துன்பம் செய்தார்க்கும் இன்பம் செய்க!:2/2 –தொடர்ச்சி

 பேராசிரியர் வெ.அரங்கராசன்

 “இதோ பார் அன்பு மகளே!  நீ எது கேட்டாலும் கிடைக்கும். ஆனால்,  உனக்குக் கிடைப்பதுபோல் உன் மாமியார் முத்தம்மா விற்குப் பத்து மடங்கு அதிகமாகக் கிடைத்துவிடும்! என்ன சொல்கின்றாய்? நன்கு சிந்தித்துச் சொல்.”

மிக்க மகிழ்ச்சியுடன் அகம் மகிழ முகம் குளிர இசைந்தாள் மருமகள் அருள்மொழி. விதி யாரை விட்டது என எண்ணிக் கொண்டார். அவள் கேட்கும் வரங்களைக் கொடுக்க அணியமானார்  சிவபெருமான்.

முதல் வரம்

“எனக்கு 100 கோடி உரூபாய் வேண்டும்.”

அவளுக்குக் கிடைத்தது.

மாமியார் முத்தம்மாவிற்கு 1000 கோடி உரூபாய் கிடைத்தது.

இரண்டாவது வரம்

“இந்தியக் கண்டத்திலேயே  மிக அழகிய பெண்ணாக நான் மாற வேண்டும்.”

அவ்வாறே மாறிவிட்டாள்.

மண்ணுலகிலேயே ஒப்பில்லாத பேரழகியாகப் பெண்ணாக  மாமியார் முத்தம்மா மாறிவிட்டார்.

மூன்றாவது வரம்

“எனக்கு மிக மென்மையான மாரடைப்பு வர வேண்டும்.”

அவ்வாறே நடந்தது.

இதைக் கேட்டவுடன் சிவபெருமானே அதிர்ந்துபோனார்.

உடனே மாமியார் இதயம் வெடித்து இறந்துபோனார்.   சிவ பெருமானுக்கு மயக்கமே வந்துவிட்டது. உடனே, விழிப்புணர்வு பெற்றார். காளைமீது ஏறி அமர்ந்தார். இமய மலைக்கு மிகவிரைவாகப் பறந்தார் 

“யாருகிட்டே?”

அறம் உணர்த்தும் புறச்சான்று – 3

            துன்பம் செய்தார்க்குத் துன்பம் செய்யாமல்,

            இன்பம் செய்திட்டால், இன்பம் ந்தடையும்.

குறளூர் எனும் சிற்றூரில் ஏழை உழவர் காப்பான் வாழ்ந்து வந்தார். அவரது பக்கத்து வீட்டில் வேட்டைக்காரர் வேந்தன் என்பவர் இருந்தார்.

வேட்டைக்காரர் வேந்தனிடம் அவர் வேட்டைக்குப் பயன் படுத்தும் வேட்டை நாய்கள் நான்கு இருந்தன.  வேட்டைக்காரது நாய்கள் அடிக்கடி வேலி தாண்டிச் சென்று காப்பான் வளர்க்கும் ஆட்டுக் குட்டிகளைத் துரத்தும்; கடிக்கும்; குதறும்.

இதனால் கலக்கமுற்றான் காப்பான். ஒரு நாள் தம் பக்கத்து வீட்டு வேட்டைக்காரரைச் சந்தித்தார். சந்தித்து “உங்களது நாய்களைக் கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள். அவை அடிக்கடி என் பகுதிக்குள் வந்து, ஆடுகளைத் தாக்குகின்றன. காயப்படுத்துகின்றன.” எனப் பணிவோடு சொன்னார்.  

வேட்டைக்காரர் அதைச் சட்டை செய்யவேயில்லை. செவிடன் காதில் ஊதிய சங்கானது. அஃது எந்தப் பயனும் இன்றி  வீணாய்ப் போனது.

ஒரு முறை நாய்கள் இதே போல வேலி தாண்டி வந்தன. பட் டிக்குள் புகுந்தது, பல ஆட்டுக் குட்டிகளைக் கடித்துக் குதறின. இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என மீண்டும் வேட் டைக்காரரிடம் முறையிடச் செய்யச் சென்றார் காப்பான்.  

வேட்டைக்காரர் இந்த முறை சற்றுச் சினத்துடன்,  “இதோ பார்! ஆட்டுக் குட்டிகளைத் துரத்துவதும் கடிப்பதும் நாய்களின் இயல்பு, அதனால், நான் ஒன்றும் செய்ய முடியாது. உன்னால் முடிந்ததை நீ பார்த்துக்கோ” எனக் கத்தினார்.

இதைத் தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர் அறமுதல்வரைச்  சென்று சந்தித்தார் உழவர் காப்பான்.  வேட்டைக்காரரின் நாய்களால் தாம் படும் துன்பத்தை எடுத்துக்கூறினார். அவர் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பணிவுடன்   கேட்டுக்கொண்டார்.

முன்பொரு முறை ஊராட்சி மன்றத் தலைவரின் மகள் இன் சொல்லியை ஒரு சிறிய விபத்திலிருந்து காப்பான் காப்பாற்றி யிருந்தார். தலைவருக்குக் காப்பான்மீது பெரும்மதிப்பு உண்டு.

உழவர் காப்பானுக்கும் வேட்டைக்காரர் வேந்தனுக்கும் இடையே உள்ள பிணக்கைப்பற்றி உசாவித் [விசாரித்துத்] தெரிந்து கொண்டார் தலைவர் அறமுதல்வர், “என்னால் மன்றத்தைக்  கூட்டி, அந்த வேட்டைக்காரரைத் தண்டித்து, ஒறுப்புத் தொகை [அபராதம்] விதிக்க முடியும். பின்னர் அவர் நாய்களைக் கட்டிப் போடச் செய்ய முடியும். 

ஆனால், நீ தேவை இல்லாமல் இதனால் ஓர் எதிரியை உரு வாக்கிக்கொள்ள நேரிடும். உனக்கு அது சொந்த வீடு. அவனுக்கும் அது சொந்த வீடு. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் நாளும்  பார்க்க வேண்டும். அப்படியிருக்கையில் பக்கத்து வீட்டுக்காரர் நண்பராக இருப்பதில் உனக்கு விருப்பமா அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?” எனக் கேட்டார்.  

ஊராட்சி மன்றத் தலைவர் சொல்வதில் உள்ள உண்மையைப் புரிந்துகொண்டார் காப்பான். “பக்கத்து வீட்டுக்காரரை ஒரு நண்பராகப் பார்ப்பதில்தான் எனக்கு விருப்பம்.” எனத் தமது வி ருப்பத்தை  விளம்பினார் காப்பான்.

“சரி! உன் ஆட்டுக் குட்டிகளும் பத்திரமாக இருப்பது போலவும் அவனும் உன் நண்பனாக இருப்பது போலவும் நான் ஒரு தீர்வைச் சொல்கிறேன். கேட்பாயா..?”

“நீங்கள் எதைச் சொன்னாலும் கேட்கிறேன்.”

தலைவர் சில வழிமுறைகளை அவரிடம் சொன்னார்.

வீட்டுக்கு வந்த காப்பான், தலைவர் தம்மிடம் சொன்ன வழிமுறைகள்பற்றி ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க முற்பட்டார். தமது மனைவி அருளரசியிடமும் அதுபற்றிக் கலந்துரையாடினார். அவரும் அன்புக் கணவர் சொன்னதை ஏற்றுக்கொண்டார்.

தமது பட்டியில் இருக்கும் ஆட்டுக் குட்டிகளிலேயே மிகவும் அழகான இரண்டு குட்டிகளை எடுத்துக்கொண்டார்.  வேட்டைக் காரனின் வீட்டுக்குச் சென்றார்; இரண்டு மகன்களுக்கும் தலா ஒரு குட்டியை விளையாடப் பரிசளித்தார்.  

குழந்தைகளுக்குத் தங்களுக்கு விளையாடப் புதிய தோழர்கள் கிடைத்ததில் அவரது பிள்ளைகளுக்கு பெருமகிழ்ச்சி. அந்த குட்டிகளுடன் இருவரும் விளையாடி மகிழ்ந்தார்கள்.

தம் குழந்தைகளின் புதிய தோழர்களைப் பாதுக்காக்கத் தற் போது வேட்டைக்காரர், நாய்களைச் சங்கிலியால் கட்டிப்போட வேண்டியிருந்தது. எவரும் சொல்லாமலேயே அவன் நாய்களைச் சங்கிலியால் பிணைத்தான்.

தமது பிள்ளைகளுக்குக் காப்பான் ஆட்டுக் குட்டிகளைப் பரிச ளித்ததைத் தொடர்ந்து, கைம்மாறாக அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பினார். தாம் காட்டிலிருந்து கொண்டுவந்த சில அரிய பொருட்களைப் பரிசளித்தார் வேட்டைக்காரர் வேந்தன்.

ஆக இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்தது; நாளடைவில் நல்ல நண்பர்களாக மாறிவிட்டனர்; ஒருவருக்கு ஒருவர் உதவிகள் செய்துகொண்டனர்; வீழா மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.

மேற்கூறிய கதை அன்றாடம் பலருக்கு நடப்பதுதான், ஆனால் சிக்கல்கள்தான் வேறு வேறு.  நம்மிடம் நியாயம் இருக்கிறது என்பதற்காகவோ, நம்மிடம் வலிமை இருக்கிறது என்பதற்காகவோ வீணாக எதிரிகளை உருவாக்கிக் கொள்ளக் கூடாது.

ஆடுகள் இன்றியமையானவைதான். ஆனால் அவற்றைவிட மனஅமைதி மிக இன்றியமையாதது அல்லவா.?

       மனஅமைதியின் மாண்பு

     மனஅமைதியால் மகிழ்ச்சி மலரும்

   மகிழ்ச்சியால் மனஅழுத்தம் விலகும்;

   மனஅழுத்தம் விலகி மறைந்தால்,

   மன, உடல் நோய்கள் குறையும்!

                           -பேராசிரியர் வெ.அரங்கராசன்  

அரங்கனின் குறள் ஒளி: 3. துன்பம் செய்தார்க்கும் இன்பம் செய்க!:1/2