சீரழிவைத் தரும் சிற்றினச் சேர்க்கை 3/5

பேராசிரியர் வெ.அரங்கராசன்

அகச்சான்று – 2:

சேரக் கூடாத சிற்றினத்துச் சிறுசேர்க்கை;

தீராத் துயரங்களைச் சேர்க்கும் வாழ்க்கை:

பேரினத்துப் பேராசான் செந்நாப் போதார்  செதுக்கிய சிற்றினம் சேராமை என்னும் 46ஆவது அதிகாரத்தில் சிற்றினம் சேராமையால் விளையும் நன்மைகளை விளம்புகின்றார்.

சிற்றினம் சேர்வதால், சேரும் தீமைகள் எவை என்பதைச் சொல்ல வேண்டும் அல்லவா? அதற்காக அந்த அதிகாரத்தில்  உள்ள 10 குறட் பாக்களுக்குப் பாடுபொருள்வழியிலும் பெறப்படு பொருள்வழியிலும் பொருள்  உரைகள் வரையப்பட்டுள்ளன.  அவற்றின்வழிச் சிற்றினச் சேர்க்கையால் சேரும் தீமைகள் எவை என்பன பற்றி இங்குச் சொல்லப்பட்டுகின்றன. 

  1. சிறுமைக் குணத்தார் சிறுமைக் குணத்தாரையே உறவர்களாக் கொண்டு, சூழ்வர். [குறள்.451]

அதனால் கேடுகளில் ஆழ்வர்.

  1. சிற்றறிவாளரோடு சேர்ந்தவர், சிற்றறிவையே பெறுவர்.

[குறள்.452]

அறிவு வளர்ச்சியும் அமையாது.

  1. சிற்றினத்தனோடு சேர்ந்தவன், சிற்றினத்தன் என்றே அடை யாளம் காட்டப்படுவான். [குறள்.453]

சமுதாய மதிப்பும் சிதைந்து சீரழியும்.

  1. மனத்து அளவு அறிவாளன்போல் காணப்படுவான்.

ஆனால், அவனது அறிவு, அவன் சேர்ந்த  சிற்றினத்து அறிவாக அமைந்திருக்கும்.                                                           [குறள்.454]

            போலித் தன்மையனாகக் காணப்படுவான்.

  1. மனத்தூய்மைக் கேடும் செயல் தூய்மைக் கேடும் தூய்மைக் கேட்டுச் சிற்றினத்தால் வந்துகூடும். [குறள்.455]

அத்துடன் சொல் தூய்மைக் கேடும் சேர்ந்துகொள்ள, அவன் கெடுவான்.

  1. மனத்தூய்மைக் கேடர் பெற்ற மக்கள் தீயர்களாக அமைவர்; புகழ் போன்ற எச்சங்களும் செயல்களும் தீயனவனவாகத் தான் அமையும்.                                                                 [குறள்.456]

வாழ்க்கையில் அனைத்தும் தீயனவாகவே அமையும்.

  1. மனநலக் கேடு ஆக்கம் பெறும்; அந்தக் கேடு ஆக்கங்களை எல்லாம் நீக்கும்; இகழையே ஆக்கும். [குறள்.457]
  2. சிற்றினக் கீழ்மக்களால், எந்த வகைப் பாதுகாப்பும் ஏற்படப் போவதில்லை. [குறள்.458]

பாதுகாப்பின்மைக் கேடே விளையும்.

  1. மனநலம் கெடுவதால், மறுமை இன்பம் உண்டாகாது; எந்த வகைச் சிறப்பும் விளையாது. [குறள்.459]
  2. தீய இனச் சேர்க்கையால், சிந்தனை, சொல், செயல் ஆகியன கெடும்; அதனால், தீராத் துன்பங்களும் ஆராப் பகைமையும் சேரும். [குறள்.460]

எனவே,

     சிற்றினத்தோடு சேர்ந்து, சீரழிந்து போகாமல்,

   பேரினத்தோடு சேர்ந்து பெருமகிழ்ச்சி பெறுக.

புறச்சான்று – 5: ஒரு விளக்கம்:

சாய்கடையோடு கலந்த பன்னீர்:  

            சாய்கடையில் குடம் குடமாகப் பன்னீரைக் கொட்டினாலும், சாய்கடையுடன் கலந்த பன்னீர், சாய்கடையாகத்தான் மாறும்.   பன்னீர், பன்னீராகவும் இராது. பன்னீர் போய்ச் சாய்கடையைப் பன்னீராகவும் மாற்றாது; மாற்றவும் முடியாது.  

            பன்னீரில் சாய்கடையைக் கலந்தால், பன்னீர்தான் சாய்கடை யாக மாறும். பன்னீர், சாய்கடையை ஒரு நாளும் பன்னீராக மாற்ற முடியவே முடியாது.

            எனவே, நல்லவரோடு தீயவர் சேர்ந்தால், நல்லார்தான் தீயவராக மாறுவர். தீயவரோடு நல்லவர் சேர்ந்தால், நல்லார், தீயவ ரை நல்லவராக மாற்ற முடியாது. எனவே, தீயவரை நல்லவராக மாற்றிக் காட்டுவேன் என முயல்வது வீண்முயற்சி.

விதிவிலக்குகள் இருக்கலாம். அவற்றை எல்லாம் விதிகளாக ஏற்க முடியாது.

குடியருடன் சேரும் குடிக்காதவர், குடியரின் தொடர்வலியுறுத்தல்களால் குடியராக மாறுவதைக் காண்கின்றோம். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். இதே போல் தான் எல்லாத் தீய பழக்க வழங்களிலும் நிகழ்கின்றன.   

நல்லன எருமைபோல் மெல்ல மெல்ல நடக்கும்;

அல்லன ஏவுகணைபோல் வேகமாகப் பறக்கும். 

புறச்சான்று – 6: இலக்கியச் சான்று:

தீயவருடன் கொண்ட உறவு,

ஓயாத வேதனையின் வரவு:

தீயாரைக் காண்பதுவும் தீதே; திருஅற்ற

தீயார்சொல் கேட்பதுவும் தீதே; — தீயார்

குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோ[டு]

இணங்கி இருப்பதுவும் தீதே.

                                        -ஔவையார், மூதுரை – 9

பொருள் உரை:

            எந்த வகைப் பண்புகளும் இல்லாத தீய குணங்கள் உடையவர்களைக் காண்பதும் தீது. ஒன்றுக்கும் பயன் தராத தீயவரது சொற்களைக் கேட்பதும் தீது. தீயவரது குணங்களைப் பேசுவதும் தீது. அத்தீயவருடன்  இணக்கமாகக் கூடி இருப்பதும்  தீது.

(தொடரும்) 

கவிஞர் பேராசிரியர் வெ.அரங்கராசன்