3. துன்பம் செய்தார்க்கும் இன்பம் செய்க!:1/2

 பேராசிரியர் வெ.அரங்கராசன்

துன்பம் செய்தார்க்கும் இன்பம் செய்து,

பண்பில் உயர்ந்து பார்புகழைப் பெறுக!  

 

இன்னாசெய் தாரை ஒறுத்தல், அவர்நாண,

நல்நயம் செய்து விடல்                                                         [குறள்.314]

 

பொருள்கோள் விரிவாக்கம்:

இன்னா செய்தாரை ஒறுத்தல் வேண்டும்;

            அவர் [இன்னா செய்தார்] நாண நல்நயம் செய்தல்

           வேண்டும்;

            [நல்நயம் செய்த பின்னர்] செய்தவற்றை மறந்துவிடல்

            வேண்டும்.

பொருள் உரை விரிவாக்கம்:

           ஒருவர் தமக்குத் தீங்கு செய்தால், அவரைத் தண்டிக்க வேண்டும். அஃது எத்தகைய தண்டனையாக இருக்க வேண்டும்?

       அது, தீங்கு செய்தவர், “நான் அவருக்குத் தீங்கு செய்தேன். அதற்கு அவர் பழி வாங்க வேண்டும் என எண்ணவில்லை.  அதை அவர் அறவே மறந்துவிட்டு, எனக்கு நல்ல நன்மையைச் செய்துள் ளாரே” என அவரது மனச்சான்று உறுத்தும்படியாகவும் தலை குனிந்து வெட்கும்படியாகவும் அந்தத் தண்டனை அமையும்படி செய்ய வேண்டும்.  

       தீங்கு செய்தவருக்கு நல்ல நன்மை செய்தவர், அவர் தமக்குச் செய்த தீங்கையும் தாம் அவருக்குச்  செய்த நல்ல நன்மையையும் முற்றிலுமாக மறந்துவிடல் வேண்டும்.

  அவர் செய்த தீங்கையும் அதற்குத் தண்டனையாக அவர் நா ணும்படி அவருக்குத் தாம் செய்த நல்ல நன்மையையும் எங்கும் என்றும் எவரிடத்தும்  வெளியிடவும் கூடாது.

இன்னா – அகரமுதலிப் பொருள்:

            துன்பம், தீங்கு, கீழ்மையான [செயல்], இகழ்ச்சி, வெறுப்பு, தீமை,, கடுஞ்சொல், கடுமையான [செயல்], தீது, துயரம், இனியவாகாமை, குற்றம், பகைமை. 

விளக்கம்:

            இந்த இன்குறள் தீங்கு செய்தவரையும் உளவியல் அடிப்படையில் வென்று, திருத்துகின்ற செயல் அளவிலான விழுமியத்தை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளுது. முப்பாலார் கைவண்ணத்தில் ஒப்பில்லாச் சிந்தினையால் மலர்ந்துள்ளது.

புறச்சான்று – 1

துன்பம் செய்தவர்க்கும் இன்பம் செய்து,

            பண்பில் உயர்ந்த பகுத்தறிவுப் பகலவன்:

            தம்மைக் கொல்ல வருகின்றவர்களைக் காவலரிடம் பிடித்துக் கொடுப்பார்கள். அல்லது அடித்து, உதைத்து அனுப்புவார்கள். கத் தியுடன் வந்து, தம்மீது பாய்ந்தவனைப் பகுத்தறிவுப் பகலவன்  தந்தை பெரியார் என்ன செய்தார் தெரியுமா..?

            படியுங்கள். அவரது மனித நேயம் புரியும்.

            ஒரு சமயம் விருதுநகரில் பொதுக்கூட்டம் நடந்துகொண்டி ருந்தது. தந்தை பெரியார் அவர்கள் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் முன்வரிசையில் உட்கார்ந்திருந்த ஒருவன் திடீரென எழுந்தான். கத்தியுடன் பெரியாரை நோக்கிப் பாய்ந்தான்.

பெரியார்அவர்கள் சற்றும் பதற்றம் அடையவில்லை. அந்த நபரின் கையை எட்டிப் பிடித்துவிட்டார். அதற்குள் தொண்டர்கள் அவனைச் சூழ்ந்துநின்று பிடித்துக்கொண்டார்கள்.

பெரியார்அவர்கள் தொண்டர்களை அமைதியாக இருக்கும்படிக் கேட்டுக்கொண்டார்.  தம்மைத் தாக்குவதற்குக் கத்தியுடன் பாய்ந்த அந்த நபரை மேடையில் தம் அருகிலேயே உட்காரவைத் துக்கொண்டார். பின்னர் அந்த வெண்தாடி வேந்தர் மனித நேய மாமனிதர் தொடர்ந்து பேசத் தொடங்கினார்.

கூட்டம் முடிந்தது. அந்த நபரைத் தந்தை பெரியார் காவலரிடம் ஒப்படைப்பார் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.ஆனால், அந்தத் தன்மானத் தலைவர் என்ன செய்தார் தெரியுமா?

அந்த நபரை ஒன்றும் செய்யவில்லை.  அவரைப் பத்திரமாகக் கொண்டுபோய் அவரது வீட்டில் விடும்படிக் கட்டளையிட்டார். காரணம் என்ன தெரியுமா?

அந்த நபரைத் தனியாகவிட்டால், தம்மீது அபிமானம் கொண்ட தோழர்கள்  அவரைத் தாக்கித் துன்புறுத்திவிடுவார்கள் என நினைத்தார் தந்தை பெரியார்.

    தம்மைக் கொல்லக் கத்தியுடன் பாய்ந்து வந்தவனை மன் னித்துவிடும்படி  அனுப்பியதில் பெரியார், தம்மைப்  பெரியார்தான் என மெய்ப்பித்து விட்டார்.

         [நூலில் உள்ளபடி நல்கப்பட்டுள்ளது]

                    நன்றி: சபீதா சோசப்பு, பெரியார் 100, பக்.12,

                    இராம் பிரசாத்து வெளியீடு, 106 / 4,

சானி சான்கான்சாலை, இராயப்பேட்டை,                     

                    சென்னை — 600014, இரண்டாம் பதிப்பு 2007. 

அறம் உணர்த்தும் புறச்சான்று – 2

அன்று:

இன்னாசெய் தாரை ஒறுத்தல், அவர்நாண,

நல்நயம் செய்து விடல்                                                [குறள்.314]

இன்று:

      இன்னாசெய் தாரை ஒறுத்தல், அவர்துடிக்கப

      பன்முறை இன்னா செயல்.

                                   – பேராசிரியர் வெ.அரங்கராசன்

தனது மாமியார் முத்தம்மாளால் மிகவும்  கொடுமைக் குள்ளானாள் ஓர் இளம் அகவை மருமகள் அருள்மொழி. துயரம் தாங்காமல்  அழுதாள்; விழுந்து புரண்டாள்.

தன் கடினப்பாடுகளை எல்லாம் களைந்திட வேண்டிச் சிவனை நோக்கி நோன்பு இருந்தாள். பின்னர்த்  தவமாய்த் தவம் கிடந் தாள்; மெய்யை மிக வருத்திக்கொண்டாள்; நாள்தோறும் வழிபாடுகள் பலவற்றைச் செய்தாள்.

அவளது தவத்தால் மனம் இரங்கின சிவபெருமான் ஒரு நாள் அவள்முன் தோன்றினார். “மகளே! உனது மனவலிமையைப் பாராட்டுகின்றேன். மிக மகிழ்கின்றேன்! ஏதாவது ஒரு வரம் மட்டும் கேட்டுப் பெற்றுக்கொள்.” என்றார்.

“அருட்கடலே! தென்னாடு உடைய சிவனே போற்றி! அப்பனே! எனக்கு ஒரு   வரம் போதாது. உமை ஒரு பாகனே! மூன்று வரங்கள் வேண்டும்” எனக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள்.

“உண்மையை உணராமல் இவள் கேட்கின்றாளே”  என உள் ளுக்குள் நகைத்துக்கொண்டார் சிவபெருமான்.

“சரி குழந்தாய்!  ஒரு நிபந்தனையுடன்  உனக்கு மூன்று வ ரங்கள் அளிக்கப்படும். நிபந்தனையை ஏற்றுக் கொள்கின்றாயா?” எனக் கேட்டார்.

அவளோ மகிழ்வோடு இசைந்தாள்.  சிவபெருமான் நிபந்த னையைக் கூறினார்.

பேராசிரியர் வெ.அரங்கராசன்

துன்பம் செய்தார்க்கும் இன்பம் செய்க!:2/2