும். கிரந்த எழுத்துகள் பட்டியலில் தமிழ் எழுத்துகளையும் தமிழ் எண்களையும் கிரந்த எழுத்துகள் என்றும் கிரந்த எண்கள் என்றும் இப்பொழுதே காட்டியுள்ளனர். பின்னர், கிரந்தத்தில் இருந்து தமிழ் வரிவடிவம் உருவானது எனக் கூறிப் பல மொழி வரிவடிவங்களுக்கு உதவும் கிரந்தமே போதும் எனக்கூறி அதனை நிலைக்கச் செய்வர். இப்பொழுதே கிரந்த வரிசையில் சில தமிழ் எழுத்துகளும் இருக்கின்றன அல்லவா? சீருரு அல்லது ஒருங்குகுறியில் அவை இடம் பெற்ற பின்பு ஒரே வகை எழுத்து  வெவ்வேறுபட்டியலில் இருக்கும் பொழுது தொழில் நுட்பச்சிக்கல் வரும். அவ்வாறு வருவதை எப்பாடுபட்டேனும் நீக்கலாம் எனச் சிலர் முயன்றாலும் அது தேவையற்ற ஒன்று.

  கல்வெட்டுகளைப் படிக்கக் கிரந்தம் தேவைப்படுகிறது என்பது சிலர் வாதம். இப்போது கிரந்தம் படிக்கத் தெரிந்தவர்களைக் கொண்டு அவற்றை எல்லாம் விரும்பும் மொழியில் மாற்றம் செய்து ஆவணமாக்கி விட்டால் போதுமானது. இதற்காகக் கிரந்தம் தேவை யென்று அனைவரும் படிக்க வேண்டிய தேவையில்லை. நஞ்சைப் பாலில் கலந்தாலும் பாலை நஞ்சில் கலந்தாலும் தீமைதான். தீமை தரும் கிரந்த நஞ்சு தனியாகவும் இருக்க வேண்டிய தேவையில்லை. இருப்பின் அறியாமை மிகுந்த சிலர் அமிழ்தமென எண்ணிப் பயன்படுத்தித் தமிழுக்கு அழிவு சேர்ப்பர்.

  கிரந்தத்திணிப்பைத் தனிமனிதச் செயலாக எண்ணக் கூடாது. மத்திய அரசின் மொழிக் கொள்கையில் ஒன்று, சிறுபான்மையர் மொழிகளைத் தேவநாகரியில் எழுதுதல் என்பது. எனவேதான், எழுத்துரு இல்லாத சௌராட்டிர மொழிக்குத் தமிழ் எழுத்துரு வடிவினை ஒட்டி எழுத்து வடிவங்களை உருவாக்கிய  பொழுது அதற்கு இடம் தராமல் தேவநாகரியைப் பின்பற்றி எழுத்துவடிவத்தை உருவாக்கச் செய்தனர். இந்த அடிப்படையில் பார்த்தால்தான் கிரந்தத் திணிப்பு என்பது இந்தியா முழுமையும் தேவநாகரியும் கிரந்தமுமே இருக்க வேண்டும் என்னும் சதிச் செயலின் பகுதி எனப் புரியும்.

  கணிணியில் சீருரு அல்லது ஒருங்குகுறியில் கிரந்தத்திற்கு இடம் வேண்டுநர் கூறும் முதன்மைக் காரணங்களில் ஒன்று கிரந்தத்தைப் பயன்படுத்தினால் தென்னாட்டு மொழிகளையெல்லாம் எழுதிவிட முடியும் என்பதும் அதனால், தென்னகம் முழுவதும் கிரந்தப் பயன்பாடே போதும் என்பதும் ஆகும். எனவே, இதன் அடிப்படையில் பார்த்தாலும் இந்தியா முழுவதும் தேவநாகரியும் கிரந்தமும் பயன்படுத்தப்பட வேண்டும்; பிற வரி வடிவங்கள் வேண்டா என்பதே மைய நோக்கம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

  சிலர் ஐந்து தமிழ் எழுத்துகளைக் கிரந்தத்தில் சேர்ப்பதால் தமிழுக்குப் பெருமைதானே எனத் திரித்து வாதிடுகின்றனர். ஐந்து எழுத்துகளுடன் எகர, ஒகரக் குறியீடுகளும் சேர்க்கப்பட வேண்டும். கிரந்தத்தில் 16 உயிர் எழுத்துகள் உள்ளன. ழ், ற்,ன் ஆகிய 3 எழுத்துகளைச் சேர்க்கும் பொழுது 16 உயிருடன் சேர்ந்து 48 உயிர்மெய்யாக மாறும். 35 மெய்யெழுத்துகள் உள்ளன. 2 தமிழ்க் குறியீடுகள் சேருவதால் 70  உயிர் மெய் ஏற்படும். ஆக 118 எழுத்துகள் கிரந்த நெடுங்கணக்கில் உருவாக இவை வழிவகுக்கின்றன. இப்பொழுதே சிலர் தமிழில் அறிவியல் முறையில் அமைந்த உகர, ஊகாரக் குறியீடுகளைச் சீரற்று அமைந்துள்ளதாகக் கூறி, கிரந்த உகர, ஊகாரக் குறியீடுகளைப் பயன்படுத்த வேண்டும் என்கின்றனர். எனவே, அவர்களுக்குத் தமிழ் உகர, ஊகாரக் குறியீடுகளையும் பின்னர் வேறு சில உயிர்க்குறியீடுகளையும் மாற்றுமாறு கோருவதற்கும் ஆளுவோரிடம் செல்வாக்கு பெற்று நடைமுறைப்படுத்தச் செய்வதற்கும் வாய்ப்பு ஏற்படும். எனவே, நாம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இளைதாக முள்மரம் கொல்க என்பது நம் தெய்வப்புலவர் திருவள்ளுவர் நமக்கு இட்ட கட்டளை அன்றோ!

  கிரந்தத்தில் உள்ள ஒரு சில எழுத்துகள் தமிழில் இருந்தால் என்ன என்று சிலர் வாதிடுகின்றனர். இப்பொழுதே சில எழுத்துகள் உள்ளனவே, மேலும் சில எழுத்துகள் இருந்தால் என்ன என்றும் சிலர் வினவுகின்றனர். சில மெய்யெழுத்துகள் சேருவதால் நெடுங்கணக்கில் அவற்றின் எண்ணிக்கை கூடுகின்றது. சான்றாக ஜ் எழுத்து சேரும் பொழுது அதன் வரிசையில் உள்ள ஜ, ஜா, ஜி, ஜீ, ஜு, ஜூ, ஜெ, ஜே, ஜை, ஜொ, ஜோ, ஜௌ என உயிர் வரிசை எழுத்துகள் சேருவதைக் கணக்கில் கொள்ள வேண்டும். இவற்றைப் போல்தான் பிற கிரந்த எழுத்துகள் திணிப்பும் உண்மையில் பேரளவாகின்றது. ஜங்க்ஷன், ஜாம், ஜிம், ஜீன்ஸ், ஜெயில், ஜேப், ஷர்பத், ஷாமியானா, ஷூ, ஷோ, ஸ்டேசன், ஸ்டூல், ஸ்டூடண்ட், ஸர்ப்பம், ஹால், ஹீட்டர், ஹேப்பி, ஹைவேய், ஸ்ரீ, பரீக்ஷை என்பன போன்று பிற மொழிச் சொற்களை நாம் பேசக் காரணமே அவற்றைக் கிரந்த எழுத்துகளைக் கொண்டு பயன்படுத்த முடிவதால்தான். இல்லாவிடில் உரிய தமிழ்ச் சொற்களையே பயன்படுத்தி யிருப்போம். அவ்வாறு சரியான தமிழ்ச் சொற்களை அறிய வாய்ப்பு இல்லாமல் போகும் பொழுதுகூட நம் தமிழ் எழுத்துகளைக் கொண்டே அதனை ஒலித்திருப்போம். அவ்வாறு ஒலிக்கும் பொழுது அச்சொல் அயற் சொல் என்ற உணர்வு மேலிட உரிய தமிழ்ச் சொல்லை அல்லது புதிய தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தியிருப்போம். எனவே, அயற்சொற்களையும் அயல் வரிவடிவங்களையும் நாம் விலக்கி வைத்தால்தான் தமிழ் அழியாமல் நிலைக்கும்.

  கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தாவிடில் பல அயற் சொற்களை எவ்வாறு உச்சரிப்பது என நம் மக்களுக்குக் கவலை வருகிறது. ஆனால், இவர்கள் நம் தமிழ்ச் சொற்களைச் சரியாக உச்சரிக்க வேண்டும் என்பது குறித்துச் சிறிதும் கவலைப்படுவதில்லை. கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தும் சொற்களில் பெரும்பான்மையன  நல்ல தமிழ்ச் சொற்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன. பெயர்ச் சொற்கள் உள்ளனவே அவற்றை எவ்வாறு எழுதுவது என்பது சிலரது கவலை. எந்த  மொழியின் பெயர்ச் சொற்களும் பிறமொழியினரால் மூல மொழியின் உச்சரிப்பிலேயே ஒலிக்கப்படுவதில்லை. ஆகவே, நாமும் அது குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை.  அவரவர் மொழி இயல்பிற்கேற்ப ஒலித்தால் போதும். எடுத்துக்காட்டாக இந்தியா என்பது இந்த், இந்தெ, இந்தியெ, இந்தியா, இந்தொ, இண்டியெ, இண்டியா, இண்ட் என்பன போல் வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறாகத்தான் ஒலிக்கப்படுகின்றது. தமிழ் என்பது தமில், தமிரு, டமில், டமிரு, டேமில், திரமிள், திரமிளம் என்றெல்லாம் பலவகையில் அதற்குரிய சிறப்பு எழுத்தான ழ ஒலிக்கப்படாமலேயே சொல்லப்படுகின்றது. ழ என்னும் எழுத்தினை எந்த மொழியினரும் தங்கள் எழுத்து வரிசையில் சேர்த்துக் கொண்டு தமிழ் எனச் சரியாக ஒலிக்கவில்லை.

  பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறும் பலரும், ஆங்கிலம் பிற மொழிச் சொற்களைக் கலந்து பயன்படுத்துவதால்தான் உலக மொழியானது என்னும் தவறான வாதத்தை முன் வைப்பர். ஆங்கிலம் தன் ஆட்சிப்பரப்பாலும் அதிகாரத்தாலும் உலக மொழியானதே தவிர வேறு காரணம் இல்லை. எனினும் அப்படிப்பட்ட ஆங்கிலம்கூடத் தான் உருவான பொழுது அமைந்த எழுத்துகளைத் தவிர வேறு எந்த எழுத்தையும் சேர்த்துக் கொள்ள ஆங்கிலேயர்கள் இடம் தரவில்லை. நாம்தான் பிற மொழிச் சொற்களையும் பிறமொழி எழுத்துகளையும் பிறமொழிச் சொற்களைச் சரியாக ஒலிக்க வேண்டும் என்பதற்காக அயல்வரிவடிவான கிரந்த வரிவடிவங்களையும் பயன்படுத்தி நம் மொழிக்கும் இனத்திற்கும் கேடு செய்து வருகிறோம். இதுவரை தமிழுக்கு நேர்ந்துள்ள கேடுகளை உணர்ந்து இனியாவது தமிழைக்காக்க வேண்டிய கடமை நமக்கு இருப்பதை உணர்ந்து நாம் அயல் எழுத்துகளையோ அயல் குறியீடுகளையோ தமிழில் கலக்காமல் மொழித்தூய்மையைப் பேண வேண்டும்.

  இந்திய அரசியல் யாப்பு விதி 29.1.இல் மொழிகளும் மொழிகளின் எழுத்துவடிவங்களும் காக்கப்பட வேண்டியதற்கு வழி செய்துள்ளது. எனவே, இதன் அடிப்படையில் வரிவடிவச்சிதைவு முயற்சிகளிலும் கிரந்தக் கலப்பிலும் வேறு அயல் எழுத்து அல்லது அயல்உரு கலப்பிலும் ஈடுபடுவோர்க்குக் கடுந்தண்டனை விதிக்கும் வகையில் சட்டவிதிச் சேர்க்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு சொல்வதை வேடிக்கையாகக் கருதக்கூடாது. எவ்வாறு  சீனாவில் ஆங்கிலச் சுருக்கக் குறியீடுகளைப் பயன்படுத்தக் கூடத்தடை விதிக்கப்பட்டுள்ளதோ அதுபோல் தமிழ் மொழி காக்கப்பட தமிழ்நாடு அரசு சட்டம் பிறப்பிக்க வேண்டும். தமிழ் தொடர்பான துறைகளில் தமிழில் புலமைவாய்ந்த தமிழர்களையே நியமிக்க வேண்டும். தமிழுக்கு முதன்மையும் தமிழர்க்குத் தலைமையும் அமையும் வகையில் பணியமர்த்தங்களை மேற்கொள்ள வேண்டும். தமிழர்க்குத் தேசியமொழி தமிழே என்பதையும் அதைக் காக்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதையும் பாடநூல்கள் வாயிலாக வளரும் தலைமுறையினருக்கு உணர்த்தித் தமிழ்க்காப்பு உணர்வை விதைத்துப் பரப்ப வேண்டும். மொழியின் உடல் போன்றது எழுத்து. எழுத்தாம் உடல் அழிந்த பின்னர் மொழியாம் உயிர் வாழ்வது எங்ஙனம்? எனச் செம்மொழிச்சுடர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் வினவி அறிவுறுத்தியதை உள்ளத்தில் கொண்டு தமிழ் மொழியையும் தமிழ் எழுத்தையும் காக்கும் பொறுப்பை அரசே ஏற்க வேண்டும். தமிழர்க்கு எல்லாம் தமிழாக இருக்கும் நாள்தான் தமிழர் முன்னேறும் நாளாகும்; முழு உரிமை பெற்ற நாளாகும் எனப் பேராசிரியர் சி.இலக்குவனார்உணர்த்தியவாறு எங்கும் தமிழ் எதிலும்தமிழ் என்பதை வாய்உரையாகக் கொள்ளாமல் செயலாக்கமாக மாற்ற வேண்டும்.

களைக அயலொலி! காண்க தமிழ்ச்சொல்!

என்னும் பாவேந்தர் பாரதிதாசன் வழியில்

அயல் எழுத்தை அகற்றுவோம்! அன்னைத் தமிழைக் காப்போம்!

 No-Grantham

நன்றி :

தினமணி

thiru-padaippugal படைப்புகள்

மதுரை உயர்நீதிமன்றக் கிளை வழக்கறிஞர் சங்கம் MBHCAA

Dravidian Philosophy

Times of Tamilnadu

http://www.no1tamilnews.com

இணையக் குழுக்கள்pirar-karuvuulam