1. தமிழ்ப்பண்பாட்டின் உச்சம் விருந்தோம்பல்: 1/2

பேராசிரியர் வெ.அரங்கராசன்

 

உயர்தமிழ்ப் பண்பாட்டின் உச்சம்

அயராது விருந்து ஓம்புதலாம்

தென்புலத்தார் தெய்வம் விருந்[து]ஒக்கல்

                             தான்என்[று]ஆங்[கு]

ஐம்புலத்[து]ஆ[று] ஓம்பல் தலை                             [குறள்.43]

பொருள்கோள் விரிவாக்கம்:

            விருந்து, தென்புலத்தார், தெய்வம், ஒக்கல்,

தான் என்று ஆங்கு

ஐம்புலத்து ஆறுவழியும் ஓம்பல் தலை.

பொருள் விரிவாக்கம்:

            வாட்டும் கடும்பசியால் வருந்தி வரும் புதியவர்களாகிய விருந்தினர்கள்,

            தெளிந்த அறிவு ஆற்றலர்கள்,

            வையத்துள் வாழ்வாங்கு வாழ்கின்ற – வறுமையில் வாடு கின்றவர்கள்,

            நுகர்பொருள்கள் இல்லாமல் வறுமையில் வாடும் சுற்றத் தார்கள், உறவினர்கள், 

            என்று அமைகின்றவர்கள் ஆகிய அனைவர்க்கும் பொருத்த மான விருந்து முதலான வேண்டிய உணவுப் பொருள்கள், தேவை யான பிற பொருள்கள் போன்றவற்றைக் காலத் தாழ்வு இல்லாமல் அந்தப் பொழுதிலேயே / அந்தக் கணத்திலேயே வேண்டியபடி கொடுத்துவிட வேண்டும்.

            அவற்றையும் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து புலன்கள்வழியும் நின்று, என்றும் இடைவிடாது, இல்லறத்தான் வி ருந்து ஓம்பலைச் செய்ய வேண்டும். இதுதான் இல்லறத்தான் செய் ய வேண்டிய  ஓம்பல்களுள் எல்லாம் தலைசான்ற ஓம்பலாம்.   

            அத்தகு ஓம்பல்களைச் செய்து, அவர்கள் எல்லாரையும் காக்க  வேண்டியவன் இல்லறத்தான்.

அதனால், அவன் நலத்துடனும் வளத்துடனும் வாழ வேண் டும் அல்லவா?

அதற்காகத்தான் அவன் தன்னையும் தானே காப்பாற்றிக்  கொள்ள வேண்டியவனாவும் ஆகின்றான்.

விளக்க உரை விரிவாக்கம்:

            விருந்தினர்கள், தெள்ளறிவாளர்கள்,  வாழ்வாங்கு வாழ்கின்ற வறியர்கள் ஆகியோரைக் காப்பாற்றுவதோடு, தன்னையும் இல்லறத்தான் ஏன் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்? 

விருந்தினர்:

            விருந்தினர்களை ஏன் ஓம்பல் வேண்டும்?

            பல ஊர்களிலிருந்து பல கல் தொலை நடந்தும் களைத்தும் கடும்பசி மயக்கத்தோடும் வருவார்கள். அந்த ஊருக்குப் புதியவர் களாவும் இருப்பார்கள்; ஆவ்வூரில் உறவர்களோ நண்பர்களோ இல்லாமல் இருக்கூடும்.  

அந்தக் காலத்தில் உணவகங்களும் இல்லை. அவர்களது துயரப் பசியும் தீர வேண்டும். இல்லையென்றால், அவர்களது உள்ளங்களில் சில எதிர்மறைச் சிந்தனைகள் உருவாக வாய்ப் புக்கள் ஏற்படலாம்.

இவற்றிற்கு எல்லாம் தீர்வுகள் எவை? இவற்றை எல்லாம் ஆழ்ந்து சிந்தித்தார் ஆய்ஞர் அருள் வள்ளல் திருவள்ளுவர். அதன் விளைவாக ஆராய்ந்து கண்ட நல்லறச் செயல்கள்தாம், விருந்து ஓம்பல் செயற்பாடுகள் என்னும் மனித நேயம் சார்ந்த பண்பியல் செயற்பாடுகள்.

எனவேதான், ஊருக்கு வரும் புதியவர்களாகிய விருந்தினர் களுக்கு விருந்து புறந்தர வேண்டும்.  

தென்புலத்தார்:  

தென்புலத்தார் என்பதற்குத் தெளிந்த அறிவாளர் என்னும் பொருளாம். தென்புதலத்தார்க்கு ஏன் விருந்து ஓம்பல் செய்ய வேண்டும்?

தென்புலத்தார்க்குச் சமுதாயத்தின் மேன்மைக்கும் மேம்பாட் டிற்கும் பெரிதும் பயன்படும் இலக்குகளை இயம்பும் இலக்கியங் களை இயற்றுவதுதான், முதன்மைக் குறிக்கோள். அவர்களிடம் பொருள் திரட்டுதல் என்னும் நோக்கம் மிகக் குறைவாகவே இருக் கும். பல படைப்பாளரிடம் அத்தகு நோக்கம் இருக்காது.

சமுதாயச் செம்மைக்கும் செழுமைக்கும் சிறப்புறப் பயன்ப டும் சீர்மிகு இலக்கியங்கள் செப்பமுறத் தெளிந்த அறிவாளர்கள் உருவாக்க வேண்டும். அதை விடுத்து அவர்கள் பொருள் ஈட் டலில் ஈடுபட்டால், இலக்கியங்களைப் படைக்க இயலாது. அவர் களை அதிலிருந்து விடுவித்து அவர்களைக் காப்பாற்ற வேண்டி யது சமுதாயத்தின் இன்றியமையாப் பெருங்கடமையாம்.

[இத்தகு கைம்மாறு வேண்டாக் கடப்பாட்டு விழுமிய விருந்து ஓம்பல் செயற்பாடுகளைச் சங்க இலக்கியங்களில் நிரம்பக் காணலாம்.]

இவற்றை எல்லாம் சிந்தித்த சமுதாய நலச் சிந்தனையாளர் செந்நாப் போதார்,  தென்புலத்தாரைக் காப்பாற்ற அறிவுறுத்தும்  பல செயற்பாடுகளில் ஒன்றுதான் விருந்து ஓம்பல் என் னும் மனித நேயப் பண்பாட்டுச் செயற்பாடு.

எனவே, தென்புலத்தார்களை ஏற்றுப் போற்றிப் பேணி அவர் களுக்கு  விருந்து புறந்தரல் என்னும் பண்பாட்டு விழுமியத்தை இந்தக் குறளில் குறளாசான் வலியுறுத்திக் கூறியுள்ளார்.  

மேற்கோள் உரை:

தெளிந்த அறிவினர், வாழ்வாங்கு வாழ்பவர், சுற்றத்தினர், விருந்தினர், இவர்களைப் பேணும் தான் என்னும் ஐந்திடத்தாரையும் பேணல் இல்வாழ்வான் சிறந்த கடமையாம்.

நன்றி: முதுமுனைவர் இரா. இளங்குமரனார்

      திருக்குறள் வாழ்வியல் உரை, ப.10,

      தமிழ்மண் பதிப்பகம், 2, சிங்கராவேலர் தெரு

      தியாகராயர்நகர், சென்னை – 600 017, மறுபதிப்பு 2003.                        

தெய்வம்:

            அறமுறை சார்ந்து, வாழ்வாங்கு வாழ்கின்றவர்கள், வறுமை அடைந்து, வாடி, வருந்தினால் அவர்களைக் காப்பாற்ற வேண்டி யது சமுதாயக் கடமையாம். அத்தகு காத்தல் பொறுப்பினை இல் லறத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதனால்தான், அவர்களையும் இந்தக் குறளில்  இணையில் லாத் திருவள்ளுவர் இணைத்துள்ளார்   

அகச்சான்று:

            வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன், வான்உறையும்

            தெய்வத்துள் வைக்கப் படும்                                   [குறள்.50]

பொருள் உரை:

            உலகத்தில் வாழும் நெறிமுறைப்படி வையத்தில் வாழ்ந்தா லும் வானத்தில் வாழ்வதாகக் கூறப்படும் தெய்வங்களோடு சேர்த்து மதிக்கப்ப் பெறுவர்.

நன்றி: முனைவர் பா.வளன் அரசு,

      திருக்குறள் விளக்கவுரை, ப.37,

      மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரி முனை,

      சென்னை – 600108, ஆகட்டு 2017. 

சுற்றத்தார்கள்:

   சுற்றத்தார்கள் எனில் இல்லறத்தானைச் சுற்றி இருந்து தனக்குத் துணைவர்களாக நிற்பவர்கள். அவர் வறுமையுற்றுத் துன்புற்றால் அவர்களையும் காப்பாற்ற வேண்டியது, இல்லறத்தானது இன்றியமையாக் கடமையாம்.

உறவினர்கள்:

            உறவினர்கள் எனில் குருதித் தொடர்புடைய உறவு உள்ள வர்கள். அவர்கள் வறுமையில்  வாடினாலும் அவர்களையும் காப் பாற்ற வேண்டியது இல்லறத்தானது இன்றியமையாக் கடமை.

           சுற்றத்தாரையும் உறவினர்களையும்  காக்க வேண்டியதன் இன்றியமையாமையை நன்றறியும் செந்நாப் போதார் நன்கு   ஆராய்ந்துள்ளார். அதனைச் ‘சுற்றம் தழால்’ என்னும் 53ஆவது அதிகாரத்தில் 10 குறள்களில் அருமையாகப் பதிவு செய்துள்ளார்.

அகச்சான்று:

            சுற்றத்தால் சுற்றப் படஒழுகல், செல்வம்தான்

            பெற்றத்தான் பெற்ற பயன்[குறள்.524]

பொருள் உரை:

சுற்றியிருக்கும் சுற்றத்தார்களையும் உறவினர்களையும் காப் பதுதான். ஒருவன் செல்வம் பெற்றதன் பயன்.   

(தொடரும்)

பேராசிரியர் வெ.அரங்கராசன்

காண்க:

அரங்கனின் குறள் ஒளி 1.காலத்தைத் தேர்ந்தால் வெற்றிகள் அமையும்

அரங்கனின் குறள் ஒளி:2. தமிழ்ப்பண்பாட்டின் உச்சம் விருந்தோம்பல் – தொடர்ச்சி