துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 2/4:

பேராசிரியர் வெ.அரங்கராசன்

 

 ஒப்பு நோக்குக:

 

மன்னுயிரைக் காத்திடத் தம்முயிரை ஈவதற்[கு]

என்றும் இருப்பர் சிலர்.

                 –கவிஞர் பேராசிரியர் வெ.அரங்கராசன்   

 

2.குடும்பம் சார்ந்தது:

                தாம் அறம் சார்ந்த செயல்களைச் செய்யும்போது துன்பம் வரினும், தம் குடும்பதிற்கு இன்பம் தரும் அச்செயல்களைத்  துணிவோடும் மனஉறுதியோடும் இறுதிவரை முயன்று வெற்றியுடன் செய்து முடித்தல் வேண்டும். அகச் சான்றாக ஒரு குறள்மட்டும்.

 

அகச்சான்று:

 

     இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்  

     குற்றம் மறைப்பான் உடம்பு.?                                                               [குறள்.1029]

 

பொருள் உரை:

                குடும்பத்தின்மீது குற்றப்படாமல் காக்கும் குடும்பத்தானது

உடம்பானது துன்பங்கள் நிறைகின்ற  கொள்கலமோ?

 

அன்பில்லாக் கணவன் மனைவி வாழும் குடும்பம்;

என்றும் துன்பங்கள் வாழ்கிற பெரியதொரு நரகம்:

               

சற்றொப்ப 40 ஆண்டுகளுக்கு முன்னர்ச் சசிகுமார் என்னும்  ஒரு நடிகர் இருந்தார். அவர் அப்போது சில தமிழ்ப் படங்களில் நடித்திருந்தார்.  ஒரு நாள் அவரது அன்பு மனைவி சமையல் செய்துகொண் டிருந்தார். அப்போது எதிர்பாராத வகையில் அவரது சேலையில் தீப் பிடித்துக்கொண்டது. உடனே காப்பாற்றுங்கள்.! காப்பாற்றுங்கள்! என உரக்க அலறினார். உடனே நடிகர் சசிகுமார் சமையல் அறைக்குள் ஓடினார். மனைவியைக் காப்பாற்றும் முயற்சியில் மிக விரைவாக ஈடுபட் டார். தம் உயிரையும் பொருட்படுத்தாமல் மனைவியைக் காப்பாற்றப் போராடினார். எதிர்பாராத வகையில் அவர்மீதும் தீ பரவிவிட்டது. இறுதியில் இருவரும்  தீயில் கருகி இறந்துபோனார்கள்.

 அந்தக் காலத்தில் செய்தித் தாள்களில் பெரும்பரபரப்பையும் கழி விரக்கத்தையும் ஏற்படுத்திய நிகழ்வாகும் இது. தீ விபத்தில் சிக்கிக்கொண்ட மனைவியரைக் காப்பாற்றும் முயற்சியில், தாங்களும் தீயில் கருகி இறந்துபோகும் கணவர்களும் இருக்கின்றார்கள்.

 மனைவியர்மீது கல்லெண்ணெய் [பெட்ரோல்] ஊற்றித் தீ வைத்துக் கொளுத்திக் கொல்லும் இரக்கம் இல்லாக் கணவர்களும் இன்று இருக்கின்றார்களே..!

 திருவள்ளுவர் இக்கயவர்களையும் கருதித்தான் தொலை நோக்குப் பார்வையோடு இருவேறு உலகத்[து] இயற்கை [குறள்.374] என இயம்பியிருப்பாரோ? 

 

நினைக்க நினைக்க வியப்புத்தான் மனத்தில் நிறைகிறது. வியத்தொறும் வியத்தொறும் வியப்[பு]இறந் தன்றே என்னும் பொத்தியாரது புறநானூற்று 217ஆவது பாடல் அடிதான் நினைவுக்கு வருகிறது.

 

அப்படியும் சிலர்; இப்படியும் சிலர்:

              தென்றல் இல்லத்தில் கணவன் அன்பரசனும் மனைவி அருளரசியும் வாழ்ந்துவந்தனர். இருவரும் எல்லாப் பாடத்திலும் முதலிடம் பிடித்து  உயர்கல்வி கற்றவர்கள்.       

                 ஒரு ஞாயிற்றுக் கிழமை அன்று இல்லறம் என்னும் நல்லறம் என்னும் நூலைக் கணவன் அன்பரசன் படித்துக்கொண்டி ருந்தான். மனைவி அருளரசி பேராசிரியர் வெ, அரங்கராசன் அவர்கள் படைத்த திருவள்ளுவர் வரையறுத்த மனித நேயச் சிந்தனைகள் என்னும் நூலை ஆர்வத்தோடு படித்துக்கொண் டிருந்தாள். 

                 அப்போது அவர்கள் முன்னர் வானவன் ஒருவன் தோன்றினான். அவன் இருவரையும் பார்த்து,

                 உங்களில் ஒருவரை மட்டும்  துறக்கத்திற்கு [சொர்க்கம்] அழைத்துச் செல்ல விருபுகின்றேன். உங்களில் யார் துறக்கம் வர வி ரும்புகின்றீர்கள்.?எனக் கேட்டான்.

                 கணவன் அன்பரசன் முந்திக்கொண்டு.

                எனது மனைவி அருளரசியைத் துறக்கத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்,  என்றான். 

வானவன் வியந்துபோனான்.

 மனைவிமீது இத்துணை அளவு அன்பா? துறக்கம் வருவதையே மனைவிக்காக விட்டுக்கொடுக்கின்றாயே! உன்னைப் போன்ற அன்புக் கணவனை நான் இதுவரை பார்த்ததே இல்லை. என அன்பரசனைப் புகழோ புகழ் என்று புகழ்ந்து தள்ளினான்.

 உடனே அன்பரசன்,  அப்படி எல்லாம் அவசரப்பட் டுப் புகழ வேண்டா.

நீங்கள் என்ன சொல்கின்றீர்கள் என எனக்கு ஒன்றும் புரிய வில்லை.

அஃதாவது, நீங்கள் இவளைத் துறக்கத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டால், இந்த வீடே துறக்கமாக மாறிவிடும் எனச் சொல்லவந்தேன்.

 இப்போது வானவனுக்குத் தலைசுற்றியது; மயக்கம் முற்றியது; பொத்தெனக் கீழே விழுந்துவிட்டான்.

 3.குடி சார்ந்தது:

                தாம் அறம் சார்ந்த செயல்களைச் செய்யும்போது தமக்குத் துன்பம் வரினும், தம் குடிக்கு இன்பம் தரும் அச்செயல்களைத் துணிவோடும் மனஉறுதியோடும் முயன்று  வெற்றியுடன் முடித்தல் வேண்டும்.

 அகச்சான்று:

                குடிசெய்வார்க்[கு] இல்லை பருவம்; மடிசெய்து

                 மானம் கருதக் கெடும்                                                                   [குறள்.1028]

பொருள்கோள் விரிவாக்கம்:

 

குடிசெய்வார்க்குப் பருவம் இல்லை;

மடிசெய்து, மானம் கருதக் குடி கெடும்.                                                      

பொருள் உரை விரிவாக்கம்

பேராசிரியர் வெ.அரங்கராசன்

 தம் குடியை முன்னேற்றி, மேம்படுத்தி உயர்த்த வேண்டும் என்னும் குறிக்கோளுடன் முயல்கின்றவர்க்குக் காலை மாலை, பகல் இரவு, இன்று நாளை, அடுத்த வாரம், அடுத்த திங்கள் என்னும் நேரம், காலம் கிடையாவாம். எந்தக் கணமும் தம் கடமையைச் செய்ய அணியராக அமைதல் வேண்டும். இப்போது முடியாது; களைப்பாக இருக்கின்றது; பிறகு பார்த் துக்கொள்ளலாம் எனச் சோம்பல் உணர்வால் தள்ளிப் போடுதலையும் செய்யக் கூடாது.  குடி உயர்வு முன்னெடுப்புக்களை  எல்லாரும் ஏற்றுக் கொள்வார்கள்; பொறுத்துக்கொள்வார்கள்  எனவும்  எதிர்பார்க்கவும் கூடாது. எதிர்ப்பவர்களும் இருப்பார்கள். மறுப்பவர்களும் வெறுப்பவர்களும் இருப்பார்கள். அவர்கள்  மானக் கேடான செயல்களைச் செய்யக் கூடும். அவ்வாறான மானக்கேட்டுச் செ யல்கள் செய்யப்பட்டால், அவற்றை எல்லாம் பெரிதாகக் கருதக் கூடாது; வருந்தக் கூடாது; வாடக் கூடாது.   

இவ்வாறுதான் குடி உயர்வு முன்னெடுப்புக்களின் போது நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் பருவம் கருதி, சோம்பிக் கிடந்து, மானம் கருதின் குடி உயர்வு முன்னெடுப்புக்கள் எல்லாமே பின்னடைவு கொள்ளும்; கேடுகளை அள்ளும்..

 புறச்சான்று:

    தந்தை பெரியாருக்கு மிகவும் பிடித்த குறள் இது [குறள்.1028]. பிடித்த குறளைப் படித்தபடி வாழ்ந்தும் காட்டினார். அத்தகு அவரது வாழ்வியல் நிகழ்வுகளில் ஒன்றுதான் கீழ்க்காணும் புறச்சான்று.    

 சிந்தை கவர்ந்த தந்தை பெரியார்

ஒரு முறை தந்தை பெரியார் கும்பகோணத்தில் நடைபெறவிருந்த கூட்டத்தில் பேசச் சென்றார். கூட்டம் நடைபெறும் இடத்திற்கு முச்சக்கர மிதிவண்டியில் [சைக்கிள் ரிக்சா] போய்க்கொண் டிருந்தார். ஒரு குறிப்பிட்ட சாதியார் வாழும் தெருவழியாகச் செல்ல நேர்ந்தது. அந்த வழியாகப் போகும்போது அவர்மீது செருப்பு ஒன்று பறந்துவந்தது; அவர்மீது விழுந்தது.

 அதைக் கவனித்த முச்சக்கர மிதிவண்டி ஓட்டுநர் ஐயா! தங்கள்மீது செருப்பு வந்துவிழுந்திருக்கின்றது. வேறு என்ன வெல்லாம் வந்துவிழுமோ?  அதனால், நான் வேகமாகப் போய்விடு கின்றேன். என்றார்.

 உடனே பகுத்தறிவுப் பகலவன், உடனே வண்டியைத் திருப்பு.என்றார் கண்டிப்புடன். வேறு வழியில்லாமல் அவரும் வண்டியைத் திருப்பி ஓட்டினார்.

 இப்போது வண்டியைத் திருப்பி ஓட்டு. என்றார். அவ்வாறு கூட்டம் நடைபெறும் இடம் நோக்கி வரும்போது முதலில் செருப்பு வந்த இடத்திலிருந்து மற்றொரு செருப்பும் பறந்து வந்து தந்தை பெரியார்மீது விழுந்தது. அதையும்  எடுத்துவைத்துக்கொண்டார் சமூக நீதிச் செம்மல் தந்தை பெரியார்.. 

 பின்னர் அவர் சொன்னார், இப்போது கூட்டம் நடக்கும்  இடத்திற்குப் போ. நான் எதிர்பார்த்தபடி இன்னொரு செருப்பும் கிடைத்துவிட்டது. இவற்றை இனி நான் பயன்படுத்திக்கொள்வேன். என அமைதியாகச் சொன்னார்.

 மேற்கண்ட நிகழ்வில்,

 கேட்டினும் உண்டோர் உறுதி; கிளைஞரை

நீட்டி அளப்பதோர் கோல்                                                           [குறள்.796]

 என்னும் குறளின் அரும்பொருள் அமைந்துள்ளதை உணர்க.

                 [மேற்கண்ட நிகழ்வை எங்கோ எப்போதோ கேட்டிருக்கின்றேன். அதை எனது நடையில் படைத்து இங்கு வழங்கியுள்ளேன். பொறுத்தருள்க என்னை.]

         முதல் செருப்பு விழுந்தவுடனே வேறு யாராக இருந்திருந்தாலும்,  ஐயோ..! என் மானம் போய்விட்டதே. இது எனக்குத் தேவையா..?. குடியை உயர்த்தியது போதும்; போதும். செய்தவரை, போதும்; போதும். எனத் துடியாய்த் துடித்திருப்பார்; துன்புற்றிருப்பார்; வருந்தியிருப்பார்; வெந்து, நொந்துபோய் நூலாகி ஊருக்கு ஓடி வந்திருப்பார்.

ஆனால், குடியை உயர்த்தும் முயற்சிகளில் இத்தகு மானக் கேடுகள் நிகழத்தான் செய்யும். அவற்றை எல்லாம் பெரிதாகக் கருதின், குடியை உயர்த்தும் பணியைச் செய்யவே முடியாது என்பதை நன்கு பட்டறிந்தவர் பகுத்தறிவுப் பகலவன்.

 ஒரு தந்தை தமது குடும்பத்தை உயர்த்த எப்படி எல்லாம் பாடுபடுவாரோ, அப்படி எல்லாம் குடியை உணர்த்தப் பெரும்பாடுபட்டவர் பெரியார். அதனால்தான் அவர்  தந்தை பெரியார் என மக்களால் போற்றப்பட்டார்; மதிக்கப்பட்டார். உயர்வாக எண்ணி இன்றும்  கொண்டாடுகின்றனர். உலகம் முழுவதும் அறியப்பட்டவராக இன்றும் திகழ்கின்றார். 

 4. மன்பதை சார்ந்தது:

                அறம் சார்ந்த செயல்களைச் செய்து சமுதாயத்தை உயர்த்த வேண்டும் எனக் கருதுபவர், கால, நேரத்தையும் கருதாமல், தம் மானத்தையும் கருதாமல் ஒப்புரவு ஆற்றினால்,  தமக்குத் துன்பம் வரினும், சமுதாயத்திற்கு இன்பம் தரும் அச்செயல்களை மனஉறு தியோடு இறுதிவரை முயன்று வெற்றியுடன் முடித்தல் வேண்டும்.

 அகச்சான்று:

                ஒப்புரவி னால்வரும் கே[டு]எனின், அஃ[து]ஒருவன்

                விற்றுக்கோள் தக்க[து] உடைத்து                             [குறள்,220]

பொருள் உரை:

                மன்பதை நலம்நோக்க ஒப்புரவுச்

செயல் அது கேடு தரினும், — தைத்            

                தம்மை விற்றாவது  பெற்றுக்

கொள்ளும் தகுதி உடையது.

 (தொடரும்) 

–கவிஞர் பேராசிரியர் வெ.அரங்கராசன்