முடியும் என்றால் எதுவும் முடியும்!

பேராசிரியர் வெ.அரங்கராசன்

 

முடியாது என்றால் முடியாதுதான்;

முடியும் என்றால் எதுவும் முடியும்.

1.1.0.0.நுழைவாயில்:

            எந்தச் செயலையும் எடுத்த உடனே, என்னால் இதைச் சேய்ய முடியாது என ஒதுக்கித் தள்ளிவிடக் கூடாது. தன்னாலும் செய்ய முடியும் என முடிவெடுக்க வேண்டும்; அதுபற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். அப்போது அந்தச் செயலை வெற்றியுடன் முடிப்பதற்கான வழிமுறைகள் மனத்திற்குள் விழித்தெழும்.

             என்னாலும் செய்ய முடியும் என்பது அடக்கம்;

            என்னால்தான் செய்ய முடியும் என்பது ஆணவம்.

            நம்பிக்கையுடன் நன்முயற்சியும் கைகொடுத்தால், எடுத்த செயலை முடிக்க முடியும்; விடிவும் தோன்றும்; வீழாத விழுப்புகழ்  தேடிவரும்; சமுதாய மதிப்பும் கூடிவரும்.               

1.2.0.0.நம்பிக்கை நல்கும் நற்குறள்:

அருமை உடைத்[து]என்[று] அசாவாமை வேண்டும்;

பெருமை முயற்சி தரும்                                                          [குறள்.611]

1.2.1.0.பொருள்கோள் விரிவாக்கம்:

            அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும்;

            முயற்சிதான் பெருமையைத் தரும்

1.2.2.0.பொருள் உரை விரிவாக்கம்:

 அருவினை(சாதனை)ச் செயல் செய்யும் முன்னரே, “இது என்னால் செய்ய முடியாத அளவிற்கு அரியது; அதனால், இதனை என்னால் செய்ய முடியாது” என மலைக்கவோ தயங்கவோ தளரவோ கூடாது.  “இதனை என்னாலும் செய்ய முடியும்” என்னும் நம்பிக்கையை, மனவலிமையை, துணிச்சலை, ஆற்றலைத் திரட்டிக் கொள்ள வேண்டும்.    திரட்டிக்கொண்டு இடைவிடா முயற்சியை, தொடர்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். மேற்கொண்டால், அந்த இடைவிடாத முயற்சி, இறுதி உறுதியாக வெற்றியைத் தரும்.

1.3.0.0.அறம் உணர்த்தும் புறச்சான்று – 1

        ஆள்வினை உடைமையில் மிகவும் சிறந்த

        சூள்வினை ஆற்றலர் ஆபிரகாம் இலிங்கன்:

            அரசியல் வாழ்க்கையில் உலகிலேயே மிக அதிகமான தேர்தல் தோல்விகளைக் கண்ட ஒரே தலைவர் முன்னாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் இலிங்கன் அவர்கள்தான்.

ஆபிரகாம் இலிங்கன் கண்ட அரசியல் தோல்விகள்:

தோல்விகள் எல்லாம் தோல்விகள் அல்ல;

வெற்றிக்கு அழைத்துச் செல்லும் படிகள்.

  1. 1831இல் வணிகத்தில் தோல்வி
  2. 1832இல் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி
  3. 1833இல் வணிகத்தில் மீண்டும் தோல்வி
  4. 1934இல் சட்டமன்றத் தேர்தலில் தோல்வி
  5. 1836இல் சட்டமன்றத் தலைவர் தேர்தலில் தோல்வி
  6. 1840இல் தெரிவர் (elector) தேர்தலில் தோல்வி
  7. 1843இல் காங்கிரசுத் தேர்தலில் தோல்வி
  8. 1848இல் காங்கிரசுத் தேர்தலில் மீண்டும் தோல்வி
  9. 1855இல் ஆட்சிப்பேரவைத் தேர்தலில் தோல்வி
  10. 1856இல் துணைக்குடியரசுத் தேர்தலில் தோல்வி
  11. 1858இல் ஆட்சிப்பேரவைத் தேர்தலில் மீண்டும் ஒரு தோல்வி

இறுதியாக 1860இல் அமெரிக்கக் குடியரசுத் தேர்தலில் போட்டி யிட்டு வெற்றி பெற்றார்.

            அருமை உடைத்து என்று அசாவாது, முயன்ற

            ஆபிரகாம் இலிங்கனது முயற்சி வெற்றியைத் தந்தது.  

1.4.0.0.அறம் உணர்த்தும் புறச்சான்று – 2

  1. வாய் பேசாத – காது கேட்காத – கண் தெரியாத எலன் கெல்லரால், பல்கலைக்கழகப் பேராசிரியராகிப் பல நூல்களைப் படைத்திருக்க முடியுமா?
  2. அண்ணல் காந்தியால் அருமைமிகு விடுதலையைப் பெற்றுத் தந்திருக்க முடியுமா?
  3. வ.உ.சியால் வெள்ளையரை எதிர்த்து நின்று, கப்பல் ஓட்டிக் கப்பலோட்டிய தமிழராக உயர்ந்திருக்க முடியுமா?
  4. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரால் சமூக நீதியை நிலைநாட்டியிருக்க முடியுமா?
  5. விடுதலைப் போராட்ட வீரர் நெல்சன் மண்டேலா உலகம் போற்றும் உயர்தலைவராக உயர்ந்திருக்க முடியுமா?
  6. அன்னை தெரெசா ஆள்வினையில் ஆற்றல் பெறாவிட்டல், பூவுலகு எல்லாம் போற்றும் புனிதராகி ஏற்றம் பெற்றிருக்க முடியுமா?  
  7. படிக்காத மேதை கரும வீரர் காமராசர் கல்வித் தந்தையாகி, ஒரு பல்கலைக்கழகத்திற்குப் பெயரிடும் அளவிற்கு உயர்ந்திருக்க முடியுமா?
  8. வீடு வீடாகச் செய்தித் தாள்களைப் போட்ட அத்துல் கலாம் அவர்கள் செய்தித் தாள்களின் தலைப்புச் செய்திகளில் பன்முறை இடம் பெற்றிருக்க முடியுமா? இந்தியாவின் குடியரசுத் தலைவராகி முடியாப் புகழ் பெற்றிருக்க முடியுமா?
  9. பள்ளியிருந்து விரட்டப்பட்ட தாமசு ஆல்வாய் எடிசன் 1000 கண்டுபிடிப்புக்களுக்குமேல் கண்டுப்பிடித்திருக்க முடியுமா?
  10. ஆள்வினையில் ஆழ்ந்திருக்காவிட்டால், திருக்குறள் தூயர் பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு அவர்கள் 1000 திருக்குறள் உயராய்வு அரங்குகளை நடத்தியிருக்க முடியுமா? 1200 திருக்குறள் கருத்தரங்குகளை நடத்தியிருக்க முடியுமா? 100 திருக்குறள் மாநாடுகளை நடத்தியிருக்க முடியுமா? 200 திருக்குறள் ஆய்வு நூல்களைப் படைத்திருக்க முடியுமா? 50 திருக்குறள் ஆய்வுக் கட்டுரை நூல்களை வெளியிட்டிருக்க முடியுமா? திருவள்ளுவரது சிந்தனைகளைக் கோட்பாடுகள் ஆக்கல் என்னும் நனிநுண்ணிய ஆய்வியல் அணுகுமுறைமையினைக் கண்டுபிடித்திருக்க முடியுமா? திருக்குறளில் நுண்ணாய்வுகள் செய்வதில் உலகிலேயே முதன்மையாளர் என்னும் உச்சத்தைத் தொட்டிருக்க முடியுமா?    

1.5.0.0.அறம் உணர்த்தும் புறச்சான்று – 3

        தோல்வியைத் தோற்கடிக்க வேண்டும்

  தோல்விமேல் தோல்வி அவை

   தோற்காத வெற்றியைத் தொடுவதற்குத்

   தோள்கள் கொடுத்து – நம்மைத்

   தூக்கி நிறுத்தும் ஆக்கத் தூண்கள்!

 

   தோல்வி கண்டு துவண்டால்அதுஉன்

   தோள்மீது ஏறிக் கொள்ளும்!   

  தோல்வியோடு மோதும் – பணியாத   

   துணிவைக் கொண்டால், – அதுஉன்  

   கால்களுக்கு நல்ல செருப்பாகும்!  

   தோல்விக்கு உள்ளே குதித்து  

   மூலை முடுக்குகள் எல்லாம்

   தேடித் தேடிப் பாரு! – தீராத்

   தோல்வியைத் தோற்க வைக்கும்

   தெளிவான வழிமுறைகள்அங்குத்  

   தேங்கிக் கிடக்கும்; தேடிப்பார்!

 

   முடுக்கும் தோல்வி — அதுஒரு

   தடுக்க முடியாத் தொல்லை!

   கூற்றன்ன தோல்வியைத்

   தோற்கடித்தால் – அதுதான்

   போற்றும் மகிழ்வின் எல்லை!   

கவிஞர் பேராசிரியர் வெ.அரங்கராசன்

1.6.0.0.அறம் உணர்த்தும் அகச்சான்று – 14

      தளர்ச்சி இல்லா முயற்சி +  

        தொடர்ச்சி உள்ள பயிற்சி =

        உயர்ச்சி மிக்க வெற்றி:

தளர்ச்சி இல்லாத முயற்சி செய்தால், தொடர்ச்சி உள்ள பயிற்சியை மேற்கொண்டால் இறுதியில் உயர்ச்சி மிக்க – புகழ்ச்சி ஈட்டும் வெற்றி வந்தடையும் என்பதற்கு வாழ்வியல் ஆக்குதற்கு உரிய சில அகச் சான்றுகள். 

(தொடரும்)

பேரா.வெ.அரங்கராசன்